இராணி மங்கம்மாள்/உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம்

11. உதயத்தில் நேர்ந்த அஸ்தமனம்

சின்ன முத்தம்மாளும், ரங்க கிருஷ்ணனும் அரசியற் கவலைகள் ஏதுமின்றிச் சிறிது காலம் நிம்மதியாக வாழ முடிந்தது. எந்தப் பிரச்சனையும் ரங்ககிருஷ்ணனைச் சின்ன முத்தம்மாளிடமிருந்து பிரிக்கவில்லை. கிழவன் சேதுபதியை அவன் வெற்றி கொள்ள முடியாமலே திரும்பியதில் கூட ராணி மங்கம்மாளுக்கு வருத்தம் எதுவும் இல்லை. ரங்ககிருஷ்ணன் போகாமல் தானே ஏற்பாடு செய்து படைகளை அனுப்பியிருந்தால்கூட அந்த மறவர் சீமைப் படையெடுப்பு அப்படித்தான் பயனற்றுப் போயிருக்க முடியும் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் அவள் அதிகம் மனவருத்தப்படவில்லை.

'இளைஞன், அரசியல் முதிர்ச்சி அதிகம் இல்லாதவன். தந்தையால் பயிற்சியளிக்கப்படும் வாய்ப்பைக்கூட இழந்தவன்' என்றெல்லாம் ரங்ககிருஷ்ணனைப் பற்றிச் சில குறைகள் இருந்தாலும் அவனைப் பற்றிய திருப்தி என்னவோ அவற்றைவிட அதிகமாக இருந்தது. நிம்மதியாக ஆளும் பொறுப்புகளை அவனிடம் விட்டுவிட்டு அவ்வப்போது அறிவுரை கூறும் அளவுக்கு ஒதுங்கி நிற்கலாம் என்று கூட அவளுக்குத் தோன்றியது. மகன் முழு நம்பிக்கைக்குரியவனாக இருந்தான்.

ரங்ககிருஷ்ணன் பொது மக்களின் குறைகளை அறிவதில் சமநோக்கு உடையவனாக இருக்கிறான். மக்கள் குறைகளை அறிய அடிக்கடி மாறுவேடத்தில் சகல பகுதிகளுக்கும் நகர பரிசோதனைக்குச் சென்று வருகிறான். கர்வமில்லாமல் மக்களோடு பழகுகிறான். எளிமையாக இருக்கிறான்.

நீதி வழங்கும் இன்றியமையாத நேர்மையும் ஒழுக்கமும் இருபுறமும் சீர்தூக்கிப் பார்க்கும் குணமும் அவனிடம் உள்ளன.

நாயக்க வம்சத்திலும் அக்கம்பக்கத்திலுள்ள பிற ராஜ வம்சங்களிலும் பட்டமகிஷியைத் தவிரவும் பல பெண்களை மணந்து கொள்வது வழக்கமாக இருந்தும் ரங்ககிருஷ்ணன் ஏகபத்தினி விரதமுள்ளவனாக வாழ்கிறான் தெய்வபக்தி உள்ளவனாகவும் தர்மசீலனாகவும் இருக்கிறான்.

என்றெல்லாம் அவனைப் பற்றி எண்ணி எண்ணிப் பெருமைப் பட்டாள் அவனுடைய தாய் ராணி மங்கம்மாள்.

ஆண்டுகள் ஓடின. ரங்ககிருஷ்ணனின் ஆட்சித் திறமையால் தந்தை சொக்கநாத நாயக்கர் இழந்திருந்த சில பகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. ஆட்சி அமைதியாக நடைபெற்றது. மங்கம்மாள் எதிர்பார்த்ததுபோல் ரங்ககிருஷ்ணன் மக்களிடம் நல்ல பெயர் வாங்கினான். ஆட்சிமுறையின் ஒழுங்குகளால் அவன் புகழ் எங்கும் பரவிற்று.

