இறுமாப்புள்ள இளவரசி/பன்னிரண்டு காட்டு வாத்துகள்

7. பன்னிரண்டு காட்டு வாத்துகள்

முன்னொரு காலத்தில் ஒரு வேந்தனும் இராணியும் இன்பமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தனர். ஆனால் ஒரு பெண்கூடப் பிறக்க வில்லை. நாம் எப்பொழுதும் இல்லாதவைகளுக்காக ஏங்குவோம். இருப்பவைகளைக்கொண்டு திருப்தி அடைய மாட்டோம், அல்லவா? இது போலவேதான் இராணியும் பெண்ணில்லாக் குறையை எண்ணி வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள் அவள், சாளரத்தின் வழியாக வெளியேயிருந்த மைதானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அங்கே பனி, தூய வெண்மையான கட்டியாக உறைந்திருந்தது. செக்கச் செவேலென்று சிவந்திருந்த ரோஜா மலர்ச்செடியருகில் ஒரு காகம் அமர்ந்திருந்தது. இவைகளை எல்லாம் கண்ட இராணிக்கு ஒர் எண்ணம் உதித்தது. எனக்கு ஒரு மகள் இல்லையே! இந்தப் பனிக்கட்டி போன்ற வெண்மையான உடலும், ரோஜாவைப் போன்ற சிவந்த கன்னங்களும், இந்தக் காகத்தைப் போன்ற கரிய கூந்தலுமுள்ள ஒரு பெண் எனக்குப் பிறந்தால் போதும், என் பன்னிரண்டு பிள்ளைகளையும் அவளுக்கு ஈடாகக் கொடுத்துவிடத் தயாராயிருப்பேன் ' என்று அவள் சொல்லிக்கொண்டாள்.

அவள் இவ்வாறு சொன்னவுடனேயே, திடீரென்று அவள் உடல் நடுங்கிற்று: பயத்தால் அவள் நிலைகுலைந்து நின்றாள். ஒரு கன நேரம் கழியுமுன், கடுமையான தோற்றத் துடன் கூடிய ஒரு கிழவி அங்கே அவள் முன்பு வந்து நின்றாள். "தவறான ஆசையினால் நீ இவ்வாறு விரும்பி விட்டாய். உன்னைத் தண்டிப்பதற்காக உன் விருப்பம் நிறைவேறும்படி செய்கிறேன். நீ எண்ணியபடியே உனக்கு ஒரு மகள் பிறப்பாள். ஆனால், அவள் பிறந்த அன்றே நீ உன் மாற்றக் குழந்தைகளை இழந்துவிடுவாய் " என்று சொல்லிவிட்டு, அவள் உடனே மறைந்து போய்விட்டாள்.

அந்தப்படியேதான் பின்னால் நடந்தது. இராணி தன் பேறுகாலத்தின்போது, தன் குழந்தைகள் அனைவரையும் ஒரு பெரிய அறையில் இருக்கும்படி செய்து, அறையைச் சுற்றிக் காவலுக்காக ஆள்களையும் நிறுத்தி வைத்திருந்தாள். ஆனால், அவளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடனே, அந்தக் கணத்திலேயே, மற்றைக் குழந்தைகள் இருந்த அறைக்குள்ளே சிறகுகளைத் தட்டும் ஒசையும், பறவைகள் ' கூ,கூ,கூ' என்று கூவும் ஒலியும் கேட்டன. சிறிது நேரத்திலே பன்னிரண்டு இளவரசர்களும் வாத்துகளாக மாறி, திறந்திருந்த சாளரங்களின் வழியாக வெளியே பறந்து சென்றுவிட்டார்கள். அருகிலேயிருந்த வனத்தை நோக்கி அவர்கள் பறந்து சென்றது, பல அம்புகள் ஆகாயத்தில் வேகமாகப் பாய்வன போலிருந்தது. இதை அறிந்த வேந்தன் தன் மைந்தர்களை இழந்ததற்காக மிகவும் வருந்தினான். இதற்கு மூல காரணம் இராணிதான் என்பது தெரிந்திருந்தால் அவன் கோபத்தால் கொதித்திருப்பான்.

