இன்னொரு உரிமை/நிசமான பத்தினி



நிசமான பத்தினி


றுவடை முடிந்துவிட்டதால் வயக்காடு ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதுபோல், சீனியம்மாவும் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள். பஞ்சாயத்துப் பழைய தலைவர், பழைய உறுப்பினர்கள், நிரந்தரமான மணியம், கர்ணம் போன்ற ‘பெரிய இடத்து’ வீடுகளுக்கு முன்னால் போடப்பட்டிருந்த அரசாங்க வாரியக் குழாய்களில் நீர் பிடிக்க முடியாமல் குழாய்கள் கடந்த ஆறுமாத காலமாகப் பழுதடைந்து தேடுவாரற்றுக் கிடந்ததால், அவள் காலையிலேயே எழுந்து ‘தோண்டிப்பட்டையும்’ குடமுமாக ஊர் கிணற்றிற்குச் சென்று ஐந்தாறு குடந் தண்ணீரைப் பிடித்து விட்டு, அதே கையோடு சாணந் தெளித்து முற்றத்தைப் பெருக்கிவிட்டு, பிறகு அந்த ஓலை வீட்டின் தரையையும், திண்ணையையும் சாண நீரால் மெழுகிவிட்டு, செல்லமாக வளர்க்கும் கன்றுக்குட்டிக்கு அருகாமையில் இருந்த ‘தோட்டந் தொலைவில்’ போய்ப் புல்லை வெட்டிக் கொண்டுவந்து போட்டுவிட்டு, ஓடைக்கருகே நின்ற கருவேல மரக்குச்சிகளை ஒடித்து விறகாகக் கொண்டுவந்து, சோறு பொங்கி, படுத்த படுக்கையாகக் கிடக்கும் அய்யாவுக்கு ‘அன்னப்பாலை’க் கொடுத்துவிட்டு ‘ஒதுங்குமிடமாக’ இருந்த சுற்றிலும் பனையோலைகளால் மறைச்கப்பட்ட ‘செருவையில்’ இற்றுப்போயிருந்த ஓலைகளை எடுத்துவிட்டு ஒடிந்த கம்புகளை நீக்கி, வாதமடக்கிக் கம்புகளைக் கட்டி,
புதிய ஒலைகளை அந்தக் கம்புகளோடு கோத்துக் கட்டி விட்டு எங்கேயோ ‘துஷ்டி’ கேட்டுவிட்டு வந்த அம்மா குளிப்பதற்காக மீண்டும் இரண்டு குடந் தண்ணீரைக் கொண்டு வந்து கொட்டிவிட்டு மீண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

இத்தனை வேலைகளையும் ‘போனஸாகச்’ செய்து விட்டு, நாள் முழுவதும் வயக்காட்டில் கூலி வேலைக்குப் போகும் அவளுக்கு, அன்று கையைக் காலை கட்டிப் போட்டதுபோல் இருந்தது. ‘ஓய்வு’ அவளை ஓய்ந்துபோகச் செய்தது.

இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு வேலை இருக்காது. கம்மாவில் விதைப்பு வேலையும் நஞ்சை நிலமான வயலில் ‘பல்லாரி’ நடவும் துவங்க மூன்று நாட்களாவது ஆகும். அதுவரைக்கும் எப்படிச் சும்மா இருப்பது? வீட்டு வேலைகளைத் தவிர வேறு வேலை இல்லாமல் எப்படிப் பொழுதை ஓட்டுவது? சாயங்காலத்தில் கன்றுக்குட்டிக்குப் புல் வெட்டப் போகலாம். மீண்டும் தண்ணீர் பிடிக்கப் போகலாம். மீண்டும் முற்றத்தைத் தெளிக்கலாம். மீண்டும் அடுப்பைப் பற்ற வைக்கலாம். ஆனால் அந்த மத்தியானப் பொழுது போகமாட்டங்கே? ‘கரி முடிவாங்க’ சீக்கிரமா வயல் வேலயத் துவக்கினால் என்ன? நமக்குன்னு ஒரு வயலு. இருந்தால்... இப்பவே போய் நடலாம். இந்த ஊர்க்காரங்க அறுவடய தின்னப் பிறவுதான் வயல நினைப்பாங்க போலுருக்கு.

படுத்த படுக்கையாகக் கிடக்கும் அய்யாவுக்கு, வெந்நீர் ஒத்தணம் கொடுக்கலாமா என்று நினைத்து பிறகு மத்தியான வெயிலுல கொடுக்கலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருந்தபோது பக்கத்துக் காரை வீட்டிற்கருகே இருக்கும் வேப்பமரத்தடியில் இருந்து பெண்களின் சிரிப்பு சீறிக்கொண்டு வந்தது. எதுக்கு இப்படிச் சிரிக்காளுவ... போயித்தான் பாப்போம்.

