இன்பம்/பொள்ளாச்சி மா. வேங்கடாசலம்

4
இன்பம்

பொள்ளாச்சி மா. வேங்கடாசலம்

இன்பம் இன்பம் என்று பலர் கூறக் கேட்டிருக்கிறோம், நாமும் கூறுகிறோம் இன்பம் என்றால் என்ன? எது இன்பம்? இன்பம் எப்படி இருக்க வேண்டும்? இவை பற்றிப் பொள்ளாச்சி மா. வேங்கடாசலம் அவர்களின் கருத்து இங்கு தரப்படுகிறது

இன்பம் என்பது எண்ணத்தின் ஒரு வகைத் தோற்றம்; துன்பமும் அதுபோன்றதே. இத் தோற்றம் தோன்றாவிடத்து, எண்ணமானது, பொதுநிலை, அல்லது சாதாரண நிலை அல்லது இன்ப துன்பமில்லாத நிலையில் இருக்கிறது. எண்ணத்திற்கு அதனோடு தொடர்புடைய அறிவு வாயிலாகத்தான், இத்தோற்றம் ஏற்படுகிறது. அறிவு தனக்குள்ள மற்றோர் தொடர்பான ஒரு புலன் அடையும் உணர்வை, எண்ணத்திற்குக் காட்டித்தான் மேற்சொன்ன தோற்றத்தை உண்டாக்குகிறது.

உதாரணமாக, சிரங்கு சொறிதல், காது குடைதல் போன்ற உணர்ச்சியையும் அடிபடல், ஆயுதம் படல் போன்ற உணர்ச்சியையும், ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னையது, தோலிலுள்ள சின்னஞ் சிறிய உயிர் உள்ள அறைகள் (cells) விரும்பத் தக்கதாயும், பின்னையது அவ்வறைகள் வெறுக்கத்தக்கதாயும் இருக்கிறது. இந்த விருப்போ அன்றி வெறுப்போ ஆன எழுச்சிகள், உணர்ச்சி நரம்புகளால், மேற்சொன்ன அறைகளுக்குத் தொடர்புடையனவும், மூளையில் இருப்பனவுமான அறிவறைகளுக்கு அறிவிக்கப்படுகின்றன. அவ்வறிவறைகளிலிருந்து அதன் அடுத்துள்ள எண்ணத்துக்குத் தோன்றும் தோற்றமே, முன்னையது இன்பமாயும் பின்னையது துன்பமாயும் தோன்றும் தோற்றங்கள். இதுபோலவேதான், வாய், கண், மூக்கு, செவி, அறிவு ஆகியவற்றின் விருப்பு வெறுப்பு எழுச்சிகள், எண்ணத்திற்கு இன்ப துன்பத் தோற்றங்களை உண்டாக்குகின்றன.

இவைகளை ஏன் தோற்றங்கள் என்கின்றோமெனின்; விளக்குதும். ஒழுங்கல்லாத முறையில், ஒரு பெண்ணும் ஆணும் கூடி இருக்கின்றனர். இதை மணமாகாத அன்னிய வாலிபன் ஒருவன், மறைந்திருந்து பார்த்து மனமகிழ்கிறான். ஆனால் அதை அப்பெண்ணின் கணவனோ அல்லது உடன் பிறந்தானோ ஆன ஒரு வாலிபன் கண்டவுடன் மனம் நொந்து துடிக்கிறான். மேற்சொன்ன இரு வகையினரும் வாலிபர்களே; அவர்கள் கண்டதும் ஒரே காட்சியைத்தான். ஆனால், அது ஒருவனுக்கு இன்பமாயும், மற்றொருவனுக்குத் துன்பமாயும் தோன்றின. மற்றப் புலன்கள் வாயிலாயும், இவ்விதமாகவே தோற்றங்கள் ஏற்படும். எனவே, இதைத்தோற்றமென்றல்லாது, வேறென்னவென்று கூறமுடியும்?

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய இவைகளைப்போல, வெளியிலிருந்து இன்ப துன்பங்களை நுகர்ந்து காட்ட , அறிவுக்கு எங்ஙனம் அமைப்புள்ளது என்ற சங்கை உண்டாகலாம். ஒரு ‘டைனமோ’விலிருந்து உற்பத்தியாகும் ‘கரன்ட்’ நேராகவோ அன்றி ஒரு பேட்டரி மூலமாகவோ ஒரு விளக்கை எரிக்கிறதும்; டைனமோ இல்லாமலே ஒரு பேட்டரி முன்பு, டைனமோவிலிருந்து சேகரித்து வைத்திருந்த ‘கரன்ட்’டினாலேயே ஒரு விளக்கை எரிக்கிறதும் கண்டுதானே? அதைப் போலவே அறிவும், மற்ற ஐம்புலன்களிலிருந்தும் சேகரித்து வைத்திருக்கும் உணர்ச்சிகளை, உண்ணும்போது எண்ணத்திற்குத் தோற்றமளித்து இன்ப துன்பங்களை உண்டாக்குகிறது. இவை தான் எண்ணும்போது ஏற்படும் இன்பதுன்பங்களாகின்றன. 