புதிதாய்ப் பிறந்திருந்த இளவரசியை எல்லோரும் பணி ரோஜா என்று அழைத்து வந்தனர். பனிக்கட்டி போலவும், ரோஜா இதழ்கள் போலவும், அவள் உடல் வெண்மையும் சிவப்பும் கலந்திருந்ததால் அந்தப் பெயரே அவளுக்குப் பொருத்தமென்று அவர்கள் கருதினர். எல்லோரும் அவளிடத்தில் அன்பும் ஆதரவும் காட்டி வந்தனர். அவளுக்குப் பன்னிரண்டு வயதாயிற்று. கூட விளையாடுவதற்கு ஒரு குழந்தைகூட இல்லாமலிருந்ததால், அவள் தன் தனிமைக்காக வருந்தினாள்; தன் சகோதரர்களைப்பற்றி எண்ணினாள்; அவர்கள் இறந்து போய்விட்டதாகவே அவள் இவ்வளவு காலமும் கருதியிருந்தாள். அதன் உண்மையென்ன என்பதை அன்னையிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வத்துடன், அவள் இராணியிடம் சென்று கேட்டாள். அவளுடைய கேள்விகளை இராணியால் தாங்க முடியவில்லை. அவளும் தன் உள்ளத்தில் இத்தனை ஆண்டுகளாக உறுத்திக்கொண்டிருந்த இரகசியத்தை இளவரசியிடம் சொல்ல வேண்டுமென்று சமயத்தை எதிர்பார்த்திருந்ததால், முந்தைய வரலாற்றை விளக்கமாகச் சொல்லிவிட்டாள். அவ்வளவு தான், இளவரசி உடனே ஒரு முடிவு செய்துகொண்டு, அன்னையிடம் அதை அறிவித்தாள் : "என் பொருட்டாக என் அருமைச் சகோதரர்கள் காட்டு வாத்துகளாக மாறியுள்ளனர். என்னால் அவர்கள் எத்தனையோ இடர்களை அனுபவித்து வருகின்றனர்; இனி ஒருநாளைக் கூட வீணாக்காமல் நான் அவர்களைத் தேடிப் போகிறேன்.


எப்படியும் அவர்களைக் கண்டு மீண்டும் பழைய உருவங்களை அடையச் செய்கிறேன்!”

