இன்பம்/எஸ். எஸ். அருணகிரிநாதர்
இன்பம்
இன்பம், இன்பம், என்று பலர் கூறக்கேட்டிருக்கிறோம், கனமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி பல நூலாசிரியரும் முன்னாள் திராவிடன் துணை ஆசிரியருமான தோழர் எஸ். எஸ். அருணகிரி நாதர் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது.
இன்பம்! இன்பம்! இன்பம்!!! உலகத்திலே இன்பத்தை வேண்டாத மக்களில்லை. மக்கள் மட்டுமா இன்பத்தை வேண்டுகின்றனர்? பறவைகளும், விலங்குகளும், வேறு காணப்படுகின்ற எத்தனையோ உயிர்களும் இன்பத்தை விரும்புகின்றன! இன்பத்திற்காக மக்கள் அலைகின்றனர்; திரிகின்றனர்; இன்பத்தைத் தேடுகின்றனர். பகுத்தறிவற்றவைகள் என்று மக்களால் கருதப்படும் உயிர் வகைகள் இன்பத்தைக் கருதித்தான் வாழ்கின்றன.
இன்பமில்லையேல் வாழ்க்கை இல்லை. பல துன்பங்களுக்கு இடையில் தோன்றும் ஒரு அல்ல சிறு இன்பத்திற்காகவே மக்கள் பல துன்பங்களைப் பொருட்படுத்தாமல் உழைக்கிறார்கள். இன்பங்கண்டபோது அதற்காக அதுவரையில் தாங்கள் பட்ட துன்பத்தையெல்லாம் மறந்து மனம்களிக்கின்றார்கள். ஒரு வக்கீலைக் கவனியுங்கள்! அவர் யோக்கியரா என்று பாருங்கள் ஆம்! யோக்கியர் தாம். பணத்தைப் பெற்றுக்கொள்ளுகிறாரா வழக்கிற்காக! தம் கட்சிக்காரன் நன்மை பெறுவதற்காக தம் முழுத்திறத்தையும் உபயோகித்து நீதிமன்றத்தில் பேசுகிறார் உற்சாகமாக! வழக்கு வெற்றி பெற்றால் அவர் உண்மையில் இன்பமடைகிறார் இன்றேல், தனக்குப் பணம் கிடைத்து விட்டதே என்ற ஒரேகாரணத்திற்காக அவர் இன்பம் அடைவதில்லை. அடையவும் முடியாது. அதுபோன்றே டாக்டர் ஒருவர் தமக்கு வரவேண்டிய பொருள் வந்துவிட்ட காரணத்திலேயே இன்பம் அடைந்து விடுவதில்லை. நோயாளி குணமடைந்தான் என்றால்தான் அவர் மனதில் இன்பம்தோன்றுகிறது.
குழந்தைகளின் உள்ளமும் வளர்ந்தவர்களின் உள்ளமும் ஒன்றாகவே இருக்கின்றது! ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகைகளில் இன்பமடைகிறார்கள்! காதலர்கள் சந்திப்பில் இன்பம்! பிரிவால் துன்பம்! குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருள்களைக் கண்டால் இன்பம்! அவற்றை இழந்துவிட்டால் துன்பம்! அறிவாளர்களுக்கோ இயற்கையின் வாயிலாக ஓர் உண்மையைக் காணும்போது இன்பம்! ஜேம்ஸ்வாட் எனும் ஓர் ஆங்கில இளைஞன் அடுப்பால் சுடுநீர் கொதிக்கும் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான். கொதிக்கும் நீராவியின் வேகத்தால் தடதடவென்று பாத்திரத்தில் மூடி குலுக்கப்பட்டது. அதை அறிந்த வாட்ஸ் நீராவியின் உதவியைக் கொண்டு உலகத்தில் எத்தனையோ அற்புதங்களைக் காணலாம் என்று எண்ணினான். உடனே அவன் குழந்தை உள்ளத்தில் இன்பம் குதித்துத் தோன்றியது. அது அவன் கண்ட இன்பம்.