வேப்பமரத்தடியில், ஏழெட்டு இளம் பெண்கள், மூன்று நடுத்தர வயதுப்பெண்கள் வட்டமாக உட்கார்ந்து, “நீ ஆயிரம் சொல்லு, நாகேஷ் மாதிரி வராது பிள்ள.” என்று ஒருத்தி சொல்ல, இன்னொருத்தி “நீ பழயகாலத்துக் கர்நாடவம்! முப்பது வயச தாண்டுணவ... ஒனக்கு சினிமாவப் பத்தி என்னழா தெரியும்” என்று எதிர் வழக்காட, இதரப் பெண்கள் அவர்களை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்ப்பது போல் சிரித்தார்கள். வாய்கள் என்னதான் பேசினாலும், கண்கள் எங்கேதான் பார்த்தாலும், நினைவுகள் டூரிங் தியேட்டர்களுக்குப் போனாலும், ஒவ்வொருத்தியின் கைகளும் தத்தம் மடியில் உள்ள வட்டமான தட்டில் இருந்து பழுத்துப்போன ஆலிலை போலிருந்த பீடி இலைகளை, கத்திரிக்கோலால் லாகவமாக, சதுரஞ் சதுரமாய் வெட்டுவதும், ஒவ்வொரு இலையையும் இடது கையில் வைத்து, தட்டில் குவிந்திருந்த பீடித்தூளை எடுத்து, இலையில் அளவோடு போட்டு, நளினமாக உருட்டி, தென்ன நாரால் கட்டி, ஊசியாகக் குவிந்த இடத்தைப் பிடித்துக்கொண்டே, உருளையாகத் திரண்ட பகுதியை மடித்து, பீடியைப் போலவே அமைந்த தேக்குக்குச்சியை வைத்து அழுத்தி, அனாயாசமாகக் கீழே போட்டுவிட்டு, மீண்டும் இலையை எடுப்பதும், மடிப்பதுமாக இருந்தார்கள்.

சீனியம்மாவைப் பார்த்ததும், ஒரு பதினாறு வயதுக் காரி, “இந்தா சீனியக்கா வந்துட்டா! இவாகிட்ட கேட்டா தெரிஞ்சிட்டுப்போவுது. எக்கா கமலஹாசன் நடிப்பு நல்லா இருக்குமா, இல்ல ரஜனிகாந்த் நடிப்பா சொல்லுக்கா” என்றாள். உடனே “ஆமாம் அவதான் பொருத்தமாச் சொல்லுவா” என்று இன்னொருத்தி சொல்லிவிட்டுச் சிரித்தாள். உடனே எல்லாப் பெண்களும் சிரித்தார்கள்.

சீனியம்மாவுக்கு வெட்கமாகிவிட்டது. அந்தப் பெண்கள், சினிமா கினிமா என்று நாலுந் தெரியாத தன் கர்நாடகத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு அவர்களைச் சங்கடத்துடன் பார்த்தாள். அவள் சங்கடப் பார்வையால் சங்கடப்பட்ட, அவளது பெரியய்யா பேத்தி தன் அத்தைக்காரியைப் பார்த்து “பின்ன என்ன அத்த, நீ சினிமா... சினிமாவாகப் பாருன்னு சொல்லல. ஆடிக்கு ஒரு தடவ , அமாசைக்கு ஒரு தடவையாவது பாக் காண்டாமா... பாத்தா, இவளுவ இப்படி நாக்குமேல பல்லப்போட்டுப் பேசுவாளுவளா... உக்காரு” என்றாள்.

இந்தமாதிரி அந்தப் பெண்கள். சீனியம்மாவைக் கிண்டல் செய்வது வழக்கந்தான். அப்போதெல்லாம் ‘போங்கடி... புண்ணாக்கு மாடத்திகளா...’ என்று பதில் பேசும் சீனியம்மை அன்று ஏனோ வேறுவிதமாகவே பதிலளித்தாள்.

“ஆமாம்... இவளுவ சினிமாவுக்குக் கூப்புட்டாளுவ... நான் வரமாட்டேன்னுட்டேன்.”

“அப்படின்னா இன்னைக்கி போறோம்... வாறீயா?”

“எத்தனாவது ஆட்டத்துக்கு?”

“முதல் ஆட்டத்துக்கு.”

“ரெண்டாவது ஆட்டத்துக்குன்னா வரமுடியும். கண்ணுக்குட்டிக்கு புல்லை வெட்டிப் போட்டுட்டு வந்துடு வேன்...”

“நீ புல்லு மட்டுமா வெட்டுவ? வெட்டுன புல்ல தின்னு கூடப் பார்ப்ப...”