அரசனும் அரசியும் அவளைச் சுற்றி மிகுந்த கட்டும் காவலும் அமைத்திருந்தும் ஒன்றும் பயன்படவில்லை. மறுநாள் இரவு அவள் அரண்மனையிலிருந்து வெளியேறிப் பக்கத்திலிருந்த வனத்திலே சுற்றி அலைந்துகொண்டிருந்தாள். அன்றிரவுமுதல் மறுநாள் மாலைவரை அவள் நிற்காமல் நடந்துகொண்டேயிருந்தாள். அவள், கையிலே சில பணியாரங்கள் கொண்டுவந்திருந்தாள். காட்டிலே கிடைத்த சில காய்களையும் கொட்டைகளையும் பறித்து வைத்துக்கொண்டாள். இவைகளே அவளுக்கு உணவாயின. அந்திமாலையில் அவள் ஒர் அழகான மரக்குடிசையைக் கண்டாள். அதைச் சுற்றி நேர்த்தியான பூந்தோட்டம் ஒன்றிருந்தது. அதிலே கொத்துக் கொத்தாகச் சில மலர்கள் நறுமணம் வீசிக்கொண்டிருந்தன. சுற்றிலும் ஒரு வேலியும், வேலிக்கு ஒரு திட்டிக்கதவும் இருந்தன. அந்தக் கதவைத் திறந்துகொண்டு, அவள் உள்ளே சென்று வீட்டினுள் எட்டிப் பார்த்தாள். அங்கே ஒரு மேசையின்மேல் பன்னிரண்டு தட்டுகளும், பன்னிரண்டு கரண்டிகளும், உணவுப் பொருள்களும் இருப்பதை அவள் கண்டாள். பக்கத்திலிருந்த ஒரு பலகணி வழியாக அவள் கவனிக்கையில் மற்றொரு பெரிய அறையில் பன்னிரண்டு கட்டில்களும் காணப்பெற்றன. அவள் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, திட்டிக் கதவு திறக்கப்படும் ஒசையும், காலடி ஓசைகளும் கேட்டன. பன்னிரண்டு இளைஞர்கள் உள்ளே வந்தனர். அவர்கள் அவளைக் கண்டதும் அவர்களுள் ஒவ்வொருவர் முகத்திலும் சோகமும் வியப்பும் காணப்பட்டன. அவர்களுள் மூத்தவன், "இளஞ்செல்வி ! இங்கே நீ வரும்படியான துரதிர்ஷ்டம் என்ன நேர்ந்தது உனக்கு?” என்று வினவினான். "ஒரு பெண்ணுக்காக நாங்கள் எங்கள் தந்தையின் அரண்மனையை விட்டு வெளி வந்தோம். அதுமுதல் பகல் முழுதும் நாங்கள் வாத்துகளாகத் திரிந்து வருகிறோம். இது நடந்து பன்னிரண்டு ஆண்டுகளாகிவிட்டன. ஆனால் ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு சபதம் செய்துகொண்டிருக்கிறோம். எங்கள் கையிலே முதலில் சிக்குகிற பெண்னைப் பலி வாங்கிவிடவேண்டும் என்பதே அந்தச் சபதம். ஒரு பாவமும் அறியாத, கள்ளம் கபடமற்ற, அழகியான உன்னை உலகில் வாழவிடாமற்  செய்ய வேண்டியிருப்பது பரிதாபந்தான்; ஆனால், நாங்கள். எங்கள் சபதத்தை நிறைவேற்றித் தீரவேண்டும் !" என்றும் அவன் சொன்னான். "நான் உங்களுடைய ஒரே சகோதரி. இவற்றைப்பற்றியெல்லாம் நேற்றுவரை எனக்கு எதுவும் தெரியாது; தெரிந்தவுடன் நேற்றே நான் உங்களைத் தேடி வெளிக் கிளம்பிவிட்டேன்; உங்களுக்கு என்னாலான உதவியைச் செய்யவே நான் வந்துள்ளேன் !"

இதைக் கேட்டு அவர்களுள் ஒவ்வொருவனும், கைகளைப் பிசைந்துகொண்டு, துக்கத்தோடு தலைகவிழ்ந்து தரையைப் பார்த்துக்கொண்டே நின்றான். அப்பொழுது பூமியில் ஒர் ஊசி விழுந்தாலும் ஒசை கேட்கும், அவ்வளவு அமைதி நிலவியிருந்தது. சிறிது நேரத்திற்குப் பின் மூத்தவன், “எங்கள் சபதத்தைத்தான் சபிக்க வேண்டியிருக்கிறது! இப்பொழுது என்ன செய்யலாம்” என்று கூறினான்.

