இன்னா நாற்பது
இன்னா நாற்பது
தொகு`நாற்பது` என்னும் எண் தொகையால் குறிக்கப்பெறும் கீழ்க்கணக்கு நூல்கள் நான்கு. அவை: 1.கார் நாற்பது, 2. களவழி நாற்பது 3. இன்னாநாற்பது 4. இனியவை நாற்பது என்பனவாம். கார் நாற்பதும் களவழி நாற்பதும் முறையே அகம், புறம் பற்றியவை.
இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பன.
இவ்விரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளும், இன்பம் தரும் செயல்களும் இன்னின்ன எனத் தொகுத்து உரைக்கின்றன. நூலுக்குப் புறம்பான கடவுள் வாழ்த்திலும் கூட 'இன்னா', இனிதே என்னும் சொற்கள் அமைந்துள்ளன.
இன்னா நாற்பதில் கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் 'இன்னா' என எடுத்துக் கூறுதலின் இந்நூல் 'இன்னா நாற்பது' எனப் பெயர்பெற்றது.
இந்நூலை இயற்றியவர் கபில தேவர்.
ஆசிரியர் தமது கடவுள் வாழ்த்தில் சிவபெருமான், பலராமன், திருமால், முருகன் ஆகியோரைக் குறித்துள்ளார். இதனால் இவர் சமயப் பொது நோக்கு உடையவர் என எண்ண இடமுண்டு.
கடவுள் வாழ்த்து
தொகு- முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
- பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
- சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
- சத்தியான் தாள் தொழாதார்க்கு.
இன்னா - துன்பம்
ஒழுகு - நடத்தல்
முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திகிரிப்படையை உடையவனாகிய மாயோனை மறத்தல் துன்பமாம். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.
நூல்
தொகுபாடல்: 01 (பந்தம்...)
தொகு- பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
- தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
- அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
- மந்திரம் வாயா விடின். 1
பந்தம் - சுற்றம்
வனப்பு - அழகு
சுற்றமில்லாத இல்வாழ்க்கையான் அழகு துன்பமாம். தந்தையில்லாத புதல்வனின் அழகு துன்பமாம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பமாம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிட்டால் துன்பமாம்.
பாடல்: 02 (பார்ப்பார்...)
தொகு- பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
- ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
- பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
- காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 2
இல் - மனையில்
புகல் - நுழைதல்
பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பமாம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பமாம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பமாம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பமாகும்.
பாடல்: 03 (கொடுங்கோல்)
தொகு- கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
- நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
- கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
- தடுமாறி வாழ்தல் உயிர்க்கு. 3
நெடுநீர் - கடல்
கடுமொழி - வன்சொல்
கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பமாம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பமாம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பமாம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பமாம்.
பாடல்: 04 (எருதில்...)
தொகு- எருது இல் உழவர்க்குப் போகு ஈரம் இன்னா;
- கருவிகள் மாறிப் புறங்கொடுத்தல் இன்னா;
- திருவுடையாரைச் செறல் இன்னா; இன்னா,
- பெரு வலியார்க்கு இன்னா செயல். 4
புறங்கொடுத்தல் - முதுகுகாட்டுதல்
எருது இல்லாத உழவர்க்கு அருகிய ஈரம் துன்பமாம். கருவிகளை இழந்து போரில் புறமுதுகிடுதல் துன்பமாம். செல்வம் உடையவர்களிடம் கோபம் கொள்ளுதலும், திறனுடையவர்களுக்குத் தீங்கு செய்தலும் துன்பமாம்.
பாடல்:05 (சிறையில்...)
தொகு- சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
- உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
- முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
- மறை இன்றிச் செய்யும் வினை. 5
ஓம்பல் - பாதுகாத்தல்
வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.
பாடல்:06 (அறமனத்தார்...)
தொகு- அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
- மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
- இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
- கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6
மறம் - வீரம்
கொடை - ஈகை
அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாயிற் சொல்லும் துன்பமாகும்.
பாடல்: 07 (ஆற்றல்...)
தொகு- ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
- நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
- தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
- மாற்றம் அறியான் உரை. 7
உரை - சொல்
தேற்றம் - தெளிவு
வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.
பாடல்: 08 (பகல்போலும்...)