“எதுக்குடி எங்க அத்தைய மாடுன்னு குத்திக் காட்டுறிய? அத்த! நீ இதுக்காவது எங்ககூட சினிமாவுக்கு வரணும்!”

சீனியம்மை அப்படியும் சொல்லாமல், இப்படியும் பேசாமல், அவசர அவசரமாகக் காட்டுப் பக்கம் போனாள். “இவள... போயி கூப்பிட்ட பாரு” என்று ஒருத்தி மோவாயில் இடிக்க, மற்றொருத்தி தோளை மோவாயில் இடித்தாள்.

ஆனால் சாயங்காலம் பீடிப் பெண்கள் புறப்பட்டபோது சீனியம்மையும் அழுக்காய் இருந்த தன் புடவையை உட்பக்கமாக மாற்றி மடித்து உடுத்திக்கொண்டு, தலையில் இரண்டு தங்கரளிப் பூக்களை வைத்துக்கொண்டு தயாராக இருந்தாள். அவள் முதலாவது ஆட்டத்திற்குப் போவதால், மத்தியானம் வெட்டிய புல்லில் கன்றுக்குட்டி ‘மேட்னி’ ஆட்டம் போட்டது.

அந்தக் குக்கிராமத்தை அடுத்து, இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டூரிங் தியேட்டரை நோக்கி அந்தப் பெண்கள் நடைபோட்டார்கள். சினிமா நடிக―நடிகைகளில் இருந்து, பீடிக்கடையில் உள்ள கணக்கப் பிள்ளை வரை அலசிக்கொண்டே போனார்கள். சீனியம்மைக்குக் கூச்சமாக இருந்தது. மற்றப் பெண்கள் ‘முன் கொசுவம்’ வைத்த நைலக்ஸ் புடவைகள் கட்டியிருந்த போது, தான்மட்டும் பின் கொசுவம் வைத்து அச்சடிப் புடவையைக் கட்டியிருப்பதற்காகச் சிறிது வெட்கப்பட்டவள் போல் காலைத் தேய்த்துத் தேய்த்து நடந்தாள். அவளுக்கும் முன் கொசுவம் வைத்துக் கட்ட ஆசைதான். இருந்தாலும் கூச்சம். அவர்கள் கேலி செய்வார்கள் என்கிற பயம். அந்தப் பெண்கள் முகத்திற்குப் பவுடர் போட்டிருப்பதைப் பார்த்ததும், அவள் முகம் பவுடர் மாதிரி வெளுத்தது. அவர்கள் காலில் கலர் செருப்புக்கள். இவள் காலில் செருப்பைப் போன்ற காய்ப்புக்கள். ஒவ்வொருத்தியும் இடுப்பின் ஒரு பக்கத்தில் ஒரு கைக்குட்டையையும், இன்னொரு பக்கத்தில் ஒரு சின்ன மணிபர்ஸையும் வைத்திருந்தார்கள். நடந்துகொண்டே அவர்கள் நடந்து முடிந்த சினிமாக்களை விமரிசனம் செய்தபோது, சீனியம்மையால் தடக்க முடியவில்லை. நொண்டினாள்.

‘பெஞ்ச்’ டிக்கெட் எடுத்தார்கள். பீடிக்கடைப் பையன்களில் சிலர் அவர்களின் வரவால் ஆச்சரியப்படாமலும், அதேசமயம் ஆனந்தப்பட்டும், ‘ஏன் இவ்வளவு லேட்டு...’ என்பது மாதிரி கண்களால் பார்த்தபோது, கண்கொத்திப் பாம்பு போன்ற ஒருத்தி, “வார்படம் (அதாவது செய்திப் படம்) முடியட்டுமுன்னு மெதுவா நடந்தோம்... அப்படியும் இந்தச் சனியன் முடியல பாரு...” என்றாள். உடனே ஒருவன், “அதுதான் பாக்கோமே” என்றான். எல்லார் சார்பிலும் உடனே சிரிப்பு. ஒவ்வொருத்தியும் ஒவ்வொருவனைப் பார்த்துச் சிரித்தபோது சீனியம்மை சிரிக்க முடியாமல் திண்டாடியபோது, ஒரு பயல் “சினிமாவுலயும் புது முகம். இங்கேயும் புதுமுகண்டா” என்றான். சீனியம்மைக்கு சினிமாவில் புதுமுகம் என்றால் என்ன என்பது தெரியாததால், அவள் முகம் எந்தவித மாறுதலும் இல்லாமல் பழைய முகமாகவே இருந்தது.

