இலங்கைக் காட்சிகள்/அருவி ஓசை

7
அருவி ஓசை

ண்டி விழாக்கள் நிறைவேறின. அன்று இரவு கிரிமெட்டியாவுக்குச் சென்று தங்கினேன். மறுநாட் காலை எழுந்து தேயிலையைப் பாடம் பண்ணும் வகைகளை யெல்லாம் பார்த்தேன்.

இலங்கையிலே பல இடங்களில் தேயிலைத் தோட்டங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தோட்டத்திலும் பல தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்களிற் பெரும்பாலோர் தமிழர்கள். தமிழ்த் தொழிலாளர்கள் திறமையாகவும் அதிகமாகவும் வேலை செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள். தமிழ் மக்களுக்குள் மணம் நடத்த வேண்டுமானால் ஏதேனும் பொது இடத்தில் கூடி நடத்துவார்கள். கோயிலாக இருந்தால் எல்லோருக்கும் மிக்க திருப்தி உண்டாகும். அதனால் அங்கங்கே சில கோயில்களைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் போதிய அளவுக்குக் கோயில்கள் இல்லை. பல மைல் சுற்றுவட்டாரத்துக்கு இந்துக் கோயில்களே இல்லாமல் இருக்கும் பகுதிகளும் உண்டு.

கண்டியிலிருந்து பத்து மைல் தூரத்தில் உடுஸ்பத்தை என்ற ஊர் இருக்கிறது. அடர்ந்த காடுள்ள மலைப் பகுதியில் அந்த ஊர் அமைந்துள்ளது. அங்கே ஒரு கோயிலை ஓர் அன்பர் கட்டியிருக்கிருர். இலங்கையில் முருகன் கோயில்களே அதிகம். எல்லா முருகனும் கதிரேசன்தான். உடுஸ்பத்தையில் கதிரேசப் பிரான் கோயில் இருப்பதைத் தெரிவித்து அங்கே வந்து போகவேண்டுமென்று, அந்தக் கோயிலைக் கட்டிய ஸ்ரீ கன்னையா ராஜு என்பவர் என்னையும் பிற அன்பர்களையும் அழைத்தார். கிரிமெட்டியாவிலிருந்து உடுஸ்பத்தைக் கதிரேசன் கோயிலைத் தரிசிக்கப் புறப்பட்டோம்.

மலைப் பகுதிகளின் வழியே கார் போய்க்கொண்டிருந்தது. அருகில் பள்ளமும் மேடுமான பகுதிகளில் வானை முட்ட வளர்ந்த காடுகளைக் கண்டேன். மாவலி கங்கை என்ற ஆறு நாங்கள் செல்லுமிடமெல்லாம் வந்தது. மழை பெய்திருந்தமையால் ஆற்றில் புதிய நீர் ஓடியது. செங்கலங்கல் தண்ணீரைப் பார்த்தவுடன் அந்த ஆற்றைப் பற்றி ஒரு பாட்டுப் பாட வேண்டுமென்று எண்ணினேன். காவிநிற நீரைக் கண்டவுடன் அதைக் காவியாடை பூண்ட துறவியாகச் சொல்லலாம் என்று தோன்றியது. ஓரிடத்திலும் தங்காமல் பல இடங்களுக்குச் சென்று தன்பால் வந்தாருக்கு நன்மை செய்யும் இயல்பு துறவிக்கும் உண்டு. இந்த மாவலி கங்கைக்கும் உண்டு. உண்மையான துறவிக்கு நெஞ்சில் ஈரம் உண்டு; இந்த ஆற்றுக்கோ ஈரமே இயல்பல்லவா ? துறவி உள்ளழுக்கை நீக்கி உதவுவான்; இந்த ஆறும் புற அழுக்கை நீக்க உதவுகிறது. இத்தனை ஒப்புமை உடைய மாவலிகங்கையைத் துறவாசாகச் சொல்வதில் என்ன தவறு?