பொது வாழ்விலும் தனி வாழ்விலும் அவன் மிகவும் மகிழ்ச்சியாயிருந்தான். அவனும் சின்ன முத்தம்மாளும் உயிருக்குயிராக ஒருவரை ஒருவர் நேசித்தார்கள். அந்த இணை பிரியாக் காதலைப் பார்த்து ராணி மங்கம்மாள் பெருமகிழ்ச்சியடைந்தாலும் உள்ளூற ஒரு மனக்குறையும் இருந்தது. இவர்களுக்கு மணமாகி இத்தனை ஆண்டுகளின் பின்னும் மக்கட்செல்வம் இல்லையே என்ற குறைதான் அது. ஆறு ஆண்டுகள் நீடித்த அந்தக் குறை ஏழவாது ஆண்டில் தீர்ந்தது.

சின்ன முத்தம்மாள் கருவுற்றிருந்தாள். இச்செய்தி எல்லாருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. அரண்மனை வட்டாரத்தில் திருவிழாக் கொண்டாட்டம்போல ஓர் உவகையைப் பரப்பியது. இந்த நல்ல செய்தி. மங்கம்மாள் இந்த நல்ல செய்தியறிந்ததும் நிறையத் தானதர்மங்களைச் செய்தாள். சாந்திகள், ஹோமங்களையும் செய்வித்தாள்.

அந்த ஆண்டின் வசந்த காலமும் வந்தது. சித்திரா பெளர்ணமிக்கு மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும் சின்ன முத்தம்மாளும் மதுரைக்குப் போய் ஆற்றில் அழகர் இறங்கும் வைபவத்தைத் தரிசித்துவிட்டு வந்தார்கள்.

அந்த ஆண்டு கோடை வெயில் எல்லா ஆண்டுகளையும் விட மிகவும் கடுமையாக இருந்தது. திரிசிரபுரத்திலும், சுற்றுப் புறங்களிலும் அனல் பறந்தது.

அரண்மனை வளையல்காரர் ஒருவர் நல்ல மங்கலவேளை பார்த்துச் சின்ன முத்தம்மாளுக்கு விசேஷமான வளையல்களை அணிவித்தார். வளைகாப்பு வைபவத்தின்போது ரங்ககிருஷ்ணனும், ராணி மங்கம்மாளும் உடனிருந்தனர். சின்ன முத்தம்மாளின் தோழிகளும், அரண்மனைப் பெண்களும் மகிழ்ச்சியோடு கூட்ட மாகக் கூடி நின்று வளைகாப்பு அணிவதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சிலர் மங்கலமான பாடல்களை இனிய குரலில் பாடினார்கள்.

"ரங்ககிருஷ்ணா! உனக்கு ஒரு மகன் பிறந்து அவன் பெரியவனாகி வளர்ந்த பின்பாவது இந்தக் கிழவன் சேதுபதியை எதிர்த்து ஒடுக்க முடிகிறதா பார்க்க வேண்டும்?" என்றாள் மங்கம்மாள்.

"இதற்கு அவசியமே இராதம்மா உலகம் உள்ளவரை கிழவன் சேதுபதியும் நித்யஜீவியாக இருப்பார் என்று நினைத்துக் கொண்டு பேசுகிறீர்கள் நீங்கள்"

"வாஸ்தவம்தான் இங்கு யாரும் சாசுவதமில்லையப்பா. ஆனால் கிழவன் சேதுபதி எமனே வந்தாலும் அவனுக்குப் பிடி கொடுக்காமல் சாக்குப் போக்குச் சொல்லி அவனைத் திருப்பி அனுப்பிவிடுவார்."

"அவர் அப்படிச் செய்யக் கூடியவர் தான் அம்மா ஆனால் காலம் வந்துவிட்டால் யாரும் தப்பமுடியாது.சேதுபதி மட்டுமில்லை; நீ நான் எல்லாரும்தான்."

“என்னைச் சொல், ஒப்புக் கொள்கிறேன். உனக்கு என்ன வந்தது? நீ வாலிபப் பிள்ளை. இன்னும் நீண்டகாலம் சிரஞ்சீவியாயிருந்து வாழ வேண்டும். ஆள வேண்டும். உன்னை ஏன் இதில் சேர்த்துக் கொள்கிறாய் மகனே?"