"என்ன செய்யலாம் என்பதை நான் சொல்கிறேன்!” என்று அங்கே திடீரென்று தோன்றிய கிழவி ஒருத்தி பேசத் தொடங்கினாள் : “உங்களுடைய தீய சபதத்தை உடைத்தெறியுங்கள் யாராவது அவளிடம் கை நீட்டினால், உங்களைக் கோரைப் புற்களாக நான் மாற்றிவிடுவேன் ! நான் உங்களுக்கும் அவளுக்கும் ஒருங்கே நன்மையை நாடுகிறவள். அவள் மூலந்தான் உங்களுக்கு விமோசனம் பிறக்கவேண்டும். இந்த வனத்திற்கு வெளியேயுள்ள சதுப்பு நிலத்தில் படர்ந்துள்ள பாசியிலிருந்து நூல் நூற்று, அந்த நூலால் உங்களுக்காகப் பன்னிரண்டு சட்டைகள் பின்னி முடிக்க வேண்டும்; இந்த வேலைகள் அனைத்தையும் அவளே தன் கைகளால் செய்யவேண்டும். பின்னி முடிக்க ஐந்தாண்டுகள் ஆகும்; அந்தக் காலம் முழுதும் அவள் ஒருமுறைகூட வாய் திறந்து பேசக்கூடாது, சிரிக்கக்கூடாது, அழவும் கூடாது. இவற்றுள் ஒன்றில் ஒருமுறை அவள் தவறிப்போனாலும் நீங்கள் உங்கள் ஆயுள் முடியும்வரை பகல் முழுதும் வாத்துகளாகவே இருக்கவேண்டியதுதான் ! ஆகையால், உங்களுடைய சகோதரியைக் காத்துக்கொள்ளுங்கள். அவளால்தான் உங்களுக்குக் கதிமோட்சம் கிடைக்கும் !” இதைக் கூறியபின் கிழவி அங்கே காணப்படவில்லை. உடனே இளவரசர்களிடையே பெரும் போட்டி ஏற்பட்டுவிட்டது. தங்களுடைய அன்புத் தங்கையை யார்  முதலிலே முத்தமிட்டு வாழ்த்துவது என்பதே அப்போட்டிக்குக் காரணம்.

மூன்று ஆண்டுகளாக இளவரசி பாசியெடுத்து வந்து, நூல் நூற்று, அந்நூலைச் சட்டைகளாகப் பின்னுவதிலேயே கண்ணும் கருத்துமாயிருந்தாள். மூன்று ஆண்டுகளில் அவள் எட்டுச் சட்டைகள் தயாரித்துவிட்டாள். அந்தக் காலம் முழுதும் அவள் ஒருமுறைகூடப் பேசியதில்லை, சிரித்ததில்லை, அழுததுமில்லை. எதை அடக்கிக்கொண்டாலும் அழுகையை அடக்கிக்கொள்வதுதான் அவளுக்கு மிகவும் கடினமாயிருந்தது.

ஒருநாள் அவள் தோட்டத்தில் அமர்ந்து நூல் நூற்றுக்கொண்டிருக்கையில், எங்கிருந்தோ ஒரு வேட்டைநாய் அங்கு ஓடிவந்து, அவளுடைய தோள்களில் கால்களை வைத்துக்கொண்டு, அவள் நெற்றியையும் தலையையும் நாவினால் நக்கிற்று. அடுத்த நிமிடம் எழில்மிகுந்த இளைஞனான ஒர் அரசன், குதிரைமீது அமர்ந்துகொண்டு தோட்டத்தருகில் வந்து, திட்டி வாசல்பக்கம் நின்றுகொண்டு, தன் தொப்பியைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு, உள்ளே வரலாமா என்று அனுமதி கேட்டான். இளவரசி தலையை அசைக்கவும், அவன் உள்ளே நுழைந்தான். அங்கே அவன் வந்ததற்காகப் பன்முறை மன்னிப்புகள் கோரினான், அவளிடம் பல கேள்விகளும் கேட்டான். ஆனால், அவள் பேசாமடந்தையாகவே இருந்துவிட்டாள். அவளைக் கண்டது முதலே அவன் அவளிடம் காதல் கொண்டுவிட்டான். தான் பக்கத்திலிருந்த இராஜ்ஜியத்தின் அரசனென்றும், அவளை மணக்க விரும்புவதாகவும், அவள் தன்னுடன் வந்து தன் இராணியாய் இருக்க வேண்டுமென்றும் அவன் கூறினான். அவளுக்கும் அவனிடம் காதல் நிறைந்திருந்தது. ஆனால், அவளுடைய சகோதரர்களை எப்படி விட்டுச்செல்வதென்று அவள் கலங்கினாள். பல முறை இயலாதென்று காட்டத் தலையை ஆட்டினாள். ஆனால், இறுதியில் அவள் இசைவு காட்டித் தன் அன்புக்கரத்தால் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டாள். அவளுடைய சகோதரர்களும், அவர்களைக் காத்துவந்த வனதேவதையும் எப்படியும் தான் இருக்கும் இடத்தைக் கண்டுகொள்வார்களென்று அவள் நம்பினாள். அவள் புறப்படுவதற்கு முன்னால் அவள் சேர்த்து வைத்திருந்த பாசியை ஒரு சட்டையிலும்,  எட்டுச்சட்டைகளைகளை ஒரு கூடையிலும் எடுத்து வைத்தாள். அரசனின் வேலையாள்கள் அவைகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப் பெற்றனர். அவள் குதிரைமீது ஏறி அரசனுக்கு முன்புறம் அமர்ந்துகொண்டாள்.