கற்பனை ஓடியது. ஒப்புமைகள் ஒன்றன்மேல் ஒன்றாகத் தோன்றின. பாட்டு உருவாகிவிட்டது. அருகில் வீரகேசரி ஆசிரியர் உட்கார்ந்திருந்தார். "இந்த மாவலிகங்கையைப் பற்றி ஒரு பாட்டுக் கேட்கிறீர்களா?" என்றேன்.

"சொல்லுங்கள்" என்றார் அவர்.
பாட்டைச் சொன்னேன் :

காவி போர்த்து நலம்காட்டிக்
கவினும் ஈரம் காட்டிஎங்கும்
மேவித் தங்கா தேஓடி,
விளையும் அழுக்கை அகற்றிவரும்
ஆவி அணையாய், மாவலிகங்
கைப்பேர் கொண்ட அணியாறே,
பாவும் உன்னத் துறவரசாப்
பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ?

[காவி - காவி நிறம், காவியுடை. நலம் - அழகு, நன்மை. ஈரம் - குளிர்ச்சி, அன்பு.]

பாட்டைக் கேட்டு ரஸித்த அன்பர். "இந்த ஆற்றில் முதலை உண்டு” என்றார்.

உடனே? "அப்படியா! அதையும் பாட்டில் வைத்துப் பாடிவிட்டால் போகிறது” என்றேன். "உள்ளே, மேவும் முதலை இலங்க வைத்து" என்று பாட்டைச் சற்று மாற்றினேன். 'நீருக்குள்ளே இருக்கும் முதலையை விளங்கும்படி வாழவைத்து' என்பது ஆற்றுக்கு ஏற்ற பொருள். முதல் என்பது பரம்பொருளாகிய கடவுளுக்கு ஒரு பெயர் அல்லவா? மனத்துக்குள்ளே விரும்பும் பரம்பொருளைப் பிரகாசிக்கும்படி வைத்து என்று துறவிக்கு ஏற்றபடி வேறு ஒரு பொருளும் அந்தத் தொடருக்கு அமைந்தது. முதலையையும் வைத்து மாற்றிய பாட்டைச் சொன்னேன்.

காவி போர்த்து தலம்காட்டிக்
கவினும் ஈரம் காட்டிஉள்ளே
மேவும் முதலே இலங்கவைத்து
விளையும் அழுக்கை அகற்றிவரும்
ஆவி அனையாய், மாவலிகங்
கைப்பேர் கொண்ட அணியாறே,
பாவும் உன்னத் துறவரசாப்
பகர்ந்தால் ஏதும் பழுதுண்டோ?

பத்திரிகாசிரியர் கையில் ஏதாவது கிடைத்தால் சும்மா விட்டுவிடுவாரா? இதை வீரகேசரியில் வெளியிட்டுவிட்டார். அவர் அன்பை என்ன என்று சொல்வது "இயற்கை வனப்பைக் கண்டதும் அவர் கவி பாட ஆரம்பித்துவிடுகிறார். மாவலி கங்கையில் புது வெள்ளம் ஓடியது. இதைக் கண்டதும் ஒரு கவி பாடிவிட்டார். அந்த நதியைத் துறவிகளுக்கு அரசாகப் பாடிவிட்டார். அந்த ஆற்றிலே முதலையும் உண்டென்றேன். உடனே அதையும் வைத்து மற்றோர் பாட்டு!" என்று அவர் எழுதினார்.

மாவலிகங்கையின் சலசல ஓசையினிடையே எங்கள் சம்பாஷணையை நடத்திக்கொண்டே உடுஸ்பத்தையை அடைந்தோம். அது மலையில் சற்று உயர்ந்த இடத்தில் இருக்கிறது. இயற்கை யெழிலரசி தளதளவென்று அந்த இடத்தில் நின்று புன்முறுவல் பூக்கிறாள். உடுஸ்பத்தையில் இறங்கி நின்று நாலு பக்கமும் பார்த்தேன். மேடான பாறைப் பகுதியில் கதிரேசன் கோயில் அமைந்திருக்கிறது. எதிரே பள்ளத்தில் அருவி ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் சாலை. சாலையிலிருந்து பார்த்தால் அருவி கண்ணுக்குத் தெரியாது. இருமருங்கும் உள்ள மரச்செறிவு அதை மறைக்கிறது. ஆனாலும் அதன் ஓசை காதுக்கு இனிமையாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. மலைப் பகுதிகளில் மனிதனுடைய பாதுகாப்புக்கு அவசியமே இல்லாமல் தாமாக வளர்ந்த மரங்களுடனும் செடிகளுடனும் பிராணிகளுடனும் அது இடைவிடாமல் பேசிக்கொண்டே போகிறதோ?

