இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்/5

5. நாத்திகம் பற்றி மார்க்சீயவாதிகளின் விமர்சனம்

ண்டைய இந்திய நாத்திகம், பண்டைய கிரேக்க நாத்திகம், தற்கால ஐரோப்பிய நாத்திகம் ஆகியவற்றின் தத்துவக் குறைபாடுகளை மார்க்சீயம்தான் போக்கி முழுமையாக்குகிறது.

“பண்டைக் கால நாத்திகத்தின் முக்கியமான பலவீனம் என்ன?” என்ற கேள்வியிலிருந்து நமது வாதத்தைத் தொடங்குவோம். நமது தத்துவவாதிகள் மிகத் திறமையான தர்க்கவாதங்களை, கடவுள் ஒரு மாயை, மன விகாரம் என்று நிரூபிக்க உருவாக்கியுள்ளார். இவ்வாறு கடவுளைப் படைக்கப் பிழையாக தருக்க முறைகளைக் கடவுள் நம்பிக்கையுடைய தத்துவவாதிகள் பயன்படுத்தியுள்ளார்கள். இந்திய நாத்திகவாதிகளது தருக்கத் தாக்குதல்களின் பின்னும் கடவுள் பிழைத்திருக்கிறாரே! மேலும் மேலும் பக்தர்கள் கடவுளே நம்புகிறார்களே! இது ஏன் என்று இந்திய நாத்திகர்கள் சிந்திக்கவில்லை. ஒரு மாயைத்தோற்றம், மக்கள் மனத்தை இவ்வளவு வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன்?

கடவுள் என்ற கருத்தின் ஊற்றுக்கண் வேறொரிடத்தில் இருக்கிறது. இவ்வூற்றுக் கண்ணே நமது பண்டைய நாத்திகர்கள் அறிந்து கொள்ளவில்லை. மார்க்ஸ்தான் கடவுள் என்ற கருத்தும், வேறு எல்லாக் கருத்துக்களும் எவ்வாறு தோன்றின என்று விளக்கினார்.

ஃபயர்பாக் என்ற தத்துவவாதியின் பொருள்முதல் வாதம், ஹெகல் என்ற ஆன்மீகவாதியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பொலியாக ஒலித்தது. ஃபயர்பாக்கின் பொருள்முதல்வாத உள்ளடக்கத்தை மார்க்ஸ் பெரிதும் போற்றினார். ஆனால் பிரபஞ்சத்தின் வளர்ச்சியை பொருள்முதல்வாத அடிப்படையில் அவர் விளக்கவில்லை. பொருள் முதல்வாத அடிப்படையில் ஃபயர்பாக் உலக இருப்பையும், மனித மனத்தின் உள்ளடக்கத்தையும் ஆராய்ந்தார். மார்க்ஸ் ஃபயர்பாக்கை பின்வருமாறு விமர்சிக்கிறார்: “ஃபயர்பாக் மதத்தினால் அந்நியவயமாகி இவ்வுலகு இரண்டாக பொய்யான மத உலகாகவும், உண்மையானப் புற உலகாகவும் பிரிகிறது. அவருடைய தத்துவ முயற்சியெல்லாம் இப்பொய்யுலகை, உண்மையான உலகிற்குக் கொண்டு வருவதாகவே இருந்தது. இப்படிச் செய்யும்பொழுது மிக முக்கிய தத்துவ முயற்சியை அவர் ஒதுக்கிவிட்டார். உண்மை உலகின் முரண்பாடுகள் தீர்வு காணப்படாதபொழுது அவை விண்ணில் ஒரு தனி உலகை அமைத்துக் கொள்கின்றன. உலகிலுள்ள முரண்பாடுகள் தீர்வு பெறாதவரை, அவற்றில் இருந்து தோன்றி விண்ணில் இருப்பதாகக் கருதப்படும் மாயைத் தோற்றங்கள் கலையாது. உலகக் குடும்பமே தெய்வக் குடும்பத்தின் அடிப்படை என்பதைக் கண்டுகொண்டால் இவ்வுலக வாழ்க்கை முரண் பாடுகளை ஆராய்ந்து நடைமுறையால் புரட்சிகரமாக மாற்ற முடியும்.”