தொகு- பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
- நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
- இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
- நயம் இல் மனத்தவர் நட்பு. 8
நகை - சிரித்தல்
நெஞ்சத்தார் - மனமுடையார்
ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.
பாடல்:09 (கள்ளில்லா...)
தொகு- கள் இல்லா மூதூர் களிகட்கு நன்கு இன்னா;
- வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
- வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
- பண் இல் புரவிப் பரிப்பு. 9
புரவி - குதிரை
பரிப்பு - தாங்குதல்
கலன் - குதிரையில் போடப்படும் சேணம்
கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே கலனை இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்.
பாடல்: 10 (பொருள்உணர்வார்...)
தொகு- பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டு உரைத்தல் இன்னா;
- இருள் கூர் சிறு நெறி தாம் தனிப்போக்கு இன்னா;
- அருள் இல்லார் தம் கண் செலவு இன்னா; இன்னா,
- பொருள் இல்லார் வண்மை புரிவு. 10
இல்வழி - இல்லாத இடத்தில்
சிறுநெறி - சிறிய வழியிலே
பொருள் அறியும் அறிவுடையார் இல்லாத இடத்தில் பாட்டுரைத்தல் துன்பமாகும். இருள் நிறைந்த சிறிய வழியில் தனியாகப் போகுதல் துன்பமாகும். அருள் இல்லாதவர்களிடம் இரப்போர் செல்லுதல் துன்பமாகும். அதுபோலப் பொருள் இல்லாதவர்கள் ஈதலைப் புரிதல் துன்பமாகும்.
பாடல்: 11 (உடம்பாடு...)
தொகு- உடம்பாடு இல்லாத மனைவி தோள் இன்னா;
- இடன் இல் சிறியாரோடு யாத்த நண்பு இன்னா;
- இடங்கழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
- கடன் உடையார் காணப் புகல். 11
யாத்த - பிணித்த
தொடர் - சேர்க்கை
உள்ளம் பொருந்தாத மனைவியின் தோளினைச் சேர்தல் துன்பமாகும். விரிந்த உள்ளமில்லாத சிறுமையுடையாருடன் நட்பு கொள்ளுதல் துன்பமாகும். மிக்க காமத்தினை உடையாரது சேர்க்கை துன்பமாகும். கடன் கொடுத்தவரைக் காணச் செல்லுதல் துன்பமாம்.
பாடல்: 12 (தலைதண்டமாக...)
தொகு- தலை தண்டமாகச் சுரம் போதல் இன்னா;
- வலை சுமந்து உண்பான் பெருமிதம் இன்னா;
- புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா; இன்னா,
- முலை இல்லாள் பெண்மை விழைவு. 12
சுரம் - பாலைவனம்
புலை - புலால்
தலை அறுபடும்படி காட்டினிடை செல்லுதல் துன்பமாகும். வலையை நம்பி வாழ்பவனின் செருக்கு துன்பமாகும். புலாலை விரும்பி உண்ணுதல் துன்பமாகும். முலை இல்லாதவள் பெண் தன்மையை விரும்புதல் துன்பமாகும்.
பாடல்: 13 (மணிஇலா...)
தொகு- மணி இலாக் குஞ்சரம் வேந்து ஊர்தல் இன்னா;
- துணிவு இல்லார் சொல்லும் தறுகண்மை இன்னா;
- பணியாத மன்னர் பணிவு இன்னா; இன்னா,
- பிணி அன்னார் வாழும் மனை. 13
ஊர்தல் - ஏறிச்செல்லுதல்
குஞ்சரம் - யானை
மணியில்லாத யானையின் மீது ஏறிச் செல்லுதல் அரசனுக்குத் துன்பமாகும். பகையை வெல்லுந் துணிவில்லாதவர்கள் கூறும் வீர மொழிகள் துன்பமாகும். வணங்கத்தகாத அரசனை வணங்குதல் துன்பமாகும். நோயுள்ளவர் வீட்டில் வாழ்வது துன்பமாகும்.
பாடல்: 14 (வணர்ஒலி...)