படம் துவங்கியது. பீடிப் பெண்கள் ‘டயலாக்’ முடிவதற்கு முன்பே டயலாக்கைச் சொன்னார்கள். ஒவ்வொரு திரைமுகத்தையும் பெயர் சொல்லி அழைத்தார்கள். “இப்போ கமலஹாசன் வருவான் பாரு... பாரு...” என்று படத்தைப் பார்க்காமல் பக்கத்துப் பிரிவில் இருந்த பையன்களைப் பார்த்தார்கள். பெண் பெஞ்சுக்கும் ஆண் பெஞ்சுக்கும் இடையே ஒரு மூங்கில் கழி கட்டப்பட்டிருந்தது. நல்லதுக்குத்தான்,

சீனியம்மை இப்போது அதிகமாக வெட்கப்பட்டாள். அந்தப் பெண்கள் பேசப் பேச, தன் அறியாமையை நொந்து கொண்டாள். இன்னும் தான் நாகரிகப்படாமல் போனதற்காக வருத்தப்பட்டாள். நடிக-நடிகையர்களின் பெயர்களைப் பற்றித் தெரியாமல் பொன்னி, ஐ-ஆர் எட்டு, போஸ் கலப்பை போன்ற உருப்படாத பெயர்களை மட்டுமே தெரிந்து உருப்படாமல் போனதற்காக, தன் உருவத்தைக் கூனிக் குறுக்கிக்கொண்டாள். இந்த நிலம கூடாது. இவளுவள மாதிரியே முன் கொசுவம் கட்டணும். இவளுவள மாதிரியே சினிமா நடிகர்கள் பெயரைத் தெரிஞ்சி வச்சிக் கிடணும். இனுமேயும் கர்நாடவமாய் இருக்கப்படாது. இருக்கப்படாதுன்னா இருக்கப்படாதுதான்.

சினிமா பார்த்து மூன்று நாட்களாகிவிட்டாலும், சீனியம்மைக்கு அந்த சினிமா படமே கண்ணில் திரைபோட்டது. அது கண்ணில் திரை போட்டது என்றால் அந்தப் பெண்களின் பேச்சும், பேச்சுக்கேற்ற முன் கொசுவமும், கொசுவத்திற்கேற்ற புடவையும் கருத்திற்குத் திரை போட்டன.

சீனியம்மை தன் உள்ளங் கைகளைப் பார்த்தாள். அப்போது சினிமாவில் கதாநாயகன் நாயகியின் கையைப் பிடித்து, ‘இந்த மென்மையான கையைப் பிடிக்க என்ன தவம் செய்தேனோ’ என்ற வார்த்தை நினைவுக்கு வந்தது. அது வரவர, அவள் தன் உள்ளங்கையை நிமிர்த்திப் பார்த்தாள். வலதுகையின் ஆள்காட்டி விரலின் மத்தியில் கறுப்பு நிறத்தில் ஒரு காய்ப்பு. பெருவிரல் ‘படத்தில்’ மண்வெட்டிக் கணைபட்ட தடயம். உள்ளங்கையின் சரிந்த உட்பகுதியில், திட்டுத் திட்டாகக் காய்ப்புக்கள். இந்த ஆள்காட்டி விரலால் வாய்க்கால் மண்ணை எடுத்து, பல் தேய்த்ததால், அந்தக் காய்ப்பில் சின்னச் சின்னப் புள்ளிகள். அந்தப் புள்ளிகளில், கடைவாய்ப் பல்முனை பட்டு லேசான கீறல்கள். அந்தக் காய்ப்பும், புள்ளியும் கீறலும் சீனியம்மைக்கு அவமானச் சின்னங்களாகத் தோன்றின. சீ! சினிமாவுல வாரவளோட கையி எப்படி இருக்கு! இலவம் பஞ்சு மாதுரி... சினிமாக்காரி எதுக்கு? இன்னா பீடி சுத்தறவளுவ கையிசுட எவ்வளவு ‘மெதுவா’ இருக்கு. நாளக்கி நம்மள கட்டறவனே இந்தகைய சினிமாவுல வாரவன் பிடிக்கது மாதிரி ஒருவேளை பிடிச்சால்...? ஒருவேளை என்ன? நிச்சயம் பிடிப்பான். அப்போ இந்த காய்ப்பப் பார்த்தான்னால்...? சீ, மண்வெட்டியப் பிடிச்சுப் பிடிச்சு என் கையி மண்வெட்டி மாதிரியே ஆயிட்டு... முன் கொசுவம் வச்சிக் கட்ட முடியல. உள்ளங்கைய சினிமாவுல சொன்னதுமாதிரி ரோஜாப்பூ மாதிரி ஆக்கணும்.’

சீனியம்மைக்கு, திடீரென்று ஒரு சபலம் ஏற்பட்டது. முப்பது வினாடிகளுக்குள் அந்தச் சபலம் எண்ணமாகி பிறகு அதுவே ஒரு வைராக்கியமாக வைரப்பட்டது.

