இளைஞர்களுக்கு தந்தை பெரியார் வரலாறு/வெளிநாடுகளில் பெரியார்
வெளிநாடுகளில் பெரியார்
தந்தை பெரியார் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் சென்று பல ஊர்களில் தன்மானக் கொள்கைகளை விளக்கிப் பேசினார். வெளிநாடுகளுக்கும் சென்றார். ஆங்காங்குள்ள புதுக் கொள்கைகளையும், புரட்சிக் கருத்துக்களையும், அறிந்து கொண்டார். தன்னுடைய இயக்கத்தைப் பற்றியும் அதன் கொள்கைச் சிறப்புகளையும் அந்த வெளிநாட்டினர் அறியச் செய்தார்.
தந்தை பெரியார் ஜெர்மனிக்குச் சென்றார். அங்கு பொதுவுடைமைக் கொள்கையுள்ள பல சங்கத்தினரைச் சந்தித்தார். அதுபோலவே ஸ்பெயின் நாட்டிலும் பொதுவுடைமைக் கருத்துக்கள் பரவி வருவதை அறிந்தார்.
தந்தை பெரியார் ரஷ்யாவிற்குச் சென்றபோது அங்கு பொதுவுடைமை ஆட்சி நடந்தது. பொதுவுடைமை அரசாங்கம் அவரைச் சிறப்பு விருந்தினராக வரவேற்றது. பல நகரங்களுக்கும், தொழிற்சாலை களுக்கும், அழைத்துச் சென்றது. பொதுவுடைமைக் கொள்கையால் ரஷ்யா புதுவாழ்வு பெற்றிருந்தது.
மக்கள் எல்லாரும் சமத்துவமாக புதியவாழ்வு பெற்று, மகிழ்ச்சியாக இருந்தார்கள். குறுகிய காலத்தில் அந்தநாடு பெரிய வளர்ச்சி பெற்றிருந்தது. அங்கு பல கூட்டங்களில் பெரியார் பேசினார். தமிழ்நாட்டில் தன்மான இயக்கம் பரவி வருவதை ரஷ்ய மக்களுக்குக் கூறினார் அவர்கள் பெரியாருடைய பொதுநலக் கொள்கைகளைப் பெரிதும் பாராட்டினர்.
பெரியார் இங்கிலாந்துக்குச் சென்றார். அங்கு அப்போது தொழிற்கட்சி ஆட்சி நடத்தியது. அவர்கள் பெரியாருக்கு நல்ல வரவேற்பளித்தனர். தொழிற்கட்சியின் கூட்டம் ஒன்று நடந்தது. ஐம்பதாயிரம் தொழிலாளர்கள் கூடியிருந்தார்கள். தொழிற்கட்சித் தலைவர் ஒருவர் அங்கு அந்தக் கூட்டத்தில் பேசினார். அவர் தொழிற்கட்சி ஆட்சியில் தொழிலாளர் அடைந்த சிறப்புகளை விளக்கிப் பேசினார். பெரியார் அந்த கூட்டத்தில் பேசும் போது அவர்களைக் கண்டித்துப் பேசினார். ஏனெனில் அப்போது இங்கிலாந்து அரசாங்கம்தான் இந்தியாவை ஆண்டு கொண்டிருந்தது. இங்கிலாந்தில் தொழிலாளர்களுக்கு நன்மை செய்ததாகச் சொல்லுகிறீர்கள். உங்கள் ஆட்சியில் இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் மோசமான நிலையை நீக்க என்ன செய்தீர்கள். அங்குள்ள தொழிலாளர்கள் உங்களுக்கு மனிதர்களாகத் தெரியவில்லையா? இந்தியச் சுரங்கங்களில் பத்துமணி நேர வேலைக்கு எட்டணா கூலி கொடுக்கப்படுகிறது. அதே வேலைக்கு நாற்பதாயிரம் பெண்களுக்கு அஞ்சனாதான் கொடுக்கப்படுகிறது. இந்தக் கொடுமையை எல்லாம் நீக்க முன்வராத கட்சி தொழிற்கட்சி தானா!
இங்கிலாந்துத் தொழிலாளர்களே மனிதனுக்கு மனிதன் வேறுபாடு காணும் இந்தக்கட்சிகளை நம்பாதீர்கள். உலகத் தொழிலாளர்கள் எல்லோரும் சமம் என்ற நிலை வந்தால்தான் உண்மையான விடுதலை கிடைக்கும். என்று பேசினார். வெள்ளைக்காரர்கள் அயர்ந்து போனார்கள்.