”இதுவரையில் கண்டறிந்த நிலப்பாகத்தைத் தவிர வேறு நிலப்பாகம் இருந்தே தீரவேண்டும்.” என்று கொலம்பஸ் நினைத்தார். புதிய நிலப்பரப்பை புதிய கண்டத்தைக் காணவேண்டுமென்று அதற்கான வழிவகைகளைத் தேடலானார் கொலம்பஸ், உதவி வேண்டிய அளவுக்கு எளிதில் கிடைக்கவில்லை. உதவி பெறுவதற்காக அவர் அமைந்த துன்பம் கொஞ்சமல்ல. இறுதியிலே அப்போதிருந்த, ஸ்பெயின் தேசத்து ராணி இஸபெல்லாவுக்குக் கொலம்பசின் எண்ணமும் அதற்கான முயற்சியும் தெரிந்தது. இராணியார் கொலம்பசுக்கு மூன்று கப்பல்களையும் அதற்கு வேண்டிய பொருள்களையும் ஆட்களையும் கொடுத்து உதவினார்! கொலம்பஸ் ஒரு நான் ஸ்பெயின் துறைமுகத்திலிருந்து கப்பலில் புதிய நிலப்பரப்பைக் கண்டுபிடிக்கப் புறப்பட்டார். நாட்களாயின! வாரங்களாயின! மாதங்களும் சில சென்றன. எங்குபார்த்தாலும் ஒரே தண்ணீர்-கடல்! சமுத்திரம்! எத்தனைநாள் தான் இப்படிப் பிரயாணம் செய்வது போகாத ஊருக்கு வழி எது என்பார்கள் சிலர்! உண்மையில் கொலம்பஸ் போகாத ஊருக்குத்தான் வழித்தேடினார். அவரோடு சென்றவர்களுக்கு ”இனி ஊர் இல்லை. நிலமில்லை, பாவி கொலம்பஸ் நம்மைக் கொல்லவே நம்மை நமது மனைவி மக்களிடமிருந்து பிரித்துக் கொண்டுவந்துவிட்டான்” என்று முணுமுணுத்தனர். பிறகு நன்றாகவே இப்படிச் சொன்னார்கள், இவ்வார்த்தைகள் கொலம்பசின் காதிலும்பட்டது. பலர், "புதிய கண்டம் ஒன்றிருந்தால் நமது பெரியோர்கள் எழுதி வைத்திருக்க மாட்டார்களா? இந்தக் கொலம்பஸ் நமது பெரியோர்களை காட்டிலும் என்ன மேதாவியா? என்றெல்லாம் சொன்னார்கள்.
சிலமுரடர்கள் ஒருநாள் கொலம்பசினிடம் போய், “நீர் மரியாதையாகக் கப்பலைத் திருப்பும் ஸ்பெயினுக்கு இல்லாவிட்டால் உம்மை நாங்கள் கடலில் எறிந்துவிட்டு நீர் இறந்துவிட்டதாக ஸ்பெயினில் போய் சொல்லிவிட்டு எங்கள் மனைவி மக்களோடு சேர்ந்துவிவோம்,” என்று உண்மையாகவே சொன்னார்கள். கொலம்பஸ் பயந்தார். ஆறு மாதமாயிற்று நாம் ஸ்பெயினிலிருந்து புறப்பட்டு எங்கு பார்த்தாலும் ஒரே சமுத்திரம்! எங்கே இருக்கிறது நிலம்? நீ ஒரு பைத்தியம்! அந்த இஸபெல்லா உனக்கு மேல் பெரிய பைத்தியம், என்ன சொல்லுகிறீர்?” என்று மறுபடியும் ஒரு கேள்வியோடு உறுமினர் அந்தமுரடர்கள். இன்னும் இரண்டு மூன்று தினங்களில் ஏதாவது ஊர் கிடைக்காவிட்டால் ஊருக்கு - ஸ்பெயினுக்குத் திரும்பி விடலாம் என்று கொலம்பஸ் பணிவாகச் சொன்னார்! கப்பல் மேலும், செல்லும் திசை நோக்கியே சென்று கொண்டிருந்தது. மறுநாள் விடியற்காலையில் கப்பலாட்களில் ஒருவன் அதோ தரை!! தரை!! என்று கூச்சலிட்டான். அவன் காட்டிய திசைநோக்கிக் கவனித்தவர்கள் எல்லோரும், “ஆம், ஆம்” என்று கூச்சலிட்டனர், உண்மையில் தரைதான்! நிலந்தான்; போகாத ஊருக்கு வழிதேடினார் கொலம்பஸ். அதுவரையில் எவரும் போகாத ஊரைக்கண்டுபிடித்தார், மறுநாள் படகில் கரையை அடைந்து தரையில் மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டார் கொலம்பஸ், அப்போது அவருக்கு அளவில்லாத இன்பம் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆம்; அவருக்கு இன்பம் தோன்றித்தான் இருக்க வேண்டும்.