ஃபயர்பாக் பற்றிய விமர்சன எழுத்துக்களில் மார்க்ஸ் கூறிய கருத்தை, எங்கல்ஸோடு சேர்ந்து மேலும் விளக்கினார்: “மனிதர்களுடைய செயலூக்கமான நடைமுறைச் செயல்களோடு, அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைப்படைப்புகள்,உணர்வு என்ற மூளையின் படைப்புகள் தொடர்பு கொண்டவையாக இருக்கின்றன. இவை நடைமுறைச் செயல்களால் தொடர்புகொள்ளுகிற மனிதர்களின் உறவுகளின் விளைவேயாகும். உண்மையான வாழ்க்கையின் நிஜமான அல்லது வக்கிரமான பிரதிபலிப்புக்களே எல்லாச் சிந்தனைகளும் என்று நாம் அறிதல் வேண்டும். இவை பொருளுற்பத்தி என்ற மனிதர் செயல்களில் இருந்துதான் தோன்றுகின்றன. மனிதனது உற்பத்தி சக்திகள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் எந்த அளவு வளர்ச்சியடைந்திருக்கின்றனவோ, அதற்கேற்ப சமூக உற்பத்தி உறவுகளின் பிரதிபலிப்புகளாகச் சிந்தனைகள் தோன்றுகின்றன. மூளையில் தோன்றுகிற தெளிவற்ற எண்ணங்கள்கூட, வாழ்க்கையில் இருந்து பிரிந்து சுதந்திரமாக இருப்புக் கொள்ளவில்லை. இவை கூட சமூக இருப்பின் அடிப்படையில் தோன்றிய மேற்கோப்புகள்தாம். இவ்வடிப்படை புலனறிவுக்குப் புலப்படுபவையே. இவ்வாறாக ஒழுக்கம், மதம், அப்பாலைத் தத்துவங்கள் முதலிய கருத்துக் கட்டமைப்புகளாகிய (Idealogy) உணர்வுருவங்கள் (Forms of Consciousness) சுதந்திரமானவையல்ல. அவை பொருளுற்பத்தி என்னும் மனிதர் செயலான அடிப்படையின்மீது எழுப்பப்பட்டவையே. பொருளுற்பத்தி வரலாற்றில் இருந்து பிரித்து உணர்வுருவங்களின் சரித்திரத்தை அறிய முடியாது. மனிதர்கள் உற்பத்திச் சக்திகளை வளர்த்துக் கொண்டு, உற்பத்தி அமைப்புகளையும், சமூக அமைப்புகளையும் மாற்றுகிறபோது அவ்வடிப்படையின்மீது எழுப்பப்பட்டிருக்கும் மேற்கோப்பு உருவங்களும் மாறுகின்றன. “உணர்வு வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; வாழ்க்கைதான் உணர் வைத் தீர்மானிக்கிறது” என்பது மார்க்ஸின் புகழ்பெற்ற வாசகம்.

இவ்வுலக நோக்குத்தான் மார்க்ஸீய வரலாற்றுப் பார்வையின் அடிப்படை. ஒவ்வொரு சமுதாய அமைப்பின் உற்பத்தி முறைதான் நமது வரலாற்று ஆராய்ச்சியின் துவக்கப்புள்ளி. ஒவ்வொரு உற்பத்தி முறையிலும் மனிதர்கள் எவ்வித உறவு கொள்ளுகிறார்கள் என்பது உற்பத்திமுறை அமைப்பைப் பொறுத்தது. உற்பத்தி முறையின் தொடர்ச்சியான மாறுதல்கள், இவற்றால் மாறுகிற? மனிதர் உறவுகள், அவற்றின் தொடர்ச்சியான போக்குகள் இவற்றை வரலாறு விளக்கவேண்டும். இவற்றில் மனப்படைப்புகள், பொருளாதார அடிப்படையிலிருந்து விலகிச் செல்வதை அறிகிற விமர்சனம் செய்வது போதாது. விமர்சனம் மட்டுமல்ல, உற்பத்தி சக்திகள் வளரும் வகையில் உற்பத்தி உறவுகள் மாற்றப்பட வேண்டும், அடிப்படையானதும், மிகவும் முக்கியமானதுமான சமூக மாறுதல் புரட்சியாகும். உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும், அவ்வளர்ச்சிக்கேற்ப, சமூக அமைப்பு மாற்றப்படுவதுவே வரலாற்றின் இயக்கு சக்தியாகும். உற்பத்திச் சக்திகளின் பெருக்கத்தை விளக்கும் வரலாறே, தத்துவம், மதம் முதலிய எண்ணக் கட்டமைப்புகளின் வரலாற்றுக்கும் அடிப்படையாகும்.

மார்க்ஸ், எங்கல்ஸ் ஆகிய இருவரும் மேற்கூறிய கருத்துக்களை 1845-46இல் உருவாக்கினர். அதன் பின்னர் நூறாண்டுகளில் தொல்பொருள் ஆய்வும், மானிட ஆய்வும் பெரிதும் வளர்ச்சி பெற்றுள்ளன. இவை யாவும், இக்கருத்துக்களை செழுமைப்படுத்துகின்றன.

மார்க்ஸ் மதத்தைச் சிந்தனையில் இருந்து அகற்றத் தர்க்கத்தைக் கையாளவில்லை. சிந்தனை நிலையில் மதக் கருத்துக்களை நமது பண்டைய நாத்திகர்கள் எதிர்த்ததுபோல், மார்க்ஸ் செய்யவில்லை. மார்க்ஸ், ‘மனிதன் மதத்தைப் படைத்தான்’ என்று போதித்தார். மனிதனது உட்கிடையான தன்மை, தெய்வீகமானது என்ற கருத்தை அவர் எதிர்த்தார். கடவுள் நம்பிக்கை, அதைத் தோற்றுவித்த சமூகப்படை மாறும்போது மறையும் என்று கூறினார். வரலாற்றுப்படி முறை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது புறவய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே மனிதன் மதத்தைப் படைத்தான். தனது ஆற்றலால் விளைச்சலை அதிகப்படுத்த முடியவில்லை. மழை பெய்யச் செய்ய முடியவில்லை, வேட்டை விலங்குகளைக் கொல்லமுடியவில்லை, போரில் வெற்றி பெற முடியவில்லை என்று உணர்ந்த மனிதன், மந்திர தந்திரங்களையும், கடவுள்களையும் தனது ஆற்றல மிகுவித்துக் கொள்ளப் படைத்தான். இக்கருத்துக்கள் மனித வரலாற்றில், மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும் போது, இயலாமையை உணரும்போது, தன்னைவிட அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத் தனது கற்பனையால் படைத்து அவற்றிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான்.