"வாலிபன், வயோதிகன் என்ற வேறுபாடுகள் எல்லாம் கூற்றுவனுக்குக் கிடையாதம்மா புயலில் சில சமயம் நன்றாக முற்றி உதிரக்கூடிய நிலையிலுள்ள கனிகள் எல்லாம் அப்படியே காம்பில் தங்கிவிடப் பூவும், பிஞ்சும், காயும், தரையில் உதிர்ந்து அழிந்து விடவும் நேரலாம் அம்மா!"

இதைக் கேட்டு அவன் தாய் மங்கம்மாள் அவசரமாக அவனருகே நெருங்கி வந்து விரைந்து அவனது வாயைப் பொத்தினாள்.

"மங்கலமான வேளையில் இந்த அமங்கலமான பேச்சுகள் போதும் ரங்ககிருஷ்ணா!"

வளைகாப்புப் பாடல்களின் மகிழ்ச்சி ஒலியில் ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும் பேசிய இந்தப் பேச்சுகளை மற்றவர்கள் கேட்கவில்லை.

ரங்ககிருஷ்ணன் தற்செயலாகத்தான் இந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்தான். ஆனாலும் அவனுடைய தாய் அந்த அமங்கலமான வார்த்தைகளை அச்சான்யமாக நினைத்தாள். அபசகுனமாக எண்ணினாள். அதை எண்ணி மனத்திற்குள் அஞ்சினாள். பரிகாரங்கள் செய்தாள்.

திரிசிரபுரம் அரண்மனை கலகலப்பாக இருந்தது. சின்ன முத்தம்மாள் மகிழ்ச்சியாயிருந்தாள். அவள் வயிற்றைப் போலவே மனமும் நிறைந்து பூரித்துக்கொண்டிருந்தது. ஒருமாலை வேளையில் அவளும் ரங்ககிருஷ்ணனும் அரண்மனை நந்தவனத்தில் காற்று வாங்கியபடியே பேசிக் கொண்டிருந்தார்கள்.

"பிறக்கப்போகிற குழந்தை ஆண்தான் என்று எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

"இதுவரை நான் எதுவும் நினைக்கவில்லை சின்னமுத்தம்மாள் இப்போதுதான் நினைக்கத் தொடங்குகிறேன். அதுவும் நீ ஆண் ஆக இருக்க வேண்டும் என்று சொல்வதால் நான் பெண்ணாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம் அல்லவா?”

"அதுவும் பெண்ணாகப் பிறந்து என்னைப் போல் கஷ்டப்பட வேண்டுமா?"

"நீ இப்போது என்ன கஷ்டப்படுகிறாயாம்?"

"என்ன கஷ்டப்படவில்லையாம்?"

"பட்டத்தரசியாயிருப்பது கஷ்டமா? அரண்மனை வாசம் கஷ்டமா? புகழ்பெற்ற ராணி மங்கம்மாளின் மருமகளாக இருப்பது கஷ்டமா!"

"உங்கள் கேள்விக்குப் பதில் சொல்வதுதான் இப்போது கஷ்டம்" என்று சொல்லிப் புன்னகை பூத்தாள் சின்னமுத்தம்மாள்.

"ஒரு நாளும் ஒரு விதத்திலும் உனக்குக் கஷ்டம் வராமல் நான் பார்த்துக் கொள்வேன் முத்தம்மா! கவலைப்படாதே"

என்று அவளுக்குப் பதில் கூறி ஆதரவாக அழைத்தபடி அவளை உள்ளே அழைத்துச் சென்றான் ரங்ககிருஷ்ணன்.

"பெண்கள் எல்லோரும் ஆண் குழந்தைகளுக்கு ஆசைப்படுகிறார்கள். ஆண்கள் எல்லோரும் பெண் குழந்தைகளுக்கு ஆசைப்படுகிறார்கள்" என்று போகிறபோது சிரித்தபடி அவனிடம் கூறினாள் முத்தம்மாள்.

