இராணி மங்கம்மாள்/நம்பிக்கைத் துரோகம்
ராணி மங்கம்மாளால் சேதுபதியை எதுவும் செய்ய முடியவில்லை. அசைக்க முடியாத கருங்கல்லாக இருந்துவிட்டார் அவர். ராணி மங்கம்மாளிடம் அடங்கிக் கப்பம் கட்டாததால் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே சேதுபதியிடம் இல்லை. இயல்பாகத் தான் இருக்க வேண்டிய நிலையே கப்பம் கட்டாமல் இருப்பதுதான் என்பதுபோல் வாளா இருந்தார் அவர். அவரை நிர்ப்பந்தப்படுத்தவோ ராணிமங்கம்மாளின் ஆட்சிக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாக உணர்த்தவோ முடியவில்லை.
கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதே புரியாத ஒருவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அறியாமல் திணறினாள் அவள், மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கரின் இறுதிக் காலத்திலேயே ஏறக்குறைய அந்த மனநிலைக்கு வந்திருந்தார் அவர் ஆட்சி மங்கம்மாளிடமும், ரங்க கிருஷ்ணனிடமும் வந்தபோது கிழவன் சேதுபதியிடமும் அந்த உணர்வு உறுதிப்பட்டிருந்தது. ரங்ககிருஷ்ணனும் மறைந்த பின்னர் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரத் திளைப்பில் இருந்தார் அவர்.
ராணி மங்கம்மாள் கூப்பிட்டு அனுப்பிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தவர்போல் அல்லாமல் அரச குடும்பத்து விருந்தினர் போல சில தினங்கள் வந்து மதுரையில் தங்கிவிட்டு அப்புறம் புறப்பட்டுச் சென்றார் கிழவன் சேதுபதி. அவரை யாராலும் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை.
மங்கம்மாள் மதுரை மாநகரில் தங்கியிருந்த ஆண்டுகளில் புதிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. மறவர் சீமையைத் தனி நாடாக்கிக் கொண்டதைத் தவிர வேறு வகை அத்துமீறல்களைச் சேதுபதி செய்யவில்லை என்பதே திருப்தியாக இருந்தது. திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன்கூட ஆண்டுதோறும் மதுரையிலிருந்து படைகளை அனுப்பிக் கொள்ளையிடப் போவது போல மிரட்டினால்தான் திறைப் பணம் கட்டுவதென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் தானாக முன்வந்து கட்டவில்லை என்பதே ராணி மங்கம்மாளுக்கு எரிச்சலூட்டியது. மதுரைப் படைகளைக்கூட அவன் மதிப்பதற்கும் கண்டு மிரளுவதற்கும் வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது.
ரவிவர்மனது ஆட்சிக்கு அமைச்சர் முறையுடையவர்களாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஓயாத விரோதத்தால் அவன் மதுரைப் படைகளை எதிர்க்கும் ஆற்றலின்றி இருந்தான். உள்நாட்டுக் கலகமும் அருகிலேயே உடனிருக்கும் தொல்லைகளுமே அவனை அவனது எதிரிகள் முன் வலுவிழக்கச் செய்திருந்தன.
இந்தச் சூழ்நிலை மங்கம்மாளுக்குச் சாதகமாயிருந்தது. எட்டுவீட்டுப் பிள்ளைமார்கள் அமைச்சர்கள் என்ற முறையில் தங்களுக்குள் ஒற்றுமையின்றி இருந்தனர். ரவிவர்மனை எதிர்க்கும்போது மட்டும் ஒருவிதச் செயற்கையான ஒற்றுமை நிலவியது அவர்களிடையே, அரசனும் வலுவிழந்து போயிருந்தான். அவனை ஆட்டிப் படைத்த அமைச்சர்களும் ஒற்றுமை குலைந்து திரிந்தனர். இதனால் 'பாண்டிப்படை' என அவர்களால் அழைக்கப்பட்ட மதுரைப்படை எப்போது படை எடுத்து வந்தாலும் அதற்குக் கொண்டாட்டமாயிருந்தது. திருவாங்கூர் மக்களைக் கொள்ளையடிக்கவும் சூறையாடவும் முடிந்தது.
