இலைக் குணம்
← | இலைக் குணம் எழுதியவர்: புதுமைப்பித்தன் |
→ |
புதுமைப்பித்தன் கட்டுரைகள் - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. பிப்ரவரி-1954 |
அன்று நானும் எனது நண்பரும், ஒரு வேலையாகச் சென்றிருந்தோம். திரும்பும்போது நல்ல வெயில். எனக்குக் கொஞ்சம் தாகம் எடுத்தது. எனது நண்பருக்கோ காப்பி பிடிக்காது. இப்படிப்பட்ட பிரகிருதிகளும் உண்டா என்று ஆச்சரியப்படாதீர்கள். அதற்காகச் சாப்பாட்டுக்கடை என்று சொல்லப்படும் ஒரு கீழ்த்தர ஹோட்டலுக்குப் போய் சுக்கு வென்னீர் கொண்டு வரச்சொன்னோம். அங்கே இருவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஒருவர் வினாயக பகவானுக்கு அண்ணா என்று சொல்லலாம். மற்றவரோ எனில் உண்ணாவிரத உபவாச மகிமைகளை அனுபவிப்பதில் அறிந்த மகான் போல் தோன்றினார். முதற் கூறப்பட்ட மனிதர் சுமார் ஒரு அரைப்படி மோர் சாதத்தைச் சட்னியுடன் வேட்டையாடின காட்சியை எப்படியுரைப்பேன்! இலை யாழ்வானிடத்தில் இடையறா அன்பு! ஒன்று மாத்திரம் சொல்கிறேன் ; அவரது கை தறியின் ஓடம் போல் இலைக்கும் வாய்க்குமாகப் பறந்தது. கடைசியாக இலையை வழித்து நக்கி விட்டு, பக்கத்திலிருந்த ஒரு செம்பு ஜலத்தையும் ஒரே மூச்சில் தனது குட்சியில் செலுத்தி விட்டு 'ஹாய்' என்ற சப்தத்துடன் சுவா¢ல் சாய்ந்தார். என்ன! எரிமலைகள் நெருப்பைக் கக்கும் பொழுது, பாதாளத்திலிருந்து ஒரு பெரும் ஹ¤ங்கார சப்தம் புரண்டு கொண்டே வருமாம். அதுபோல், எங்கே வாந்தி எடுக்கப் போகிறாரோ என்று நினைத்தேன். நல்ல காலம் அது சாதாரணமான ஏப்பந்தான். சாப்பாட்டை எப்படி அனுபவித்தாரோ அப்படியே ஏப்பத்தையும் நன்றாக அனுபவித்துத்தான் விட்டார். 'கிறள்' புலவர் வேடிக்கையாக, தின்றாதனால் ஆயபயன் என்கொல் ஏப்பந்தான் நன்றுவராஅ தெனின் என்றதின் உண்மையைக் கண்டேன்.
"சார் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டுமானால், இந்த ரயிலுக்கே புறப்படவேண்டும்" - என்று எழுந்தார் வினாயகர் அண்ணா.
சேர்மாதேவி, திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து முக்கால் மணி நேரப் பிரயாணம்.
"ஏன் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டும்?" என்று தயங்கினார் உபவாச விரதர்.
"ஏன் நாம் சேர்மாதேவியில் இறங்க வேண்டும்?" என்று ஆச்சரியமும் கோபமும் கலந்த குரலில் திருப்பிச் சொல்லி விட்டு, "ஏன்? என்ன காபி சாப்பிட வேண்டாமா?" என்றார் இந்தப் பூலோக வினாயகர்.
இவர் இப்படிப் பதில் சொல்லும் பொழுது அவரது அந்தராத்மாவின் "மருமத்தில் எறிவேல்" பட்டதுபோல் தோன்றியது அவரது குரலின் தொனி. திருச்செந்தூர் போய் விட்டு வருகிறவர்கள் திருநெல்வேலி ஜங்ஷனில் மத்தியான போஜனத்தை முடித்து விட்டு, சேர்மாதேவியில் காப்பி சாப்பிட வேண்டும் என்று தெரியாத ஒரு மனிதனும் உண்டோ என்று ஆச்சரியப்பட்டார் இந்தக் கலிகாலக் கவந்தன். அவரது மனவுலகில், திருநெல்வேலி என்றால் திருப்தியான 'சாம்பார் சாதம், தயிர் சாதம்' என்றும், சேர்மாதேவி என்றால் ஒரு டஜன் இட்லி சட்னிகளை அடித்துச்செல்லும் பெரு வெள்ளமாகிய காப்பி என்ற சிற்றுண்டி என்றும் பொருள்பட்டு நின்றது.