‘ஆமாம். இனிமேல் பீடிதான் சுத்தணும். பழகிட்டா, ஒரு நாளைக்கு முப்பது வண்டல் சுத்தலாம் (வண்டல் என்றால் ஆங்கில பண்டில்), மொத்தம் வயல் வேலையில் கிடைப்பதைவிட அதிகந்தான் கிடைக்கும். நைலக்ஸ் புடவ கட்டலாம். அதுவும் முன் கொசுவத்துல. ஒரு கைக் குட்டையை இடுப்பில வச்சிக்கிடலாம். ஆடாம அசையாம இருந்த இடத்தில இருந்தபடியே சம்பாதிக்கிற வேல. வயக் காட்டு சகதியில புரளாண்டாம். வாய்க்கால் மண்ணுல பல் தேய்க்காண்டாம். நிழலுலயே இருக்கலாம். அப்போதான் வெயிலுல வேலபாத்து வேலபாத்து கறுப்பாப்போன என் சிவந்த உடம்பு... ரத்தச் சிவப்பா மாறும். தண்ணில நின்னு நின்னு அழுகுனது மாதுரி ஆன இந்தக் காலு சும்மா கலர் செருப்புமாதிரி மின்னும்.

பீடி சுற்றிப் பழக, எப்படியும் பதினைந்து நாள் ஆகும் அதுவரைக்கும் சீனியம்மாவால் வேலைக்குப் போகாமல் வெறும் பயிற்சியிலேயே நாளைக் கடத்த முடியாது அறுவடைக் கூலியாய் கிடைத்த பத்து மரக்கால் நெல்லில், மழைகாலத்தில் வாங்கிய கடனுக்கு வட்டியாக மூன்று மரக்காலும் அசலுக்கு முதல் தவணையாக இரண்டு மரக்கால் நெல்ல வித்து அம்மாவுக்கு ஒரு சேலையும், அய்யாவுக்கு ஒரு வேட்டியும் வாங்கியாச்சு. மெட்ராஸ்ல மளிகக் கடையில வேலபாக்குற தம்பி பணம் அனுப்புவான்னு நம்பி, இருந்தத வித்தாச்சு. அவன் என்னடான்னா ஒரு ‘வாச்சி’ வாங்கியாச்சுன்னு எழுதுறான். மொத்தத்தில் வேலைக்குப் போனால் தான் சாப்பாடு.

அவள் தட்டுத்தடுமாறி வயல் வேலைக்குப் போனாள்.

சீனியம்மை வேலைக்குப் போய்விட்டுத் திரும்பியதும் அம்மாவை கன்றுக்குட்டிக்குப் புல் போடச் சொல்லிவிட்டு, காலையில் தோளில் வைத்துச் சுமந்துகொண்டுபோன மண்வெட்டியை மாலையில் அருவருப்பாகப் பார்த்துக்கொண்டே கீழே போட்டுவிட்டு, வேப்பமரத்தடிக்கு வந்து மின்சார விளக்கின் ஒளியில் பீடி சுற்றும் அந்தப் பெண்களிடம் வந்து இலை வெட்டிப் பழகினாள். முதலில் காகிதங்களை வெட்டிப் பழகி, பிறகு இலைகளை வெட்டினாள். படிப்படியாக இலைகளைச் சுற்றுவதிலும், தூள்களை வைப்பதிலும், சுருட்டி மடக்குவதிலும் தேர்ச்சி பெற்றாள். ஆரம்பத்தில் அவள் எங்கே தங்கள் இலைகளை வீணடித்துவிடுவாளோ என்று அஞ்சிய பெண்கள், “அவா இலையை வெட்ட என் இலைதானா கிடச்சுது” என்பார்கள். சீனியம்மை வயக் காட்டில் இருந்து வரும்போது அவர்களுக்கு குளக்கரையில் கிடைக்கும் நாகப்பழங்களையும், ஆலம் பழங்களையும் கொடுத்து அவர்களைச் சரிக்கட்டினாள். ஆனால் இப்போது அந்தப் பெண்கள், “எனக்கு சுத்து சீனி... உனக்கு வேணுமானால் பத்து பைசா தாரேன்” என்பார்கள். அவளைச் சரிக்கட்டும் அளவிற்கு சரியாகப் பழகிக்கொண்டாள். சீனியம்மை பீடி சுற்றுவதில் ‘சுயாட்சி’ பெறும் நாள் வந்தது.

