இலங்கைக் காட்சிகள்/அசோக வனம்


11
அசோக வனம்

ராமாயணத்தில் அயோத்தியைவிட இலங்கையைப் பற்றித்தான் அதிகமான செய்திகள் இருக்கின்றன. இராமாயண வரலாற்றின் முக்கியமான நிகழ்ச்சிகள் இலங்கையில் நிகழ்கின்றன. பாலகாண்டம், அயோத்தியா காண்டம் என்ற இரண்டு காண்டங்களில் அயோத்தியைக் காண்கிறோம். சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்ற இரண்டு காண்டங்களில் இலங்கையையே இடமாகக் கொண்டு கதை படர்கிறது. சுந்தர காண்டத்தில் அநுமான் இலங்கை முழுவதும் உலாவுகிறான்; ஊர் முழுவதும் அலைந்து சீதையைத் தேடுகிறான். வால்மீகியும் கம்பரும் இலங்காபுரி வருணனையை அவ்விடத்தில் மிக விரிவாகச் சொல்லியிருக்கிறார்கள். சுந்தர காண்டத்தில் அசோகவனத்தில் 'சோகத்தாளாய நங்கை' சிறையிருந்த நிலையைக் காண்கிறோம். இராமாயணம் சிறையிருந்தவள் ஏற்றம் சொல்வது என்று கூறுவார்கள். சீதைக்கு ஏற்றம் தந்தது அவள் சிறையிருந்தது என்றால், அவள் சிறையிருந்த இடமாகிய அசோக வனமும் ஏற்றமுடையதுதானே?

இலங்கைப் பிரயாணத்தில் இராமாயணத்தை நினைவுறுத்தும் இடங்களைக் காணவேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. புதிய ஊர்களுக்குப் போனால், "இந்த ஊரின் பெயர் என்ன? இங்கே என்ன விசேஷம்?” என்று கேட்கிற பழக்கம் உள்ள நான், இலங்கையில் காரில் பிரயாணம் செய்தபோது அடிக்கடி இத்தகைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தேன். நண்பர் கணேஷ் கூடியவரைக்கும் என் கேள்விகளுக்கு விடை அளித்துக்கொண்டே வந்தார். சில இடங்களில் ஊரில் உள்ள மக்களைக் கேட்டுத் தெரிந்து எனக்குச் சொன்னார். அவருக்குச் சிங்கள மொழியில் நன்றாகப் பேசவும் படிக்கவும் வரும். அதனால் சிங்களவர்களோடு பேசிச் செய்தியை அறிவது அவருக்கு எளிதாக இருந்தது.

கதிர்காமத்துக்குப் போகவேண்டும் என்ற என் ஆவலை நண்பர் தெரிந்துகொண்டிருந்தார். அவர் தாம் தம்மையும் தம் காரையும் சாரதியையும் என் போக்கிலே விட்டுவிட்டாரே! நாளைக்கு வெள்ளிக்கிழமை; கதிர்காம வேலனைத் தரிசித்துக்கொள்ள நல்ல நாள். அதற்கு முன்னே பார்க்கவேண்டிய இடங்கள் சில உண்டு. முக்கியமாக அசோகவனத்தைப் பார்க்கவேண்டாமா?' என்று கேட்டார்.

"அசோகவனமா? நாம் போகிற வழியிலா இருக்கிறது? சீதை சிறையிருந்த அசோக வனத்தையா சொல்கிறீர்கள்?"

"ஆம், சாட்சாத் அதே அசோகவனந்தான்.” "நான் அசோக மரத்தைக்கூடப் பார்த்ததில்லை. தமிழ் நாட்டில் எது எதையோ அசோக மரம் என்று சொல்கிறார்கள். நெளி நெளியாக வளைந்த இலையும் நெட்டையான உருவமும் உடைய நெட்டிலிங்க மரத்தை அசோக மரம் என்கிறார்கள். காவியங்களில், அசோகமரம் நெருப்பைப் போலச் செக்கச் செவேலென்ற மலரையுடையது என்று புலவர்கள் சொல்லியிருக்கிறார்கள். நெட்டிலிங்க மரத்தில் பூ இருக்கிறதோ, இல்லையோ, அதை நான் பார்த்ததே இல்லை" என்றேன்.