தொகு- வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா;
- துணர் தூங்கு மாவின் படு பழம் இன்னா;
- புணர் பாவை அன்னார் பிரிவு இன்னா; இன்னா,
- உணர்வார் உணராக்கடை. 14
புணர் - வேற்றுமையின்றி
உணராக்கடை - அறியாவிடத்து
கருமையான கூந்தலையுடைய மகளிர் தம் கணவனை வஞ்சித்தல் துன்பமாகும். கொத்தாகத் தொங்குகின்ற மாம்பழம் கனிந்து விழுந்தால் துன்பமாம். வேற்றுமையின்றிக் கூடிய பெண்ணைப் பிரிந்து செல்வது துன்பமாம். அறிந்து கொள்ளக் கூடியவர்கள் அறியாவிட்டால் துன்பமாம்.
பாடல்: 15 (புல்லார் புரவி...)
தொகு- புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா;
- கல்லார் உரைக்கும் கருமப் பொருள் இன்னா;
- இல்லாதார் நல்ல விழைவு இன்னா; ஆங்கு இன்னா,
- பல்லாருள் நாணுப் படல். 15
புல் - புல்லை புரவி - குதிரை
புல்லை உண்கின்ற குதிரையின்மேல் மணியில்லாமல் ஏறிச் செல்லுதல் துன்பமாம். கல்வியில்லாதவர் உரைக்கும் காரியத்தின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் விரும்பும் விருப்பம் துன்பமாம். அவ்வாறே பலர் நடுவே வெட்கமடையும்படியான நிலையில் இருத்தல் துன்பமாம்.
பாடல்: 16 (உண்ணாது...)
தொகு- உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா;
- நண்ணாப் பகைவர் புணர்ச்சி நனி இன்னா;
- கண் இல் ஒருவன் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
- எண் இலான் செய்யும் கணக்கு. 16
புணர்ச்சி - சேர்க்கை
வனப்பு - அழகு
உண்ணாது சேர்த்து வைக்கும் பெரும் பொருள் துன்பமாம். உளம் பொருந்தாத பகைவர்களின் சேர்க்கை துன்பமாகும். கண் இல்லாத ஒருவனின் உடல் அழகு துன்பமாகும். அவ்வாறே பயிலாதவன் இயற்றும் கணக்கு துன்பமாம்.
பாடல்: 17 (ஆன்றவிந்த...)
தொகு- ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா;
- மான்று இருண்ட போழ்தின் வழங்கல் பெரிது இன்னா;
- நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா; ஆங்கு இன்னா,
- ஈன்றாளை ஓம்பா விடல். 17
பேதை - அறிவு இல்லாதவன்
அவிந்த - அடங்கிய
கல்வி கற்ற சான்றோர் நிறைந்த சபையில் அறிவில்லாதவன் செல்லுதல் துன்பமாகும். மயங்கிய மாலைப் பொழுதில் வழியில் செல்லுதல் துன்பமாகும். துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு மனம் அடங்கி வாழாதவர்களுக்கு வாழ்க்கை துன்பமாம். அவ்வாறே தாயைக் காப்பாற்றாமல் வருதல் துன்பமாம்.
பாடல்: 18 (உரனுடையான்)
தொகு- உரன் உடையான் உள்ளம் மடிந்திருத்தல் இன்னா;
- மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா;
- சுரம் அரிய கானம் செலவு இன்னா; இன்னா,
- மன வறியாளர் தொடர்பு. 18
உரன் - திண்ணிய
மறன் - வீரம்
நல்ல அறிவுடையவர்கள் மனம் ஒடிந்து இருத்தல் துன்பமாம். வீரமுள்ள ஆட்களை உடையவன் முன்பு மார்பு தட்டுதல் (வீரம் பேசுதல்) துன்பமாம். அடர்ந்த காட்டில் செல்லுதல் துன்பமாகும். மன வறுமையுடையாரது சேர்க்கை துன்பமாகும்.
பாடல்: 19 (குலத்து...)
தொகு- குலத்துப் பிறந்தவன் கல்லாமை இன்னா;
- நிலத்து இட்ட நல் வித்து நாறாமை இன்னா;
- நலத்தகையார் நாணாமை இன்னா; ஆங்கு இன்னா,
- கலத்தல் குலம் இல் வழி. 19
குலத்து - நற்குடியில்
நிலத்து - பூமியில்
நற்குடியில் பிறந்து கல்வியைப் பெறாமல் இருத்தல் துன்பமாகும். பூமியில் இட்ட நல்ல விதைகள் முளைக்காமை துன்பமாகும். அழகுடைய மகளிர் வெட்கப்படாமை துன்பமாகும். அவ்வாறே ஒவ்வாத குலத்தில் திருமணம் செய்வது துன்பமாகும்.