திருமுருகாற்றுப் படையில் பழமுதிர் சோலையில் உள்ள அருவியைப்பற்றி நக்கீரர் மிக அழகாக வருணித்திருக்கிறார். அது எனக்கு அப்போது நினைவுக்கு வந்தது. "இது என்ன பைத்தியக்காரத்தனம்! பலா மரத்தைக் கண்டால் சீவகசிந்தாமணியும், காடுகளைக் கண்டால் சங்கச் செய்யுளும், அருவியைக் கண்டால் திருமுருகாற்றுப் படையும் நினைவுக்கு வருவதாகச் சொல்கிறீர்களே!" என்று நண்பர்கள் கேட்கலாம். நான் என்ன செய்வேன்! இதைத்தான் வாசனை, வாசனை என்று சொல்வார்கள். நான் அந்தப் புத்தகங்களைப் படித்தது முந்தி; ஆகையால் இப்போது இந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது படித்தது நினைவுக்கு வருகிறது. முந்தி இந்தக் காட்சிகளைக் கண்டிருந்தேனாகில், புத்தகங்களைப் படிக்கும்போது, "ஆகா! எல்லாம் இலங்கையின் இயற்கை எழிலைப்பற்றியே சொன்னதுபோல் இருக்கின்றனவே!" என்று ஆச்சரியப்பட்டிருப்பேன். மறுபடியும் திருமுருகாற்றுப் படையைப் பற்றிச் சொல்வதற்காக நண்பர்கள் என்னை மன்னிக்கவேண்டும். பழமுதிர் சோலையில் அந்த அருவி மலையின் உச்சியிலிருந்து ஓடிவருகிறதை நக்கீரர் பாடுகிறார். வழியிலே இருக்கும் மரங்களுடனும் விலங்குகளுடனும் உறவாடியும் விளையாடியும் மோதியும் பொருள்களைப் பறித்தும் அருவி ஒய்யாரமாக வருகிறதாம். அகிலைச் சுமந்து சந்தன மரத்தை உருட்டி மூங்கிலச் சாய்த்துத் தேனடைகளைச் சிதைத்துப் பலாச்சுளைகள் உதிர, சுரபுன்னை மலர் உதிர, குரங்குகள் பயப்பட, யானைகள் குளிர்ச்சி அடைய வீசி, யானைக் கொம்பையும் பொன் தாதுவையும் மணிகளையும் அலசிக்கொண்டு வருகிறதாம். "இழுமென இழிதரும் அருவி” என்று சொல்கிறார் நக்கீரர். அந்த 'இழும்' என்பதற்கு அர்த்தம் உடுஸ்பத்தையிலே தெரிந்துகொண்டேன். அருவி சலசலவென்று ஓடியதாகச் சொல்லலாம்; ஆனால் அதில் அழகில்லை, சோ என்று இரைந்ததாகச் சொல்லலாம்; அதில் அச்சம் தொனிக்கிறது. ஓம் என்று ஒலி எழுப்புவதாகச் சொல்லலாம்; ஓமுக்குப் பொருள் என்ன என்ற ஆராய்ச்சி ஏற்படும். புலவர் சொன்னபடி 'இழும் என்று' ஒலிக்கிறது என்பதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