"அசோக மரத்தையும் அதன் பூவையும் நேரே காட்டுகிறேன்" என்றார் கணேஷ்.

"சீதா பிராட்டியைக் காட்ட முடியுமா?"

"என்னை அநுமான் என்று நினைத்தீர்களா?" என்று அவர் கேட்டபோது நாங்கள் யாவரும் சிரித்து விட்டோம்.

"சீதா பிராட்டியைக் காட்ட முடியாது. ஆனால் சீதை இருந்த இடத்தைக் காட்டுகிறேன்" என்று அவர் சொன்னார்.

நாங்கள் அசோகவன யாத்திரையைத் தொடங்கினோம். அன்று (20.9-51) வியாழக்கிழமை.

கார் மலைப்பகுதிகளில் போய்க்கொண்டே இருந்தது. முன்பே நான் கண்டு மகிழ்ந்த குறிஞ்சி வளம் இந்த இடங்களில் மிக மிக அற்புதமாக இருந்தது. மலைகளில் அழகான ரோடு. வளைந்து வளைந்து கார் சென்றது. தவறி விழுந்தால் கிடுகிடு பாதாளத்துக்குப் போகவேண்டியதுதான். அங்கங்கே சில அருவிகளைப் பார்த்தேன். ஓரிடத்தில் 1500 அடி உயரத்திலிருந்து அருவி விழுந்துகொண்டிருந்தது. அதன் அருகில் வந்தபோது அங்கே சற்று நில்லாமல் போக மனம் வரவில்லை. காரை நிறுத்திக் கீழே இறங்கி அருவியின் கண்கொள்ளாத அழகைப் பார்த்தேன்.

மேலே மலையிலிருந்து அருவி கீழே விழும் முகட்டில் ஒரே வெண் புகை; இல்லை இல்லை, நீராவி, அது கூடத் தப்பு; மிகமிக மெல்லிதாகப் பஞ்சைப் பன்னிப் பறக்க விட்டால் எப்படி இருக்கும்? பாலிலிருந்து பணியாக்கி அதை எங்கும் தூவினால் எப்படி இருக்கும்? பனிக்கட்டியைப் பொடியாக்கி அதில் வெண்மை நிறத்தை இன்னும் ஊட்டி லேசாகத் தூவினால் எப்படித் தோன்றும்?- இவைகளெல்லாம் உபமானம் ஆகுமா? மலைமுகட்டில், அருவி வீழும் இடத்தில் இருந்த காட்சிக்கு எதை உவமை சொல்வது? அதற்கு அதுவே உவமை. "கண்டவர் விண்டிலர்" என்பது அந்த அருவியின் திறத்திலும் பொருந்தும். அருவி வீழும் வேகத்தில் நீரின் பிசிர் புகை போல எழுகிறது. நீர் கீழே விழுகிறது. அதன் பிசிர் புகை பருந்து போல மேலே எழுகிறது. அது நீர்த்துளியும் அல்ல; நீராவியும் அல்ல; நீரின் அணுக்கள் சேர்ந்த படலம், அழகாக விரித்த பனிப்படலம் போல, உதறிவிட்ட வெள்ளைப் போர்வை போல, அது அந்த முகட்டிலே மிதந்தது.

அருவியின் நீர்த்தாரை தண்ணீர் அல்ல; பால் தான். வெள்ளை வெளேரென்று விழும்போது அதன் காட்சியும் ஓசையும் காணக் காண இனிக்கும் பேரழகு. அதை இன்று நினைத்தாலும் உள்ளத்தில் இன்ப அருவி துள்ளுகிறது.

"நீங்கள் நீலகிரிக்குப் போனது உண்டா ?" என்று கணேஷ் கேட்டார்.