தாமஸ் ஆல்வா எடிஸன் பேசும்படம் தயாரிக்கும் விதத்தை அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்தார்! இப்படியே அவர் கிராமபோன் ”எலக்ட்ரிக் ரெயின்” முதலிய பல அருமைக்கருவிகளைக் கண்டுபிடித்தபோதெல்லாம் அவர் மனத்தில் இன்பம் தோன்றித்தான் இருக்கவேண்டும். பெஞ்சமின் பிராங்க்ளின் மின்னலில் உள்ள் மின்சார சக்தியை யும், அதற்குரிய காரணத்தையும் கண்டுபிடித்தபோது அவர் மனத்தில் இன்பம் தோன்றித்தான் இருக்க வேண்டும். இப்படியே விஞ்ஞானிகள் பலர் தாங்கள் இயற்கையை ஒன்று கூட்டிப் பல அற்புதங்களைக் காணும்போதெல்லாம் அவர்கள் இன்பம் அடைந்திருப்பார்கள் என்பதில் தடை என்ன? இப்படியே நல்லதொரு கவியை இயற்றிய புலவன் மனத்திலும் இறந்ததொரு சித்திரத்தைத் தீட்டி முடித்த சித்திரக்காரன் மனத்திலும் இன்பந் தோன்றுவது இயற்கையே! இப்படியே உண்மையை ஒருவருக்கும் அஞ்சாமல் சொல்லுகிறவர்கள் மனத்தில் இன்பம்தோன்றும், “உலகம் தட்டையா யில்லை; உருண்டையாய் இருக்கிறது, இருப்பது இந்த உலகம் மட்டுமல்ல இதைச் சேர்ந்த இன்னும் பலகிரகங்கள் இருக்கின்றன,” என்று கலிலியோ சொன்னபோது அக்காலத்தில் இருந்த அவர்நாட்டு மக்கள் அவரைப் படாதபாடுபடுத்தினர். ஆனாலும் அவர்தாம் உண்மை என்று கண்டவற்றைச்சொல்லாமல் இருக்கவில்லை, உண்மையைச் சொல்வதில் அவருக்கு இன்பம் இருந்தது. ஆகவே, உண்மையைச் சொல்வதனால் நேருவது மரணமானாலும் அவர் அதையே விரும்பி நஞ்சை உண்டு மரணத்தை ஏற்றுக்கொண்டார். அவருக்கு உயிர் வாழ்வதை விட உண்மையைச் சொல்லி இறப்பதே இன்பமாகத் தோன்றியது.
இப்படியே உலகில் பலருக்குப் பலவழிகள் இன்பம் தருவதாக இருந்திருக்கின்றன. சிறந்த பேச்சுச் சிலருக்கு இன்பமாக இருக்கலாம். சிறந்த இசை சிலருக்கு இன்பம் அளிக்கலாம். சிறந்த காவியமும் ஓவியமும் சிலருக்கு இன்பமாகத் தோன்றலாம். வீரமே இன்பம் என்று பலர் கருதலாம். நவநவமாகப் பல பொருள் கண்டு பிடிப்பது இன்பம் என்று எத்தனையோபேர் எண்ணலாம், ”காதலனும் காதலியும் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்” என்று பலர் பாடிக்கொண்டிருக்கலாம். ஆனால் இன்னும் எத்தனையோ பேர் எதை எதையோ இன்பம் என்று எண்ணிக்கொண்டிருக்கலாம். அவைகளைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. அவைகளை நாம் ஆராயப்போவதுமில்லை, ஆகவே, இனி எது உண்மையான இன்பம் என்று தீர்மானிக்க வேண்டியதே என்கடமையாகும், என் தீர்மானங்களைப் போல் சரியாகவும் இருக்கலாம் சில தீர்ப்புக்களைப் போல சரியில்லாமலும் இருக்கலாம்! எனக்குத் தோன்றுவதை நான் என் தீர்மானமாகச் சொல்லு கிறேன். நீங்கள் அதை உங்கள் விரும்பம்போல ஏற்றுக்கொள்ளலாம்!