மண்வெட்டியை வந்த விலைக்கு ஒருவருக்கு விற்று விட்டு, அந்தப் பணத்தில் ஒரு கத்திரிக்கோல் வாங்கினாள். மூங்கிலால் பின்னிய ஒரு வட்டத்தட்டை வாங்கினாள். அய்யாவும், அம்மாவும் அவளுக்கு மறுப்புச் சொல்லவில்லை. சீனியம்மை, தனது சக தோழிகளுடன் பீடிக் கடைக்குப் போனாள். ஏற்சனவே வேப்பமரத்தடிக்கு வந்து அந்தப் பெண்களுடன் வம்பளந்துவிட்டுப் போகும் கணக்குப்பிள்ளை வாயெல்லாம் பல்லாக அவளைப் பார்த்தான். முன்பெல்லாம் அவளைப் பார்த்து, “வயலுக்கா தாயி போற” என்று கேட்கும் ஏஜெண்ட் மட்டும் “பீடி சுத்தமா இருக்கணும். இதுகளை வெட்டுறது மாதிரி இல்ல” என்று அசுத்தமாகவும். வெட்டொன்று துண்டொன்றாகவும் பேசினான். அவனது தோரணை சீனியம்மைக்கு என்னவோ போலிருந்தது என்றாலும் முன் கொசுவத்தைச் சரிப்படுத் திக் கொண்டு சங்கடத்தோடு சிரித்தாள்.

பீடிக்கடை, கிட்டத்தட்ட எருமை மாட்டுக் கொட்டகை மாதிரி இருந்தது. ஒரு ‘அரங்கு’ அறைக்குள், பதினைந்து விடலைப்பையன்கள், பீடிகளை இரண்டு இரண்டாகச் சேர்த்து லேபிலை எடுத்து ஒட்டினார்கள். ‘தார்சாவில்’ ஒரு பயல் எழலைக் கிழங்கு மாவையும், கடலைமாவையும் அடுப்பில் வைத்துக் காய்த்துப் பசையாக்கிக்கொண்டிருந்தான். உள்ளே கடைசியில் இருந்த அறையில் ஏஜெண்டிடம் தலையைக் காட்டிவிட்டு அதற்கு அடுத்தாற்போல் இருந்த அறையில், தராசும் கையுமாக இருந்த கணக்குப் பிள்ளையிடம் தோழிகள், சீனியம்மையைக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவன் அவர்களைக் கண்டுக்காமல் பீடி இலைகளை எடைபோடும் ஒருவனைப் பார்த்து “எச்சிஇல எடுக்க வேண்டியவன் எல்லாம் எதுக்குடா பீடி இலகிட்ட வாரிய! இலத்தட்டு கீழ போவுது. ஒன் பெரியப்பா மகள்னா, இப்படியா ஒரேடியா?” என்று கத்தினான். அவன் முன்னால் நின்ற பெண், “அண்ணாச்சி... ராமன் இவளவு பீடியயும் கழிச்சிட்டான்” என்று கத்த, அவள், ‘அண்ணாச்சி’ என்று சொன்னதில் அதிர்ந்துபோன கணக்குப்பிள்ளை, ‘இவளாவது தேறுறாளான்னு பாப்போம்’ என்பதுமாதிரி சீனியம்மையைப் பார்த்தான். வச்சிக்கிடலாம்...

சீனியம்மைக்கு ஒரு வாரத்திற்குரிய இலையும், அதற்குப் போதுமான தூளும், தென்னை நாரும் கொடுக்கப்பட்டது. புதிதாக கல்லூரிக்குள் காலடி வைப்பவளைப் போல, முதல் தடவையாகத் தன் கதையைப் பத்திரிகையில் பார்க்கும் எழுத்தாளனைப் போல சீனியம்மை தன்னை நம்பாதவள் போல தன்னையே பார்த்துக்கொண்டாள். அவளுக்குக் கொடுத்திருந்த கணக்குப் புத்தகத்தை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டாள்.

ஒரு வாரம் ஓடியிருக்கும்.

சீனியம்மை, இதரப் பெண்களுடன் பீடிகளை ஒப்படைக்கப் போனாள். மொத்தம் 180 ‘வண்டல்கள்.’ கணக்குப்பிள்ளை பின்னால் வந்து அவளைத்தான் முதலாவதாகக் கூப்பிட்டான். “பீடின்னா இதுல்லா பீடி!” என்று அவள் தட்டில் இருந்த பீடிகளை எடுத்துப் பரிசோதித்துக் கொண்டே, பீடி சாக்கில் அவள் விரல் நுனியை லேசாகப் பிடித்தான். சீனியம்மைக்கு அவன் பிடித்ததே தெரியவில்லை. பீடிகள் தேறவேண்டுமே என்ற அச்சப்பிடியில் அவனது அவசரப் பிடி உறைக்கவில்லை. கணக்குப்பிள்ளை இலைகளை நிறுத்து அவள் தட்டில் போட்டுவிட்டு, தென்ன நாரைக் கொடுக்கும்போது தன் கையை அவன் அழுத்துவது போல் அவளுக்குத் தோன்றியது. அவனை முறைப்போடு பார்த்தாள். அவன் ஏஜெண்டைப் பார்க்கிற சாக்கில் எழுந்து அவள் காலை மிதித்தபோது, அது தெரியாத்தனமானதாய் அவளுக்குத் தோன்றவில்லை. உஷ்ணமாக அவனைப் பார்த்துக்கொண்டாள்.

