2

முத்துமாலைக்கு முப்பத்தைந்து அல்லது முப்பத்தாறு வயது இருக்கலாம். கில்லாடித் தோற்றம் எதையும் அவன் முகம் கொண்டிருக்கவில்லை. ரெளடிகள் என்றால் பெரிய வெட்டரிவாள் மீசையோ, ஆட்டுக்கொம்பு மீசையோ, அது போன்ற ஏதோ ஒரு மீசையோ வைத்திருப்பார்கள்; சதா அதை முறுக்கேறும்படி திருகிவிட்டுக் கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான கருத்துக்கு மாறாக விளங்கினான் அவன். அவன் மீசை வைத்துக்கொள்வதில் ஆசை காட்டியதேயில்லை. சிறிது அகன்று பரந்த பெரிய முகம், அலை அலையாய் படிந்திருந்த கரிய கிராப்புத் தலை. சாதாரணமாகச் சிரித்துப் பேசுகிற வேளைகளில் அந்த முகத்தில் இயல்பான ஒரு வசீகரம் மின்னும். அவனது உள்ளம் கடுகடுத்திருக்கிற நேரங்களில் அவன் குடித்து விட்டுக் கத்துகிற சமயங்களில், அந்த முகத்தில் ஒரு கருமையும் கடுமையும் சேர்ந்துவிடும். அப்போது அந்த முகம் அநேகருக்கு பயம் எழுப்புவதாயும், சிலருக்கு வெறுப்பு உண்டாக்குவதாகவும் காட்சி தரும்.

முத்துமாலை நெடிது வளர்ந்த கம்பீரத் தோற்றம் கொண்டவனுமல்லன். சராசரி உயரம்தான். பூசி மெழுகி விட்டது போன்ற மினுமினுப்பான புஷ்டியான உடல். சகஜ வேளைகளில் அவனைப் பார்த்துப் பயப்படுவதற்கு எதுவும் இருப்பதாகவே தோன்றாது. ஆனாலும் பெரும் பான்மையினர் அவனை நினைத்துப் பயப்பட்டார்கள். அவனை விட்டு விலகியே சென்றார்கள். அவன் வழிக்குப் போகாமலிருப்பதே தங்களுக்கு நல்லது என்று எண்ணினார்கள்.

ஊராரின் போக்கை எண்ணுகிறபோதெல்லாம் முத்து மாலைக்கு அவனுடைய இளம்பிராயத் தோழன் காசி அடிக்கடி கூறியதே ஞாபகம் வரும்.

“பெரும்பாலான மனிதர்கள் பயந்தாங்கொள்ளிகள் தான். நெஞ்சுத் தைரியம் இல்லாதவர்கள். ‘அஞ்சி அஞ்சிச் சாவாரிவர். அஞ்சாத பொருள் அவனியில் எதுவுமில்லை’ என்று நெஞ்சு பொறுக்காமல் ஒரு கவி பாடி வச்சானே, அது ரொம்பவும் சொக்குத் தங்கமான உண்மை. அதட்டிப் பேசுகிறவன், அடாவடி பண்ணுகிறவன் கையிலே கம்போ கத்தியோ துாக்குகிறவன் தனி ஒருவனாக இருந்தாலும். அவனைப் பார்த்து பயப்படுறவங்க ரொம்பப் பேரு இருப்பாங்க. நீ எவனையும் வெட்டவும் வேணாம், குத்தவும் வேணாம், கையிலே பெரிய அரிவாளை வச்சுக்கிட்டு. ஆ—ஊன்னு கத்திக்கிட்டுத் திரி. நீ  பெரிய ஹீரோ ஆயிருவே சீக்கிரமே!” என்று காசி சொல்வான்.

காசி முத்துமாலை கூடப் படித்தவன்.இரண்டு பேரும் ஒன்பதாம் வகுப்பு வரை படித்தவர்கள். தங்கராசுவும் அவர்களோடு படித்தவன்தான். ஆனால் அவன் நல்ல பையன்; ஒழுக்கத்துக்கு எடுத்துக் காட்டு. ஒவ்வொரு வகுப்பிலும் நன்னடத்தை (குட் காண்டக்ட்) க்கான பரிசு அவனுக்கே கிடைத்து வந்தது.

