இன்னொரு உரிமை/உறவுக்கு அப்பால்

உறவுக்கு அப்பால்


து, தியாகராஜன் மறைந்த மூன்றாவது ஆண்டு நினைவு நாள்.

தியாகராஜனின் மனைவி காமாட்சி சென்ற இரவு அழுது தீர்த்து வீங்கிப்போன முகத்துடன், அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, பூஜையறையில் இருந்த அவர் போட்டோவை எடுத்து மேஜையில் வைத்தாள். ஊதுபத்தியைப் பத்து வயது சிறுவன் பிடித்துக்கொண்டிருக்க, கல்லூரியில் பி யூ.சி. படிக்கும் பதினேழு வயது பையன் மோகன், ஊதுபத்தியைக் கொளுத்தினான். அப்போது ஒரு ரோஜாப் பூ மாலையுடன் வீட்டுக்குள் வந்த வித்யா, மாலையை அப்பாவின் படத்தில் மாட்டப் போனாள். பிறகு, என்ன நினைத்தாளோ தெரியவில்லை. அதை அம்மாவிடம் கொடுத்தாள். காமாட்சி கண்ணீர் மாலை கழுத்தில் வியாபிக்க, கை மாலையை எடுத்து படத்தில் போட்ட போது, அவள் உடல், உள்ளத்தில் தோன்றிய பூகம்ப உணர்ச்சியால் ஆடியது. வித்யா அம்மாவைக் கைத்தாங் கலாக அணைத்தவாறு, படத்திற்கு எதிரே உட்காரவைத்து, தானும் உட்கார்ந்தாள்.

நால்வரும் அந்தப் படத்தையே உற்றுப் பார்த்தார்கள். மௌனத்தை மீறிய ஏதோ ஒன்று பட்டும் தொட்டும் காட்ட முடியாத, இனம் புரியாத ஒரு உணர்வு அங்கே மௌனத்துடன் சேர்ந்து ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது.

‘காமாட்சி... பொண்ணு வயசுக்கு வந்துவிட்டாள், ஆயிரம் ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்கியும் மிச்சம் பண்ணாட்டா எப்படி’ன்னா கேக்கறே? கவலைப்படாதே... இந்தக் காலத்துல பணம் சம்பாதிக்கனுமுன்னு நினைச்சா... எப்படி வேணுமுன்னாலும் சம்பாதிக்கலாம். என் ஆபீஸ்லெயே கை நீளுறதுக்கு பைல்ஸ் நீளமாயும் இருக்கு, அகலமாயும் இருக்கு. ஆனால் அது ஒரு பிழைப்பா? எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்கிறது முக்கியமில்ல... எப்படிச் சம்பாதிக்கிறோம் என்கிறதுதான் முக்யம்... டோன்ட் ஒர்ரி மை கேர்ல்...” என்று கணவன் முன்பொரு முறை சொன்னது ஞாபகம் தந்தது.

வெளியே கார் சத்தம் கேட்டது. இரண்டு மூன்று நிமிடங்களுக்குள், தியாகராஜன் தம்பி சதாசிவமும், தங்கை மீனாட்சியும் வந்தார்கள். அவர்களது சிரிப்போசை, கார்க் கதவை மூடும்போது கேட்டது. இப்போது, வீட்டிற்குள் நிலவிய ‘மூடை’ப் பார்த்ததும், அது அவர்களுக்கும் தொற்றிக்கொள்ள அசையாமல் நின்றார்கள்.