பாண்டிப்படை வீரர்கள் ராணி மங்கம்மாளுக்குக் கிடைக்க வேண்டிய திறைப்பணத்தையும் வாங்கினர். தங்களுக்கு வேண்டியதையும் அபகரித்து மகிழ்ந்தனர். நீண்டகாலமாக இப்படியே நடந்து வந்தது. திருவாங்கூருக்குப் படை எடுப்பு என்றாலே வீரர்கள் மகிழ்ச்சியால் துள்ளினர்.
இப்படி ஆட்சிச் சூழ்நிலையினாலும் எல்லைப்புறச் சிக்கல் களாலும் ராணிமங்கம்மாள் மதுரை நகரிலும், திரிசிரபுரத்திலுமாக மாறி மாறி இருந்து வந்தாள்.
சில ஆண்டுகளுக்குப் பின் இதே போலத் திருவாங்கூருக்கு அனுப்பிய மதுரைப் படைகள் முற்றிலும் எதிர்பார்த்திராத ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்ள நேர்ந்து விட்டது. பாண்டிப்படை வீரர்கள் திருவாங்கூருக்குப் போகிறார்கள் என்றால் எந்தவிதமான தொல்லையுமில்லாமல் வெற்றியோடும் திறைப் பணத்தோடும் திரும்புகிறார்கள் என்றிருந்த நிலைமை திடீரென்று மாறியது. மதுரைப் படைகள் கல்குளம் என்னும் தலைநகர எல்லையை அடைகிற வரை எந்தத் திருவாங்கூர்ப் படை வீரனும் எதிர்க்கவரவில்லை. ஒவ்வொரு முறையும் பேருக்காவது சிறிது எதிர்ப்பு இருக்கும். அந்த எதிர்ப்பும் திருவாங்கூர் அரசின் எல்லையைப் படைகள் அடைந்தவுடனேயே இருக்கும். இந்தத் தடவை ராஜதானியின் பிரதான வாயில் வரை எதுவும் கேள்வி முறையில்லாமல் போகவே சந்தேகமாயிருந்தது.
கல்குளம் கோட்டை வாயில் கதவுகள் கூட அகலத்திறந்து வைக்கப்பட்டிருந்தன. மதுரைப் படைத்தலைவனும் வீரர்களும் தயங்கினர்.
"தயக்கம் எதற்கு? வருக! வருக! மிகழ்ச்சியோடு வரவேற்கிறோம். மலர்ச்சியோடு வரவேற்கிறேம்."
இப்படி இந்தக் குரலைக் கேட்டுத் திகைப்புடன் பார்த்தபோது கோட்டைக் கதவருகே மன்னன் ரவிவர்மனே புன்னகையோடு நின்று கொண்டிருந்தான். விருந்தாட வந்த உறவினர்களை வரவேற்பதுபோல மதுரைப் படைத்தலைவனையும் படைவீரர்களையும் இருகரம் நீட்டி அன்பாகவும் ஆதரவாகவும் வரவேற்றான் ரவிவர்மன். படைவீரர்களுக்கு நடந்து வந்த களைப்புத்தீர உபசாரங்கள் நடந்தன. படை வீரர்கள் கோட்டைக்குள்ளேயே தங்கவைத்துக் கொள்ளப்பட்டார்கள்.
படைத் தலைவனை இரவிவர்மனே உடனழைத்துச் சென்று ராஜோபசாரம் செய்தான். பெரிதாகப் பீடிகை போட்டுக் கொண்டு ஆரம்பித்தான்:
"இம்முறை நீங்கள் மதுரைப் பெருநாட்டுக்குச் சேர வேண்டிய திறைப் பொருளைப் பெற்று செல்ல வந்ததாக மட்டும் நினைக்காதீர்கள்! மதுரைப்பெருநாட்டின் மேலாதிக்கத்தையும் என்னையும் பிடிக்காத சிலரை ஒழித்துக் கட்டவும் உங்கள் உதவி எனக்குத் தேவை. என்னுடைய ஜன்மவைரிகளான எட்டுவீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தாக வேண்டும். மதுரைப் படைத் தலைவராகிய நீங்கள் வருஷந்தவறாமல் இங்கு என்னைத் தேடிவந்து திறைப்பணம் வாங்கிச் செல்கறீர்கள். இப்படி நேராமல் ஆண்டு தோறும் திறைப் பணமே உங்கள் இருப்பிடத்திற்குத் தேடி வந்து விடும்படியாகச் செய்ய என்னால் முடியும். என்னைத் தலையெடுக்கவே விடாமல் இடையூறுகள் செய்து கொண்டிருக்கும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழிப்பதற்கு ஒத்துழைத்தீர்களானால் நான் அதைச் செய்துவிடுவேன்."