மறுநாள் காலை பொழுது விடிந்தது முதல் ரங்க கிருஷ்ணனுக்குக் காய்ச்சல் போல உடல் சூடேறிக் கொதித்தது. முதலில் கழுத்தில் வீங்கினாற்போல் ஓர் ஊற்றம் தெரிந்தது. பொன்னுக்கு வீங்கி என்றார்கள். கண்களில் எரிச்சல் தாங்க முடியவில்லை. உணவு செல்லவில்லை. எல்லாமே கசந்து வழிந்தன. வந்திருக்கும் நோய் என்ன வென்று யாருக்கும் புரிந்து கொள்ள முடியாமலிருந்தது.

முகத்திலும் உடம்பிலும் முத்து முத்தாக வெடித்த பின்பே அவனுக்குப் பெரியம்மை போட்டிருப்பது புரிந்தது. முதலில் இலேசாகத் தென்பட்ட அம்மை முத்துகள் அடுத்த நாள் அருநெல்லிக்காயாக உடல் முழுவதும் அப்பி மொய்த்திருந்தன.

உடல்வலி கொன்றது. உறக்கமும் வரவில்லை. உண்பன பருகுவன எல்லாமே கசந்து வழிந்தன. எதுவும் வேண்டியிருக்கவில்லை.

மஞ்சளையும் வேப்பிலையையும் உடலில் அரைத்துப் பூசச் சொன்னார்கள் அரண்மனை வைத்தியர்கள். ராணி மங்கம்மாள் தான் ராணி என்பதை மறந்து ரங்ககிருஷ்ணனின் தாயாக மட்டுமே மாறி அவனருகே இருந்து கவனித்தாள். பணிவிடைகள் செய்ய ஓடியாடும் உடல் நிலையில் இல்லாவிட்டாலும் சின்ன முத்தம்மாளும் அருகே இருந்தாள்.

வலி தெரியாமல் இருக்க மிகப்பெரிய தலைவாழைக் குருத்து இலையில் விளக்கெண்ணெயைத் தடவி அதில் ரங்ககிருஷ்ணனைக் கிடத்த நேர்ந்தது. அவனுக்குத் தன் நினைவே இல்லை.

"வைத்தியம் செய்வதை விட விரைவில் இறங்கித் தணிந்து அருள் செய்யும்படி மாரியம்மனை வேண்டிக் கொள்வதுதான் பயன்படும் மகாராணி!" என்று வைத்தியர்கள் எல்லாரும் கூறினார்கள், ராணி மங்கம்மாளும் சின்ன முத்தம்மாளும் அரண் மனையிலுள்ளவர்களும் மக்களும் "எங்கள் மன்னரைக் காப்பாற்று தாயே" என்று அம்மனைப் பிரார்த்தித்தார்கள். அரண்மனையில் கட்டிய வேப்பிலைக் கொத்துகளைப் போல் மனிதர்களின் முகங்களும் வாடித் தொங்கின, களையிழந்தன.

இன்னும் சில நாட்களில் தாயாகப் போகும் சின்ன முத்தம்மாள் ஓயாமல் கண்ணீர் சிந்தினாள். கலங்கினாள். கணவனின் உடல் ரணத்தையும் வலியையும் தான் ஏற்றுக் கொண்டு அவனை வலியிலிருந்தும் ரணத்திலிருந்தும் மீட்க முடியவில்லையே என்று மனமுருகினாள் அவள்.

இராப்பகலாக மகனின் அருகிலேயே இருந்த மங்கம்மாள் அரையுடலாகத் தேய்ந்து போனாள். கோயில்களில் விசேஷ அர்ச்சனைகள் செய்யப்பட்டன. அம்மை இறங்கவும், தணியவும் எல்லா அம்மன் கோயில்களுக்கும் வேண்டுதல்களும், காணிக்கை களும் நேர்ந்து கொண்டாள். ராணி மங்கம்மாள் தன் வாழ்நாளிலேயே கணவன் இறந்தபோது தவிர வேறெந்தக் காலத்திலும் இவ்வளவு பெரிய துயர வெள்ளத்தில் மூழ்கியதில்லை. வருந்தியதில்லை.