இவ்வாறு மனிதன் மதத்தைப் படைத்தான். மனிதன் உலகத்திற்கு வெளியே வாழும் விலங்கு அல்ல. தற்காலப் பரிணாமவாதம் மனிதனது தோற்ற மூலத்தை விளக்குகிறது. மிகவும் சிக்கலான இயற்கை மாற்றங்களுக்குப் பின்னர், இம்மாற்றங்களின் விளைவாக மனிதன் தோன்றினான். பிற விலங்குகளைப்போல அவனும் இயற்கையின் ஒரு பகுதிதான். மனிதன் தோன்றிய பின் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு தன்மை, மாற்றம் அடைந்தது. விலங்குகள் இயற்கையோடு இசைந்து போகின்றன. இயற்கையின் வலிமைக்கு இணங்கித் தங்களது உறுப்புக்களை மாற்றிக் கொள்ளுகின்றன. இயற்கையோடு அவற்றின் உறவு, செயலூக்கமற்றது (Passive) தான். இயற்கையளிக்கும் காய்கனிகளை அவை உண்கின்றன. உணவைத் தேடிப் பெற்றுக் கொள்பவையாக (food gatherers) அவை இருக்கின்றன. செயலூக்கத்தோடு உணவை உற்பத்தி செய்வதில்லை. குளிர் தாங்க உரோமத்தை இயற்கை சில விலங்குகளுக்கு அளித்துள்ளது. இயற்கையை அவை தங்கள் வாழ்க்கையால் மாற்றியபோதிலும் அம்மாற்றங்கள் அவற்றின் உணர்வில் பதிவதில்லை. அவைபற்றி அவை சிந்திப்பதில்லை. மனிதனது தோற்றம் ஒரு விலங்குதான் என்றாலும், பிற பிராணிகளைப்போல இயற்கையோடு அவன் கொண்டுள்ள தொடர்பு செயலூக்கமற்றதல்ல. தனது உயிரியல் உறுப்புகள் (கை, கால், வாய், பல் முதலியன) இயற்கையில் ஏற்படுத்தும் மாறுதல்களை அவன் உணருகிறான். தனக்குத் தேவையான மாறுதல்களை இயற்கையில் ஏற்படுத்துவதோடு அவற்றை நெறிப்படுத்தவும் மனிதனால் முடியும். இப்பொழுதுதான் அறிபவன், அறியப்படுவது (Subject, Object) என்ற கருத்துக்களுக்குப் பொருளான உண்மைகள் தோன்றுகின்றன.

இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன? மனிதன் தனது உயிரியல் கருவிகளைப் (Biological equipment) பயன்படுத்துகிறான். முக்கியமான உறுப்புகளின் மூளை, கைகள், பேச்சுறுப்புகள் இவற்றைச் செயல்படுத்துகிறான். இவற்தைக் செயல்படுத்தும்போது விளையும் ஆற்றல்தான் உழைப்பு. இந்தச் செயல்பாட்டில் இயற்கையும் மனிதனும் பங்கு, பற்றுகின்றனர். ஆனால் மனிதன் உழைப்பு என்னும், ஆற்றலால் இயற்கை மீது தனது செயலைத் துவக்கி, இயற்கையை கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்.

மின்னல் மின்னும் போதும், மழை பெய்யும் பொழுதும், சில ரசாயன மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை இயற்கை நிகழ்ச்சிகள். விலங்குகளும், மனிதனும் அஞ்சியோடுகின்றன. ஆனால் மனிதன் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்போது என்ன மாற்றங்கள் உண்டாகின்றன என்று சிந்திக்கிறான். அவன் இயற்கையோடு தொடர்பு கொண்டதால் அவன் மூளையில் படைத்துக் கொண்ட ரசாயன் அறிவைப் பயன்படுத்துகிறான். காற்றில் ஆக்ஸிஜன், நைட்ரஜன் என்ற வாயுக்கள் உள்ளன. மின்னல் வெளிப்படும் பொழுது மின்னாற்றல் பாய்ச்சல் (discharge) வாயுக்களின் ஊடே செல்லுகிறது. இதனால் இவ்விரண்டு வாயுக்களும் கூடுகின்றன. மழைத் தண்ணீரில் இக்கூட்டுப்பொருள் (நைட்ரிக் ஆக்ஸைடு) கரைந்து ஒரு அமிலம் ஆகிறது. இது பூமியினுட் செல்லுகிறது. பூமியினுள் உலோகத்தாதுப் பொருள்கள் உள்ளன. அவற்றோடு இவ்வமிலம் எதிர்வினை செய்து உரப்பொருள்கள் இயற்கையில் கிடைக்கின்றன.

