இறைவர் திருமகன்/சைத்தான் நடத்திய தேர்வு

4. சைத்தான் நடத்திய தேர்வு

ஜோர்டான் ஆற்றங்கரையிலே ஓர் இளைஞன் நின்று கொண்டிருந்தான்.

"தூய்மைப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் விண்ணுலகின் நல்லரசு உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது" என்று அந்த இளைஞன் கூவினான். அவன் குரல் எட்டுத் திசையிலும் பரவியது. சிற்றூர்களிலிருந்தும் நகர்களிலிருந்தும் மக்கள் வந்து குவிந்தார்கள். ஏழைகளும், செல்வர்களும், மீன்பிடிப்பவர்களும், வரி வசூலிப்பவர்களும், ரோமானியப் போர் வீரர்களும் ஜெருசலம் நகரத்து மதவாதிகளும் இந்தப் புதிய போதகனின் சொற்களைச் செவிமடுக்க வந்து கூடினார்கள்.

அந்த இளைஞன் ஒட்டகத்தின் மயிரினால் நெய்யப்பட்ட முரட்டு ஆடையை அணிந்திருந்தான். இடையிலே தோல்வாரினைச் சுற்றிக் கட்டியிருந்தான்.

"யார் இவர்? இவர்தான் தூதர் எலி ஜாவா? இல்லை, ஆண்டவனால் அனுப்பப்படவிருப்பதாகச் சொல்லப்பட்ட கிறிஸ்துதானா?" என்று மக்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டார்கள்.

அதற்கு அந்த இளைஞனே பதில் கூறினான் வனாந்தரங்களிலே கூவிக் கொண்டிருக்கும் ஒருவனுடைய குரலே நான். மக்களே, இறைவனின் வழியைச் சீராக்குங்கள்; நேராக்குங்கள்!" என்று கூவினான்.

"இவர் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரே! கிறிஸ்து பெருமான் வருங்காலம் நெருங்கிவிட்டது போலும்" என்று மக்கள் கருதினார்கள்.

அந்த இளைஞன்தான் ஜான்! ஜான் ஒரு திருத்தூதரே! பூவுலகில் வரப்போகும் இறையரசுக்கு மக்களை ஆயத்தப்படுத்த ஆண்டவனால் அனுப்பப்பட்ட தூதர் அவர்.

கூடியிருந்த மக்கள் ஒவ்வொருவராக ஜான் அருகில் சென்றார்கள். தங்கள் பாவங்களைக்கூறி அவற்றைச் செய்ய நேர்ந்தமைக்காக வருந்தினார்கள், கிறிஸ்துவைச் சந்திப்பதற்கு தாங்கள் அருகதையற்றவர்கள் என்று சொல்லிப் புலம்பினார்கள். ஜான் ஒவ்வொருவராக ஆற்றிலே இறக்கி முழுக்காட்டினார். அவர்களுடைய பாவ அழுக்குகளை அகற்றித் தூய்மைப்படுத்தினார்.

"நான் உங்களைத் தண்ணீரினால் தூய்மைப்படுத்துகிறேன். ஆனால் என்னைக் காட்டிலும் வல்லமை மிக்க ஒருவர் வருவார். அவர் உங்களைப் புனித ஆவியினால் தூய்மைப் படுத்துவார்” என்று ஜான் கூறினார்.

நாள் தோறும் மக்கள் ஜானைத் தேடிவந்த வண்ணம் இருந்தார்கள். வந்த ஒவ்வொருவரின் பாவக் கறைகளையும் அகற்றி ஆற்றில் இறக்கி முழுக்காட்டி வைத்தார் அவர்.

ஒருநாள் நாசரத்திலிருந்து தச்சு வேலை செய்யும் ஓர் இளைஞன் வந்தான். தன்னையும் முழுக்காட்டித் தூய்மைப்படுத்துமாறு அவன் ஜானை வேண்டினான்.

ஜான் அந்த இளைஞனை உற்றுநோக்கினார். அவன் யார் என்று அடையாளம் புரிந்து கொண்டார். தன் தாய்வழி உறவினன் இயேசு தான் அது என்று தெரிந்து கொண்டார்.

"நான் அல்லவா உன்னால் தூய்மைப்படுத்தப்பட வேண்டியவன்; நீ என்னிடம் வருவது பொருந்துமா?” என்று கேட்டார் ஜான்.

உண்மைதான். ஆண்டவனின் மகனாகப் பிறந்த இயேசு எந்தப் பாவமும் புரிந்தவரல்லர். இருப்பினும் அவர் தாம் திருமுழுக்காட்டப்பட வேண்டும் என விரும்பினார். தாம் வைத்திருந்த தச்சுக் கருவிகளை அப்பால் போட்டு விட்டு அவர் திருமுழுக்காடுவதற்கு ஆயத்தமாக நின்றார்.