ரங்ககிருஷ்ணன் முதல் சில தினங்களில் அனலிடைப் பட்ட புழுப்போல துடித்தான். பின்னால் தன் நினைவின்றிக் கட்டைபோல மயங்கிக் கிடந்தான். அவனுடைய வளமான பொன்நிற உடலில் அம்மை கோராமாக விளையாடியிருந்தது. கண்கள் கறுத்து வறண்டு தூர்த்த கிணறுகள் போல் விகாரமாகத் தென்பட்டன. ரங்க கிருஷ்ணனைப் பார்த்து அவன் மனைவி சின்னமுத்தம்மாள் கதறிய கதறலையும் பட்ட வேதனையையும் கண்டு கர்ப்பவதியான அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று கவலையாயிருந்தது மங்கம்மாளுக்கு.

அதனால் சின்ன முத்தம்மாளை ரங்ககிருஷ்ணனின் அறைக்குள் வராமல் அவளே தடுக்கவும் தடுத்தாள்.

"நீ கர்ப்பிணி பூவும் வாசனையும் அலங்காரமுமாக அம்மை போட்டிருக்கிற இடத்துக்கெல்லாம் வரக்கூடாதம்மா" என்று சின்னமுத்தம்மாளைக் கடிந்து கண்டித்துக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள்.

மாமியாரோ கணவனைப் பார்க்க வரக்கூடாதென்றாள். கணவனைப் பார்க்காமல் இருப்பதற்குச் சின்ன முத்தம்மாளால் முடியவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவித்தாள் அவள். திரிசிரபுரம் அரண்மனையில் கடும் சோதனை நிறைந்த நாட்கள் தொடங்கின. அரண்மனையில் பகலிலும் இருள் சூழ்ந்தது. ஒருவர் முகத்திலும் களையில்லை. துயரம் சூழ்ந்த மெளனம் எங்கும் கனத்துத் தேங்கியிருந்தது. எங்கும் எந்தச் செயலும் நடைபெறாமல் அரண்மனைக்குள் எல்லாம் ஸ்தம்பித்துப்போய்விட்டன.

நாலாவது நாள் மாலை ரங்ககிருஷ்ணனுக்கு இலேசாக நினைவு வந்தது. பேசமுடியாமல் கழுத்திலும், கன்னத்திலும் கொப்புளங்கள். தாயை நோக்கிக் கண்ணிர் சிந்தியபடிமெளனமாக இருந்தான் அவன். வாயைத் திறந்து உதட்டை அசைத்தாலே வலி கொன்றது.

"கவலை வேண்டாம் மகனே! சீக்கிரம் தணிந்துவிடும். தலைக்குத் தண்ணீர் விட்டுவிடலாம் மகனே அதுவரை பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாயிரு" என்று அழுகைக்கிடையே அவனுக்குச் சொன்னாள் ராணி மங்கம்மாள்.

கணவன் இறந்து போனபின் அரசியல் பொறுப்புகள் அவளைக் கல்நெஞ்சக்காரியோ என்று பிறர் நினைக்குமளவுக்கு மாற்றியிருந்தன. அவள் எதற்குமே கலங்கிக்கண்ணீர் சிந்தியதில்லை. இன்று மகன் மேலிருந்த பாசத்தால் அவனை 'அழாதே! மகனே' என்று ஆறுதல் கூறிவிட்டுத் தான் சிறு குழந்தைபோல் தேம்பித் தேம்பி அழுதாள் மங்கம்மாள்.

ஒவ்வொரு வார்த்தையாகச் சிரமப்பட்டு உச்சரித்து ரங்க கிருஷ்ணன் பேசினான். குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் நலிந்து ஒலித்தது.

"அம்மா...! அன்று உலகின் நிலையாமையைப் பற்றி உங்களிடம் பேசிக்... கொண்டிருந்தபோது... யாரும் சாஸ்வதமில்லை. என்று சொன்னது நினைவிருக்கிறதா...?"

"போதுமடா மகனே! இப்போது எதற்கு அந்த அமங்கலப் பேச்சு?..."

"நன்றாகப் பழுத்த நெகிழ்ந்து காம்பிலிருந்து தானே உதிரக்கூடிய நிலையிலுள்ள... பழங்கள் உதிராமல் மரத்திலேயே தங்கிவிடுவதும், பூ, பிஞ்சு, காய் என்று இளமையானவை உதிர்ந்து விடுவதும் சகஜமானது என்று."