“முத்துமாலை ஒழுக்கம், நேர்மை, நியாயம், நல்லவனாக இருக்கிறது என்பதெல்லாம் ஒரு அளவுக்குத்தான் நல்லது. ஜனங்கள் இதுகளை மதிக்கிறதேயில்லை. ஒழுங்காக நடக்கிறவன், நேர்மையா நியாயமா செயல் புரிகிறவங்க, நல்லவங்களா வாழ முயல்கிறவங்களை, மதிக்கிறதை விட, துணிஞ்சவங்சளை, அடாவடித்தனம் பண்றவங்களை, கொள்ளையடிச்சுப் பணம் பண்ணுகிறவங்களை, மத்தவங்களை ஏமாத்தியும் மிதிச்சும் தாங்கள் உயர்வதற்கு வழி பண்ணிக்கிறவங்களைத்தான் ஜனங்க கெட்டிக்காரங்க என்றும்; வாழத் தெரிஞ்சவங்க, சாமர்த் தியசாலிகள், மரியாதைக் காட்டப்பட வேண்டியவங்க என்று நினைக்கிறாங்க. அடக்கம் அமரருள் உய்க்கும் கிறதுக்கு நேரடியான அர்த்தம் உனக்குத் தெரியுமா? ”அடக்கமாக இருப்பது உன்னை இந்த உலகத்திலே வாழ வைக்காது; சீக்கிரமே செத்துப் போகும்படி செய்யும் என்பதுதான்”

இவ்விதம் ஒரு முறை லெக்சரடித்து விட்டு காசி சத்தம் போட்டுச் சிரித்தான். “கடகட என்று சிரித்தானய்யா ராசா தேசிங்குன்னு பாடுவாங்களே, அது மாதிரி சிரிக்கப் பழகுறேன்” என்றும் அவன் சொல்வது உண்டு.

காசி முத்துமாலையை விட இரண்டு வயது மூத்தவன். ஆனாலும் அவன் தனது வயதுக்கு மீறிய அறிவும்,  அனுபவமும் பெற்றவன் போல் பேசுவான். அப்படிப்பட்ட பெரிய ஆட்கள் நிறைந்த சூழலில் அவன் வாழ்ந்து வந்தான். அவன் மூளையும் குறுக்கு வழியில் தீவிரமாக வேலை செய்யும் சக்தி பெற்றிருந்ததாகத் தோன்றியது.

காசி அடிக்கடி சொல்லி வந்தான். “ஏய் ஒரு நாள் பாரு. நான் இந்த வட்டாரத்து ஹீரோவாக மாறுகிறேனா இல்லையா, பார்! ரொம்ப வருசங்களுக்கு முன்னாலே ஜம்புலிங்கம்னு ஒருத்தன் இந்தப் பக்கத்திலே பேரு பெற்றுத் திரிஞ்சான். அவனைக் கொள்ளைக்காரன் என்பாங்க. அது இல்லே. இருட்டு வேளையிலே நீதி பரிபாலனம் புரிஞ்ச ஏழை ராஜா அவன். இருக்கிறவங்க கிட்டெ கொள்ளையடிச்சு இல்லாதவங்களுக்கு உதவி பண்ணின துணிச்சல்காரன். இங்கிலாந்திலே, ராபின் ஹுட்னு ஒருத்தன் இருந்தானே. நாம பாடங்களிலே கூட அவன் பெருமையைப் படிச்சிருக்கோமே? அநியாயக் காரங்களிடம் கொள்ளையடிச்சு ஏழை எளியவங்களுக்கு உதவி பண்ணுவான்னு. அது மாதிரி நானும் ஒரு ராபின் ஹுட் ஆகணும்னு ஆசைப்படுகிறேன். ஜம்புலிங்கம் மாதிரி இந்தப் பக்கத்து ஆசாமிகளை அஞ்சி நடுங்கும்படி செய்யனும்னு விரும்புறேன்...”

முடிவில் அவன் அப்படித்தான் மாறினான். நாட்டுப் புறத்து ஆசாரி எவனோ செய்து கொடுத்த துப்பாக்கி ஒன்றை வைத்துக் கொண்டு அந்த மாவட்டத்தையே கதி கலங்க அடித்தான். நாலைந்து வருடங்கள் எங்கே பார்த்தாலும், காசி, காசி என்ற நாம ஜபந்தான். போலீசார் பெரும் முயற்சியின் பேரில் அவனைப் பிடித்து விட்டார்கள். உரிய தண்டனையும் கொடுத்தார்கள்.