இம்மாதிரி இலையாழ்வாருக்குப் பக்தி செலுத்தும் அன்பர்களை மரியாதைக் குறைவாக எழுதுவதாக நினைக்கக்கூடாது. என்ன! நமது பண்டைக் கிழவியின் கவிகள், நமது இலக்கியத்தில் அவள் உண்ட விருந்துகளின் ஜாப்தாக்களாகப் பரிமளிக்கின்றன அல்லவா?
- அடகென்று சொல்லி அமுதத்தையிட்ட
- கடகம் செறிந்த கை
- மட்டுமா ஒளவையின் ஓவியத்தில் பதிக்கப்படுகிறது! கைக்குப்பின் நங்கையின் மனமும் வன்மையுமன்றோ நமது மனக்கண் முன் நிற்கிறது. மற்றும், வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் முரமுரெனவே புளித்த மோரும் பரிந்திட்ட புல்வேளூர், அவனது வண்மையையும் நமது கிழவி காலவரியை எதிர்த்துப் புகழ் பெறுவதன் கவிகளில் நமக்குக் காண்பிக்கிறாள். விருந்து மணக்கும் இஇக்கவிகள் அவள் காலத்துச் சாதாரண மக்களின் உள்ள நிலையையும் வள்ளண்மையையும் நமக்குக் காட்டுகின்றன.
நான் எப்பொழுதும் ராமலிங்க சுவாமியைச் 'சாப்பாட்டுச் சாமி' என்று சொல்வது வழக்கம். கடவுள் என்றால் எத்தனை டஜன் மாம்பழங்கள் என்று சொல்லி விடுவார் போலிருக்கிறது. அவர் திருவாசகத்தை அனுபவித்த அருமையைப் பாருங்கள்!
- வான் கலந்த மாணிக்க வாசகத்தின் வாசகத்தை
- நான் கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ் சாற்றினிலே
- தேன் கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்தென்
- ஊன் கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இஇனிப்பதுவே!
இந்த 'மோஸ்தர்' இலக்கிய ஆராய்ச்சி நமக்குள் இன்னும் புறப்பட வில்லை. வந்தால் நமக்குக் கம்ப ராமாயணம் எத்தனை பதிர்பேணிக்குச் சமானம் என்று சொல்லி இஇலக்கியச் சுவையை லேசாக எடுத்து ஊட்டி விடுவார்கள்.
இவ்வடியார் கூட்டத்தில் நானும் ஒருவன். எனது அனுபவத்தைச் சிறிது கேளுங்கள்.
எனது நண்பரும் குருநாதருமானவர் பெயரைச் சொல்ல இஷ்டமில்லை. 'ரஸிகர்' என்று வைத்துக் கொள்ளுங்கள். நான் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ் இஇலக்கியம் என்றால், சமணரைக் கழுவேற்றுவதற்கும், "காதைக் குறும்பையளவாகத் தோண்டி எடுப்பதற்கும்" இடை இடையே "முதலையுண்ட பாலனை யழைத்தல்", "எலும்பைப் பெண்ணுரு வாக்குதல்" முதலிய செப்பிடு வித்தைகள் செய்வதற்கும், தற்காலத்தில் சர்வகலாசாலைப் பண்டிதர்கள் கால ஆராய்ச்சிகள் செய்து பால் மணம் மாறாத மாணவர் தலையில் சுமத்துவதற்கும், ஏற்பட்ட சித்திரவதை செய்யும் ஸ்பானிய இயந்திரம் (Spanish Engines of Inquisition) என்று எண்ணியிருந்தேன்.
ரஸிகர்தான் தமிழ் இஇலக்கியத்தின் உண்மை இனிமையைக் காட்டி என்னையனுபவிக்கச் செய்பவர்.
அவருடன் பேசுவதே ஓர் அனுபவம் என்று சொல்வேன்.
அவர் இப்போது சென்னையில் இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதைப் பற்றித்தான் நான் சொல்ல வந்தது.
குசலம் விசாரித்த பிறகு சாப்பிட உட்கார்ந்தோம். சமையல் அன்று விசேஷம், ஆனால் விருந்தல்ல. நான் பொறித்த குழம்பை, விளக்கெண்ணைப் பிள்ளைக்கும் நோயாளிக்கும் நெருங்கிய பந்து என்று நினைத்திருந்தேன். நான் அன்று உண்ட பொறித்த குழம்பு எந்த வெங்காய சாம்பாரையும் தூக்கியடித்துவிடும்.