"இல்லையே!" என்றேன்.

" இலங்கையில் நீலகிரியைப் போல ஓர் இடம் இருக்கிறது. அங்கே உதகமண்டலத்தைப் போன்ற நகரம் நுவரெலியா, அதற்குத்தான் போய்க்கொண்டிருக்கிறோம். இன்று மத்தியான்னச் சாப்பாடு அங்கே.”

நுவரெலியாவுக்கு நண்பகல் 1-30 மணிக்குப் போய்ச் சேர்ந்தோம். அப்போதே அங்குக் குளிராக இருந்தது. ஆறாயிர அடிக்கு மேலே உள்ள நகரம் நுவரெலியா. அங்கே பெரிய ஏரி, குதிரைப் பந்தய மைதானம், பெரிய கடைகள், வேறு கட்டிடங்கள் எல்லாம் இருக்கின்றன. உல்லாசமாகப் பொழுதைப் போக்கும் மனிதர்களுக்கு நல்ல இடம் அது. எங்களை வரவேற்ற நண்பர் 'புடைவைக் கடை' வைத்திருந்தார். பெண்கள் கட்டும் ஆடைகளை மாத்திரம் விற்கும் இடம் அன்று; ஜவுளிக்கடை அது. எல்லா வகையான ஆடைகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் புடைவை என்று சொல்வார்கள். அந்தக் கடைக்காரரும் யாழ்ப்பாணத்தார். தமிழில் புடைவை என்பதற்குப் பொதுவாக ஆடை என்றுதான் பொருள். திருநாவுக்கரசர் தம் தமக்கையை ஒருவரும் அறியாமல் பார்க்கும் பொருட்டு ஆடையினால் தம்மை மறைத்துக் கொண்டு சென்றார் என்று பெரிய புராணத்தில் ஒரு செய்தி வருகிறது. அங்கே,

"மெய்தருவான் நெறியடைவார்
வெண்புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமைஊன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தவமா தவர்வாழும்
திருவதிகை சென்றடைவார்"

என்று சேக்கிழார் பாடுகிறார். வெள்ளாடையைப் போர்த்துச் சென்றார் என்பதை, "வெண் புடைவை மெய்சூழ்ந்து" என்று சொல்கிறார். இங்கே புடைவை என்றது பெண்கள் உடுக்கும் உடையாகுமா? பொதுவாக, ஆடை என்றே கொள்ள வேண்டும்.

புடைவைக் கடையைப் பார்த்துவிட்டு நண்பர் வீட்டுக்குச் சென்று விருந்துணவு அருந்திச் சற்று இளைப்பாறினோம்.

"அசோகவனத்துக்குப் போக வேண்டாமா ?" என்று ஆவலுடன் கேட்டேன்.

"நாம் அசோக வனப் பகுதியிலேதான் இருக்கிறோம்" என்று நண்பர் சொன்னர்.

"அசோக மரம்?"

"பார்க்கலாம்."

சிறிது நேரம் கழித்துப் புறப்பட்டோம். வழியில் பல இடங்களில் அசோக மரங்களைப் பார்த்தேன். கவிகள் சொன்ன வருணனை அப்போதுதான் எனக்கு விளங்கியது. அதன் செம்மலர்களைக் கண்டேன்.

போகும் வழியில் ஹக்கலாப் பூந்தோட்டத்தை அடைந்தேன். கடல் மட்டத்திற்கு 5000 அடி உயரத்துக்குமேல் அமைந்திருக்கிறது அது. மலைப் பகுதிகளில் வளரும் மரம் செடி கொடி வகைகளை அங்கே வளர்த்துப் பாதுகாக்கிறார்கள். இமய மலைப் பகுதிகளில் வளரும் பலவகை மரங்களை அங்கே கண்டேன். அங்குள்ள குளத்தில் எத்தனை வித மலர்கள்! நான் அதுகாறும் காணாத மலர் ஒன்றைக் கண்டேன்; வியந்தேன். சில நேரம் அதையே பார்த்துக்கொண்டு நின்றேன்.