அது வேறு விஷயம். என்றாலும், முத்துமாலைக்கு அவன் பெரிய ஹீரோவாக, ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தான்.  இவ்வளவுக்கும் காசி பெரிய பயில்வான் ஒன்று மில்லை. ஒல்லி, நல்ல உயரம், சாதுவான முகம், மீசை கூடக் கிடையாது.கும்பவில் அவனைத் தனியாக எடுத்துக் காட்டக்கூடிய விசேஷப் பொலிவு எதையும் அவனுடைய நடை உடை பாவனைகள் கொண்டிருக்கவில்லை.

ஆனாலும், ரொம்ப ரொம்பப் பேர்-பலபல ஊர்க்காரர்கள்-அவன் பெயரைச் சொல்லிப் பயப்பட்டுக் கொண்டிருந்தார்கள். காரணம் என்ன? அவன் துப்பாக்கி வைத்திருந்தது மட்டும்தானா? இல்லை. அஞ்சி அஞ்சிச் சாவது மனித சுபாவமாக இருந்தது. பெரும்பாலோரிடம் இல்லாத் நெஞ்சுத் தைரியம்— எதுக்கும் துணிந்த ஒரு எடுப்பான போக்கு காசியிடம் இருந்தது.

இது முத்துமாலையின் மன ஆழத்தில் வேலை செய்து கொண்டிருந்தது.

முத்துமாலை காசி மாதிரி வெகுவாகத் துணிந்த கட்டை இல்லை. தங்கராசு மாதிரி ஒழுக்கம் நிறைந்த நல்லவனுமில்லை. அவனிடம் நற்குண அம்சங்களும், தீயகுண அம்சங்களும் கலந்திருந்தன.

ஒவ்வொருவரிடமும் சில சில இயல்புகள் மேலோங்கிச் செயல் புரிவதற்கு அவரவர் பெற்றோர்களின் பாதிப்பு, சூழ்நிலை பாதிப்பு, சுற்றுப் புற மனிதர்களின் தாக்கம், சகவாச தோஷம் எல்லாம் காரணங்களாகின்றன. அவரவர்களுடைய மனப் போக்கும் ஆசைகளும் பல்வேறு உணர்ச்சிகளும் துரண்டுதல்களாகின்றன.

முத்துமாலையின் அப்பா பூவுலிங்கம்பிள்ளை மகனிடம் பிரியமோ பாசமோ கொண்டிருந்ததில்லை. சில சமயங்களில் அவர், அவனை வெறுக்கவும் செய்தார். அவ்வப்போது, காரணத்தோடும் காரணம் இல்லாமலும் அவர் அவனை அடிப்பது உண்டு. அவன் படித்துக் கொண்டிருக்கிற போது ‘நீ படிச்சுப் பாட்டைத் தொலைச்சே! கடைக்குப் போயி இதை வாங்கிட்டு வா’ என்று துரத்துவார். இதனால் எல்லாம் முத்துமாலையின் உள்ளத்தில் ஒரு கசப்பு வளர்ந்து வந்தது.

எனவே, அவனுடைய பதினொன்றாவது வயதில் தந்தை இறந்து போனதும், அவன் துக்கம் கொள்ளவில்லை. ‘தொல்லை போய்த் தொலைந்தது’ என்று அவனுடைய அடி மனசில் ஒரு ஆனந்தமே ஏற்பட்டது.

பூவுலிங்கம்பிள்ளை தான் நினைத்த மூப்பாக “மனம் போனபடி எல்லாம் வாழ்ந்து நாட்களை ஒட்டினார். வீடும் வயல்களும் இருந்தன. அப்படி வாழ்வதற்கு அவை நன்கு உதவின கவுரவமாக வீட்டிற்கு வரவழைத்துக் குடித்தார்.விரும்பிய பெண்களை சேர்த்துக் கொண்டார். மனைவியிடம் சண்டை போட்டார். சமாதானமாகவும் இருந்தார்.

முத்துமாலையின் தாய் வடிவம்மாள் அவனிடம் அளவுக்கு அதிகமான அன்பு செலுத்தி அவனைக் கெடுத்தாள். ஒரே பையன். அந்தச் செல்லம். தந்தை அவனைச் சீராட்டவில்லையே என்ற ஆதங்கம் வேறு.

அப்பா இறந்த மூன்றாவது வருடமே பையன் “ஏட்டைக்கட்டி இறைப்பிலே சொருகிவிட்டான்” என்று சொல்ல வேண்டும். அவன் படித்த காலத்தில் கூட ஏடுகள் இல்லாமல் போயிருந்ததால் புத்தகங்களையும் நோட்டுக்களையும் வெந்நீர் அடுப்பில் போட்டுவிட்டான் என்று கூறலாம் முத்துமாலை அப்படித்தான் செய்தான்.