இயற்கை நிகழ்ச்சிகளைக் கவனித்த மனிதன், முன் இயற்கையில் தலையிட்டுக் கிடைத்த அனுபவம், அனுபவத்தில் இருந்து முன் கிடைத்திருக்கும் கொள்கையறிவு இவற்றைப் பயன்படுத்தி இயற்கைப் போக்கில் தலையிடுகிறான் காற்றிலுள்ள வாயுக்களைச் சேரவைக்கும் அளவு வெப்பத்தை மின் ஆற்றலால் உண்டாக்குகிறான், ‘மின் ஆற்றல் ஆர்க்’ என்ற மின் வெப்பக் கருவியின் கரித் துண்டுகள் ஜ்வலிக்கும்போது காற்றை உட்செலுத்துகிறான். வாயுக்கள் கூடி நைட்ரிக் ஆக்ஸைடு உண்டாகிறது. இதனை நீரில் கரைக்கிறான். இந்த அமிலத்தை அம்மோனியா வாயுவோடு சேர்க்கிறான். இதுகூட ஹைட்ரஜன், நைட்ரஜன் ஆகிய இரு வாயுக்கள் கூடிக் கிடைத்த சுட்டுப் பொருளே. இதுகூட இயற்கையில் தலையிட்டுக் கட்டுப்படுத்தித் தனக்குத் தேவையான் பொருளாக மனிதன் செய்துகொண்டதே.

மேற்கூறிய, “இயற்கைமீது தனது செயலைத் துவக்கி, இயற்கையைக் கட்டுப்படுத்தி, தனக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை உணர்வுப் பூர்வமாக நெறிப்படுத்துகிறான்” என்ற எங்கல்ஸின் வாசகத்துக்கு இது மிக நல்ல உதாரணம்.

இவ்வாறு இயற்கையை மாற்றும் பொழுது மனிதனும் மாறுகிறான். பொருள்களின் யாந்திரிக, ரசாயன, பௌதீக இயல்புகளை அறிந்து அவற்றைத் தன்து தேவைக்கேற்ற பண்புகளாக மனிதன் மாற்றிக் கொள்கிறான். இவ்வாறு மனிதனது அறிவு அவனது கை, கால், மூளைபோல அவனது உறுப்புகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது. இதனால் முன்னிலும் அதிகமான ஆற்றல் பெற்றவகை மனிதன் ஆகிறான். இது குறித்து ‘கார்டன் சைல்டு’ என்ற தொல்பொருள் பேராய்வாளர் கீழ்வருமாறு கூறுகிறார். “இயற்கையையும், இயற்கையோடு போராட மனிதன் புனைந்து கொண்ட கருவித் தொகுதிகளையும், மனிதனது உடல்புற உறுப்புக்கள் (Extra Corporeal Organs) என்று அவர் அழைக்கிறார். இவை ஆரம்பத்தில் மிக எளிய கருவிகளாக இருந்தன. ஒரு முறிந்த மரக்கிளை, கூர்மையாக்கப்பட்ட கல் இவை போன்றவை தாம் மனிதன் பயன்படுத்திய பண்டைக் கருவி.” கருவிகளைச் செய்யும் ஆற்றல் மூளையின் திறத்தால் மனிதனிடம் வளர்ச்சியடைந்தன. இச்சிறு கருவியைச் செய்த மனிதன், தனது உழைப்பால், இன்று விண்கலங்களை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பால் அனுப்புகிறான். அவை கோடிக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள விண்கோளங்களை படம் பிடித்து உடனே சில ஒளிக்கதிர்கள் மூலம் உலகிற்கு அனுப்புகின்றன. இவ்வளவு தூரத்தில் உள்ள கோளங்களின் படங்கள், மனிதன் அவற்றைக் கண்ட மறுநாளே தினசரிகளில் வெளியாகின்றன. இன்று மனிதன் தனது உடலுழைப்பாலும், மூளை உழைப்பாலும், இயற்கையாற்றல்களில் பல கூறுகளை தனது தேவைகளுக்காக வென்றுள்ளான்.

இவ்வாறு இயற்கையோடு போராடக் கருவிகளைச் செய்து உற்பத்திச் சக்திகளை முன்னேற்றிய மனிதன், விஞ்ஞானத்தை வளர்த்தான். பொருள் உற்பத்தியில் முன்னேறிய மனிதன் தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாதபோது பல நம்பிக்கைகளையும் படைத்தான். அவனது உற்பத்தி அமைப்பு முறையின் வளர்ச்சியின் ஒரு கட்டத்தில் சில நம்பிக்கைகள் தோன்றின.

பொருள் உற்பத்தி அமைப்பை (சமூக அமைப்பு) மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். வர்க்கங்கள் தோன்றுவதற்கு முற்காலம் (இனக் குழுக்காலம்), வர்க்கப் பிரிவினையுள்ள காலம் (வர்க்க சமுதாய காலம்), வர்க்கங்கள் இல்லாத காலம் (வர்க்க பேதங்கள் அகன்ற காலம்) என்று இச்சமூக வளர்ச்சிக் கட்டங்களைப் பகுக்கலாம்.

வர்க்க முற்காலத்தின் உற்பத்திச் சக்திகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தன. இந்தக் காலகட்டத்தில் ஒரு மனிதன் உழைப்பை வேறோர் மனிதன் சுரண்ட இயலாது. ஏனெனில் உழைப்பினால் விளையும் பொருள் உற்பத்தி சமூகத்தின் வாழ்க்கையை நடத்துவதற்கே போதாது. எனவே பட்டினியையும் பற்றாக் குறையையும்தான் சமூக உறுப்பினர்கள் பங்கு போட்டுக் கொண்டார்கள். எல்லோரும் ஏழைகளாக வாழ்ந்ததால் எல்லோருடைய உழைப்பின்மீதும் சமூக இருப்பு ஆதாரப்பட்டிருந்தது.