சகோதரி மீனாட்சியினால் அண்ணனின் படத்தைப் பார்த்ததும் தாள முடியவில்லை. ‘அண்ணா ஒவ்வொரு தீபாவளிக்கும் டில்லியிலிருந்து காஷ்மீர் சில்க் புடவை வாங்கி அனுப்புவியே... இனிமே யாருண்ணா எனக்கு அனுப்புவாங்க?’ என்று சத்தம் போட்டே அழுதாள். இந்த அழுகையைவிட அதன் அர்த்தத்தில் அதிர்ந்துபோன சதாசிவம், “அண்ணா! என்கிட்டே ‘டேய்... ஒன் பையனுக்கு தமிழ்நாட்ல என்ஜீனியரிங் காலேஜ்ல இடம் கிடைக்காது. உன் பையனை நல்லா படிக்கச் சொல்லு டில்லியில் என் வீட்லயே தங்கி, அவன் படிக்கட்டுமுன்னு’ சொல்லுவீங்களே...இனிமே யாரண்ணா...அப்படிச் சொல்லுவாங்க?” என்று அக்காளின் சத்தத்திற்கு அதிகமான சத்தத்தில் புலம்பினார்.

மீனாட்சி புறப்படுவதற்காக எழுந்திருக்கப் போனாள். அப்படி எழுந்திருப்பதற்காக வலது கையைத் தரையில் ஊன்றிக்கொண்டே, "சதாசிவம்... என்னை வீட்ல டிராப் பண்ணிடு" என்றாள்.

"உன் மகன் ரவி வந்து பிக்கப் பண்ணுவான்னு சொன்னியே?" என்றார் சதாசிவம்.

"கம்பேனி கார்லே வந்துடுறேன்னான். அவன் சமாசாரந்தான் ஒனக்குத் தெரியுமே? சினிமாவுக்குப் போனாலும் போயிருப்பான்!"

மீனாட்சி எழுந்தாள். அண்ணனின் படத்துக்கு அருகே சென்று லேசாகக் குனிந்து கொண்டே, "தலைக்கு மேல ஒன் பொண்ண வச்சிக்கிட்டு தவிக்கிறாமே அண்ணா... நாங்க எவ்வளவு முயற்சி பண்ணினாலும், வித்யாவுக்கு நல்ல இடம் அமையமாட்டேங்குதே! கொஞ்சம் கருணை காட்டு அண்ணா" என்று கண்ணீர் மல்க மன்றாடினாள்தியாகராஜன் கருணை காட்டாததால் தான் கல்யாணமே நடக்காமல் இருப்பது மாதிரி.

சதாசிவம் அவசரப்படுத்தினார். அவர் அவசரத்திற்கும் ஒரு காரணம் இருந்தது. "எனக்கும் பொண்ணுங்க இருக்கு... என்னால மாப்பிள்ளை பார்க்க இயலாது. லாபத்தைப்போல நஷ்டம் வந்துட்டா அப்புறம் என் தல தான் உருளும்" என்று போன வருடம், தலையை உருட்டிக் கொண்டே சொல்லிவிட்டவர் அவர். ஒரு காலத்தில் 'வித்யாவுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டியது என் பொறுப்பு. ரவி பயலுக்கெல்லாம் கொடுக்கப்படாது' என்று டில்லியில் காமாட்சி செய்து போட்ட பக்கடாவைத் தின்று கொண்டே சொன்னவரும் இவர் தான், இப்போது, தன் சொந்த மகளுக்கு சின்ன வயதிலேயே வித்யாவுடன் இணைத்துப் பேசப்பட்ட ரவியை முடக்கத் திட்டமிட்டு இருப்பவரும் இவர்தான்.

இருவரும் காரைவிட வேகமாகப் புறப்பட்டு, காருக்குள் நுழைந்து கதவைச் சாத்தினார்கள்.

காமாட்சி கணவன் படத்திற்கு அருகே போய் நின்றாள்.

“நாலு வருஷத்துக்கு முன்னாடி... ‘அண்ணா! உங்க வித்யாவை எங்க ரவிக்குத்தான் கொடுக்கணும். மாட்டேன்னு சொன்னால் என் மகன் அவளுக்குக் கள்ளத்தாலி கட்டுவான்’னு சொன்ன உங்க தங்கை இப்போ எப்படிப் பசப்புறாள் பாத்திங்களா?” என்று பொருமினாள்.

வேலூரிலிருந்து வித்யாவின் பெரிய அத்தையும், அவள் புருஷனும் ஒரு கூடை ஆப்பிள் பழத்துடன் வந்தார்கள். மாமா எஞ்ஜினியர். அத்தை ஆசிரியை.