போகும் வழியிலெல்லாம் அரசனுக்கு ஒரு கவலைமட்டும் அடிக்கடி தோன்றிக்கொண்டிருந்தது. அரண்மனையிலிருந்த அவனுடைய மாற்றாந்தாய் அவன் ஒரு பெண்ணை அழைத்துச் செல்வதை ஏற்றுக் கொள்வாளா என்பதுதான் அந்தக் கவலைக்குக் காரணம். ஆயினும், அங்கு அவனே எல்லா அதிகாரங்களையும் பெற்றிருந்ததால் அரண்மனையை அடைந்ததும், திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்தான். பிஷப்பு வரவழைக்கப் பெற்றார். இளவரசிக்குப் புத்தாடைகளும் அணியிழைகளும் தயாரிக்கப்பெற்றன. விவாகம் விமரிசையாக நடந்தேறியது: மணமகள் வாய்மொழியாகச் சொல்ல வேண்டியவைகளைச் சாடைகள்மூலம் தெரிவித்துக்கொண்டாள். அவள் உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவள் என்பதை அரசன் அவளுடைய நடை, உடை, பாவனைகளிலிருந்து எளிதில் தெரிந்துகொண்டான். அவ்விருவரையும் போல ஒத்த மனமும் அன்பும் கொண்டிருந்தவர்களைக் காண்பதரிது.

இளவரசி வந்ததுமுதல், தீய சிந்தை கொண்ட மாற்றாந்தாய் கேடு விளைக்க வாய்ப்புகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இளவரசி வனத்திலே எவனோ ஒரு வேடனின் மகளென்று அவள் கதை கட்டிவிட்டாள். ஆனால், அரசன் ஏமாறவில்லை. நாளடைவில் இளவரசி கருவுற்று, அழகிய ஒர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அக்குழந்தை பிறந்ததிலிருந்து அரசன் எல்லையற்ற ஆனந்தமடைந்தான். அக்குழந்தையைத் தொட்டிலிலிட்டதும், அதற்குப் பெயர் சூட்டியதும் போன்ற வைபவங்களெல்லாம் மாற்றாந்தாய்க்கு வயிற்றெரிச்சலை அதிகமாக்கிவிட்டன. அவள் பாலில் ஒருவகை மதுவை ஊற்றி, இளவரசிக்குக் கொடுத்து அவளை நன்றாகத் தூங்க வைத்தாள். குழந்தையை எப்படித் தொலைக்கலாமென்று அவள் பல வகையாக நினைத்து நினைத்துப் பார்த்தாள். அந்த நேரத்தில், வெளியிலே தோட்டத்தில் ஒர் ஒநாய் கடைவாயை நக்கிக்கொண்டு, அவளையே பார்த்தவண்ணம் நின்றுகொண்டிருப்பதை அவள் கண்டாள். அப்பொழுது இளவரசி தன் செல்லக் கருவூலமான குழந்தையைக்  கையால் அணைத்துக்கொண்டிருந்தாள். அவள் கையை எடுத்துத் தள்ளிவிட்டு, மாற்றாந்தாய் வேகமாகக் குழந்தையைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டாள். குழந்தை கீழே விழுமுன்னே வெளியே காத்திருந்த ஒநாய் அப்படியே அதை வாயினால் கெளவிக்கொண்டு, ஒரு நொடியில் தோட்டத்தின் வேலியைத் தாண்டி வெளியே ஒடிவிட்டது. கொடுமனம் படைத்த மாற்றாந்தாய், தன் விரல்களை ஊசியால் குத்தி உதிரமெடுத்து, அதை உறங்கிக்கொண்டிருந்த இளவரசியின் வாயைச் சுற்றித் தடவி வைத்தாள்.