பேச்சின் போக்கில் பாரதியாரின் "நெஞ்சு பொறுக்குதில்லையே..." என்ற நொண்டிச் சிந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர், சிலரைப் போல் பிரசங்க மாருதத்தால் என் மூளையைச் சிதற அடிக்கவில்லை. பாரதியின் பாட்டுக்கு "ஸ்பெஷல் ப்ளீடிங்" மாதிரி இன்ஷூரன்ஸ் ஏஜண்ட் வேலை செய்யவில்லை. அதைக் கேட்ட பிறகு பாரதி உண்மைக் கவி என்பதற்கு அந்தப் பாட்டு ஒன்று போதும் என்று பட்டது. அன்று பாரதியாரின் ஆவேசமும் மனக்கொதிப்பும் அந்தப் பொறித்த குழம்பு பெற்றது என்றால் வியப்பென்ன? பாட்டை அனுபவித்ததினால் உண்டான குதூஹலமும் எக்களிப்பும் அன்று உணவிற்கு ஒரு கவிதையுணர்ச்சியைக் கொடுத்தது.
ஆனால் ஒன்று. தயிர் சாதமும் மாங்காய் ஊறுகாயும் வாழ்க்கையின் ஓர் உன்னதமான ஆதர்சமாக வைப்பது சரியில்லை. சாப்பாடு உயிர் வாழ்வதற்கு அவசியந்தான். ஆனால் 'வாழ்க்கை' வேறு ; 'உயிர் வாழ்தல்' வேறு. வாழ்க்கை ஓர் அனுபவம். சிலர் உலகம் முழுவதையுமே சாப்பாட்டுக் கடையாக மதித்து விடுகிறார்கள்.
- * * *
கொஞ்ச நாளைக்கு முன் இந்த மாதிரி மனிதனை நான் சந்திக்க நேர்ந்தது. அவர் திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள க்ஷத்திரங்கள் எல்லாம் தரிசிக்க வந்திருந்தார். உண்மையில் வாழ்க்கையின்பத்தை அனுபவிக்க வேண்டுமென்றால் தாமிரவருணி தீரத்திலுள்ள கிராமாந்தரத்தில்தான் வசிக்க வேண்டும். நான் சந்தித்த மனிதனுக்கும் அதேதான் ஆசை! ஆனால் காரணம் வேறு. அவருக்கு வாய் அரை நிமிஷம் சும்மா யிராது.
சாப்பிட்டுக் கொண்டாவது அல்லது அதன் பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டாவது இருக்க வேண்டும்.
"அப்படிப் பேசாத நாளெல்லாம் பிறவாநாளே."
"சார்! போளி என்றால் கடம்பூர் போளிதான் சார். நான் எங்கெங்கேயோ பார்த்திருக்கிறேன்; அதற்கு ஈடு ஜோடு இஇந்த உலகத்திலேயே கிடையாது சார்."
இவர் இப்படிப் பேசி வருவதைப் பார்த்தால், உண்மையில் சைவப் பற்றுடைய பக்தர் ஒருவர் தேவாரத் திருமுறைகளைப் பக்தி சிரத்தையுடன் எடுத்து ஓதுவது போலிருந்தது. உண்பதே பெரிய சமயமாகக் கொண்ட சாப்பாட்டு நாயன்மாராக இருந்தார்.
உடனே சித்திரான்னத்திற்குப் பாய்ந்தார். "ஆமாம் சார்! ஜங்ஷனில் இறங்கும்பொழுது பசி அதிகம். அதுதான் முதல் தடவை போனது. அந்த ஹிந்துக் காலேஜ் பக்கத்தில் ஒரு பிராம்மணன் இருக்கிறான் சார். சித்திரான்னம் என்றால் அங்குதான் சார். செலவு ஜாஸ்தியில்லை - நான் வயிற்றுக்கு வஞ்சகம் செய்து மிச்சம் பிடிப்பவனல்ல, என்ன! போங்க, அந்த ஐயன் என்னதான் போடுவானோ..." என்று ஆரம்பித்து சித்திரான்ன மான்மியத்தை முடிப்பதற்குள் நாங்கள் ஜங்ஷனுக்கு வந்து சேர்ந்தோம்.
இப்படி இந்த மனிதன், தேடிக் கண்டு பிடித்த அம்பாசமுத்திரம் முறுக்கு, ஆழ்வார் திருநகர் தேங்குழல், நாங்கு நோ நெய்யப்பம், இத்தியாதி பொருள்களின் அருமை பெருமைகளை, கொலம்பஸ் அமெரிக்கா கண்டுபிடித்தமாதிரி, எங்களுக்கு எடுத்துக் சொல்லி திருநெல்வேலி ஜில்லா சாப்பாட்டுப் பூகோள சாஸ்திரத்தை எங்களுக்குக் கற்பித்தார்.
அவர் கண்ட திருநெல்வேலியை நான் கனவிலும் கண்டதில்லை. கடம்பூர் போளியும் பழனி பஞ்சாமிர்தமும் வாழ்க்கையின் ஆதர்சமாகக் கொண்டிருப்பவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் நடமாடவேண்டும்.