உலகத்தில் தக்கார்க்கு அறம்செய்வதால் உண்டாகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். “அறத்தால் வருவதே இன்பம் மற்றவை, புறத்த, புகழுமில” என்று திருக்குறளை உபமானமாகவும் எடுத்துக் காட்டுவார்கள். உண்மைதான் கதியற்றவர்களுக்குச் செய்த உதவிக்குப் பதில் உதவிசெய்யச் சக்தி அற்றவர்களுக்கும், இன்னும் இவர்களைப்போன்ற பலருக்கும் ஏன்! மிருகங்களுக்கும் தக்க சமயத்தில் உதவிசெய்யும்போது மனத்தில் உண்டாகின்ற இன்பமே சிறந்த இன்பம் என்று சொல்லலாம், அதை நான் அறிவேன் அதே திருக்குறளில் ”உண்மை பேசுதலே சிறந்த அறம்” என்று சொல்லப்பட்டிருக்கிறது, ஆகவே, அறத்தால் இன்பம் தோன்றுகிறது. ஆனால் அறத்திலே சிறந்த அறமாகிய உண்மை பேசுவதிலேதான் சிறந்த இன்பம் இருக்கிறது என்பது என்கருத்து, மற்ற வகைகளில் தோன்றுகிற இன்பமெல்லாம் சில விநாடி, சில மணி, சில மாதம், சிலவருடங்கள் தாம் இருக்கும். உண்மையைச் சொல்லுவதால், பேசுவதால் உண்டாகக்கூடிய இன்பமோ நிலைத்திருக்கக்கூடியது. எந்த விஷயத்திலும் உண்மையைப் பேசுகிறவர்கள் மனத்தில்தான் அழியாத இன்பம் நிலைத்திருக்கும். நன்றாகக் கவனியுங்கள்! வீரன், படிப்பாளி, பேச்சாளி, முதலாளி, பணக்காரன், கலெக்டர், கவர்னர் என்றெல்லாம் சொல்லிப் பாருங்கள்! பிறகு உண்மை பேசுகிறவன், உண்மை பேசுகிறவன் உண்மைபேசுகிறவன் என்று சொல்லிப்பாருங்கள். எந்தச்சொல்லிலே உயர்வு தோன்றுகிறதென்பதை நிதானமாகக் கவனியுங்கள். நீங்கள் நிச்சயமாகச் சொல்லுவீர்கள் உண்மைபேசுகிறவன் என்னும் வார்த்தையிலேதான் உயர்வு இருக்கிறதென்று! உண்மையில்தான் இன்பம் இருக்கிறது. சிலசமயங்களிலே சிலகாலங்களிலே உண்மையாளர்களுக்குத் துன்பம் ஏற்படலாம். அதற்குச் சரித்திரமே சாட்சியாய் இருக்கிறது. ஆனாலும் கடைசிவரையில் பொய் பேசி உயர்ந்தவர்களோ மெய்சொன்னதால் தாழ்ந்தவர்களோ இல்லை. சாக்கரடீட்சும், கலிலியோவும் அவர்கள் காலத்தில் உண்மை சொன்னதற்காகப் பாமரமக்களால் இகழப்பட்டது உண்மைதான். ஆனால், அறிவாளிகள் இன்று அவர்கள் சொல்லியதெல்லாம் உயர்வான கருத்துக்கள் என்று புகழ்கிறார்கள். உண்மையாளர்கள் சீக்கிரத்தில் உயரவில்லைதான். உயர்ந்த பிறகு தாழ்வதில்லை. சமய சந்தர்ப்பத்திற்கேற்றபடி தங்களைச் சரிப் படுத்திக் கொள்ளுகிறவர்கள் விரைவில் உயரலாம், விஷயம் விளங்கிவிட்டாலோ...!
இன்றைக்கு உண்மையைப் பேசுகின்ற எழுதுகின்ற-பெரியார் மெய்க்கு இடமளிக்கவிருப்பமில்லாத மனத்தையுடைய மக்களின் மனத்திலே இடம்பெறாதிருக்கலாம்! ஆனால், தற்கால-எதிர்கால உண்மையான மக்களின் மனத்திலே இடம் பெற்றிருக்கிறவரும், இடம் பெறப்போகிறவரும் இவரே!
முடிவாக நாம் சொல்லுவது இதுதான். பொய் பேசுகிறவர்கள் மனத்திலே இன்பம் இராது. அவர்கள் அடிக்கடி நாம் யாரிடத்தில் என்ன பொய்யைச் சொன்னோம் என்றே நினைத்துக் கொண்டிருக்கவேண்டும். அது எப்போதும் முடியக் கூடிய வேலையும் அல்ல! அதனால் குழப்பமே; இன்பமில்லை. மெய்பேசுகிறவர்கள் அப்படிப் பயந்து நடக்கவேண்டியதில்லை. உண்மை பேசுகிறவர்கள் எங்கும் ஒரேமாதிரிதானே பேசமுடியும்? ஆகவே அவர்களுக்குக் கவலை இல்லை, அச்சமில்லை அப்படியானால் இன்பம் உண்மையில்தான் இருக்கிறது என்பதற்கு இனியும், எழுதவேண்டுமா?
திராவிட நாடு
20-5-1945