"கப்பம் கட்டுகிறேன் என்ற வார்த்தையையே காப்பாற்றாத நீங்கள் இந்த வார்த்தையை மட்டும் காப்பாற்றுவீர்கள் என்பது என்ன உறுதி? உங்களை எப்படி நம்புவது?"
"மதுரை நாட்டுக்குக் கப்பம் கட்டுவது மட்டுமில்லை! நான் சொல்கிறபடி நீங்கள் ஒத்துழைத்தால் என்னுடைய அரசாட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சரிபாதிப் பகுதியையே மதுரைப் பெருநாட்டுக்கு வழங்குவேன்."
"உங்கள் வாக்குறுதியை நான் நம்புகிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். அதற்கான உங்கள் நிபந்தனையை எப்படி நிறைவேற்றுவது? உங்கள் உதவியும் யோசனையும் இன்றி எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை நாங்கள் எப்படி ஒழிக்க முடியும்?"
"கவலை வேண்டாம் அந்தப்பாவிகளை எப்படி ஒழித்துக் கட்டுவது என்பதற்காக நீண்ட யோசனைக்குப் பின் ஒரு திட்டமே போட்டு வைத்திருக்கிறேன்."
திருவாங்கூர் மன்னன்-ரவிவர்மனின் வேண்டுகோளுக்குக் செவிசாய்ப்பதா, தவிர்ப்பதா என்று சிந்தித்துத் தயங்கினான் மதுரைப் படைத் தலைவன். வெறும் திறைப் பொருளைக் கொண்டு போய்ச் சேர்த்தாலே மகிழக்கூடிய ராணிக்குத் திருவாங்கூர் ராஜ்யத்தில் பாதியையும் ஆளும் உரிமையைக் கொண்டுபோய்க் கொடுக்கிற நிலை வந்தால் தன் பெருமை உயரும் என்று படைத் தலைவனுக்கு ஆவலாகவும் இருந்தது. முயற்சி தோற்று வம்பிலே சிக்கிக் கொண்டால் ராணியிடம் தன் பெயர் கெட்டு விடுமே என்று தயக்கமாகவும் இருந்தது. தன்னுடைய பங்காளிகளை அழிப்பதற்கு எதிரியின் உதவியை வேண்டும் ரவிவர்மனின் இந்த மனப்பான்மையை வியந்தான் மதுரைப் படைத்தலைவன். அவனால் உடனடியாக ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. சிந்தித்துத் தயங்கினான்.
சிந்தனையின் முடிவில் ஆசைதான் வெற்றி பெற்றது. திறைப் பொருளோடு, திருவாங்கூர் ராஜ்யத்தில் பாதியை ஆளும் உரிமையையும் பெற்றுக் கொண்டு போய் மகாராணியை மகிழ்ச்சிகரமான திகைப்பில் ஆழ்த்த வேண்டும் என்று முடிவு செய்தான் படைத்தலைவன். ரவிவர்மன் தன் திட்டத்தை விளக்கமாகக் கூறலானான்:
"கோட்டையை உங்கள் பொறுப்பில் ஒப்படைத்து விட்டுப் போகிறாற் போல நான் ஒதுங்கிப் போய்க்கொண்டு எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தந்திரமாக உள்ளே வரச் செய்கிறேன். அவர்களை உள்ளே வரவழைப்பதற்கு ஒரு கவர்ச்சியாக ஆட்சியையும், கோட்டையையும் அவர்கள் பாதுகாப்பில் விட்டு விடுவதுபோல் பாவனை காண்பித்து ஏமாற்றப் போகிறேன். அவர்கள் அதை நம்பி உள்ளே வந்ததும் மறைந்திருக்கிற நீங்களும் உங்கள் படைகளும் அவர்களைத் திடீரென்று தாக்கிக் கொன்று தீர்த்துவிடலாம்."