அருவியின் ஓசையோடு காதைப் பொருத்திக் கருத்தையும் இணைத்துச் சில கணம் நின்றேன். உலகமே மறந்துவிட்டது. உடன் வந்த அன்பர்கள் பேசிக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனல் அந்தப் பேச்சு என் காதில் விழவில்லை. கசமுசவென்று பல பேர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே கோயிலில் நாகசுரக்காரர் உச்சஸ்தாயியிலே ஒரு ராகத்தை ஆலாபனம் பண்ணுவதைக் கேட்டு அனுபவித்திருக்கிறவர்கள் இந்த அநுபவத்தை ஒருவாறு உணரக்கூடும். அங்கே ஜனங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனாலும் அந்தப் பேச்சையெல்லாம் அடக்கி மேலே மேலே ஏறிவரும் இசை வெள்ளத்தில் நம் கருத்து மிதக்கும் போது வேறு ஒலி காதிலே விழாது. உடுஸ்பத்தையில் அருவியின் ஒல்லொலியிலே நான் ஒன்றியபோது அத்தகைய அநுபவந்தான் உண்டாயிற்று. அந்த அருவி இயற்கைத் தேவிக்குக் கட்டியம் கூறியது; அமைதியான முழு மோனத்தில் ஒலிக்கீற்றாக இசையெழுப்பியது. இரவில் எப்படி இருக்கும்? தாலாட்டுப் பாடுமா? அல்லது இரவிலே முழுச் சுறுசுறுப்புடன் கோலாகலமாக விளையாடும் காட்டு விலங்குகளின் முழக்கமாகிய சங்கீதத்துக்குச் சுருதி போடுமா? "அதோ பாருங்கள் ஒரு மலை" என்று என்னைத் தட்டி விழிக்கச் செய்து ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினர் கன்னையா ராஜு.

"ஒரு மலை என்ன? எங்கும் மலைதான்; எல்லாம் மலைதான்" என்றேன்.

"அதோ தெரிகிறதே. அந்த மலைக் காட்டிலே யானைகள் வேலை செய்கின்றன."

"என்ன வேலை?”

"கதிரேசனுடைய வேலை.”

"என்ன அது! கதிரேசன் வேலையா? விளக்கிச் சொல்லுங்கள்."

"இந்தக் கதிரேசப் பெருமானுடைய கோயிலுக்கு வேண்டிய மரங்கள் அந்த மலைக் காட்டிலிருந்து வருகின்றன. வெட்டின மரங்களை இழுத்து வரும் வேலையை யானைகள் செய்கின்றன.

"அப்படியா!"

நான் ஆச்சரியப்படுவதையன்றி வேறு என்ன செய்வேன் !

கோயிலிலிருக்கும் மேட்டு மேலே ஏறினோம். இந்தக் கோயிலை 1986-ஆம் வருஷம் கட்ட ஆரம்பித்தோம். 16 வருஷ காலம் ஆகிவிட்டது. விரைவிலே நிறைவேறும்..." என்று கன்னையா ராஜு கோயிலின் வரலாற்றைச் சொல்ல ஆரம்பித்தார். தமிழ் நாட்டில் புதுக்கோட்டையைச் சார்ந்த கண்டனுரைச் சேர்ந்தவர் அவர் குடும்பம் உண்டு. ஆனாலும் அவர் தன்னந் தனியே அந்த மலைக் காட்டில் கதிரேசன் கோயிலைக் கட்டுவதையே தம் பாக்கியமாகக் கருதித் தொண்டு புரிந்து வருகிறார். அதற்காக அவர் எத்தனையோ பாடுபடுகிறார்.

"இந்த வட்டாரத்திலேயே பல மைல்களுக்குக் கோயில் இல்லை. ஏறத்தாழ ஐயாயிரம் தோட்டத் தொழிலாளர்கள், தமிழ்நாட்டினர், இந்தப் பிரதேசங்களில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இது உபயோகமாக இருக்கும். இன்னும் கோயிலில் பிரதிஷ்டை ஆகவில்லை. விக்கிரகங்களெல்லாம் வந்து விட்டன. இப்போதே இங்கே அடிக்கடி தொழிலாளர்கள் வந்து விவாகங்களை நடத்துகிறார்கள். இந்தக் கோயிலைப் பூர்த்தி பண்ணவேண்டும் என்ற கவலையே எனக்கு எப்போதும் இருக்கிறது. நீங்களெல்லாம் ஆசீர்வாதம் செய்ய வேண்டும்" என்றார்.