மனிதன் தனது உழைப்பால் பண்டைக் கருவிகளை அபிவிருத்தி செய்து கொண்டான். புதிய கருவிகளைப் புனைந்தான். இவற்றால் மேலும் திறமையாகத் தன் உழைப்பை வழிப்படுத்தினான். உற்பத்தி அதிகமாயிற்று. சமூக வாழ்க்கைக்குத் தேவையானது போக பொருள்கள் மிஞ்சின. இதனை மார்க்சீயவாதிகள் உபரிப்பொருள் (Surplus product) என்று அழைக்கிறார்கள். முந்திய இனக்குழு சமூகத்தில் எல்லோரும், எல்லா வகையான உழைப்பிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஒருவனே வேட்டையாடி விலங்குகளைக் கொன்று குழுவிற்கு உணவு கொணர்ந்தான். அவற்றின் தோலை உரித்துப் பதனிட்டு உடைகள் தைத்தான். சிறு குடிசைகள் கட்டினான். பண்டைய விவசாயம் செய்தான். தெய்வங்களை நினைத்து வாழ்க்கையில் செழிப்பை வேண்டிக் கொண்டு ஆடிப்பாடினான். எல்லோரும், எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். ஆட்டம், பாட்டு முதலிய கலைகளில் எல்லோருமே கலைஞர்களாகவும், ரசிகர்களாகவும் பங்கு கொண்டனர்.

மாறிய நிலைமையில், தொழில் பிரிவுகள் தோன்றின. கைத்தொழில் வல்லவர்கள் செய்யும் தொழிலால், தொழிற் பிரிவுகளாகப் பிரிந்தனர். விவசாயம், கைத்தொழில்கள் வளர்ந்தன. கைத்தொழில்கள் மிகப் பல தோன்றின. இவர்களையே ‘வினைவலார்’ என்று பண்டைய தமிழ் நூல்கள் அழைக்கின்றன. தொழிற் பிரிவு, உற்பத்திச் சக்திகளை வளர்க்கக் காரணமாயிற்று.

இந்நிலைமை குறித்து எங்கல்ஸ், “குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் எழுதினார்: “தொழில் பிரிவுகள், தொழிற் திறமையையும், உற்பத்தித் திறமையையும் வளர்த்தன. தொழில் நுணுக்கம் முன்னேற்றம் கண்டது. இதனால் சமூகத்தில் ‘உற்பத்தி செய்பவர்கள்’, ‘உற்பத்தியை அமைப் பவர்கள்’ (Producers and Organisers of production) என்ற உழைக்கும் பிரிவினரும், தாம் உழைக்காமல், உழைப்பைத் திட்டமிட்டு அமைப்பவர்களும் என்ற பிரிவுகள் தோன்றின. உழைப்பை அமைப்பவர்கள் உழைப்பின் கடுமையில் இருந்து விடுதலை பெற்றனர். இவர்கள்தான் ‘சிந்தனையாளர்களாக’, ‘மதகுருமார்களாக’, ‘மந்திர தந்திரங்களை’ நடத்துபவர்களாக, பொருளுற்பத்தி உழைப்பில் இருந்து விலகிச் செயல்பட்டனர். இவர்களில் சிலர் மதக்கொள்கைகளையும், வேறு விஞ்ஞானச் சிந்தனைகளையும் உருவாக்கினர். வானவியல், கணிதம், பௌதீகம், ரசவாதம் போன்ற பல விஞ்ஞானங்களை இவர்கள் வளர்த்தார்கள். இவர்கள் உழைப்பை மிகவும் இழிவாகக் கருதினர். உதாரணமாக இந்தியாவில் ஆரிய சமூகத்தில் பிராமணனும், க்ஷத்திரியனும் ஏரைத் தொடக்கூடாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராமணன் ஏழையாகிவிட்டால் அடுத்த வருணமான க்ஷத்திரியன் தொழிலைச் செய்யலாம். இதற்கு ஆபத்து தர்மம் என்று பெயர். அது போன்றே க்ஷத்திரியன் வைசியன் தர்மத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் மேலிரண்டு வருணத்தாரும் சூத்திரனைப் போல் உடல் உழைப்பை ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது. இது போன்றே பௌத்தத் துறவிகள் ஏரைத் தொடக்கூடாது. பொருள் வருவாயுள்ள எந்த உழைப்பையும் மேற்கொள்ளல் ஆகாது. இவ்வாறாக உழைக்க ஆனால் உழைப்பை அமைக்கும் சமூகப் பிரிவாக ஆளும் வர்க்கமும், உழைப்பையே வாழ்க்கைச் சாதனமாகக் கொண்ட உழைக்கும் வர்க்கமும் ஆக பண்டையச் சமுதாயம் பிரிந்தது. இப்பிரிவினரையே மேலோர், கீழோர் என்று பண்டைத் தமிழர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாறுதல் எவ்வாறு நடந்தன என்று மார்க்சீய சமூக மானிடவியலார் ஆராய்ந்து வருகிறார்கள். இப்போது, பண்டைக்காலச் சமுதாய வளர்ச்சிபற்றி நாம் அறிந்துள்ள மார்க்சீய சிந்தனையை மிகவும் சுருக்கமாக நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். மேற்கூறியவாறு சமுதாய வரலாற்றில் தோன்றிய ஆளும் வர்க்கமும், தனது ஆதிக்கத்தை நிறுவிக் கொள்ள வன்முறைக் கருவியொன்றைப் படைத்துக் கொண்டது. உழைக்கும் மக்களும், தங்களது தொழில்களை அமைதியாகச் செய்யத் தேவையானது அரசு என்று நம்பினார்கள். முதன் முதலில் சமூகத்தின் எல்லா உறுப்பினர்களின் சம்மதத்தோடு அரசு தோன்றியது. இதனை மகா சம்மதம் என்று நீதி நூலோர் அழைப்பர். பின்னர் அது ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கும் வன்முறைக் கருவியாக மாறிற்று. எங்கல்ஸ் கூறுகிறார்:

"சமூகத்திற்கு வெளியில் இருந்து அதன் மீது திணிக்கப் பட்டதன்று, அரசு சமூக வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கட்டத்தில் சமூகத்தால் படைக்கப்பட்டது தான் அது. பல பொருளாதார முரண்பாடுகள் சமூகத்தில் தோன்றிவிட்டன. இவற்றிற்குத் தீர்வு காண முடியவில்லை என்ற உண்மையின் ஒப்புதல் வாக்கு மூலமே அரசு இந்த முரண்பாடுகளும், பகைமையும் சமூகத்தையே அழித்து விடாமல் இருக்க, சமூகத்திற்கு மேலே இருப்புக் கொண்டது போலத் தோற்ற மளிக்கும் ஒரு அமைப்பை சமூகம் ஏ ற் று க் கொண்டது, இதுவே அரசு. இது சமூகத்தில் இருந்து பிறந்து, சமூகத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிற நிறுவனமாக அதற்கு மேலே இருப்பது போலத் தோன்றுகிறது. சமூகத்தை ஒழுங்காக நெறிப்படுத்தத் தோன்றிய அரசு, அதனின்றும் அந்நியவயமாயிற்று. மேற்குறிப்பிட்ட வர்க்கப் போராட்டங்களைக் கட்டுப் படுத்தி வைக்க, அது வலிமை மிக்க நிறுவனமாகத் தன்னைத்தானே வளர்த்துக் கொண்டது. பொருளா தார ஆதிக்கம் உள்ள ஆளும் வர்க்கம் தங்கள் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள, உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் ஒடுக்க அரசு கருவியாகத் தோற்றம் கொண்டது. "
“அரசு, மக்களைக் கட்டாயப்படுத்தும் கருவி” (Coercive apparalisis) என்று மார்க்ஸ் கூறுகிறார். சட்டங்கள்,

நீதிமன்றங்கள், போலீஸ், ராணுவம் முதலியன அரசின் வன்முறைக் கருவிகள். ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்க, மக்களை அடக்க இவை பயன்படுத்தப்பட்டன. இந்த அரசுதான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் மனத்தையும் செயலற்ற நிலையில் வைத்திருக்க வேண்டியிருந்தது. இதற்காக அவர்களுக்கு மதம் என்ற அபினியைக் கொடுத்தது. மார்க்ஸ் கூறுகிறார்:

இவ்வரசும், இச்சமூகமும் தலைகீழான உலகம் பற்றிய உணர்வைப் படைக்கின்றன. அதுதான் மதம். மதம், இந்நிலையில் உலகம் பற்றிய பொதுக் கொள்கை. சர்வாம்சமான 'அறிவு'த் தொகுப்பாக அது தோன்றுகிறது. ஜனரஞ்சகமான தருக்கமாகவும், சமூகத்தின் ஆன்மீக கௌரவமாகவும் அது மதிக்கப்படுகிறது, ஒழுக்க விதிகளைக் கட்டுப்படுத்துகிறது. மன ஆறுதலுக்குப் பொதுவான சாதனமாகவும் தோன்றுகிறது. மனிதனது ஆத்மாவின் மாயையான பூர்த்தியாக அது இருக்கிறது. இப்பூர்த்தி உண்மையானதன்று. மதத்தை எதிர்க்கும் போராட்டம், அதன் வெளிப்பாடான வேறோர் கற்பனை உலகத்தை எதிர்க்கும் போராட்டமாகவும் இருத்தல் வேண்டும். இவ்வுலகின், ஆன்மீக வாசனைதான் மதம், உண்மையான சோகத்தின் வெளிப்பாடாகத்தான் மதத்தின் சோக உணர்ச்சி இருக்கிறது. உண்மையான சோகத்தை எதிர்க்கும் உணர்ச்சி மத உணர்ச்சியில் உள்ளது. ஒடுக்கப்பட்ட ஜீவன்களின் பெருமூச்சாக மதம் உள்ளது. இதயமற்ற உலகின் இதயமாக அது தோற்றம் அளிக்கிறது. ஆன்மாவற்ற நிலையில் ஆன்மா போன்று அது காணப்படுகிறது. உண்மையில் மக்களை (மயக்கும்) அபினி போன்றது மதம்.