பாடல்: 20 (மாரிநாள்...)
தொகு- மாரி நாள் கூவும் குயிலின் குரல் இன்னா;
- வீரம் இலாளர் கடு மொழிக் கூற்று இன்னா;
- மாரி வளம் பொய்ப்பின், ஊர்க்கு இன்னா; ஆங்கு இன்னா
- மூரி எருத்தால் உழவு. 20
இலாளர் - அன்பில்லாதவரது
ஊர்க்கு - உலகிற்கு
மழைக்காலத்தில் குயிலினது குரலோசை துன்பமாகும். அன்பில்லாதவரது கடுமொழி துன்பமாகும். மழை பெய்யவில்லை என்றால் ஊருக்கும் துன்பம். அவ்வாறே எருமையால் உழவுத் தொழில் செய்தால் துன்பமாகும்.
பாடல்: 21 (ஈத்த...)
தொகுஈத்த வகையால் உவவாதார்க்கு ஈப்பு இன்னா;
பாத்து உணல் இல்லாருழைச் சென்று உணல் இன்னா;
மூத்த இடத்துப் பிணி இன்னா; ஆங்கு இன்னா,
ஓத்து இலாப் பார்ப்பான் உரை. 21
பிணி - நோய்
உணல் - உண்ணுதல்
கொடுத்த அளவினால் மகிழாதவர்களுக்குப் பொருள் கொடுத்தல் துன்பமாம். பகுத்து உண்ணுதல் இல்லாதவனிடம் சென்று உண்ணுதல் துன்பமாம். முதுமையுற்ற பருவத்தில் நோய்ப்படுத்துதல் துன்பமாம். அவ்வாறே வேதத்தை ஓதுதல் இல்லாத அந்தணனின் செயல் துன்பமாம்.
பாடல்: 22 (யானைஇல்...)
தொகுயானைஇல் மன்னரைக் காண்டல் நனி இன்னா;
ஊனைத் தின்று ஊனைப் பெருக்குதல் முன் இன்னா;
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா; ஆங்கு இன்னா,
கான் யாறு இடையிட்ட ஊர். 22
கான்யாறு - காட்டாறு
யானைப் படையில்லாத அரசரைப் பார்த்தல் மிகவும் துன்பமாகும். உடலைத்தின்று உடல் வளர்ப்பது மிகவும் துன்பமாகும். தேனும் நெய்யும் புளித்துவிட்டால் துன்பமாம். அவ்வாறே காட்டாறுக்கு இடையில் உள்ள ஊர் மிகவும் துன்பமாம்.
பாடல்: 23 (சிறைஇல்லா...)
தொகுசிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா;
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா;
அறை பறை அன்னார் சொல் இன்னா; இன்னா,
நிறை இலான் கொண்ட தவம். 23
சிறை - மதில்
அறை - ஒலிக்கின்ற
மதில் இல்லாத ஊரைக் காப்பது துன்பமாம். குடிநீர்த் துறையில் ஆடை கழுவுதல் துன்பம். பாறை போன்றாரது சொல் மிகவும் துன்பமாம். ஐம்பொறிகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவனது தவம் துன்பமாகும்.
பாடல்: 24 (ஏமல் இல்...)
தொகுஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா;
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா;
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா; ஆங்கு இன்னா,
யாம் என்பவரோடு நட்பு. 24
ஏமம் - காவல்
மூதூர் - பழைய ஊரில்
காவலற்ற ஊரில் வாழ்தல் மிகவும் துன்பமாகும். தீச் செய்கையுடையவரது அருகில் இருத்தல் மிகவும் துன்பமாகும். காமநோய் முற்றினால் உயிர்க்குத் துன்பமாகும். அவ்வாறே, நான், எனது என்பாரோடு தங்கியிருத்தல் துன்பமாம்.
பாடல்: 25 (நட்டார்...)
தொகுநட்டார் இடுக்கண்கள் காண்டல் நனி இன்னா;
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா;
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா; ஆங்கு இன்னா
நட்ட கவற்றினால் சூது. 25
ஒட்டார் - பகைவரது
உறை - வாழ்தல்
நட்புக் கொண்டவர்களுடைய துன்பங்களைப் பார்ப்பது துன்பமாம். பகைவரது பெருமிதத்தைப் பார்ப்பது மிகவும் துன்பமாகும். உறவினர் இல்லாத பழைய ஊரில் வாழ்தல் துன்பமாகும். அவ்வாறே சூதாடுவது துன்பமாகும்.