அத்தைக்காரி முறைப்படி அழுது முடித்துவிட்டு, வித்யாவின் தலையைக் கோதிவிட்டுக் கொண்டே, “நம்ம வித்யாவுக்கும் நல்ல காலம் பிறந்துட்டுது. தம்பிங்களோ தங்கச்சியோ அவளுக்கு ஏதாவது வழி பண்ணுவாங்கன்னு நினைத்து இதுவரை சும்மா இருந்திட்டேன். தியாகுவோட நீங்க எல்லாருமே இறந்திட்டதாய் நினைச்சிட்டாங்க... கவலப்படாதீங்க, நானிருக்கேன்” என்றாள்.

காமாட்சியம்மாளுக்குப் புத்துயிர் ஏற்பட்டது. மகளுக்கு விடிவுகாலம் ஏற்படப் போகிறது என்கிற மகிழ்ச்சியில் நாத்தனாரைப் பார்த்து, “ஏதாவது சாப்புடுறீங்களா...” என்றாள். நாத்தனார்காரி தத்துவரீதியாகப் பேசினாள். அவள் புருஷன் ஒரு தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைக்கருகே நின்றுகொண்டார்.

“சாப்புட்டு சாப்புட்டுத்தான் என்ன்த்தைக் கண்டோம்? இப்போ அதுவா முக்கியம். நம்ம வித்யாவுக்கு ஒரு பையனைப் பார்த்திருக்கேன். ஒன்னுக்குள்ள ஒன்னு. இவருக்குத் தூரத்துச் சொந்தம்...”

"பையனுக்கு என்ன வேலை?"

"ஒரு கம்பெனில ரெண்டாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறான். சம்பாதிச்சு என்ன பிரயோஜனம்? வீட்ல விளக்கேத்தி வைக்க ஆள் வேண்டாமா?"

"சின்ன வயதிலேயே ரெண்டாயிரம் ரூபாய் சம்பளமா!"

"அதுக்குத் தான் திறமை வேணுங்கிறது. இவரை மாதிரி இருந்தால் ஆயிரத்தைக் கண்ணால கூட பார்க்கமுடியாது. நல்ல பையன். ஆனாலும் ஒரு உண்மையைச் சொல்லிடணும்."

"சும்மா சொல்லுங்க."

தப்பா நினைக்கப்படாது; பையனுக்கு நாற்பதுக்கு உள்ள தான் இருக்கும். போன வருஷம் அவன் வீட்டுக்காரி இறந்துவிட்டாள். ரெண்டே ரெண்டு பிள்ளைங்கதான். பையன் தங்கம்னா தங்கம். இந்தமாதிரி இடம் கிடைக்கிறது கஷ்டம்."

காமாட்சியம்மாள் நீர் முட்டிய கண்களை வேகமாகத் துடைத்துக்கொண்டே, அமைதி கலந்த ஆவேசத்துடன் கேட்டாள் :

"ஒங்க பொண்ணு விஜயாவைக் கொடுக்கலாமே?"

வந்தவளுக்கும், அவளுடன் வந்தவருக்கும், கண்கள் சிவந்தன. "எங்க விஜயாவும் ஒங்க வித்யாவும் ஒன்றாயிடுமா?" என்று கேட்கப் போனவள், கோபத்தை அடக்கிக் கொண்டு. "ஒங்களுக்கு இஷ்டமில்லைன்னா விட்டுடும் களேன்... எதுக்காக என் பெண்ணை இழுக்கறீங்க," என்றாள்.

காமாட்சி மீண்டும் அமைதியாகப் பேசினாள்.

"உங்க பெண்ணுக்கே அப்படி நடக்கிறதாக இருந்தாலும், அதைத் தடுக்கிற முதல் ஆள் நானாத்தான் இருப்பேன்... தப்பா நினைக்கப்படாது. ஒங்க பொண்ணு வேறே, என் பொண்ணு வேறயா? ஒங்களுக்கு இந்த ஐம்பது வயதுல நாற்பது வயசுக்காரன் பையனாத் தெரியுறது நியாயந்தான். ஒரு இருபத்திரண்டு வயதுக்காரிக்கும் அவன் பையனா தெரிய முடியுமா?"

