இராணி மங்கம்மாள்/முன்னுரை

முன்னுரை

ராணி மங்கம்மாளின் கதை தென்னாட்டு வாழ்க்கையோடு இரண்டறக் கலந்திருப்பது, சுவையானது.

மங்கம்மாள் சாலை, மங்கம்மாள் சத்திரம், மங்கம்மாள் தானதருமம் என்று மக்கள் அன்றாடம் பேசி மகிழும் சிறப்புடன் கதாபாத்திரமாக அவள் விளங்குகிறாள்.

அந்த மங்கம்மாளை நாயகியாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணி வரலாற்று நூல்களையும், கர்ண பரம்பரைக் கதைகளையும், செய்திகளையும் ஆராய்ந்ததன் விளைவே இந்தப் புத்தகம்.

மங்கம்மாளை மட்டுமே முக்கியக் கதாபாத்திரமாக ஏற்காமல் நாயக்கர் வரலாற்றை விவரிக்கப் புகுந்திருந்தால் இந்நாவல் ஒருவேளை இதைவிடவும் பெரிதாக அமைந்திருக்கக் கூடும்.

ஆனால் என் நோக்கத்தை நான் முன்பே வரையறுத்துக் கொண்டுவிட்டதால் கதைப் போக்கிற்கும் இதை உருவாக்கிய எனக்கும் வேலை கச்சிதமாக அமைந்துவிட்டது.

இன்று பெரிதாகப் பேசப்படும் மதங்கள் சம்பந்தமான சமரச மனப்பான்மையைத் திருமலை நாயக்கர் தொடங்கி மங்கம்மாள் வரையிலான நாயக்க வம்சத்தினர் இயல்பாகக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

எந்த மதுரைச் சீமையில் சமணரைக் கழுவேற்றுகிற அளவு மத உணர்வு தீவிரமாக இருந்ததோ அதே மதுரைச் சீமையில் இப்படியும் சமரசம் நிலவச் செய்திருக்கிறார்கள் நாயக்க வம்சத்தினர். கிழவன் சேதுபதி போன்ற தீவிர உணர்வாளர்களும் அதே காலகட்டத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் மறப்பதற்கில்லை.

கதிரில் தொடர்ந்து முப்பத்தொரு வாரம் வெளிவந்த இந்நாவல் இப்போது நூல் வடிவில் வெளிவருகிறது. தமிழ்ப் புத்தகாலயத்தார் வெளியிடுகிறார்கள். கதையில் ராணி மங்கம்மாளுக்கு அடுத்தபடி நம்மைக் கவருகிற கதாபாத்திரம் கிழவன் சேதுபதிதான். மடங்கா வீரமும் பிறருக்கு அடங்கா ஆற்றலும் கொண்ட அந்தக் கிழச்சிங்கம் நம் கவனத்தைக் கவர்வதில் வியப்பேதும் இருக்கமுடியாது. நாயக்கர்கள் காலத்து மதுரை, இராமநாதபுரம், திரிசிரபுரம் பிரதேசங்களின் நிலையையும் இந்நாவலின் மூலம் காணமுடிகிறது.

இப்புத்தகத்தின் வாசகர்களுக்கு என் அன்பையும் வாழ்த்துக் களையும் கூறி விடைபெறுகிறேன்.

சென்னை-2

1–3–81.

நா. பார்த்தசாரதி