அரசன் அப்பொழுதுதான் வேட்டையிலிருந்து திரும்பி அரண்மனைக்குள் வந்துகொண்டிருந்தான். அவனை அவள் அழைத்து, நீலிக் கண்ணிர் வடித்து, அழுதுகொண்டே கைகளைப் பிசைந்து நின்றாள். நேராக அவனை இளவரசியின் படுக்கையறைக்கு அழைத்துச் சென்றாள்.

அங்கே இளவரசியின் அவனுடைய பட்டத்து இராணியின் வாயில் உதிரத்தைக் கண்டான். அவள் பக்கத்தில் குழந்தையையும் காணவில்லை ! பழிபாவத்திற்கு அஞ்சாத பழைய இராணியின் பேய்த் தன்மையைச் சொல்வதா, அரசனும் இளவரசியும் அடைந்த துக்கத்தையும் நடுக்கத்தையும் குழப்பத்தையும் சொல்வதா, அல்லது தன் இராணியைப்பற்றி அரசன் அடைந்த வெறுப்பையும் இழிவான எண்ணத்தையும் சொல்வதா, அல்லது இளவரசி நெஞ்சிலே தேங்கி நின்ற சோகத்தை அழுது வெளியிடவோ, வாய் திறந்து பேசவோ வழியின்றித் துடித்ததைச் சொல்வதா? எதைச் சொல்வதானாலும் மணிக்கணக்காக ஆகும். அரசன் ஒரு யுக்தி செய்தான். அன்னையிடம் இந்த விஷயம் வெளியில் யாருக்கும் தெரியக்கூடாதென்றும், இராணி குழந்தையைச் சாளரத்தின் பக்கம் வைத்துக் கொண்டிருக்கையில் குழந்தை தவறி வெளியே விழுந்து விட்டதென்றும், அதை ஏதோ வனவிலங்கு தூக்கிச் சென்று விட்டதென்றும், அவள் வெளியே தெரிவிக்க வேண்டுமென்றும் அவன் கண்டிப்பாகச் சொல்லிவைத்தான். அவளும் அப்படியே செய்துவருவதாகச் சொல்லிவிட்டு, பின்னர்த் தானும் அரசனும் படுக்கையறையிலே கண்ட காட்சியையே இரகசியமாக வெளியிட்டுவந்தாள்.

நாடு முழுவதிலும் எந்த இராஜ்ஜியத்திலும் இளவரசியைப் போலத் துக்கமடைந்தவர் எவருமிலர்.  குழந்தையைப் பறிகொடுத்த சோகம். கணவனின் பழிப்பினால் ஏற்பட்ட வேதனை - இரண்டும் சேர்ந்து அவளுடைய நெஞ்சே வெடித்துவிடும் போலாகிவிட்டது. அந்த நிலையிலும் அவள் வாயைத் திறக்கவில்லை, அழவுமில்லை; சதுப்பு நிலப் பாசியை நூற்பதையும், சட்டைகள் பின்னுவதையும் நிறுத்தவுமில்லை. அடிக்கடி பன்னிரண்டு வாத்துகளும் அரண்மனைத் தோட்டத்திலுள்ள மரங்களிலே வந்து அமர்ந்துகொண்டும், மெல்லிய மணலில் நின்றுகொண்டும் அவளுடைய அறையின் சாளரங்களைக் கவனித்துக்கொண்டிருப்பது வழக்கமாயிருந்தது. ஆதலால், அவள் விரைவிலே பின்னல் வேலையை முடித்து, எல்லாச் சட்டைகளையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதிலேயே கருத்தாயிருந்தாள். மற்றோர் ஆண்டும் முடிந்துவிட்டது. அப்பொழுது பன்னிரண்டாவது சட்டையும் முடிவடைவதற்கு ஒரு கை மட்டும் பின்ன வேண்டியிருந்தது. அந்நிலையில் அவளுக்குப் பேறுகாலம் நெருங்கிற்று. இரண்டாவது குழந்தையாகத் தங்கச்சிலை போன்ற ஒரு பெண்ணை அவள் பெற்றெடுத்தாள்.