வந்தவர்கள் புறப்பட்டுவிட்டார்கள்.

அன்றுதான் உண்மையான இழவு நடந்ததுபோல், காமாட்சி எதுவும் சாப்பிடாமல், பிள்ளைகளையும் சாப்பிடச் சொல்லாமல் ஒரு மூலையில் போய் முடங்கிக் கொண்டாள்.

வித்யாவுக்கு மூளை மரத்துப்போனதுபோல் தோன்றினாலும், இதயம் வெளியே வரப்போவது போல் துடித்தது. மூன்றாண்டுகளுக்கு முன்னால் டில்லியில் வடநாட்டுப் பெண்ணைப்போல் ‘சல்வார்-கமீஸுடன்’ தன்னுடன் பி. ஏ. (ஹானர்ஸ்) படித்துக்கொண்டிருந்த சக தோழிகளுடன் அஜ்மல்கான் பார்க்கை அலசியது, உல்லாசமாக சண்டிகர் போனது, தாஜ்மகால் பார்த்தது அங்கே அவர்கள் அவளை ‘மும்தாஜ்’ என்று சொன்னது, “இனிமேல் உனக்குக் கேக் தரமாட்டேன். அதனாலதான் நைட்ல சாப்பிட மாட்டேங்கறே” என்று அம்மா கடிந்துகொண்டது. டில்லி யூனிவர்சிட்டி மாணவர் யூனியன் தேர்தலில் ஜாயிண்ட்-செகரட்டரிக்காகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது, ‘எ ஓட் பார் வித்யா, இஸ் எ ஓட் பார் சத்யா’ என்று சக தோழிகள் ஒலி பெருக்கிகளை வைத்துக்கொண்டு கத்தியது, சென்னைக்கு விடுமுறையில் சின்ன அத்தை வீட்டுக்கு வந்திருந்தபோது ரவி அவளிடம் வளைய வளைய வந்தது. அத்தைக்காரி “வித்யா, இந்த ரூம் உனக்குச் சரிப்படாது தான். இருந்தாலும் சகிச்சிக்கம்மா.” என்று குழைந்து பேசியது. எல்லாமே நினைவுக்கு வந்தன. அந்த நினைவின் சுமைகள் விழிகளைக் கவிழ்க்க அவள் கண் கலங்கியவாறே கண்மூடினாள்.

 ரு வாரம் ஓடியது.

ரவியின் அம்மா மீனாட்சி வீட்டுக்கு வந்தாள்.

"வர்ர வெள்ளிக்கிழமை ரவியோட பர்த்டே ...வீட்டுக்கு. வித்யாவைக் கூட்டிக்கிட்டு வாங்க. வித்யாவுக்கு நல்ல காலம் பிறக்குது" என்றாள்.

காமாட்சி அவளைக் குடுகுடுப்பைக்காரியைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டே, "நீங்க சொல்றதைப் பார்த்தால்..." என்று இழுத்தபோது, 'பேசாமல் வாங்க... ரவிக்கும் ஆசீர்வாதம் பண்ணுனாப்போல இருக்கும். வித்யா நீ ஏண்டி பெரியவங்க பேசுறதை ஒட்டுக் கேட்கிறே? 'போ போ' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

காமாட்சி, வித்யாவை அர்த்தபுஷ்டியாகப் பார்த்து விட்டு, "அப்பாவைப் போய்க் கும்புடு" என்றாள்.

