18

அன்று இரவே முத்துமாலை ஊருக்குத் திரும்பிவிட வில்லை. மறுநாள் தான் வந்து சேர்ந்தான்.

வந்த உடனேயே அவன் காதில் விழுந்த செய்தி அவனுக்கு அதிர்ச்சி தந்தது.

 அனைந்த பெருமாள் பிள்ளையின் மகள் வளர்மதி செத்துப் போனாள்.

“என்னது? செத்துப் போனாளா? வளர்மதியா? நெசமாவா? எப்படி?”

நம்ப இயலாதவனாய் அவன் கேள்விகளை அடுக்கினான். உண்மை அவன் உள்ளத்தை உலுக்கியது. துயரம் கவ்விப் பற்றிய இதயத்தில் வலி எடுத்தது.

அந்த ஊரில் அது சகஜ நிகழ்ச்சி. அடிக்கடி யாராவது ஒரு நபர் பூச்சி மருந்தை குடித்து வைப்பது வழக்கம் தான். தற்கொலை முயற்சி. வயலில் பயிர்களுக்கு பூச்சி நோயைத் தடுப்பதற்காகத் தெளிக்க வேண்டும் என்று வீட்டில் வாங்கி வைக்கப்படும் மருந்து, குறுக்கு வழியில் சீக்கிரமே எமலோக யாத்திரையை மேற்கொள்ள ஆசைப்படுகிற ஆண் அல்லது பெண்ணுக்கு சுலப டிக்கட் ஆக உதவி புரியும்.

பெண்டாட்டியோடு சண்டை போட்டுக் கொண்ட புருசன் அவளுக்கு புத்தி கற்பிக்க வேண்டும் என்று மருந்தை குடித்து விடுவான். புருசனைப் பிடிக்காத பெண்டாட்டி பழிவாங்கும் எண்ணத்தோடு அதைக் குடிப்பாள். மாமியார் கொடுமையை தாங்க முடியாத மருமகள்—குடும்பப் பிச்சுப்பிடுங்கல்களை சகித்து சகித்து அலுத்துப் போன ஆண்—வேலை கிடைக்காத வாலிபன் இப்படி யார் யாரோ பரலோகத்துக்கு ஒரு பாஸ்போர்ட் ஆக பூச்சி மருந்தைக் கையாண்டார்கள்.

ஒன்றிருவர் செத்துப் போவார்கள். சீக்கிரமே கண்டு பிடிக்கப்பட்டால், உற்றார் உறவினர் டாக்சி பிடித்து, மருந்து சாப்பிட்ட நபரை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஒடுவார்கள். பிரைவேட் டாக்டர்கள் நடத்தும் வசதிகள் நிறைந்த ‘கிளினிக்’குகளுக்குத் தான். இது தான் சமயம் என்று டாக்டர்கள் ஐநூறு, அறுநூறு எனப் பணம் பிடுங்கி விடுவார்கள். பின்னே எனன செய்வது? “பெரிய ஆஸ்பத்திரி” க்குப் போனால், அக்கப்போர்கள் அதிகம் ஆகும். தற்கொலை முயற்சி என்று வழக்கு தொடரப்படுமே! அது வேறு அலைச்சல், பணச் செலவு, மற்றும் பல சிரமங்கள்.

ஆஸ்பத்திரிக்குப் போயும் பிழைக்காமல் போகிறவர்களும் உண்டு.

மருந்து குடித்து செத்துப் போகும் நபரின் உடலை சட்டுப் புட்டென்று பைசல் பண்ணுவதில் எல்லோரும் அதிக அக்கறை காட்டுவதும் வழக்கமாக இருந்தது. வேண்டாதவர், பிடிக்காதவர்,வம்புபண்ணுகிறவர் எவராவது போலீசுக்கு ரிப்போர்ட் பண்ணி, போலீஸ் வந்து விட்டால், இருக்கிறவங்க பாடு தானே திண்டாட்டம், எனவே, அவசரம் அவசரமாக மயானத்துக்குக் கொண்டு போய் வரட்டி, கட்டை, வைக்கோல் முதலியவற்றை தாராளமாக உபயோகித்து—அவசியமானால் மண் எண்ணையையும் பயன்படுத்தி—வேகம் வேகமாகக் காரியத்தை முடித்து விடுவார்கள்.