"அதெல்லாம் சரி அவர்கள் உங்களை நம்பிக் கோட்டைக்குள் வருவார்களா?"
"பதவியும் ராஜ்யமும், கோட்டைப் பொறுப்பும் கிடைக்கிறதென்றால் விழுந்தடித்துக் கொண்டு உள்ளே வரத் தயங்க மாட்டார்கள்"
"நாங்கள் திறைப் பணத்தைப் பெற்று முடித்துக் கொண்டு படைகளுடன் இரவோடிரவாக மதுரைக்குத் திரும்பிவிட்டதாக எட்டு வீட்டுப் பிள்ளைமார்களிடம் முதலில் அவர்கள் நம்பும்படியாக ஒரு பொய்யை நீங்கள் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் எங்களை நினைத்துப் பயந்து அவர்கள் கோட்டைக்குள் வரத் தயங்கிவிடக் கூடும். ஜாக்கிரதை!"
"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைக் கூண்டோடு கோட்டைக்குள் அனுப்ப வேண்டியது என் பொறுப்பு அவர்கள் மறுபடி கோட்டைக்குள்ளேயிருந்து வெளியே உயிரோடு வராமல் கூண்டோடு அழித்துவிட வேண்டியது உங்கள் பொறுப்பு" என்றான் ரவிவர்மன். மதுரைப் படைத்தலைவன் சம்மதித்தான்.
திட்டமிட்டபடி எல்லாம் நடந்தன. இருளில் எட்டு வீட்டுப் பிள்ளைமார்கள் கல்குளம் அரண்மனையைக் கைப்பற்றி ஆளும் ஆசையுடன் கோட்டைக்குள் நுழைந்தபோது மறைந்திருந்த மதுரைப் படை திடீரென்று பாய்ந்து அவர்களைத் தாக்கியது. எதிர்பாராத அந்தத் தாக்குதலினால் அவர்கள் பதறி நிலைகுலைந்தனர். எதிர்த்துத் தாக்குவதற்கு அவர்களிடம் ஆட்கட்டோ ஆயுத பலமோ இல்லை. மதுரைப் படைவீரர்கள் எட்டுவீட்டுப் பிள்ளைமார்களின் ஆட்களில் பலரைக் கொன்றுவிட்டார்கள். எஞ்சிய மிகச் சிலர் தப்பி ஓடிவிட்டார்கள். மந்திரம் போட்டு அடக்கியது போல எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் கொட்டம் இரவோடிரவாக ஒடுங்கிவிட்டது. பிழைத்தவர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். மதுரைப் படை வீரர்களும், படைத் தலைவனும் வெற்றி ஆரவாரத்துடனும், மகிழ்ச்சியுடனும் கோட்டைக்குள் ரவிவர்மனை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர்.
ஆனால் பொழுதுவிடிவதற்குள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எதிர்பாராதது நடந்துவிட்டது. கோட்டைக்குள் மதுரைப் படை வீரர்களை வைத்துவிட்டு வெளியேறியிருந்த ரவிவர்மன் வெளியே போய்த் தன் ஆட்களை அதிக அளவில் திரட்டியிருந்தான். வேறுவிதமான ஆசை அவனுக்கு உண்டாயிற்று. தன்னிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி மதுரைப் படைத் தலைவனும் படைகளும் எட்டு வீட்டுப்பிள்ளைமார்களை அழித்துத் துரத்தியபின் ரவிவர்மன் மதுரைப் படையையும் தொலைத்துவிட்டு ஏமாற்ற எண்ணினான். மதுரைப் படைத் தலைவனுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டான். ஆயத்த நிலையில் இல்லாதிருந்த மதுரைப்படைகளைப் பின்னிரவில் தன் ஆட்களோடு திடீரென்று கோட்டைக்குள் புகுந்து தாக்கத் தொடங்கினான் ரவிவர்மன்.