வித்யா, டில்லியில் படிக்கும்போது, விடுமுறையில் அங்கு வந்திருந்த ரவியைக் 'சொஞ்சம் கர்நாடகம்' என்று நினைத்திருந்தாலும், அவனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்திருந்தாள். அவளையும், அவள் பேசும் ஆங்கிலத்தையும் கண்டு, கேட்ட ரவிக்கு, சற்றுத் தாழ்வு மனப்பான்மைகூட ஏற்பட்டது, ஆனால், வித்யா, அவனைச் சொல்லுக்குச் சொல் 'ரவி டியர்...ரவி டியர்' என்று சொன்னதால், தன்னம்பிக்கை ஏற்பட்ட ரவி, ஒரு நாள் ஒரு அழகான காதல் கடிதத்தை எழுதி, அவள் வேறு பக்கம் பார்த்தபோது, அவள் நோட்டுக்குள் வைத்துவிட்டு, காட்ரெஜ் பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டான், தற்செயலாக நோட்டைத் திறந்த வித்யா - இது என்ன டமில் ஸ்கிரிப்ட் மாதிரி இருக்கு டாடி... நீங்களா இதை வச்சிங்க?' என்று சொல்லிக் கொண்டே அந்தக் காகிதத்தை ஏந்திக் கொண்டு அப்பா விடம் போகப்போனவளை, ரவி தற்காப்பை முன்னிட்டு கையைப் பிடித்து அவள் தோளைத் தன் பக்கம் லேசாகச் சாய்த்து அந்தக் கடிதத்தைப் பிடுங்கினான். அப்போதுதான் அவளுக்குத் தமிழ் எழுத்துக்கள் தெரியாது என்பதை உணர்ந்துகொண்டான். கையில் இருக்கும் காகிதம் காதல் தூதென்று அவன் விளம்பிவிட்டு, அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்தான்.

வித்யா சிரித்தாள். நாணத்துடன் சிரித்தாள்.

“டாமிட்... நான் ஒனக்கு இந்தியில் பதில் எழுதப் போறேன் பாரு... இங்கிலீஷ்ல எழுதினா என்னவாம்?” என்றாள். ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், அதில் இயல்பாக வரும் எழுத்துப் பிழைகளையும் இலக்கணப் பிழைகளையும் கண்டு, தன் காதலையே நிராகரித்துவிடலாம் என்று பயந்துபோன ரவி“ தமிழ் தாய்மொழி... அதுலதான் எழுதணும்” என்றான். உடனே அவள் டாமிட்... “ஒனக்கு இங்கிலீஷ் வரல. ஆனால்” என்று சொன்னபோது “காதல் வருது” என்று ரவி முடித்தான்.

அப்புறம் எஞ்சியிருந்த ஒரு வாரம்வரை, அவன் வித்யாவுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்தான். அவள் அவனுக்கு இந்தி கற்றுக் கொடுத்தாள். அளவோடு அவர்கள் பழகினாலும் அந்த அளவே அவர்களுக்கு ஒருவித புனிதத்தை ஏற்படுத்தியது.

வித்யா நடந்தவைகளை நினைத்து, நடக்கப்போவதில் திளைத்து மகிழ்ந்தாள். ‘இந்த மூணு வருஷமா... ரவி கண்ணாலகூட காதல் பண்ணலேன்னு நினைச்சது எவ்வளவு தப்பு. கடைசியில் அப்பா அம்மாகிட்ட பக்குவமாய்ச் சொல்லி அவனோட பர்த் டேயில என்னையே வாங்கிக்கிறானே? டாமிட்!’

வெள்ளிக்கிழமை வந்தது.

உனக்கு இந்த டிரெஸ் நல்லாருக்கு’ என்று ரவி டில்லியில், எதைச் சொன்னானோ, அதை அணிந்துகொண் டாள். 'உனக்கு என்னைவிட என் டிரெஸ் தான் பிடிச்சிருக்கோ' என்று அவள் சிணுங்கியபோது, அவன் சிரித்த, விதத்தை இப்போது நினைத்துக் கொண்டாள்.

அதே புடவையைக் கட்டிக்கொண்டு அதே மாதிரி 'ரிங்' விட்டு, முன் நெற்றியில் முடிக்கற்றைகளை நளினப்படுத்தி வைத்துக்கொண்டு அம்மாவுடன், தம்பிகள் சகிதமாய்ப் புறப்பட்டாள்.