இனி, இன்பத்தின் முடிவுதான் துன்பமெனவும் துன்பத்தின் முடிவுதான் இன்பமெனவும் கூறும் கூற்றை ஆராய்வோம். மேலெழுந்தவாறு நோக்குங்கால், அது அங்ஙனம் தோற்றுவது இயல்பேயாம். கூர்ந்து, நுணுகிப்பார்க்க, அது அங்ஙனமில்லையென்பது (தெற்றெனப்) புலனாகும்,

இன்பம் துன்பம் என உள்ள இரண்டு தோற்றங்களும், ஒன்றிற்கொன்று நேர்மாறான தன்மைகளையுடையன. இதுபோன்ற இரண்டு மாறுபட்ட பொருள்கள் சந்திக்கும்பொழுது, இந்த இரண்டுமல்லாத ஒரு இடத்தில்தான். அல்லது. இந்த இரண்டுங்கலந்து, தன்மை மாறுபட்ட ஒரு இடத்தில்தான், இவைகள் சந்திக்க முடியும். ஒரு கறுப்பு நூலுடையவும், ஒரு சிகப்பு நூலுடையவும், துணிகள் அணுக வைக்கப்பட்டால், அவைகள் நூல் அல்லாத ஒரு சிறிய இடைவெளியில் சந்திக்கும்; அன்றிப் பிணைக்கப்பட்டால், அவைகள் சேரும் இடம், ஒரு செம்மை கலந்த கறுப்பு நிறமானதாயிருக்கும். மோட்டார் வண்டியில், முன், பின் போக ‘கீர்’கள் மாற்றும்பொழுது, அந்தக் ‘கீர்’ ஒரு நிலையிலிருந்து, பொதுநிலைக்கு வந்து பின் மற்றோர் நிலைக்குப் போதலும்; ஒரு கோணத்தின் இரண்டு கைகள், இரண்டுக்கும் சம்பந்தமான ஒரு பொதுப் புள்ளியில் சந்திப்பதும் இத்ற்குப் பின்னும் உதாரணங்களாக அமையும். எனவே, இன்பமும் துன்பமும் சந்திக்குமிடம், இன்பதுன்பமில்லாத அல்லது அவை இரண்டுங்கலந்த ஒரு இடமாகத் தான் இருக்க முடியும். விவாத ஒழுங்குப்படி இப்படித்தான் இருக்கமுடியும். வெளிப்படையாகக் காணுவதும் அங்ஙணமே இருத்தல் காண்க.

இன்பம் முடியும்பொழுது, இன்பம் இல்லாத ஒரு நிலையை அடைகிறோம்; துன்பம் முடியும் பொழுது, துன்பம் இல்லாத ஒரு நிலையை அடைகிறோம். அந்த ‘இல்லாத’ என்ற நிலைமை, நேர்மாறான நிலையாக எங்ஙணம் கூறமுடியும்? பொது நிலையாகிய மாறுபட்ட நிலையென்றாலும் பொருந்தலாம்.

இதுவேயன்றி, இன்பத்திற்குமேல் இன்பமும், துன்பத்தைத் தொடர்ந்த துன்பமும் ஏற்படுவது இயற்கையாயிருக்க, இன்பத்தின் முடிவு துன்பமென்றும், துன்பத்தின் முடிவு இன்பமென்றும் கூறுதல் எங்கனம் பொருந்தும்?

மேலும், துன்பத்தின் முடிவு இன்பமாயும், இன்பத்தின் முடிவு துன்பமாயும் இருந்தால், அவை ஒன்றை யொன்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்குமல்லாது, இன்ப துன்பமில்லாத ஒருநிலை இதன் இடையே எங்ங்ணம் புகமுடியும்? இன்ப துன்பமில்லாத ஒருநிலை இருப்பதற்கும், அதைப் பற்றி இவர்களே கூறும் கூற்றுக்கும், என்ன அடைவு சொல்வது? 

இதைப்போலவே, சிற்றின்பம், பேரின்பம்,என இரண்டு இன்பங்கள் உண்டு என்று கூறுவதும் உண்மையல்ல; சிறிது பெரிது என்று, இன்பத்திற்கு உண்மையில் அளவும் கிடையாது. தோற்றத்தின் அளவே, அவைகளின் அளவெனக் கொள்ளல் வேண்டும். உடல் வலுவுடையோன் ஒருவன், ஒரு பெண்ணிடம் பெறும் இன்பத்தைப் பேரின்பமாகக் கருதுவதும், சற்றுக் குறைந்தவலுவுடையோன், அதையே துன்பமாகக் காண்பதும், இன்பத்திற்குத் தனியான அளவில்லையென்பதைக் காட்டக்கூடிய தாயிருக்கும்.

தன்னை மறந்தின்பமுறத் தவம் செய்ய வேண்டுமென்று சிலர் சொல்லுவது, வேடிக்கையிலும் வேடிக்கையாயிருக்கிறது. தன்னை மறவாது, நாம் எப்படி இன்பதுன்பங்களை நுகரமுடியும்? நறுக்கென, நம் காலில் ஒரு முள் குத்தும்பொழுது, அந்த முள் குத்திய நினைப்பல்லாது. நம்மைப் பற்றிய நினைவோ அல்லது புலன்களால் நுகர்ந்து கொண்டிருக்கும் இன்ப துன்பங்களின் நினைவோ இருக்குமா என்று எண்ணிப் பாருங்கள்.

இதுபோலவேதான், இன்பத்தையும் ஒரு புலன் வழியாக நாம் நுகர்ந்துகொண்டிருக்கும்பொழுது மற்றப் புலன்கள் தானாக அடங்க நாம் நம்மையும் மறந்த நிலையில் இருக்கிறோம். ஏதாவதொரு அனுபவத்தை வைத்துக்கொண்டு, எண்ணிப் பார்த்து, இதன் உண்மையைக் காணுங்கள்.

இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு ஆராய, மற்ற உண்மைகளும் கிடைக்குமென இத்துடன் விடுகின்றனம்.

திராவிட நாடு
6-5-1945