“மாயையான மதத்தை ஒழிப்பது மாயையான மத மகிழ்ச்சியை அகற்றுவதற்கும் உண்மையான மகிழ்ச்சிக்காக மனிதன் போராடுவதற்கும் அவசியம். மதம் பற்றிய விமர்சனம், மாயையான பந்தங்களிலிருந்து மனித மனத்தை விடுவிக்கிறது. விடுதலை பெற்ற மனம்


புற உலக வாழ்க்கையில் மனிதனது இடம் பற்றிச் சிந்திக்கிறது. மதம் மனிதனைச் சுற்றிச் சுழலுவதாகத் தோன்றும் மாயைத் தோற்றமான சூரியன். மனிதன் தன்னைத்தான் சுற்றிச் சுழலும்போது இத்தோற்றம் அகன்று விடுகிறது. ”

“மார்க்ஸ் உண்மைக்கப்பால் உள்ள உலகம் மறைந்துவிட்ட பிறகு, புற உலகின் உண்மையைக் காண்பதே வரலாற்றின் கடமையாகும். வரலாற்றின் பணிக்கு உதவும் தத்துவம், மனிதன் அந்நியப்படுதலால் விளையும் ‘புனிதமான உருவங்களை’ (மதக்கருத்துக்கள்) பொய்யெனக் காட்டுவதால் புனிதமற்ற உருவங்களின் (புற உலகின் உண்மையை) யதார்த்த நிலையை, அதன் முரண்பாடுகளை சுட்டிக் காட்டுவதும் ஆகும். இதனால், சுவர்க்கத்தைப் பற்றிய விமர்சனம், உலகம் பற்றிய விமர்சனமாக மாறுகிறது. மதம் பற்றிய விமர்சனம், நியாயம் பற்றிய விமர்சனம், கடவுளியல் பற்றிய விமர்சனங்களெல்லாம் அரசியல் பற்றிய விமர்சன மாற்றம் அடைகிறது.
மார்க்ஸ் தமது காலத்தில் உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்தார். இவற்றின் வளர்ச்சி, வருங்காலத்தில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். இதனை உணர்ந்த காரணத்தால், வருங்காலத்தைப்பற்றி ‘முன்னம்’ கூறி அதற்காகப் போராட வேண்டும் எனக் கூறினார். மனிதன் சமூக விடுதலை பெறும் காலத்தில், தற்காலிக ஊக்கி (stimulent-தேநீர், காபி போல)யாகவோ, வேதனைக் குறைக்கும் மருந்தாகவோ மதம் இருக்க வேண்டியதில்லை என்று உறுதியாக அறிவித்தார்.

மார்க்ஸ் எழுதினார்: கடந்த காலத்தின், சமுதாய வரலாறு, வர்க்க முரண்பாடுகள், வர்க்கப் பகைமை இவற்றை, இவற்றின் வளர்ச்சி நிலைகளில் ஆராய்வதாகும். அவற்றின் வடிவங்களை அறிவதையும் வரலாறு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சமுதாயங்களின் அமைப்பு


களில் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையனைத்தும் ஒரு அடிப்படையான தன்மையில் ஒன்றாகவே இருக்கின்றன. அவையாவும் ஒரு சிறுபான்மைப் பிரிவினர், மற்றோர் பெரும்பான்மைப் பிரிவினரை சுரண்டுகிற அமைப்புக்களே. இவ்வடிப்படைகளில் இருந்து தோன்றிய கருத்துக்களில் சில பொதுப்படையான கூறுகள் காணப்படுகின்றன. வர்க்கப் பகை ஒழியும் வரை இச்சிந்தனைகள் இருந்துதான் தீரும்.

"கம்யூனிஸ்டுப் புரட்சி மரபு வழியான சொத்துரிமை உறவுகளை ஒழித்து மரபையே மாற்றுகிறது. எனவே மரபு வழியான கருத்துகளில் இருந்தும் ஒரு முறிவை உண்டாக்கிப் புதிய கருத்துக்களைப் படைக்கிறது."

இப்புதிய கருத்துக்கள், வரலாறு முழுவதிலும் சிதறிக் காணப்படுகிற தீவிரமான, மனித நேயக் கருத்துக்களின் புதிய காலகட்டத்தின் வளர்ச்சியே.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து. 1922-ல் லெனின் மதக்கருத்துக்களை எதிர்த்து நாத்திகத்தைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். மதக்கருத்துக்களின் அழுத்தம் மக்கள் மனதில்,புதிய மனித நேயமும், முற்போக்கான கருத்துக்கள் வளராமல் தடைக் கல்லாக இருந்து, மக்களது விடுதலை பெற்ற உழைப்புச் சக்தி வளராமல் தடுப்பதையும் உணர்ந்து, மதக் கருத்துக்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து விரிவான பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் எழுதினார்:
லெனின் எழுதினார்:

“எல்லா மொழிகளிலும் இப்பொருள் பற்றி (நாத்திகம்) எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து அவற்றில் இருக்கும் முக்கியமான கருத்துக்களை விமர்சனம் செய்தல் வேண்டும். அல்லது மதிப்புரைகள் எழுத வேண்டும்,”

“எங்கெல்ஸ் தமது காலப்புரோலிட்டோரியன் தலைவர்களுக்கு, 18-ம் நூற்றாண்டின் தீவிரமான நாத்திக நூல்களை மொழி பெயர்க்கும்படி ஆலோசனை கூறினார், 18-வது நூற்றாண்டின் புரட்சிவாதிகளின் எழுத்துக்களில் அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களும், அப்பாவித்


