இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/ஓர் அரிய செயல்

4. ஓர் அரிய செயல்

வியாபாரி ஒருவன் அளவிறந்த பொருள் சம்பாதித்தான். அவனுக்கு மூன்று குமாரர் இருந்தனர். அம்மூவரையும் கல்வியிலும், வாணிபத்திலும் வல்லவர்களாகச் செய்வித்தான் தந்தை. அவன், தான் இறக்கும் காலம் சமீபித்து விட்டதை உணர்ந்தான்; ஆதலால், தன் திரண்ட செல்வத்தைத் தன் மூன்று பிள்ளைகட்கும் பகிர்ந்து கொடுத்தான்; விலையுயர்ந்த ஓர் இரத்தினத்தை மட்டும் தான் வைத்துக் கொண்டான். ஒரு நாள், அவன் தன் மூன்று குமாரர்களையும் அழைத்து, ‘என் அருமைச் செல்வர்களே! இன்று முதல் மூன்று மாதங்களுள், உங்களுள் எவன் ஒருவன் பிறர் செய்தற்கு அரிய செயலைச் செய்து முடித்து, என்னிடம் சொல்லுகின்றானோ, அவனே என்னிடம் உள்ள மாணிக்கத்தை அடைவான்,’ என்று மொழிந்தான்.

நாட்கள் கழிந்தன; மாதங்கள் மறைந்தன. ஒரு நாள், மூன்று பிள்ளைகளும் தந்தையிடம் சென்றார்கள். மூத்தவன் தன் தந்தையை நோக்கி, ‘அப்பா, எனக்கு அறிமுகமில்லாத ஒருவன் தன் திரளான பொருளை என்னிடம் கொடுத்து வைத்திருந்தான். பல நாட்கள் கழிந்த பின்னர், அவன் தன் பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி என்னைக் கேட்டான். அவன் என்னிடம் பணம் கொடுத்த போது, சாட்சியில்லை; கொடுத்ததை உண்மைப்படுத்தக் கடிதமும் இல்லை. ஆதலால், அவன் பணத்தைக் கேட்ட போது, நான் ‘இல்லை’ என்று சொல்லியிருந்தால், அவனால் என்னை ஒன்றும் செய்ய இயலாது. அப்படிச் செய்வது நியாயம் அன்று என்பதை நான் அறிவேன்; ஆதலின், அவன் பணத்தைக் கேட்ட போது, கொடுத்து விட்டேன். அவன் எனது மேலான குணத்தை எண்ணிச் சந்தோஷம் அடைந்தான்; எனக்குச் சில பரிசுகள் தந்தான். அவற்றையும் யான் பெற மறுத்து விட்டேன். இது மேன்மையான அரிய செய்கையல்லவா?’ என்று கேட்டான்.

அதைக் கேட்ட தந்தை தன் மகனைப் புன்முறுவலோடு நோக்கி, ‘மைந்த, நீ செய்தது நியாயமான செய்கை. மக்கள் நல்ல வழியிலிருந்து, தீய வழியிற் புகுந்தால் பாவம் அடைவார்கள். பாவத்திற்கு அஞ்சி, நீ பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டாய். ஆகவே, நீ செய்தது அரிய செயல் அன்று,’ என்று கூறினன்.

இரண்டாம் மைந்தன் தந்தையை நோக்கி, ‘அப்பா, ஒரு நாள், நான் ஓர் ஏரிக்கரை மேல் நடந்து சென்று கொண்டிருந்தேன். அக்கரையின் மீது விளையாடிக் கொண்டிருந்த சிறுவருள் ஒருவன் தவறி, ஏரியில் விழுந்து விட்டான். அவன் விழுந்ததைப் பலர் பார்த்திருந்தனர். ஆயினும், ஒருவராவது ஏரியில் குதித்து அச்சிறுவனைக் காப்பாற்ற முற்படவில்லை; நான் என் உயிரைப் பொருளாக நினைக்கவில்லை; உடனே ஏரியில் குதித்தேன்; அச்சிறுவனை எடுத்துக் கொண்டு கரையேறினேன். சிறுவனின் பெற்றோர்கள் என்னைப் பெரிதும் புகழ்ந்தார்கள். யான் செய்த செயல் மேன்மையானதல்லவா?’ என்றான்.

வணிகன் அவனை நோக்கி, ‘பிள்ளாய், உலகில் பிறந்தவர் அனைவரும் அருளோடு இருக்க வேண்டும். அருள் இல்லாதவர்களை மக்கள் என்று சொல்ல இடம் இல்லை. அருள் உடையவனாயிருந்ததால், நீ அச்சிறுவனைக் காப்பாற்றினாய். நீ செய்ததும் அரிய செயல் அன்று,’ என்றான்.

மூன்றாம் தனயன் தந்தையை நோக்கி, ‘அப்பா, நான் ஒரு நாள் இரவில் வெளியே போய்க் கொண்டிருந்தேன். காரிருள் எங்கும் கவிந்து கொண்டிருந்தது. எதிரில் மனிதர் நிற்பதும் தெரியவில்லை. அந்நள்ளிருளில், எனக்குச் சன்மப் பகையாளி ஒருவன் மலையின் உச்சியில் படுத்து, அயர்ந்து நித்திரை செய்து கொண்டிருந்தான். அவன் தூங்குவதைக் கண்டேன் யான். அவன் சிறிது அசைந்தால், உடனே பெரிய பள்ளத்தில் விழுந்து மடிவான். எவ்வாறாயினும், அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டாகியது. உடனே, யான் அம்மலையினுச்சியை அடைந்தேன்; வெகு சாக்கிரதையாக என் பகையாளியை எழுப்பினேன். அவன் வேறோர் இடத்திற் சென்று படுக்கும்படி ஏற்பாடு செய்தேன். யான் செய்தது அரிய செயல் அன்றோ?’ என்று வினவினன்.

தந்தை மிகுந்த களிப்புற்று, ‘என் அருமை மைந்தனே, நீ செய்ததுதான் அரிய செயல். பகைவனைக் காப்பாற்றிய நீயே என் இரத்தினத்தைப் பெறத் தகுந்தவன்!’ என்று கூறி, இரத்தினத்தை அவனுக்குக் கொடுத்து ஆசீர்வாதம் செய்தனன்.

கேள்விகள்:

1. வியாபாரி தன் திரண்ட செல்வத்தை எவ்வாறு பகிர்ந்து கொடுத்தான்?

2. வியாபாரி தன்னிடம் இருந்த இரத்தினத்தை என்ன செய்தான்?

3. மூன்று பிள்ளைகள் செய்த செயல்கள் யாவை?

4. மூன்று பிள்ளைகள் செய்த செயல்களில் அரிய செயல் எது? எப்படி?

5. மற்ற இரு பிள்ளைகள் செய்த செயல்களைப் பற்றித் தந்தையார் கூறியவற்றை எழுது.

6. மூன்றாம் தனயன் செய்த செயலை தந்தை எப்படிப் பாராட்டினார்?