இயேசுவின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாமல், ஜான் அவரையும் ஆற்றிலே இறக்கித் திருமுழுக்காட்டினார். அவர் ஆற்றில் முழுகி எழுந்து கரையேறிய பொழுது வானில் திடுமென ஓர் ஒளி மின்னியது. புனித ஆவி ஒரு புறாவின் வடிவில் அவர் மீது வந்து அமர்ந்தது. அதே சமயம் "நான் மிகவும் விரும்புகின்ற என் அருமை மகன் இவனே" என்று ஒரு குரல் விண்ணிலிருந்து ஒலித்தது. ஆம், வேதங்களால் முன்னறிவிக்கப்பட்ட திருமகன் வந்துவிட்டார். அவருடைய திருத்தொண்டு தொடக்கமாகிவிட்டது கிறிஸ்து அவரே.

அன்றே இயேசு மலைகளும் பாறைகளும் நிறைந்த காட்டுப் பகுதிக்குள் சென்றார். இரவு பகல், வெயில் பனி, பசி பட்டினி எதையும் இலட்சியம் செய்யாமல் ஓநாய்களின் ஓலம் நிறைந்த அந்த மலைக் காட்டின் மத்தியிலே இருந்து இறைவனைத் தொழுது கொண்டிருந்தார்.

நாற்பது பகலும் நாற்பது இரவும் நோன்பு இருந்தடன் அவருக்கு ஒரே பசியாயிருந்தது. அப்போது தீய சக்தியாகிய சைத்தான் அவர் முன் தோன்றி "நீ கடவுளின் பிள்ளையாயிருந்தால் இந்தக் கற்களையெல்லாம் ரொட்டித் துண்டுகளாக மாற்று” என்று கூறியது.

"மனிதன் ரொட்டியைக் கொண்டுதான் வாழவேண்டும் என்பதில்லை; இறைவனின் திருவாயிலிருந்து வெளிப்படும் கட்டளைகளைக் கொண்டே வாழ வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று கூறினார் இயேசு.

சைத்தான் அவரைப் புனித நகரமாகிய ஜெருசலத்துக்குத் தூக்கிக் கொண்டுபோய் ஆலயத்தின் ஒரு கோபுரத்து உச்சியில் வைத்தது.

“நீ கடவுளின் பிள்ளையாய் இருந்தால் கீழே குதி. ஏனென்றால் நீ கீழே குதித்தால், கல்லில் நீ மோதி விடுமுன்னால் தேவ தூதர்கள்வந்து உன்னைத் தங்கள் கைகளில் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது. அது உண்மையா என்று பார்க்கலாம்" என்று கூறியது சைத்தான்.

"உன் கடவுளாகிய இறைவனை நீ சோதிக்க முற்படாதே! என்றும் வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று இயேசு பதில் சொன்னார்.

மீண்டும் சைத்தான் அவரை ஒரு பெரிய மலைக்குக் கொண்டு சென்றது. அங்கிருந்தவாறே உலகப் பேரரசுகள் எல்லாவற்றையும் அவற்றின் செல்வச் சிறப்புக்களையும் அது சுட்டிக் காட்டியது.

"நீ என்காலடியில் விழுந்து வணங்கினால் இந்த அரசுகள் செல்வங்கள் அனைத்தையும் உனக்குத் தருகிறேன்" என்றது.

"சைத்தானே, பேசாமல் இங்கிருந்து போய்விடு. நான் உன்னை வணங்கப் போவதில்லை. ஏனெனில் உன் கடவுளாகிய இறைவன் ஒருவனையே வணங்க வேண்டும், அவன் ஒருவனுக்கே பணிபுரிய வேண்டும் என்று வேதத்தில் எழுதப் பெற்றிருக்கிறது" என்று இயேசு பதிலளித்தார்.

இனித் தன் ஏமாற்று வேலை எதுவும் பலிக்காதென்று உணர்ந்த சைத்தான் அவரை விட்டு அகன்று விட்டது. தேவகணங்கள் வந்து அவருக்கு ஊழியம் செய்தன.

ஜானைச் சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அறிந்த இயேசு கலீலீ நகருக்குப் புறப்பட்டார்.

கலீலீ கடற்கரையின் ஓரமாக நடந்து செல்லும் போது இயேசு இரண்டு மீனவர்களைக் கண்டார். பீட்டரும் அவன் உடன் பிறந்தானாகிய ஆண்ட்ரூவும் கடலில் வலைவீசிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பார்த்து, “என்னைத் தொடர்ந்து வாருங்கள். மனிதர்களை வசப்படுத்துபவர்களாக உங்களை ஆக்குகிறேன்” என்றார் இயேசு.

அவர்கள் அப்பொழுதே தங்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள்.

மேலும் நடந்து செல்கையில், செபிடீ என்பவரின் மக்களான ஜேம்ஸ் ஜான் என்பவர்கள், தங்கள் தந்தையுடன் ஒரு கப்பல் தட்டில் உட்கார்ந்து வலையைச் சரி செய்து கொண் டிருந்தார்கள். அவர்களை இயேசுநாதர் அழைத்தார்.

அவர்கள் உடனே தங்கள் தந்தையையும் கப்பலையும் விட்டுப் பிரிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள்.

நான்கு சீடர்களும் பின் தொடர் அவர் கலீலீ நகரில் எங்கெங்கும் சென்று இறைவனின் பேரரசைப் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே சென்றார். அவருடைய புகழ் எங்கெங்கும் பரவியது.