இலங்கையில் இருந்த பெரிய தலைவர்கள் எல்லாம் பெரியாருக்குச் சிறந்த வரவேற்பு அளித்தனர். ஒவ்வொரு கூட்டத்திலும் தன்மானக் கருத்துக்க களையும், பொதுவுடைமைக் கருத்துக்களையும் விளக்கிப்பேசினார். தொழிலாளர் நலம் குறித்தும் பேசினார்.
மலேயாவிற்குப் பெரியார் இரண்டு முறை போயிருக்கிறார். அங்குள்ள தமிழர்கள் பெரியாருக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்தனர். இன்றைக்கும் மலேயாவில் ஏராளமான தன்மான இயக்கத்தவர் இருந்து வருகிறார்கள். அந்தக் காலத்தில் ஒருவர் பேசும்பொழுது இடையில் ஏதாவது கேள்வி கேட்டால் பேச்சாளர்களுக்குக் கோபம் வரும். பெரியார் பேசும் கூட்டங்களில் கேள்வி கேட்பதே ஒரு சிறப்பாக இருக்கும். கேள்வி கேட்கக் கேட்க பெரியார் விறுவிறுப்பாகப் பேசுவார்.
ஒரு கூட்டத்தில் "சாமியை கல் என்கிறீர்களே இது சரியா?" ஒருவர் கேட்டார். "வாருங்கள் போய்ப் பார்ப்போம். அது கல் தான் என்பதைக் காட்டுகிறேன்" என்றார் பெரியார்.
அதற்கு அந்த மனிதர் "அந்தக்கல் மந்திரம் செபித்து சக்தி வரப்பெற்றது" என்று கூறினார். அதற்குப் பெரியார் அந்த மந்திரத்தைச் செபித்து வாடிக்கொண்டிருக்கும் ஒரு ஏழை மனிதனுக்கு சக்தி வரச் செய்யுங்களேன். அவனாவது நன்றாக இருப்பானே" என்று கேட்டார்.
இன்னொரு கூட்டத்தில் "சாமியை வணங்கக் கூடாது என்கிறீர்கள். அப்படியானால் எதை வணங்குவது?" என்று ஒருவர் கேட்டார்.
"வணங்குவது. அடிமைத்தனத்தின் அடையாளம். எதையும் வணங்க வேண்டாம். சுதந்திரமாக வாழுங்கள்" என்று பதில் அளித்தார்.
பெரியார் பர்மிய நாட்டில் நடந்த உலக புத்தமத மாநாட்டிற்குச் சென்றிருந்தார். அங்குள்ள தொழிலாளத் தோழர்கள் மிகப்பெரிய வரவேற்புக் கொடுத்துச் சிறப்பித்தார்கள்.
பர்மா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் தொழிலாளர்கள் அங்கே தன்மானக் கொள்கைகளைப் பரப்பி வந்தார்கள். இந்நூலாசிரியர் அப்போது பர்மாவின் தலைநகரான இரங்கூனில் வசித்து வந்தார். இந்நூலாசிரியரே அந்த இயக்கத்தின் செயலாளராக இருந்தார். 'பொன்னி' என்ற தமிழ் இலக்கிய இதழின் துணை ஆசிரியராக இருந்தபோது பெரியார் இந்நூலாசிரியரை அறிந்திருந்தார். நூலாசிரியரின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்கிப் பெரியார் அந்த வரவேற்பைப் பெருமையோடு ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் சிறிதும் ஒய்வில்லாமல் சென்று புதுக்கருத்துக்களை விதைத்தவர் பெரியார். பட்டிதொட்டி எங்கும் பெரியார் ஏற்படுத்திய விழிப்புணர்ச்சி தமிழ் மக்கள் முன்னேற்றத்திற்கு அடிப்படையாகும். இன்று தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்கள் பழைய பழக்க வழக்கங்களை விட்டுவிட்டார்கள். எதையும் அறிவோடு சிந்திக்கிறார்கள். மக்கள் யாவரும் ஒரே தந்தை பெரியார் நிலையினர் என்ற கருத்து நிலவுகிறது. இதற்கெல்லாம் பெரியாரின் ஒயாத உழைப்புத்தான் காரணமாகும்.