தனமான வாதங்களும் மிகுதியாக உள்ளன. ஆயினும் இவற்றையெல்லாம் சுருக்கி,அடிக்குறிப்புகள் கொடுத்து, அறிவியல் பூர்வமான மதம் பற்றிய விமர்சனங்கள் எழுத் வேண்டும். 18-ம் நூற்றாண்டில் முன்னேற்றம் கண்டிருந்த மத எதிர்ப்புக் கருத்துக்களைச் சுட்டிக் காட்ட தற்காலத்தில் பதிப்பாளர்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் (முக்கியமாக விவசாயிகளும், தொழிலாளிகளும்) எழுத்தறியாமையிலும், மதங்கள் பிரசாரம் செய்யும் மூடத்தனத்திலும் ஆழ்ந்து கிடக்கும் பொழுது, மார்க்சீய கல்வியென்னும் நேர்வழியால் இவர்களது மனத்தில் அறிவொளி பாயச் செய்யலாம் என்று மார்க்சீயவாதிகள் கருதினால் அது பெருந்தவறாகும். இம்மக்கள் பெருங் கூட்டத்திற்கு பலவேறு விதமான நாத்திக எழுத்துக்களை அளித்தல் அவசியமானது. வாழ்க்கையின் பலவேறு துறைகளில் இருந்து உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாம் அவர்களைச் சந்திக்க வேண்டும். மத மயக்கத்தினின்றும் அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும். அவர்கள் எழுச்சிபெறச் செய்வதற்கு பலவேறு முறைகளை நாம் கையாள வேண்டும். மார்க்ஸ், எங்கல்ஸ் இருவருடைய முக்கியமான நூல்களை நாம் (ரஷ்ய மொழியில்) மொழி பெயர்த்துள்ளோம். பழமையான நாத்திகம், பழமையான பொருள்முதல் வாதம் இவற்றிற்கு மார்க்ஸும், எங்கல்ஸும் அளித்த பிழைத்திருத்தங்கள் மக்கள் மனத்தைக் கவராமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. மார்க்ஸிஸ்டுகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ளுவதில்லை. அறிவு வளர்ச்சி பெறாத மக்கள் மனங்களில் மதப் பிரச்சினைகள் பற்றி ஒரு அறிவுக் கூர்மையான போக்கை உண்டாக்கவும் மதம் பற்றிய அறிவுக் கூர்மையான விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக் கொள்ளவும் ஓர் எழுச்சியை உண்டாக்குவது தமது கடமை என்று கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்".
இக்கட்டுரை சில முக்கியமான விஷயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. அவை யாவன:

1) இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன,

46




2) நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சீயம்தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திக வாதத்தை தருக்க நிலையில் இருந்து, கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.

3) இன்று, மார்க்சீயம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில் கூட, நமது பண்டைய நாத்திக வாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்க வாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய மரபும் அதன் தற்கால வளர்ச்சியான மார்க்சீயமும் வளர்த்துள்ள நாத்திகத்தின் அடிப்படையில் பெரியாரின் நாத்திக வாதத்தை மதிப்பிட வேண்டும். மார்க்சீயவாதிகள் பெரியாரின் நாத்திகத்தை, சமூக வளர்ச்சிப் போக்கின் வெளிப்பாடாக ஆராய வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி இன்னும் துவங்கவில்லை.

ஆராய்ச்சி துவங்கு முன்னரே, முடிவுகளுக்கு வருவது மார்க்சீயவாதிகளின் மரபல்ல. ஆயினும் சில மேற்போக்கான கருத்துக்களை இங்கு கூறலாம்.

பெரியார் முரணற்ற நாத்திகர். "கடவுள் இல்லை, இல்லை. கடவுளை நம்புபவன் முட்டாள்" என்ற அவருடைய முழக்கங்களை, அவருடைய சிலைகளின் கீழ் செதுக்கி வைத்துள்ளார்கள். அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் கடவுளை ஒப்புக் கொண்டு. நாத்திகத்தை கைவிட்டார்கள். "ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்" என்ற முழக்கத்தை அரசியல் சௌகரியத்துக்காக மேற்கொண்டார்கள்.

பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். தீமிதியின் தெய்வத் தன்மையை மறுத்து, எவ்வித விரதங்களும் இல்லாமல், கடவுள் இல்லை என்று முழங்கிக் கொண்டு அவருடைய மாணவர்கள் தீமிதி நடத்தினார்கள்.

47




கடவுளை, சமூகமும், அரசும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் படைத்தது என்ற மார்க்ஸீய சிந்தனையை அறியாமல் அவர் சமூகப் படைப்பின் ஒரு பிரிவினரான பிராம்மணரையே, கடவுளைப் படைத்தவர்களாகவும், தங்கள் பிழைப்புக்கு தாங்கள் படைத்த மாயையான கடவுளையே பயன்படுத்தினார்கள் என்று கூறினர்.
பிராம்மணரையும், சூத்திரரையும் சமூக வரலாறு படைத்தது என்ற உண்மையை அவர் அறியவில்லை.
அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. எனவே அது கரடுமுரடாக (Crude) இருந்தது.
அவருடைய காலத்தில் மார்க்சீயத்தைக் கற்றுணர வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய நாத்திகத்தில் மார்க்சீயப் பொருள்முதல் வாதத்தின் தாக்கம் எதுவும் இல்லை. பண்டையப் பொருள்முதல்வாதிகள் வாதங்களின் சிலவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
அவருடைய நூற்றாண்டு விழாவில் நாத்திக சிந்தனையை மிகவும் துணிச்சலோடு மக்களிடையே பிரச்சாரம் செய்தார் என்பதை நினைவு கொள்வோம். அவருடைய பிரசாரம் பல நாத்திகர்களை உருவாக்கிற்று என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.
தமிழக மார்க்சீயவாதிகள், முற்போக்காளர்கள் அவருடைய நூற்றாண்டின்போது, அவருடைய நாத்திக வாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.