பாடல்: 26 (பெரியாரோடு...)
தொகுபெரியாரோடு யாத்த தொடர் விடுதல் இன்னா;
'அரியவை செய்தும்!' என உரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம் உற்ற கூற்று இன்னா; இன்னா,
பெரியார்க்குத் தீய செயல். 26
யாத்த - கொண்ட
கூற்று - சொல்
பெரியவருடன் கொண்ட நட்பினை விடுதல் துன்பமாம். செய்தற்கரிய காரியங்களைச் செய்வோம் என்று கூறுவது துன்பமாம். அன்பு கொள்ளாதவர்களுக்குத் தாம் அடைந்த துன்பங்களைச் சொல்வது துன்பமாகும். பெருமையுடையவர்களுக்குத் தீயவற்றைச் செய்தல் துன்பமாகும்.
பாடல்: 27 (பெருமை உடையாரைப்...)
தொகுபெருமை உடையாரைப் பீடு அழித்தல் இன்னா;
கிழமை உடையாரைக் கீழ்ந்திடுதல் இன்னா;
வளமை இலாளர் வனப்பு இன்னா; இன்னா,
இளமையுள் மூப்புப் புகல். 27
பீடு - இகழ்ந்து
மூப்பு - முதுமை
பெருமையுடையோரை இகழ்ந்து கூறுதல் துன்பம். உரிமையுடையோரை நீக்கி விடுதல் துன்பமாம். செல்வம் இல்லாதவருடைய அழகு துன்பமாம். இளமைப்பருவத்தில் முதுமைக்குரிய தன்மைகள் புகல் துன்பமாகும்.
பாடல்: 28 (கல்லாதான் ஊரும்...)
தொகுகல்லாதான் ஊரும் கலிமாப் பரிப்பு இன்னா;
வல்லாதான் சொல்லும் உரையின் பயன் இன்னா;
இல்லாதார் வாய்ச் சொல்லின் நயம் இன்னா; ஆங்கு இன்னா,
கல்லாதான் கோட்டி கொளல். 28
கலிமா - குதிரை கோட்டி - பைத்தியம்
குதிரையேற்றம் தெரியாதவன் குதிரையில் செல்லுதல் துன்பமாம். கல்வி இல்லாதவன் சொல்லுகின்ற சொல்லின் பொருள் துன்பமாம். பொருள் இல்லாதவர் பேசும் நயமான பேச்சு துன்பமாம். அவ்வாறே கல்வியறிவு இல்லாதவன் கற்ற அவையில் ஒன்றைக் கூறுதல் துன்பமாகும்.
பாடல்: 29 (குறி அறியான்...)
தொகுகுறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா;
தறி அறியான் கீழ் நீர்ப் பாய்ந்தாடுதல் இன்னா;
அறிவு அறியா மக்கள் பெறல் இன்னா; இன்னா,
செறிவு இலான் கேட்ட மறை. 29
மாநாகம் - பெரிய பாம்பு
பாம்பினை அடக்கத் தெரியாதவன் பெரிய பாம்பினை ஆடச் செய்தல் துன்பமாம். உள்ளிருக்கும் ஆழத்தை அறியாமல் நீரில் பாய்ந்து விளையாடுதல் துன்பமாம். அறிய வேண்டுவனவற்றை அறியமாட்டாத பிள்ளைகளைப் பெறுதல் துன்பமாம். அடக்கமில்லாதவன் கேட்ட இனிய உரை துன்பமாம்.
பாடல்: 30 (நெடுமரம்...)
தொகுநெடு மரம் நீள் கோட்டு உயர் பாய்தல் இன்னா;
கடுஞ் சின வேழத்து எதிர் சேறல் இன்னா;
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா; இன்னா,
கடும் புலி வாழும் அதர். 30
சேறல் - செல்லுதல்
அரவு - பாம்பு
அதர் - வழி
நெடிய மரத்தின் உச்சிக் கிளையிலிருந்து கீழே குதித்தல் துன்பமாம். மிக்க கோபத்தினையுடைய யானையின் எதிரே செல்லுதல் துன்பமாம். பாம்பு புற்றில் கை வைத்தல் துன்பமாம். கொடிய புலிகள் வாழும் வழியில் செல்லுதல் துன்பமாம்.