அப்போது அந்த அன்பருடன் இருந்த ஒரு தோழர் ஒரு செய்தியைச் சொன்னார். இந்தக் கோயில் மிகவும் நன்றாக விளங்கப் போகிறதென்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அவசர அவசரமாக ஒரு காரியம் நடந்தால் அது நெடுங்காலம் நிற்காது. தென்னமரம் மூன்று வருஷத்தில் காய்த்தால் முப்பது வருஷம்வரையில் நிற்கும். பத்தாம் வருஷத்தில் காய்த்தால் நூறு வருஷம் நிற்கும். இவ்வளவு காலம் இந்தக் கோயிலுக்கு அஸ்திவாரம் போட்டு எழுப்பியிருக்கிறோம். ஆகையினால் இன்னும் பலகாலம் சிறப்பாக விளங்கும்” என்று அவர் சொன்னார். என்ன நம்பிக்கை, பாருங்கள்!

அந்தக் கோயிலிலுள்ள நிலத்தை ரம்புக் வெல்ல என்ற சிங்களச் செல்வர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார். வேறு சிலர் சிறுசிறு தொகைகளை அளித்திருக்கிறார்கள். அவற்றை நன்றியறிவுடன் ஏற்றுக் கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார் கன்னையாராஜா. "இதற்கு என்ன பெயர்?" என்று அவரைக் கேட்டேன்.

"திருவருள் கிரிபுரி குன்றம்” என்று அவர் சொன்னார். திருப்புகழ்ப் பாட்டின் பகுதியைச் சொல்வதுபோலச் சொன்னார். அவராக வைத்த பெயர் அது. அந்தப் பெயரிலேயே அவருக்கு உள்ள அன்பும் ஆசையும் தெரிகின்றன. அத்தனை நீளமாக வாய் நிரம்பச் சொல்ல வேண்டுமென்று அவருக்கு ஆசை. அங்கே ஒரு மடம் அமைத்திருக்கிறார் அஷ்டலகஷ்மி விலாச மண்டபம் கட்டியிருக்கிறார். மடத்துக்கு, "தசநாத பூரண மடாலயம்" என்று பெயர் வைத்திருக்கிறார். அங்கே யாழ்ப்பாணத்துப் பரதேசி ஒருவர் இருக்கிறார். மடத்திற்கு எதிரே கமுகும் வாழையும் வெற்றிலைக் கொடியும் மிளகுக் கொடியும் வளர்ந்திருக்கின்றன. கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளையே அங்கே காண முடியும்.

கோயிலுக்குள்ளே புகுந்து விக்கிரகங்களை யெல்லாம் பார்த்தோம். இன்னும் சில விக்கிரகங்கள் வருமென்று சொன்னர். மடம், மண்டபம், மடைப்பள்ளி, முடியிறக்கு மண்டபம், வாத்திய மண்டபம் எல்லாம் கட்டவேண்டும். ஆண்டவன் அருளால் எல்லாம் நடக்கவேண்டும்” என்று அந்தக் கோயில் தொண்டர் சொன்னார்.

"எல்லாம் நடக்கும்" என்று வீரகேசரி ஆசிரியர் ததாஸ்து சொன்னார்.

நானும் ஆமோதித்தேன். இரண்டு பாட்டுப் பாடினேன். எதிரே ஓடிக்கொண்டிருந்த அருவி எங்களோடு சேர்ந்து தன் இமிழிசையிலே ஆமென்று இசைத்தது இன்னும் என் காதில் அந்த அருவியின் ஒலி அமைதியின் கானமாகவும், அன்பின் இசையாகவும், தனிமையின் பாட்டாகவும், இயற்கையழகின் மழலையாகவும், முருகனுடைய சிலம்பொலியாகவும் கேட்கிறது.