"வாம்மா வித்யா" என்று வரவேற்றாள் அத்தைக்காரி, வித்யா ரவியை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவனும் சிரித்தான்.

அத்தைக்காரி ஒரு போட்டோவைக் காமாட்சியிடம் காட்டினாள். யாரோ ஒரு வாலிபனின் போட்டோ.

அத்தைக்காரி அடுக்கினாள்.

"இவன் நம்ம ரவிக்கு பிரண்டாம். டில்லியில வேலை பார்க்கிறானாம். நல்ல குடும்பப் பெண்ணா வேணுமுன்னு' ரவிகிட்ட கேட்டானாம்! மெட்ராஸ்ல அவனுக்கு வசதியா பெண் பார்க்க ஆளில்லையாம். அப்பா, அம்மா கிடையாதாம். அதுவும் நமக்கு நல்லதாப்போச்சு!"

வித்யாவுக்குத் தலை சுழன்றது.

"எனக்கு யாரும் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம்."

வித்யா இதுவரை போடாத பலத்த சத்தத்தில் கத்தி விட்டு மேற்கொண்டு சிறுமைப்பட விரும்பாதவள்போல் எங்கேயோ ஓடினாள். அது மாடியில் ஒரு அறையில் அவளை நிறுத்தியது. நிலைகுலைந்த மேனியை நிலைப்படுத்துவதற்காக ஒரு தூணில் தலையை வைத்துக்கொண்டு கைகளால் அதற்கு அணை கொடுத்தவாறு விழிகள் சொட்ட நெஞ்சம் விம்ம, நினைவுக் கானலின் ஏமாற்றம் தாங்கமாட்டாது ‘இப்படியா மனிதர்கள்’ என்று கொதித்து ‘இப்படித்தான் மனிதர்கள்’ என்று கொதித்தடங்கி விரக்தியின் வேகத்தில் வெடித்துக் கிளம்பிய பெருமூச்சு விழியோரத்தில் பட்டு, அந்த வேகத்தில் உப்பு நீர், உப்புச் சப்பற்ற அவள் வாழ்க் கையை எடுத்துக் கூறுவதுபோல் கன்னக் கதுப்புகளிலிருந்து இறங்கியபோது—

ரவி வந்தான்

“வித்யா இந்தப் பையனுக்கு என்ன குறைச்சல்? இந்தா பாரு! இந்த அழுகிற சமாசாரம் எனக்குப் பிடிக்காது. ஏன் பிடிக்கலேன்னு சொல்றே! எனக்குத் தெரிஞ்சாகணும்.”

வித்யா நிதானப்பட்டாள்.

“ரவி... நீ மன்னிக்கணும். நீங்க டில்லியில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கையில... தலையில் குட்டினிங்க இல்லியா?”

“அதுக்கென்ன இப்போ!”

அது செல்லக் குட்டுன்னு நினைச்சேன். ஆனால் அது உண்மையிலேயே சீரியஸான குட்டுன்னு இப்போதுதான் தெரியுது. உங்க குட்டை இப்போதான் தெரிஞ்சிக் கிட்டேன்!’’

அதுக்கென்ன இப்போ?’’

“இப்போ ஒண்னுமில்லை யூ ஆர் கரெக்ட்.”

“நீ எதையாவது நினைச்சால் அதுக்கு நான் பொறுப்பல்ல. விரலுக்குத் தக்கபடிதான் வீக்கம் என்கிறதை மறந்துட்டே...”

“உண்மையிலேயே நீங்க கெட்டிக்காரர்தான். கம்பெனியை மட்டுமல்லாம, உறவையும் கமர்ஷியலாய்ப் பார்க்கிறவர்! குவிக்கா முன்னுக்கு வந்துடுவீங்க! கங்கிராஜுலேஷன்ஸ்!”

"குதர்க்கம் வேண்டாம். நான் வாக்குக் கொடுத்துட்டேன். நீ அவனைக் கட்ட முடியுமா முடியாதா?"