இரண்டு மூன்று வாரங்கள் வந்தது தெரியாமல் பறந்தன.

சீனியம்மை கணக்குப்பிள்ளையிடம், பீடித் தட்டைக் கொடுத்துவிட்டு சற்றுத் தொலைவில் நின்றுகொண்டாள்.

அவன் நாரைக் கொடுக்க வந்தபோது “தட்டுல போட்டுடு அண்ணாச்சி...” என்று கடைசி வார்த்தைக்கு அழுத்தம் கொடுத்துப் பேசினாள்.

அண்ணாச்சி என்று சொன்ன பிறகு, கணக்குப்பிள்ளை சும்மா இருப்பானா? இருக்கவில்லை.

சீனியம்மையின் பீடிகள் நன்றாக இல்லை என்று பலவற்றைக் கழித்தான். பீடி சுற்ற உதவாத பழுப்பு இலைகளாகப் பார்த்துக் கொடுத்தான். பிரிக்கமுடியாதபடி கட்டிக் கட்டியாக இருந்த தூள்களைக் கொடுத்தான். இந்த வேகத்தில் போனால் அவளே பீடி இலைக்கு காசு கொடுக்க வேண்டிய அபாயம் ஏற்படும் நிலை வரலாம். சீனியம்மையால தாளமுடியவில்லை.

“எதுக்காவ அண்ணாச்சி, இவ்வளவு பீடிய கழிக்க? அவள் தட்டுலயும் என் பீடி மாதுரிதான் இருக்கு; அதக் கழிக்கல. என் தட்டுன்னால் ஒனக்கு ஏன் இளக்காரம்?”

கணக்குப்பிள்ளை பதில் பேசும் முன்பாக, சீனியம்மை சுட்டிக்காட்டியவள் சூடாகக் கேட்டாள். “எம்மாரு...ஒன் வரைக்கும் பேசு... என்னை எதுக்கு இழுக்க? நான் மூணு வருஷமா சுத்துறவள்!”

கணக்குப்பிள்ளை பேச்சை உதறினான்.

“அப்படிக் கேளு... நல்லாக் கேளு... அம்மாவுக்கு பெரிய ரம்பைன்னு நெனப்பு!”

சீனியம்மை சீறினாள். “இந்தா பாரு கணக்குப்பிள்ளை பேசணுமுன்னால் பீடி விஷயமாகப் பேசு! ஏரப்பாளத்தனமாகப் பேசுனியானால்... கையில இருக்கிற கத்தரிக்கோலு எங்கிட்ட இருக்காது! யாரப் பாத்துய்யா ரம்பை கிம்பைன்னு பேசற! ஒன் இரப்பாளி புத்தி தெரிஞ்சிதான் விலகி நிக்கேன்! நீ எதுக்காவ பீடிய கழிக்கன்னு தெரியும்!”

“ஏ, மரியாதியா வெளில போ!”

“இது என்ன ஒப்பன் வீட்டுப் பீடிக்கடையா? நீயும் என்னமாதுரி கூலிக்கு வேல பாக்குறவன்தான். இடையன் பொறுத்தாலும் இடக்குடி நாயி பொறுக்காதாம்...”

ஏஜெண்ட் உள்ளே இருந்து ஓடிவந்தார். விவகாரம் சூடு பிடிக்காமல் இருப்பதற்காக, கணக்குப்பிள்ளையை நாக்கைப் பிடுங்கிக்கொண்டு சாகும்படி, “பொம்புள கிட்ட என்னல பேச்சு? பொட்டப்பயல...” என்றார். ‘அவர் சொன்ன தோரணை அவன் பொட்டப்பய... அவன் கிட்ட போயி பேசுறியளேன்னு’ பெண்களைப் பார்த்துக் கேட்பது போல் தோன்றியது. பின்ன என்ன... எந்தப் பெண்ணையாவது ஏஜெண்டுகிட்ட பேசவிடுறானா? ‘அவரு கோபக்காரரு... நான் சொல்லிக்கிடுறேன்னு இவனே என்னைக் காரணமாய்க் காட்டியே கண்ணடிக்கான்.’

சீனியம்மை பீடி இலைகளை ஈரத்துணியால் சுற்றி வைத்துக்கொண்டு அலுப்போடு திரும்பினாள். அவளோடு போன பெண்கள் இப்போது கணக்கனைப் பகைச்சால் கழிவு பீடிதான் கிடைக்கும் என்ற புதுமொழியை நினைத்து கடையிலேயே நின்றார்கள்.