இந்தத் தடவை அரசன் மிகவும் எச்சரிக்கையாய் இருந்தான். இளவரசியையும் குழந்தையையும் ஒரு கண நேரங்கூடப் பிரியாமல் நின்று கவனித்துக் காவல் செய்வதற்கு அவன் தக்க ஏற்பாடு செய்தான். ஆனால், இருண்ட மனம் கொண்ட பழைய இராணி, அவனுடைய காவலையும் தகர்த்து, தன் துரோகத்தைச் செய்ய முன் வந்தாள். காவலர் சிலருக்கு இலஞ்சம் கொடுத்து, மற்றையக் காவலர்களை உறங்கச்செய்து, இளவரசிக்கும் முன்போல் மது கலந்த பாலைக் கொடுத்துக் கிறங்க வைத்துவிட்டாள். குழந்தையைத் தூக்கிச் சென்று கொன்றுவிடும்படி அவள் ஒரு காவலனையே ஏற்பாடு செய்தாள். அவன் தூக்கி வெளியே கொண்டுவருகையில், அவள் தோட்டத்தில் எட்டிப் பார்த்தாள். அங்கே முன்னால் வந்த ஒநாயே வந்து நின்று, கடைவாயை நக்கிக்கொண்டு, அவளை ஏறிட்டுப் பார்த்தது. வேலை எளிதாகிவிட்டதென்று, அவள் குழந்தையைக் காவலனிடமிருந்து வாங்கி, ஒநாயிடம் வீசி விட்டாள். முன்போலவே ஒநாய் குழந்தையைக் கெளவிக் கொண்டு ஓடிவிட்டது. பின்னர் அவள் தன் விரல்களில் ஊசியால் குத்தி, வடிந்த உதிரத்தை இளவரசியின் வாயைச் சுற்றித் தடவிவிட்டு, வெளியே வந்து ஊளையிட்டும் கத்தியும் அலறியும் அரசனையும் அரண்மனையிலிருந்த பலரையும் வரச்செய்து, இளவரசியின் அறை முழுதும் ஆள்கள் கூடி நிற்கும்படி செய்துவிட்டாள். எல்லோரும், இளவரசியே தன் குழந்தையை அப்பொழுதுதான் விழுங்கியிருப்பாளென்று உறுதியாக எண்ணினார்கள்.

ஏழை இளவரசி என்ன செய்வாள்! இனித் தன் உயிர் தரித்திராது என்று அவள் கருதினாள். எதையும் சிந்தித்துப் பார்க்கும் ஆற்றலைக்கூட அவள் மனம் இழந்துவிட்டது. அவளுக்கு ஆண்டவனைக்கூடத் தொழத் தோன்றவில்லை. அடித்துவைத்த கற்சிலை போல், அவள் இருந்த இடத்திலிருந்து பெயராமல், பன்னிரண்டாவது சட்டையில் எஞ்சியிருந்த ஒரு கையைப் பின்னிக்கொண்டிருந்தாள்.

அரசன், அவளை வனத்திலே, தான் முன்பு கண்ட வீட்டுக்கே அழைத்துச் சென்று, அங்கே விட்டுவர எண்ணினான். ஆனால், அவனுடைய மாற்றாந்தாயும் மந்திரிகளும் நீதிபதிகளும் அதற்கு ஒப்பவில்லை. அன்று பகல் மூன்று மணிக்கு அவளை ஒரு மரக்கட்டையிலே கட்டித் தீ வைத்துக் கொன்றுவிடவேண்டுமென்று அவர்கள் முடிவு கூறிவிட்டனர். அந்த நேரம் நெருங்கி வந்ததும், அரசன் அரண்மனையின் ஒரு மூலையிலே போய் ஒதுங்கியிருந்துவிட்டான். அந்த நேரத்தில் அவன் அடைந்த வேதனையைப் போல் அவனுடைய இராஜ்ஜியத்திலே எவரும் அடைந்திருக்கமாட்டார்கள்.