"எங்க குடும்பம் நொடிச்சிப் போனது உண்மைதான். ஆனால் நீங்க மாப்பிள்ளை பார்த்து, நான் கட்டிக்கிற அளவுக்கு மானம் நொடிச்சி போகலே ஸார்..."

"பின் விளைவுகள் தெரியாம பேசாதே! இது உங்க அப்பா காலமுல்ல."

வித்யா இப்போது அவனை நேருக்கு நேராகப் பார்த் தாள். அவனைப் பார்க்கப் பார்க்க தன்மானம் அழுகையை அடக்கியது. இயலாமையை எதிர்ப்பு விலக்கியது. அச்சத்தை அஞ்சாமை விரட்டியது. மீண்டும் டில்லிப் பெண்ணானாள்.

"பின்விளைவுகள் தெரியாம பேசல. முன்விளைவு தெரியா தவரால ஏற்படுற பின்விளைவு தெரிந்து தான் பேசறேன்! நீங்க எல்லோரும் வட்டமேஜை மாநாடு போட்டு எங்களுக்குக் கொடுக்கப்போற உதவித்தொகையை நிறுத்தப்போறீங்க... அவ்வளவு தானே? பரவாயில்லை.

"உறவுக்கு மனிதாபிமானமோ, மனிதாபிமானத்துக்கு உறவோ தேவையில்லை. டில்லியில் என் அப்பாவின் நண்பர் ஒரு சர்தார்ஜி. நாங்கள் போகக் கூடாதுன்னு கண்ணீர்விட்டு அழுதார். இதை எதுக்காகச் சொல்றேன்னா... மனிதாபிமானம், மதம், மொழி, மத்தப் பிணைப்புக்களைத் தாண்டியது. உறவின் பரிபாஷைகள் பொருளாதார அந்தஸ்தைப் பொறுத்தது. ஆனால் மனிதாபிமானம் பொருளாதார வேலிக்குள் அடங்காத கருணை வெள்ளம். என் அப்பாவுக்கு அப்படிப்பட்ட சில மனிதாபிமான நண்பர்கள் இருக்காங்க ஸார்! என் அப்பா இறந்ததுனால... மனிதாபிமான அடிப்படையில் எனக்கு ஒரு வேலை கொடுக்க அப்பவே அரசாங்கம் முன் வந்தது. நான் தான் உங்களைப் பார்க் காமல் இருக்கமுடியாது என்பதுக்காக இங்கே குடும்பத்தைக் கூட்டி வந்தேன். இப்போ உங்களைப் பார்க்கக் கூடாது என் சிறதுக்காகவே பழையபடியும் டில்லிக்குப் போகப் போறோம். அங்கே வேலையில சேரப்போறேன். தாங்க் யூ மிஸ்டர் ரவி, வரட்டுமா?"

ரு வாரம் ஓடியது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டில்லி ரயிலுக்கு மணியடிக்கப்பட்டது. இரண்டாவது வகுப்புப் பெட்டியில் வித்யா, அவள் தம்பிகள், காமாட்சியம்மாள் உட்கார்ந்திருந்தார்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே ஸ்டேஷனில், இதே இவர்களுக்கு இருந்த உறவின் ஆர்ப்பாட்டம் இப்போது இல்லை, போய்ச் சேர்ந்ததும் ஒரு டெலகிராம் போடுங்க. உங்களை விட்டுட்டு எப்படித்தான் இருக்கப் போறோமோ' என்ற பிரிவு வார்த்தைகள் பேச ஆளில்லை. அழுவதற்கு அத்தைகள் வரவில்லை. கலங்குவதற்கு சித்தப்பாக்கள் இல்லை. எல்லாவற்றிற்கும் மேலாக கண்ணடிக்க ரவியில்லை.

என்றாலும் 'யாரும் இல்லாமல் போகவில்லை' என்று காட்டுவதுபோல், வித்யாவும் அவள் குடும்பத்தினரும் கம்பீர மாக நிமிர்ந்து உட்கார்ந்திருந்தார்கள்.




MK Colour Process, Madras-14

Phono: 841478