இந்த இனத்தில் வளர்மதியும் சேருவாள் என்று முத்துமாலை சொப்பனத்தில் கூட நினைத்ததில்லை. ஆனாலும், அந்தப் பெண் அப்படித் தான் போய்ச் சேர்ந்தாள்.

அவளுக்கு வாழ்க்கை அலுத்துப் போய்விட்டது, பாவம்! அப்பா, அம்மா அவளை குறை சொன்னதில்லை. இவள் விதி இப்படி இருக்கே என்றுதான் அவர்களும் குமைந்து புழுங்கினார்கள். அக்கா தங்கச்சிமார் சண்டை அவ்வப்போது தலைகாட்டும். தங்கச்சிகளில் எவளாவது ஒருத்தி குத்திக் காட்டுவது போல் சொல் வீசுவதும் வழக்கம்தான். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் யாராவது குதர்க்கமாகப் பேசி, அவள் மனவேதனையை அதிகப் படுத்துவதும் உண்டு.  அல்பமாகத் தோன்றக் கூடிய காரணங்கள் எத்தனையோ. அவற்றை அவள் பெரிசாக எண்ணி, மனச் கவலையும் வேதனையும் பட்டு, இப்படி எல்லாம் அவதிப்படுவதை விட ஒரேயடியா செத்துப் போகலாமே என்று துணிந்து, பூச்சி மருந்தை தஞ்சம் அடைந்தாள். அவளுடைய “அதிர்ஷ்டம்” தக்க தருணத்தில் அந்த வீட்டில் யாரும் அவள் செயலைக் கண்டு பிடிக்கவில்லை. ஆகவே, அவளது நோக்கம் வெற்றிகரமாக நிறைவேறியது. வளர்மதி ஒரே அடியாக அஸ்தமித்து விட்டாள்!

விஷயம் அறிந்த முத்துமாலை ரொம்பவும் ஆடிப் போனான் ‘சே, வளர்மதி இப்படிப் பண்ணுவாள்து நினைக்கவேயில்லையே. பைத்தாரப்புள்ளெ எதுக்கு இப்படிச்சாகனும்? அவளுக்காக நான் அசலூரிலே நடுத்தெருவிலே வச்சு அவ மாமியா கூடவும் புருசன் கூடவும் சண்டை போட்டேனே. அதைப் பத்தி அவகிட்டே சொல்லணும்னு எண்ணினேனே...”இவ்வாறு அவன் புலம்பிக்கொண்டே யிருந்தான்.

அன்றைக்கு ராத்திரி முத்துமாலை அதிகமாக சாராயம் குடித்தான். வயிற்றெரிச்சலையும் மனக் கொதிப்பையும் அணைக்கக் கூடிய ஒரே மருந்து இதுதான் என்று சொல்லிக் கொண்டே குடித்தான். பாட்டுப்பாடிய வாறு தெருக்களில் திரிந்தான்.

அன்று அவன் பாடிய பாட்டில் அளவற்ற சோகம் கலந்து ஒலித்தது.

“காயமே இது பொய்யடா-வெறும்
காற்றடைத்த பையடா!-ஒட்டை
மூங்கில் வைத்து வேய்ந்த வீடடா!”



இந்த அடிகளையே அவன் திரும்பத் திரும்பப் பாடினான்.சில சமயம் சொற்கள் சிதைந்து,அவன் அழுது அரற்றுவது போலவே குரல் ஒலித்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/18&oldid=1143564" இலிருந்து மீள்விக்கப்பட்டது