ஆம், அந்தக் குளத்தில் பொற்றாமரையைக் கண்டேன். செந்தாமரை, வெண்டாமரை என்ற இரண்டு வகைகளையும் கவியிலும் உலகிலும் கண்டு களித்தவர் பலர். ஆனால் மதுரைக்குப் போனவர்களுக்கும் திருவிளையாடற் புராணம் படித்தவர்களுக்கும் பொற்றாமரை என்ற பெயர் தெரியும். மதுரைக் கோயிலில் உள்ள தீர்த்தத்துக்குப் பொற்றாமரைக்குளம் என்று பெயர். ஒரு காலத்தில் அதில் பொன் நிறம் பெற்ற தாமரை பூத்ததாம். நான் பொன் நிறத் தாமரையையே ஹக்கலாப் பூந்தோட்டத்தில் பார்த்தேன். அழகான மஞ்சள் நிறம் கதிரவன் ஒளியிலே பளபளக்கும்போது பொன்னாகவே தோன்றும் அல்லவா? அதை மஞ்சள் நிறத் தாமரை என்று சொல்லலாம்; மஞ்சள் நிறத்தையே பொன்னிறமென்றும் சொல்வார்கள். அந்தக் குளத்தில் பல மஞ்சள் தாமரைகள் இருந்தன.

எங்கும் காணாத அருமையான மஞ்சள் தாமரையை அன்று மதுரையிலே அன்பர்கள் கண்டு வியப்படைந்து, பொற்றாமரை!" என்று போற்றியிருக்கலாம் அல்லவா ? ஹக்கலாவில் உள்ள மஞ்சள் தாமரை பொற்றாமரையாகவே எனக்குத் தோன்றியது. அதற்குப் பூந்தோட்ட அதிகாரிகளும், மர நூல் வல்லாரும், அங்குள்ள மக்களும் என்ன பெயர் வைத்து வழங்குறார்களோ, எனக்குத் தெரியாது. அது நிச்சயமாகத் தாமரைதான். நீரில் படர்ந்திருக்கிறது. அதன் இலையும் தண்டும் தாமரையின் இலையும் தண்டுமே என்பதில் ஐயமில்லை. மலரின் தோற்றமும் தாமரையின் தோற்றத்தையே கொண்டிருக்கிறது. ஆனால் நிறம் மட்டும் வேறு; இது பொன் நிறம் உடையது. ஆகவே, இதைப் பொற்றாமரை என்று சொல்வது பிழையா?

ஹக்கலாப் பூந்தோட்டத்தை விட்டுப் புறப்பட்டோம். சீதா எலியா என்ற இடத்துக்கு வந்தோம். அங்கே சிறிய கோயில் ஒன்று இருக்கிறது. ராம லஷ்மணர் சீதை என்ற மூவருடைய விக்கிரகங்களை வைத்துப் பூசை செய்கிறார்கள். அநுமானும் இருக்கிறார். இதைச் சீதையம்மன் கோயில் என்றும் சொல்வதுண்டாம். சீதை சிறையிருந்த இடத்தின் ஒரு பகுதி இது என்று சொல்கிறார்கள். அந்தக் கோயிலின் பின் புறத்தில் சிறிய மலையாறு ஓடுகிறது. அது ஓரிடத்தில் பூமிக்குள்ளே சென்று சில அடிகளுக்கு அப்பால் கொப்புளித்து வெளி வருகிறது. பூமிக்குள்ளே புகும் இடத்தில் இலையையோ பூவையோ பறித்துப் போட்டால் சில நிமிஷங்களில் கொப்புளித்து வரும் இடத்தில் அது வெளியே வருகிறது. அநுமான் இலங்கைக்கு நெருப்புவைத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்குமே. அப்பொழுது சீதை சிறையிருந்த இந்த அசோக வனமும் கரிந்து போய்விட்டதாம். தீயில் அகப்பட்டுக் கரிந்து போகாமல் தப்பிய அசோக மரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிற்பதை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். சீதையை வருத்திய இராவணன் மீது வனத்திலிருந்த மரங்கள்கூடக் கோபம் கொண்டவைபோல, இவ்வசோக மரங்கள் செந்நிறப் பூக்களுடன் காட்சி அளிக்கின்றன அல்லவா? அதுமான் மூட்டிய தீயினால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணிக்கச் சீதை அங்கும் இங்கும் பார்த்தாளாம். உடனே அவள் ஒரு குன்றிலே காலினால் ஊன்றினாளாம். அவ்வளவுதான். கற்பாறையிலிருந்து குளிர்ந்த ஜலம் பீரிட்டு வெளி வந்தது. இது வற்றாத நீரூற்றாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது' என்று இதைப் பற்றிய கர்ண பரம்பரைச் செய்திகளை ஸ்ரீ குல சபாநாதன் தொகுத்து எழுதியிருக்கிறார்.[1]