அவர்களுடைய வயலை ‘மேல் பார்வை’ பார்த்து வந்த பெரியப்பா பாபநாசம் பிள்ளை கள்ளக்கணக்குகள் எழுதியும், தில்லுமுல்லுகள் பண்ணியும் ஏமாற்றிவந்தார். வடிவம்மாள் பொம்பிளை, முத்துமாலை சின்னப்பயல்  என்கிற தைரியம்தான். அவர் பெயரே பாபநாசம் பிள்ளை என்றிருந்ததனால் புதிய புதிய பாபங்கள் செய்வதற்கு அவர் தயங்கவில்லை. பூவுலிங்கம் உயிரோடிருந்த காலத்தில் ‘சீட்டுக்கட்ட’ என்றும்,வேறு சிறுசிறு காரணங்கள் சொல்லியும் அவர் திருப்பிக் கொடுப்பதாக வாங்கியிருந்த ரொக்கப் பணத்தை ‘ஏப்பம் போட்டு விட்டார்.’ அப்படி எதுவும் பணம் தரவேண்டியதிலை என்றும்,சீட்டு பாக்கிவகையில் வடிவுதான் முந்நூறு ரூபாய் வரை தர வேண்டும் என்றும் சொன்னார். ஒவ்வொரு பூவின் போதும், நெல் சரியாக விளையவில்லை என்று பொய்க் கணக்குக் கூறி அவர் லாபம் கண்டுவந்தார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அவர் வடிவைப் பார்த்துப் பல்லிளித்து, சாடைமாடையாக ஏதோ சொன்னதை, முத்துமாலை கேட்டு விட்டான். அவன் வீட்டில் இல்லை என்ற நினைப்பில்தான் அவர் அவ்வாறு சாடை பேசத் துணிந்தார். ஆத்திரம் கொண்ட முத்துமாலை அரிவாளும், கையுமாக வெளியே வந்தான். “வேய், நீரு பெரியப்பாவா இருந்தாலும் சரி, அதுக்கு மேலே பெரியவரா இருந்தாலும் சரி, உம்மை இங்கேயே வெட்டிப் பொலியிட்டிருவேன். சரியான உத்திராட்சப் பூனை நீ. ஒண்ணாம் நம்பர் ஆஷாட பூதி, பணத்துக்கு நாமம் போட்டீரு, பூ தோறும் நெல்லை முழுங்கினிரு. கள்ளக் கணக்கெழுதி, ரூபா வேறே கேட்டிரு இப்ப இது மாதிரிப் பண்ண ஆரம்பிச்சிருக்கீரு. உம்மை நாசம் பண்ணினா, அது பாபமே ஆகாது”. என்று கத்திக் கொண்டு அவர் முன்னே வந்து நின்றான்.

பெரியவர் வெலவெலத்துப் போனார். நா குழற, “என்னடே, இல்லேடே, என்ன இது...தெரியாத்தனமா” என்று உளறினார். ‘நீ பணம் எதும் தரவேண்டியதில்லே. இனி வயலை எல்லாம் நீயே பார்த்துக்கோ’ என்றார்.  அவனுடைய அம்மா வந்து அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீட்டுக்குள்ளே போயிராவிட்டால் முத்துமாலை அன்றைக்கு பாபநாசம் பிள்ளைக்கு ஏதா இது வெட்டுக்காயம் ஏற்படுத்தி ஒரு பாடம் கற்பித்திருப்பான்.

அன்றிலிருந்து பாபநாசம் பிள்ளை அவன் கண்ணில் படுவதேயில்லை. வெறும் சல்லிப்பயல், உருப்படமாட்டான்! என்று மனசுக்குள்ளும், தனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லத் தவறுவதுமில்லை.

“எப்படி உருப்படுவான்? அப்பன் இருக்கையிலேயே மகனை கவனிக்கிறதில்லை. அதன் பிறகு அம்மாக்காரி செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கிப் போட்டா. அறு தவி வளர்த்த தறுதலைங்கிறது சும்மாவா?” என்று விமர்சனம் வேறு செய்து வந்தார் அவர்.