இதை முற்றிலும் எதிர்பாராத மதுரை நாட்டுப் படைவீரர்களும் அவர்கள் தலைவனும் திணறிப் போனார்கள். தீட்டிய மரத்திலேயே பதம் பார்த்த கதையாக முடிந்துவிட்டது. தனது நிரந்தர எதிரியாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களைத் தொலைத்தவுடன் அதற்குப் பேருதவி புரிந்தவர்களாகிய பாண்டிப் படைகளையும் தொலைத்து விடத் துணிந்திருந்தான் ரவிவர்மன்.
உடனே மதுரைப் படைகளை அழிக்காவிட்டால் கொடுத்த வாக்கின்படி அவர்களுக்குப் பாதி ராஜ்யத்தைத் தர நேருமோ என்று பயந்தே ரவிவர்மன் இப்படிச் செய்திருந்தான். 'எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்த கையோடு இனி உடனே ஆயுதமேந்திப் போர் புரியும் அளவு எதிரிகள் இல்லை'-என்ற நம்பிக்கையோடு உறங்க முற்பட்டிருந்த மதுரைப் படைகள் இரவிவர்மனின் திடீர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓட நேர்ந்தது. ஓடியவர்களையும் துரத்திக் கொல்லுமளவு கருணையற்றிருந்தான் ரவிவர்மன். பலரை ஈவு இரக்கமின்றிக் கொன்றும் விட்டான். ரவிவர்மனின் இந்தப் பச்சையான நம்பிக்கைத் துரோகம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் புறமுதுகிட்டு ஓடிய மதுரைப்படையில் சிலரே மதுரை வரை உயிரோடு திரும்பித் தப்ப முடிந்தது.
தப்பியவர்கள் மதுரை நகரையடைந்ததும் ராணி மங்கம்மாள் அப்போது மதுரையில் இல்லை என்பது தெரிந்தது. ராணி விஜயரங்கனோடும் பரிவாரங்களோடும் திரிசிரபுரம் போயிருந்தாள். செய்தியின் அவசரமும் அவசியமும் கருதித் திரிசிரபுரத்திற்குத் தூதர்கள் விரைந்தனர். ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகம் ராணி மங்கம்மாளிடம் தெரிவிக்கப்பட்டது.
ரவிவர்மனின் துரோகம் பற்றிய இச்செய்தி அவளை அடிபட்ட புலியாக்கியது. செய்தியை அவளறிந்தபோது நள்ளிரவு. நேரத்தைப் பொருட்படுத்தாமல் உடனே இராயசத்தையும் பிரதானிகளையும் வரவழைத்து ஆலோசனை செய்தாள். தொடர்ந்து என்ன நடவடிக்கை எடுத்து ரவிவர்மனை ஒடுக்குவது என்று அவளும் இராயசம் முதலிய பிரதானிகளும் ஒரு நிச்சயமான முடிவுக்கு வந்தனர்.
அதிவீர பராக்கிரமசாலியான தளவாய் நரசப்பய்யாவின் தலைமையில் மற்றொரு மாபெரும் படையைத் திருவாங்கூருக்கு அனுப்ப ஏற்பாடாயிற்று.
"பிறர் செய்யும் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலாம். துரோகத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாது-கூடாது" என்று படைகளை அனுப்புமுன் நரசப்பய்யாவிடம் வீர முழக்கமிட்டாள் ராணி மங்கம்மாள். படைகள் நரசப்பய்யாவின் தலைமையில் திரிசிரபுரத்திலிருந்து தெற்கே புயலெனப் பாய்ந்து புறப்பட்டன.
நம்பிக்கைத் துரோகத்தை எதிர்த்து இரவு பகல் பாராது ராணி மங்கம்மாள் நடத்திய ஆலோசனையால் எதிர்பாராத அபவாதம் ஒன்று மெல்ல மெல்லப் புகைந்தது. ராணி அதைப் பொருட்படுத்தவோ பெரிதுபடுத்தவோ விரும்பவில்லை. ஆனால் வாய்ப்புக் கிடைக்கும்போது உலகம் எப்படிப்பட்டவரை வேண்டுமானாலும் அபவாதத்தில் சிக்க வைத்துவிடும் என்பது மட்டும் அதனால் அப்போது அவளுக்கு நன்றாகப் புரிந்தது.