வேப்பமரத்தடியில் தன்னந்தனியாக உட்கார்ந்து இலைகளை வெட்டிக்கொண்டிருந்த சீனியம்மையைப் பார்த்து, முகங்களை வெட்டிக்கொண்டே அந்தப் பெண்கள் வந்து உட்கார்ந்தார்கள். யாரும் அவளோடு பேசவில்லை. அவர்கள் கைகளில் பீடி ஆடியதே தவிர முகங்களில் ஈயாடவில்லை. சீனியம்மை அவர்கள் திட்டியிருந்தால்கூட அப்படித் தவித்திருக்கமாட்டாள். தாள முடியாமல் கேட்டாள்.

“என்னடி பேச மாட்டக்கிய? நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்?”

மெளனம்.

“வாயத் திறந்து சொல்லுங்கடி...”

ஒருத்தி வாயைத் திறந்தாள்.

“ஒன்னால எங்களுக்குக் கெட்ட பேரு... ஆயிரந்தான் இருந்தாலும் நீ கணக்குப்பிள்ளய அப்படிக் கேட்டிருக்கப் படாது!”

“ஒரு வாரத்துக்கு முன்னால அவன் கையைப் பிடிச்சான்னு சொல்லும்போது நீங்க அவனை ஏன்னு கேட்டிருந்தால் நான் பேசியிருக்கமாட்டேன்!”

“அப்போ சும்மா இருந்தவளுக்கு இப்போ ஏண்டி முகம் கோணுது?”

“ஆயிரந்தான்னு சொல்றியே... அந்த ஆயிரத்துக்கு என்னடி அர்த்தம்? அவன் என்னை என்ன பண்ணுனாலும் சும்மா இருக்கனுமுன்னு சொல்றியா? அச்சடிப் புடவைக்கும். ஆயிரம் சொகுசுக்கும் இப்பதான் அர்த்தம் புரியது!”

கூட்டத்தில் ஒரு ரோஷக்காரி சீறினாள்.

“இந்தா பாரு சீனி... நீ பாட்டுக்கு சகட்டு மேனிக்குப் பேசுறது நல்லா இல்ல. நீ மட்டும் பத்தினி! நாங்க தட்டு வாணி முண்டயுவ மாதுரி பேசாதா என் கிட்ட அவன் அப்படி நடந்ததே கிடையாது.”

சீனியம்மை சிறிது நிதானப்பட்டுப் பேசினாள். “நான் அந்த அர்த்தத்துல சொல்லை... நீங்க எல்லோரும் அப்படிப்பட்டவளுக இல்லன்னும் தெரியும். ஆனால் ஒன்கிட்ட அந்தப் பய வாலாட்டாம இருக்கதுக்கு நீ மட்டும் காரணமில்ல. ஒன் அண்ணன் தம்பிங்க... அவன் பல்ல எண்ணிடு வாங்கங்ற பயமும் ஒரு காரணம். ஆனால் நான் அனாத மாதுரி. என்னை என்ன பண்ணுனாலும் யாரும் கேக்க மாட்டாங்க என்கிற அகம்பாவம் அவனுக்கு...”

சீனியம்மை இப்போது ஆவேசம்மையாகி, மேலும் விளாசினாள்.

“தன்னோட ஒழுக்கத்த மட்டும் காக்கிறவள் பத்தினியாகிட மாட்டாடி. இன்னொருத்தியை ஒருவன் முற கெட்டத்தனமாகப் பார்க்கையில சீறுறாள் பாரு. அவ தான் நிசமான பத்தினி. என்னோட கையக் கால அவன் பிடிச்சாலும் பீடிக்காக சகிச்சிக்கிட்டு இருந்தீங்க பாரு... அதுவே தேவடியாத்தனந்தான். மொதல்ல ஒங்கள மாதுரி பொம்புளங்கள ஒதச்சா, இந்த மாதுரி ஆம்புளைங்க சரியா யுடுவாங்க... பரவாயில்ல. அந்தக் கணக்கப்பிள்ள பய செருப்படி படுற காலம் வராமப் போகாது!”

சொல்லி வைத்ததுபோல், சில வாயாடிப் பெண்கள் அவளைத் திட்டப் போனார்கள். இதற்குள் சீனியம்மை எழுந்து இலைத் தட்டை அங்கேயே போட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போனாள். கால்மணி நேரத்திற்குள்―

கையில் ஒரு களை வெட்டியுடன், இன்னும் காய்ப்புகள் மாறாமலே இருந்த உள்ளங்கைகளை விரித்து அவற்றைக் கம்பீரமாகப் பார்த்துக்கொண்டே வயக்காட்டைப் பார்த்து நடந்தாள்.