கொலையாளிகள் வந்து இளவரசியை அழைத்துச் செல்லும் பொழுது, அவள் தான் வைத்திருந்த சட்டைகளையெல்லாம் கைகளிலே எடுத்துக்கொண்டு சென்றாள் கடைசிச் சட்டையில் இன்னும் சில பின்னல்கள் மட்டும் போடவேண்டியிருந்தன. மரக்கட்டையில் அவளைக் கட்டிய நேரத்திலும் அவளுடைய கரங்கள் பின்னல் வேலையை நிறுத்தாமல் வேகமாகச் செய்துகொண்டேயிருந்தன. கடைசிப் பின்னலையும் அவள் போட்டு முடித்தவுடன், அவள் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணிர் அந்தச் சட்டையின்மீது விழுந்தது. ஒரு கண நேரத்திற்குப்பின் அவள் துள்ளியெழுந்து, "நான் நிரபராதி! என் கணவரை இங்கே அழையுங்கள் " என்று வாய் திறந்து கூவினாள். கொலையாளிகள் தங்கள் வேலையை நிறுத்திக் கொண்டனர். ஆனால், அவர்களுள் தீயோன் ஒருவன், அவள் நின்றுகொண்டிருந்த கட்டைகளின் ஒரு மூலையிலே தீயைப் பற்றவைத்துவிட்டான். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டு நின்றனர். கண் மூடித் திறப்பதற்குள் எங்கிருந்தோ பன்னிரண்டு காட்டுவாத்துகள் அங்கே பறந்து வந்து, கட்டைகளைச் சுற்றி நின்றுகொண்டன. உடனே இளவரசி, கையிலிருந்த பன்னிரண்டு சட்டைகளையும் ஒவ்வொரு வாத்தின்மீது ஒன்றாக வீசியெறிந்தாள். மறு விநாடியில் வாத்துகள் நின்ற இடங்களில் பன்னிரண்டு வீர இளைஞர்கள் எழுந்து நின்றனர்! சிலர் மேலே ஏறிச் சென்று, தங்கள் சகோதரியின் உடல்மீது சுற்றியிருந்த கட்டுகளை அவிழ்த்தனர். அப்பொழுது அவர்களுள் மூத்தவன் ஒரு கட்டையைத் தூக்கி அவசரமாகத் தீ வைத்தவன் மண்டையிலே ஓங்கி அடித்தான். அந்தக் கொலையாளிக்கு இரண்டாவது அடியிலேயே சுரணையில்லாமற் போய்விட்டது. அவன் அப்படியே சுருண்டு விட்டான்.

சகோதரர்கள் இளைய இராணியைத் தேற்றிக் கொண்டிருக்கையில், அரசனும் அங்கே விரைந்து வந்து கொண்டிருந்தான். அப்பொழுது அழகிய உருவத்தோடு ஒரு மாதரசியும் அங்கே வந்தாள்; அவள் ஒரு கையில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு, மற்றொரு கையில் அந்த நாட்டின் இளவரசனைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தாள். ஆனந்தத்தால் எல்லோரும் கண்ணீர் பெருக்கினர்; களித்துச் சிரித்தனர்; ஒருவரையொருவர் கட்டிக்கொண்டு முத்தமிட்டனர். ஒநாயாக வந்து இரண்டு குழந்தைகளையும் கெளவிக்கொண்டு போய் அவைகளைக் காப்பாற்றி வைத்திருந்து, திரும்பக் கொண்டுவந்து சேர்த்த வன தேவதைக்கு நன்றி சொல்லக்கூட நேரமில்லை; அந்த மாதரசி ஒரு நொடியில் மாயமாய் மறைந்துவிட்டாள். அன்று அரண்மனையே இன்ப வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது எனலாம். இதுவரை உலகிலே தோன்றிய எந்த அரண்மனையிலும் அத்தகைய ஆனந்தத் தாண்டவத்தை யாரும் கண்டிருக்க முடியாது.

— — — —