சீதையோடு சம்பந்தப்பட்ட இந்த இடம் ஒன்றைத்தான் நான் பார்த்தேன். ஆனால் சீதா வாக்கை, சீதா தலவா, சீதாக்குன்றம், சீதா கங்கை என்ற பெயர்களோடு வேறு சில இடங்கள் இலங்கையில் இருப்பதாகக் கேள்வியுற்றேன். அவற்றைப் பார்க்க முடியவில்லை.

திரு சு. நடேசபிள்ளை அவர்கள் சீதா பிராட்டியின் இலங்கை வாசத்தோடு சம்பந்தமுள்ள இடங்களைப் பற்றிப் பல செய்திகளை ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறார். 'பாலுகமா என்ற இடம் அநுமானல் எரியுண்டதென்று சொல்லப்படுகின்றது. பாலுகமா என்பதன் பொருள் பாழடைந்த கிராமம் என்பதாம். இந்த இடத்தில் புற் பூண்டும் முளைப்பதில்லை. ஹக்கலாவிலிருந்து ஹப்புத்தளை என்ற இடத்திற்குப் போகிற வழியில் வெளிமடா என்னும் அழகிய கிராமத்தின் பக்கத்தில் இராமலங்கா என்ற ஓரிடம் இருக்கின்றது. இங்கேதான் இராவணன் இறுதியாகப் போர்செய்து வீழ்ந்தான் என்றும், அது முதல் அவர்களுக்கு இராமலங்கா எனப் பெயர் பெற்றது என்றும் இங்குள்ள புத்த பிக்ஷுக்கள் ஒரு கர்ண பரம்பரையான ஐதிகத்தைக் கூறுகிறார்கள். இதற்கருகில், தூரும் வெலாபன்சலா என்ற இடத்தில் சீதாபிராட்டி தன் கற்பு நிலையினின்று தவறவில்லையென்று இராம பிரான் முன்னிலையிற் சத்தியம் செய்ததாக ஓர் ஐதிகம் வழங்கி வந்ததென்று மேஜர் போர்ப்ஸ் (Major Forbes) 1840-ஆம் ஆண்டில் வெளியிட்ட "இலங்கையிற் பதினோராண்டுகள்" என்ற தமது புத்தகத்திற் கூறியுள்ளார்.[2]

சீதா எலியாவில் உள்ள ஊற்றைப் பார்த்துவிட்டு அங்குள்ள கோயிலில் கோதண்டராமனையும் சீதாதேவியையும் வணங்கிக் கொண்டு கதிர் காம வேலனுடைய நினைவு எங்களை உந்த அங்கிருந்து புறப்பட்டோம்.


  1. நான்காம் தமிழ் விழா மலர், ஈழத்தின் பிரசித்த இடங்கள், ப. 168.
  2. நான்காம் தமிழ் விழா மலர், இலங்கை ஆற்றுப்படை, ப.3,4.