முரட்டுத் துணிச்சலின் சக்தியை முதல் அனுபவத்திலேயே நன்றாகக் கண்டுகொண்ட முத்துமாலை நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரியலானான். எதுக்கெடுத்தாலும் அரிவாளைத் தூக்கினான். அப்போது அவனுக்கு வயது பதினேழு பதினெட்டுதான் இருக்கும்.

அத்த ஊரில் அவனைப் பாராட்டவும், புகழ்ந்து தூண்டிவிடவும் சிலர் இருந்தார்கள். அவனது சுபாவத்துக்கு ஏற்ற சிநேகிதர்களும் சேர்ந்தார்கள். பொழுது போக்குவதற்குச் சீட்டாட்டம். சும்மா ஜாலியா பக்கத்து டவுனுக்குப் போய் வருவது என்றெல்லாம் பழகி, கள்ளு, சாராயம் என்று எது கிடைத்தாலும் குடிப்பது எனத் தேர்ந்து விட்டார்கள்.

இதற்குள் முத்துமாலையின் பழைய சகா காசி பெரிய ஹீரோ ஆகிவிட்டான். அவனுடைய புகழ்ச்சூடு இவனையும் தொட்டு பதப்படுத்தியது. பெரியப்பா பாபநாசம் பிள்ளையும், மண்டையைப் போட்டு விட்டார்.  அவருடைய புத்திரபாக்கியங்கள் அவரைப் போல் வாயடியும் செயல் சாமர்த்தியமும் பெற்றிராததனாலே, நமக்கு இந்த ஊர் லாயக்குப்படாது என்று தீர்மானித்து. டவுனோடு குடியேறி விட்டார்கள்.

“குப்பை செத்தையை எல்லாம் காற்று வாரிக்கிட்டுத் தான் போகும். போறவங்க போகட்டும்” என்று முத்து மாலை பிரிவுபசாரம் கூறினான். தன்னைப் பழித்த பெரியப்பனை பழிக்குப் பழி தீர்த்து விட்டதாக ஒரு சந்தோஷம் அவனுக்கு.

இதெல்லாம் தங்கராசுக்குத் தெரியாது. முத்து மாலை படிப்புக்குக் கும்பிடு போட்டு விட்டது வரையில் தெரியும். அதன் பிறகு அவன் இந்த ஊரில் இல்லை. படிப்பதற்கு வசதியாக இருக்கும் என்று அவன் நகரத்தில் பள்ளிக்கூட ஹாஸ்டலிலேயே சேர்ந்து விட்டான். பிறகு காலேஜ் படிப்பு. லீவு நாட்களில் ஊருக்கு வந்தாலும், முத்துமாலையைப் பற்றி அவன் அக்கறை கொண்டதில்லை.

படிப்பு முடிந்ததும், அவனுக்குப் பண பலமும் தகுந்த ஆள் பலமும் இருந்ததால், வடக்கே ஒரு ஊரில் நல்ல வேலை கிடைத்துவிடவே ஊரை விட்டுப் போனான். பிறகு நல்ல இடத்தில் கல்யாணம். இப்படியாக அவனுடைய அந்தஸ்து உயர்ந்தது. வெளியூர் சஞ்சாரங்கள் மிகுந்ததால், சொந்த ஊருக்கு வர வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்படவில்லை. அதற்கான காலமும் கிட்டவில்லை.

பலப்பல வருடங்களுக்குப் பிறகு இப்போதான் வந் திருக்கிறான். ஊர் விசேஷங்களை எல்லாம் பற்றிச் சிறிது சிறிதாக விசாரிக்கையில் முத்துமாலையின் பிரதாபமும் தெரிய வந்தது.  தங்கராசு ஊருக்கு வந்த முதல் நாள் ராத்திரி அடிக்கடி கூப்பாடும் விசில் சத்தமும் கேட்டது. அவனுக்கு நல்ல அலுப்பு. எவனோ குடிகாரப் பயல் போக்கத்துத் திரிகிறான் என்று எண்ணிக் கொண்டான்.

மறுநாள் பகலில், பேசிக் கொண்டிருக்கையில், ‘ராத்திரி எவனோ குடிகாரப் பய வீண் கலாட்டா செஞ்சான் போலிருக்கே’ என்றான் அவன்.

அவன் தாய் ‘முத்துமாலைதான் அந்த வரத்து வாறான். அவனுக்கு அது தினசரி வழக்கமாகிப் போச்சு’, என்று சாதாரணமாகச் சொன்னாள்.

