இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்/நல்லவர் நேசத்தால் நற்கதி பெறலாம்

9. நல்லவர் நேசத்தால் நற்கதி பெறலாம்.

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலமிக்க
 நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே; — நல்லார்
 குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோ(டு)
 இணங்கி யிருப்பதுவும் நன்று.”

ஒரு காட்டில் ஓர் ஆண்புறாவும், ஒரு பெண் புறாவும் ஓர் ஆலமரத்தில் கூட்டை அமைத்து, வசித்து வந்தன. அவை இரண்டும் உடலும், உயிரும் போல ஒன்றையொன்று அன்புடன் நேசித்து வந்தன. ஒரு நாள், ஆண் புறா வழக்கம் போல, இரை தேட வெளியே சென்றது.

அச்சமயம் வேடன் ஒருவன் அங்கு வந்தான். அவன் அன்று முழுவதும் அக்காட்டில் அலைந்து திரிந்து, ஒன்றும் அகப்படாமையால் அந்த ஆலமரததடியில், அமர்ந்து, ‘கடவுளே, என்ன செய்வேன்! இன்றைக்கு உணவு ஒன்றும் அகப்படவில்லையே! என் மனைவி, மக்கள் உணவின்றி வருந்துவார்களே!’ என்று கூறிக் கொண்டே மரத்தை அண்ணாந்து பார்த்தான். உடனே, அவன் பெண் புறாவைக் கண்டு சந்தோஷம் கொண்டான். பின்பு அவன் தன் வலையை விரித்து, அதனைப் பிடித்துக் கொண்டான.

சிறிது நேரத்திற்குள், கரிய மேகங்கள் வானத்தில் கவிந்தன. இடியும், மின்னலும் கலந்து மழை பொழிந்தது. வேடன் மழையில் நன்றாய் நனைந்தான். அவன் உடலும், உடையும் நனைந்தன. குளிர்ந்த காற்று வீசியது. வேடன் நடுக்குற்றுச் செயலற்றுப் பூமியில் பிணம் போல் விழுந்து கிடந்தான்.

அப்போது, வெளியே இரையின் பொருட்டுச் சென்றிருந்த ஆண் புறா வந்து சேர்ந்தது; தன் பெட்டையைக் காணாமல், அங்கும் இங்கும் சுற்றிப் பார்த்தது. அப்போது, பெண் புறா, ஆண் புறாவை நோக்கி, ‘அன்பரே, நான் இவ்வேடனிடம் அகப்பட்டுக் கொண்டேன். என்னைப் பற்றி நீர் கவலைப்பட வேண்டா. இவ்வேடன் குளிரால் ஸ்மரணையற்றுக் கிடக்கின்றான். இவனை நீர் எழுப்ப வேண்டும். இவனுக்கு நாம் உதவி செய்ய வேண்டும். இவன் நமக்குத் தீங்கு செய்பவனாயினும், இவனை இச்சமயம் நாம் காப்பாற்ற வேண்டும். மேலும், இவன் நமது மரத்தடியில் தங்கியிருக்கிறான். ஆதலால், இவன் நம் விருந்தாளியாகின்றான்,’ என்றது.

பெண் புறா கூறியவற்றைக் கேட்டதும், ஆண் புறா, தன் பெட்டையின் அறிவிற்குப் பெரிதும் வியந்தது. அஃது உடனே பறந்து சென்று, காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி வந்தது; வேடனுக்கு எதிரில் அவற்றைக் குவியலாகப் போட்டது. பின்பு எங்கேயோ சென்று, எரிகொள்ளி ஒன்றைக் கொண்டு வந்து குவியலில் இட்டு, தன் சிறகுகளால் விசிறித் தீ மூட்டியது. நெருப்பு நன்றாய்ப் பற்றி எரியவே, வேடன் மூர்ச்சை தெளிந்து எழுந்தான.

