இன்பம்/நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார்

1
இன்பம்

நாவலர் சோமசுந்தர பாரதியார்

இன்பம், இன்பம், என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம். இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றி நாவலர், எஸ். எஸ் பாரதியாரின் கருத்து இங்கு தரப்படுகிறது.


மக்கள் மனமலர்ச்சியை 'இன்பம்’ என்பது தமிழ் மரபு. அது புறத்திருந்து ஊட்டல் வேண்டாது உள்ளத்தாறும் உணர்வின் மலராம். 'களியும்', 'மகிழ்'வும் வெளிப் பொருட்தொடர்பால் விளையும் உணர்ச்சிகள். புறத்து நிகழ்வதைப் பொறிவழி நுகர்வதால் அகத்தெழும் உவகை மகிழ்வென வழங்கும்; மதியை மயக்கும் மகிழ்வின் மிகையைக் 'களி' யெனக் கருதுவார் தமிழ் மரபுணர்வோர். 

உள்ளத்துணர்வைக் கொள்ளை கொண்டு ஆழ்த்தும் கள்ளும் காமமும் விளைக்குங் ‘களி’யை எள்ளி விலக்குவர் தெள்ளறிவுடையோர்.


புறத்துணையால் எழும் அகத்தின் மகிழ்ச்சி பழி படாவிடத்தும், நிலையா நீர்மையால் அறனறி வார்பால் தலைவிடம் பெறாது. பொறிக் குணவாகும் புறப்பொருளியல் பின் மாற்றமும் மறைவும், புலன்தரும் உவகையைப் போக்கவும் குறைக்கவும் போதியதாகும். பொருள் நிலை மாறாவிடத்தும், அது தரும் மகிழ்ச்சி மனநிலைமாற அதனொடு மாறித் தந்நிலை குன்றவும் பொன்றவும் கூடும். புறத்துணையாலே இன்பம் எய்த எண்ணியோன் ஒருவன், காவும் கடலும், யாறுமலையும் யாவும் துருவி நாடெலா மலைந்தும் தேடிய இன்பம் கூடப்பெறாமல் மீண்டு தன்னகத்தே விளைபொருள் அதுவெனத் தெளிந்த உண்மையை, ஆங்கில மொழியில் பொற்கொல்லப் பெயர்ப் புலவன்பாட்டுத் தெள்ளமுதம் போல் தெவிட்டாதுணர்த்தும்.


இனி, நிலையா உணர்வின் நீர்மையால் அமையும் உவகை; உலையா அறிவினில் நிலையிறும் இன்பம், அறிவையும் உணர்வையும் அயர்த்தி மயக்கும் களி அவை இரண்டொடும் ஒவ்வாதா கையால், அதை எல்லாரும் எள்ளி வெறுத்து இகழ்வர். “களியை மெய்யறியாமை” எனவும் “ஈன்றாள் முகத்தேயும் இன்னாது” எனவும் வள்ளுவர் பழிப்பதனால், அதன் இழிவு தெளிதல் எளிது.


அறம் திறம்பாது மனத்தை நெறிவழி நிறுத்துவது அறிவு, “தீதொரீஇ, நன்றின்பால் உய்ப்பதறிவு” எனுங்குறளால் அறிவிலக்கணம் விளக்கமாகும் , அதுமாறாது நிலவும் உள் ஒளியாதலால், அதனைக்கரவாப் பண்பென்பர் தமிழ்ச் சான்றோர். கணந்தொறும் மாறும் முகிலினம் போல, உணர்வின் தன்மை ஓயாது மாறும். அறிவு போல் அதனில் விளையும் இன்பமும், நிறை நீர்த்தாகிப் பிறைபோல் வளரும். நெறியால் ஒளிரும் உணர்வுநிலையாலே உவகை நிலைமாறும். நன்றிலும் , தீதிலும் சென்று திரியுணர்வு போல் நின்று நிலையாது உவகை நின்ற நிலைமாறும். அறிவுத்துறையே அறநெறியாதலின் அறிவுதரும் இன்பம் அறத்தின் விளைவாகும் “அறத்தான் வருவதே இன்பம், மற்றெல்லாம் புறத்த, புகழுமில,” என்ற பழந்தமிழ்க் கொள்கை இன்பத்தின் இயல் விளக்கும்.


கடைசியாக, ஆரியர் ஆனந்தம், தமிழர் இன்ப மாகாமை ஆராய்ந்து அறியத்தக்கது. சந்தோஷமும் துக்கமுமற்ற வெறுநிலையே ஆனந்தம் என்பது ஆரியர் கொள்கை. ‘இன்பத்தின் முடிவு துன்பம்’ என்பது அவர்மதம். அதனால் அவ்விரண்டும் ஒழிந்த வெறுநிலை (சாந்தி)யே ஆனந்தம் என்று அவர் கொள்வர் உவப்பின் மறுதலை உவர்ப்பெனக் கருதுவது இயல்பு. அதனால், உயிர்கட்கு இன்பம் உடன்பாட்டுணர் வாயிருத்தல் ஆகாதென்பது மருட்சி. தேய்ந்து மறைவதும் திரும்பி வளர்வதும் மதி ஒளி இயல்பு. அதுபோல் மகிழ்வின் தன்மை மாறுவது இயல்பு. என்றும் ஒன்றுபோல் நின்று திகழ்வதால் ஞாயிற்றின் ஒளியை இருளும் ஒளியும் இறந்த வெறுநிலை என்பார் உளரோ அதுவே போல், மாறும் மகிழ்வினும் மாறா இன்பம் விரும்பத்தக்கது. இன்பமும் பகல்போல் உயிர்கள் விரும்பும் உடன்பாட்டுணர்வே என்பது தமிழர் மரபு

திராவிட நாடு
15-4-1945