தங்கராசு அதிசயித்தான். தினசரியா? இப்படியா பண்ணுவான், முத்துமாலை? யாரு, நம்ம பூவுலிங்கம் மாமாவோட மகனா? அவனுக்கென்ன கேடு வந்தது இப்படி? என்று கேள்விகளை அடுக்கினான்.

“இந்த ஊரிலே அவனைக் கேட்கிறதுக்கு ஆளு யாரு இருக்காங்க? நல்லவங்க, பெரியவங்க, ஆக்கினைகள் செய்யக் கூடியவங்க எல்லோரும் போய் சேந்தாச்சு, சில பேரு இந்த ஊரே நமக்கு வேண்டாம்னு டவுனுக்குப் போயிட்டாங்க. முத்துமாலை ராச்சியம் கொடிகட்டிப் பறக்குது!” என்று அம்மா அறிவித்தாள்.

தங்கராசு கேள்விகள் போட்டு மேலும் சில தகவல்களைத் தெரிந்து கொண்டான். “சே, பெரிய நியூசன்ஸாப் போச்சே, போலீசுக்குச் சொல்லி, அடக்கிப் போட வழி பண்ணலியா யாரும்?” என்று தவித்தான்.

“நம்ம ஊருக்குப் போலீஸ் ஸ்டேஷன் வரவேயில்லை. பத்து மைலுக்கு அப்பாலே இருக்கு போலீசும், ஸ்டேஷனும், அங்கே போய் சொல்லித்தான் என்ன நடந்திரப் போகுதுன்னு யாரும் அக்கறை எடுத்துக்கிடலே!”  “இதுதான் நம்மவங்க கிட்டேயே உள்ள குறை, அநியாயங்களை, அக்கிரமங்களைத் தட்டிக் கேட்கிறது கிடையாது. அதுக்கு யாரும் முன் வருவதும் இல்லே. நமக்கென்ன, யாராவது எப்படியாவது கேட்பாங்க என்று தட்டிக் கழிச்சிடுவாங்க. இல்லாட்டி, இருக்கவே இருக்கு. ஆண்டவன் கேட்பான்கிற வேதாந்தம். இன்னைக்கு நான் முத்துமாலை கிட்டே பேச்சுக் கொடுக்கிறேன்” என்று தங்கராசு பொரிந்து கொட்டினான்.

அம்மா பயந்து விட்டாள். பதறினாள். “ஏ ராசு, உனக்கெதுக்கு வீண் வம்பு? இத்தனை நாள் கழிச்சு வந்திருக்கே. பத்துப் பதினைஞ்சு நாள் இருந்திட்டுப் போப் போறே, விருதாச் சனியனை விலை கொடுத்து வாங்குகிற மாதிரி, வலியப் போயி நீ சிக்குவானேன்? துஷ்டனைக் கண்டால் தூர விலகுன்னு பேரு!” என்றாள்.

“இப்படிப் பழமொழிகளுக்கும் தத்துவ உபதேசங்களுக்கும் குறைச்சல் இல்லே!” என்று முனகினான் மகன். பிறகு வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை.

முன்னிரவில் சீட்டி ஒலி எழுந்ததுமே, “முத்துமாலை கிளம்பி விட்டான்” என்று சொன்ன அம்மா மகனுக்கு எச்சரிக்கை விடுத்தாள். ராசு, அவன் எக்கேடும் கெடு தான். ஊரிலே யாருக்கும் இல்லாத அக்கறை உனக்கு எதுக்கு? நீ வெளியே தலை காட்ட வேண்டாம். அவன் கிட்டே பேச்சுக் கொடுக்கவும் வேண்டாம். சொல்லிட் டேன், சொல்லிட்டேன்”

அவன் சரி, சரி, என்று தலையசைத்தான். எட்டு மணிக்கே படுக்கவும் செய்தான். ஆனால் தூக்கம் எங்கே வந்தது?

அம்மா நன்றாக தூங்கலானாள். லேசு லேசாக குறட்டை கூட வந்தது அவளுக்கு. ரொம்ப நேரம் ஆன பிறகு, முத்துமாலையின் சத்தம் மறுபடியும் நெருங்கிவந்த போது, தங்கராசு எழுந்து திண்ணையில் காத்திருந்து, அவன் கவனத்தைக் கவர்ந்தான். பேசினான். பதிலும் பெற்றான்.

ஆனாலும், அவனுடைய ஆச்சரியம் எங்கே குறைந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=இருட்டு_ராஜா/2&oldid=1143545" இலிருந்து மீள்விக்கப்பட்டது