பாடல்: 31 (பண் அமையா...)
தொகுபண் அமையா யாழின்கீழ்ப் பாடல் பெரிது இன்னா;
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா;
மண் இல் முழவின் ஒலி இன்னா; ஆங்கு இன்னா,
தண்மை இலாளர் பகை. 31
முழவின் - மத்தளத்தின்
பண் - இசை
இசைக்க முடியாத யாழில் பாடுதல் துன்பமாம். சோதிடம் தெரியாதவர்கள் முகூர்த்தம் பார்த்தல் துன்பமாம். தாளம் இல்லாத மத்தளத்தின் ஓசை துன்பமாம். அவ்வாறே தன்மை இல்லாதவரது பகையானது துன்பமாம்.
பாடல்: 32 (தன்னைத் தான்...)
தொகுதன்னைத் தான் போற்றாது ஒழுகுதல் நன்கு இன்னா;
முன்னை உரையார் புறமொழிக் கூற்று இன்னா;
நன்மை இலாளர் தொடர்பு இன்னா; ஆங்கு இன்னா,
தொன்மை உடையார் கெடல். 32
ஒழுகுதல் - நடத்தல்
தொன்மை - பழமை
தன்னைத்தானே காத்துக்கொள்ளாது இருத்தல் மிகவும் துன்பமாம். முன்னே சொல்லாமல் பின்னால் பேசுபவர்களின் சொல் மிகவும் துன்பமாம். நல்ல குணமில்லாதவரது நட்பு துன்பமாம். அவ்வாறே பழைமையுடையவர் கெடுதல் துன்பமாம்.
பாடல்: 33 (கள் உண்பான்...)
தொகுகள் உண்பான் கூறும் கருமப் பொருள் இன்னா;
முள்ளுடைக் காட்டில் நடத்தல் நனி இன்னா;
வெள்ளம் படு மாக் கொலை இன்னா; ஆங்கு இன்னா,
கள்ள மனத்தார் தொடர்பு. 33
மா - விலங்கு
கருமம் - காரியம்
கள் குடிப்பவன் சொல்கின்ற காரியத்தின் பயன் துன்பமாம். முட்களையுடைய காட்டில் நடத்தல் மிகவும் துன்பமாம். வெள்ளத்தில் அகப்பட்ட விலங்கு கொலையுண்டல் துன்பமாம். அவ்வாறே வஞ்ச மனத்தினை யுடையவரது தொடர்பு மிகவும் துன்பமாம்.
பாடல்: 34 (ஒழுக்கம்...)
தொகுஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா;
விழுத்தகு நூலும் விழையாதார்க்கு இன்னா;
இழித்த தொழிலவர் நட்பு இன்னா; இன்னா,
கழிப்பு வாய் மண்டிலம் கொட்பு. 34
கேண்மை - நட்பு
மண்டிலம் - நாட்டில்
நல்ல ஒழுக்கம் இல்லாதவரிடத்தே தமக்கு உறவு உள்ளதாகக் கூறுதல் துன்பமாம். சீரிய நூலினை விரும்பிக் கல்லாதார்க்குத் துன்பமாம். இழிவான தொழில் செய்பவனின் தொடர்பு துன்பமாம். நல்லவரால் விலக்கப்பட்ட இடத்தில் இருத்தல் துன்பமாம்.
பாடல்: 35 (எழிலி...)
தொகுஎழிலி உறை நீங்கின் ஈண்டையார்க்கு இன்னா;
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா;
குழவிகள் உற்ற பிணி இன்னா; இன்னா,
அழகுடையான் பேதை எனல். 35
பிணி - நோய்
குழவி - குழந்தை
மேகம் மழையைத் தராவிட்டால் துன்பமாம். புல்லாங்குழலைப் போல இனிய மரத்தினது ஓசை துன்பமாம். (மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று உராயும் போது தீப்பற்றிக்கொள்ளும்) குழந்தைகள் அடைந்த நோய் மிகவும் துன்பமாகும். அறிவில்லாதவன் அழகாயிருத்தல் மிகவும் துன்பமாம்.
பாடல்: 36 (பொருள் இலான்...)
தொகுபொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா;
நெடு மாட நீள் நகர்க் கைத்து இன்மை இன்னா;
வரு மனை பார்த்திருந்து ஊண் இன்னா; இன்னா,
கெடும் இடம் கைவிடுவார் நட்பு. 36
காமுறுதல் - விரும்புதல்
கைத்து இன்மை - பொருளின்றியிருத்தல்
செல்வமில்லாதவன் பிறருக்கு உதவி செய்ய ஆசைப்படுதல் துன்பமாம். நெடிய மாடங்களையுடைய பெரிய நகரத்தில் பொருள் இன்றி இருத்தல் மிகவும் துன்பமாகும். சென்ற வீட்டில் உள்ளவரை எதிர்பார்த்து உணவு உண்ணுதல் துன்பமாம். வறுமையுள்ள இடத்தில் கை விட்டு நீங்குவாரது நட்பு துன்பத்தைத் தரும்.
பாடல்: 37 (நறிய மலர்...)
தொகுநறிய மலர் பெரிது நாறாமை இன்னா;
துறை அறியான் நீர் இழிந்து போகுதல் இன்னா;
அறியான் வினாப்படுதல் இன்னா; ஆங்கு இன்னா,
சிறியார் மேல் செற்றம் கொளல். 37
நாற்றம் - மணம்
செற்றம் கொளல் - சீற்றம் கொள்ளுதல்
வாசனை இல்லாத நல்ல மலர் துன்பமாகும். கரையைத் தெரியாதவன் நீரில் இறங்கிச் செல்லுதல் துன்பமாம். அறியாதவன் கற்றவர்களால் வினாப்படுதல் துன்பமாம். அவ்வாறே சிறியவர்கள் மீது கோபம் கொள்ளுதல் துன்பமாம்.
பாடல்: 38 (பிறன் மனையாள்...)
தொகுபிறன் மனையாள் பின் நோக்கும் பேதைமை இன்னா;
மறம் இலா மன்னர் செருப் புகுதல் இன்னா;
வெறும் புறம் வெம் புரவி ஏற்று இன்னா; இன்னா,
திறன் இலான் செய்யும் வினை. 38
பேதைமை - அறிவின்மை
ஏற்று - ஏறுதல்
பிறன் மனைவியை விரும்பித் தொடர்வது துன்பமாம். வீரமில்லாதவன் போர்க்களத்தில் செல்லுதல் துன்பமாம். விரைந்து செல்லும் கடிவாளம் இல்லாத குதிரையின் முதுகில் ஏறுதல் துன்பமாம். செய்யத் தெரியாதவன் செய்யும் காரியம் துன்பமாம்.
பாடல்: 39 (கொடுக்கும்...)
தொகுகொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா;
கடித்து அமைந்த பாக்கினுள் கல் படுதல் இன்னா;
கொடுத்து விடாமை கவிக்கு இன்னா; இன்னா,
மடுத்துழிப் பாடா விடல். 39
கல் படுதல் - கல் இருத்தல்
வள்ளன்மை - ஈகைத்தன்மை
பொருள் இல்லாதவனுடைய வள்ளன்மை துன்பமாம். கடிய பாக்கினுள் கல்படுதல் துன்பமாம். புலவனுக்குப் பரிசு கொடுக்காமை துன்பமாம். தடைப்பட்ட இடத்தில் பாடல் பாடாமல் விடுதல் துன்பமாம்.
பாடல்: 40 (அடக்கம் ...)
தொகுஅடக்கம் உடையவன் மீளிமை இன்னா;
தொடக்கம் இலாதவன் தற்செருக்கு இன்னா;
அடைக்கலம் வவ்வுதல் இன்னா; ஆங்கு இன்னா
அடக்க, அடங்காதார் சொல். 40
மீளிமை - செருக்கு, தலைகணம்
தொடக்கம் - முயற்சி
அடக்கமுடையவனின் செருக்கு துன்பமாம். முயற்சி இல்லாதவன் தன்னைத்தானே புகழ்தல் துன்பமாம். பிறர் அடைக்கலமாக வைத்தப் பொருளை கவர்ந்து கொள்ளுதல் துன்பமாம். அவ்வாறே அறிவுடையோர்கள் அடக்கமில்லாதவனுக்குக் கூறும் சொல் துன்பமாம்.
கபிலர் பாடிய இன்னா நாற்பது முற்றும்.