"போதும் நிறுத்து" என்று அவன் வாயைப் பொத்தினாள் ராணி மங்கம்மாள். மகன் நினைவூட்டிப் பேசிய வார்த்தைகள் அவளை மேலும் கலக்கின. மனத்தைத் தேற்றிக் கொள்ளுவது மிகவும் சிரமமாக இருந்தது. உள்ளே அந்தரங்கத்தில் அவளே தடுக்க முயன்றும் கேளாமல் ஏதோ இடைவிடாதபடி அழுது கொண்டிருந்தது. இரவு முழுவதும் அவள் மனத்தில் அதே இடைவிடாத அழுகை நீடித்தது.

மறுநாள் அதிகாலையில் விடிவதற்கு இன்னும் நாலைந்து நாழிகைகள் இருக்கும்போது இருள் பிரியாத வைகறையில் ரங்ககிருஷ்ணனுக்கு மீண்டும் நினைவு வந்தது. அப்போது ராணி மங்கம்மாள் அருகிலிருந்தாள்.

அறையில் இருந்த திவ்யப் பிரபந்த ஏடுகளைச் சுட்டிக் காட்டி யாராவது சுவாமிகளை வரவழைத்துப் பிரபந்தம் சேவிக்கச் சொல்லுமாறு தாய்க்கு ஜாடை காட்டினான் அவன்.

உடனே திருவரங்கத்திற்குப் பல்லக்கை அனுப்பிப் பரம வைஷ்ணவரான ஒரு வைதீகரை அழைத்து வரச் செய்தாள் மங்கம்மாள். பன்னிரண்டு திருமண்காப்பும் ஒளி திகழும் முக மண்டலமுமாகச் சாட்சாத் பெரியாழ்வாரே நேரில் எழுந்தருளியது போல ஒரு பரம வைஷ்ணவர் அங்கே எழுந்தருளினார். பிரபந்தம் சேவித்தார்.

துளங்கு நீள்மூடி அரசர்தம் குரிசில்
தொண்டை மன்னவன் திண்திறல் ஒருவர்க்கு
உளம்கொள் அன்பினோடு இன்னருள் சுரந்தங்
கோடு நாழிகை ஏழுடன் இருப்ப

விளங்கொள் மற்று அவற்கு அருளிச்செய்த
வாறு அடியேன் அறிந்து உலகம்
அளந்த பொன்னடியே அடைந்து,
உய்ந்தேன் அணிபொழில் திருவரங்கத்தம்மானே!

கணீரென்ற குரலில் பாடல் ஒலித்தது. அந்தத் திவ்ய சப்தம் செவிகளில் ரீங்காரமிட்டு தெய்விகமாக முரலும்போது ரங்க கிருஷ்ணன் உலகம் அளந்தவனின் பொன்னடியைச் சென்று சேர்ந்திருந்தான்.

வைகறைப்புள்ளினம் ஆர்ப்பரிக்க, காவிரி நீர் சலசலக்க, பூபாளராக ஒலிகள் பூரிக்க, இளங்குளிர்க் காற்று எழில் வீச உலகில் பொழுது புலர்ந்து கொண்டிருந்தபோது திரிசிரபுரம் அரண்மனையில் அதே பொழுது அஸ்தமித்துவிட்டது. அரண்மனை அழுகுரல்களில் மூழ்கியது. மனிதர்கள் துயர வெள்ளத்தில் மூழ்கினார்கள். உணர்வுகளில் குருதி கசிந்தது.

மகனின் மரணம் என்ற ஒரு பேரதிர்ச்சியில் வீழ்ந்து விட்ட ராணி மங்கம்மாளின் கண்முன் எதிர்காலம், எதிர்கால அரசியல் பொறுப்புகள் என்ற வேறு இரண்டு பெரிய அதிர்ச்சிகளும் மிக அருகில் தெரிந்தன.

"ரங்கா எனக்கு ஏன் இத்தனை பெரிய சோதனை?" என்று மகன் சரணமடைந்து அர்ப்பணமாகிவிட்ட அதே உலகளந்த பொன்னடிகளைக் கண்கலங்கிப்போய் அப்போது உள்ளம் உருகித் தியானித்தாள் அவள்.