வேடன் சந்தோஷம் அடைந்தான். அவன் புறாவை நோக்கி, ‘ஓ பட்சியே, என் குளிரைப் போக்கினாய். உன்னை என்றும் மறவேன்! இப்பொழுது எனக்குப் பசி அதிகமாய் இருக்கிறது. என்ன செய்வேன்! எனக்கு ஏதேனும் உணவு கொடுத்துக் காப்பாற்று,’ என்றான்.

ஆண் புறா அவனைப் பார்த்து, ‘ஐயா, இந்த அகாலத்தில் யான் எங்குச் சென்று இரை தேடி வருவேன்? என் இறைச்சியைத் தின்றாவது, உன் பசியைப் போக்கிக் கொள்,’ என்று கூறி, நெருப்பில் விழுந்து மாண்டது.

தன் பதி செய்த செயலைக் கண்ட பெண் புறா, பெருங்களிப்படைந்தது. வேடன் ஆண் புறாவின் இறைச்சியைத் தின்று பசியாறினானென்றாலும், ஆண் புறாவின் அரிய செய்கை அவன் மனத்தை விட்டு அகலவில்லை. அவன், ‘ஆ! என்ன ஆச்சரியம் ! ஒரு சாதாரணப் புறா என் குளிரைப் போக்கியது! மேலும், என் பசியைத் தீர்க்கத் தன் உயிரையும் இழந்தது! அந்தோ! இத்தகைய நற்குண, நற்செய்கைகள் உள்ள எத்தனையோ பறவைகளை யான் இது வரையில் கொன்று வந்தேனே!’ என்று வருந்திச் சீவகாருணியம் உடையவனாய்க் கூட்டில் இருந்த பெண் புறாவை எடுத்து வெளியில் விடுத்தான்.

உள்ளன்புடைய மனைவி, கணவன் மாண்டபின் உயிருடன் இராள் அல்லவா? உள்ளன்புடைய விலங்குகளும், பறவைகளும் இவ்வாறேயாம். ஆகையால், பெண் புறா, தான் உயிருடன் இருப்பது தகுதியன்று என்று எண்ணி, அந்த நெருப்பில் தானும் விழுந்தது. உடனே, அப்புறாக்கள் இரண்டும் திவ்விய உடம்பு பெற்று, அழகிய விமானத்தில் ஏறிச் சென்றன. இவ்வினோதத்தைக் கண்ணுற்றான் வேடன்.

உடனே அவனுக்கு நல்லறிவு உண்டாய் விட்டது. அவன், ‘அந்தோ! நான் இதுவரையில் பல பாவங்களைச் செய்தேனே! கணக்கற்ற விலங்குகளையும், பறவைகளையும் கொன்று தின்றேனே ! இப்புறாக்கள் நட்பால், யான் புத்தி அடைந்தேன்! இனி, என் வேட்டைத் தொழிலை விட்டு விடுவேன்; கூலி வேலை செய்தாவது வயிறு வளர்ப்பேன். சீவகாருணியமும், கடவுள் பத்தியும் உள்ளவனாய் இருப்பேன்,’ என்று தன்னுள் தீர்மானித்துச் சென்றான். அவன் தீர்மானித்தபடியே நல்லொழுக்கத்துடன் வாழ்ந்து, உயர்ந்த பதவியை அடைந்தான்.

கேள்விகள்:

1. பெண் புறா எப்படி வேடனுடைய கூட்டில் அகப்பட்டது?

2. வேடனுக்கு ஆலமரத்தண்டை நேர்ந்த விபத்து என்ன?

3. வேடன் எப்படி மூர்ச்சை தெளிந்து எழுந்து, உணவு உண்டான்?

4. தான் பிடித்திருந்த பெண் புறாவை வேடன் ஏன் கூட்டிலிருந்து எடுத்து வெளியில் விடுத்தான்?

5. விடப்பட்ட பெண் புறாவின் நிலை என்ன ஆயிற்று?

6. வேடனை உபசரித்த புறாக்கள் இரண்டும் பெற்ற பலன் என்ன ?

7. புறாக்கள் விமானத்தில் சென்ற வினோதத்தைக் கண்ட வேடன் செய்தது என்ன?