இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/கேமன் : பிறன் மனை நயந்த பேதை

4. கேமன்‌ : பிறன்மனை நயந்த பேதை

இராசக்கிருக நகரத்தில்‌, பிம்‌பிசார அரசன்‌ அரசாண்ட காலத்தில்‌, அந்த அரசனுக்குப்‌ பொருள்‌ காப்பு அமைச்சராக இருந்தவர்‌ பெருஞ்செல்வரான அனாதபிண்டிகர்‌ என்பவர்‌. இவருக்கு அழகில்‌ சிறந்த மருகன்‌ ஒருவன்‌ இருந்தான்‌. இந்தக்‌ கட்டழகன்‌ பெயர்‌ கேமன்‌ என்பது. கேமன்‌ உரிய அகவை அடைந்து, கட்டழகு மிக்க காளையாக விளங்கினான்‌. இவனுடைய உடல்‌ அழகையும்‌, வாலிப வயதின்‌ செவ்வியையும்‌ காணும்‌ மகளிர்,‌ இவனைப்‌ பெரிதும்‌ விரும்பினர்‌. கேமனும்‌, ஆண் மகனுக்கு இருக்க வேண்டிய நிறையுடைமை என்னும்‌ மனத்தை அடக்கும்‌ ஆற்றல்‌ இல்லாதவனாக, பிறன் மனை நயந்து ஓழுக்கந் தவறி நடந்து கொண்டான்‌. ஆகவே, இவனை எல்லாரும்‌ வெறுத்தார்கள்.

ஒரு நாள்‌ இரவு, கூடாவொழுக்கத்தின்‌ பொருட்டு, நகரத்தில்‌ சுற்றித் திரிந்த கேமன்‌, பின்னிரவில்‌ தன்‌ வீட்டுக்குத்‌ திரும்பி வந்து கொண்டிருந்தான்‌. காவல்‌ சேவகர்‌ அவனைப்‌ பிடித்துக் கொண்டு போய்‌, அரசனிடம்‌ விட்டார்கள்‌. அரசன்‌ இவன்‌ இன்னான்‌ என்பதை அறிந்து, இவனைத்‌ தண்டித்தால்‌, அமைச்சரின்‌ மானம்‌ கெடும்‌ என்று கருதி, மன்னித்து விட்டு விட்டார்‌. ஆனால்‌, கேமன்‌ தன்‌ தீய ஒழுக்கத்தைத்‌ திருத்திக்‌ கொள்ளவில்லை. பழையபடியே, பிறன்மனை நயந்து ஒழுகினான்‌. மீண்டும்‌ ஒரு முறை நகரக்‌ காவலரிடம்‌ சிக்குண்டான்‌. மீண்டும்‌ அரசர்‌, அமைச்சரின்‌ மானத்‌தைக்‌ கருதி, அவனைத்‌ தண்டிக்காமல்‌ விட்டார்‌. கேமன்‌ அப்போதுந் திருந்தவில்லை. தனது தீயொழுக்கத்தைத்‌ தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான்‌. மூன்றாந்‌ தடவையும்‌, கேமன்‌ சேவகரால்‌ பிடிக்கப்பட்டான்‌. அரசர்‌ அவன்‌ செயலைக்‌ கண்டு மனம்‌ வருந்தினார்‌. அறிவுரைகளைக்‌ கூறி, அவனை மீண்டும்‌ மன்னித்து விட்டார்‌. ஆனால்‌, கேமன்‌ தனது தீயொழுக்கத்தைத்‌ திருத்திக் கொள்ளவில்லை.

தன்‌ மருகனுடைய தீயொழுக்கத்தையும்‌, மூன்று முறை சேவகரிடம்‌ அவன்‌ அகப்பட்டுக் கொண்டதையும்‌, அரசர்‌ தம் பொருட்டு அவனை மூன்று தடவை மன்னித்து விட்டதையும்‌, நகர மக்கள்‌ அவனை இகழ்ந்து பேசுவதையும்,‌ அமைச்சர்‌ அனாதபிண்டிகர்‌ கேள்விப்‌ பட்டார்‌. பெரிதும்‌ மனம்‌ வருந்தினார்‌. அவனுக்கு நல்லறிவு கொளுத்தி, நன்னெறியில்‌ நிறுத்தக்‌ கூடியவர்‌ புத்தர்‌ பெருமான்‌ ஒருவரே என்பதை அறிந்து, கேமனைத்‌ தம்முடன்‌ அழைத்துக் கொண்டு, பெருமான்‌ புத்தரிடம்‌ சென்றார்‌. சென்று அவரை வணங்கி, தாம்‌ வந்த நோக்கத்தை அவருக்குத்‌ தெரிவித்துக்‌ கேமனுக்கு நல்லறிவு புகட்டியருள வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொண்டார்‌. புத்தர்‌ பெருமான்‌, கேமனுக்கு நல்லறிவு கொளுத்தினார்‌. அதன்‌ சுருக்கம்‌ இது :-

“பிறன்மனை நயக்கும்‌ பேதை நான்கு தீமைகளைத்‌ தேடிக் கொள்கிறான்‌. முதலில்,‌ பாவம்‌ அவனைச்‌ சேர்‌கிறது. இரண்டாவது, அவன்‌ கவலையின்றித்‌ தூங்கும்‌ நல்லுறக்கத்தை இழந்து விடுகிறான்‌. மூன்றாவது, எல்லோராலும்‌ நிந்திக்கப்பட்டுப்‌ பழிக்கப்படுகிறான்‌. நான்காவது, நிரயத்தையடைகிறான்‌. ஆகையால்‌, நல்லறிவுள்ள ஆண்மகன்‌ பிறன் மனைவியை விரும்ப மாட்டான்‌.

“பாவத்தைப்‌ பெற்றுக் கொண்டு மறுமையில்‌ துன்பத்தை அடைகிறபடியினாலும்‌, கூடாவொழுக்கத்தினாலே ஆணும், பெண்ணும்‌ அடைகிற இன்பம்‌ அற்பமானதாகையினாலும்‌, மனத்தில்‌ எப்போதும்‌ அச்சம்‌ குடி கொள்ளுகிறபடியாலும்‌, அரசனால்‌ கடுமையாகத்‌ ‌ தண்டிக்கப்படுவதினாலும்‌, அறிஞனாகிய ஆண்மகன்‌, பிறன்‌ மனைவியை விரும்பி ஒழுக்கந் தவறி நடப்பது கூடாது.”

புத்தர்‌ பெருமான்‌ அருளிய இந்த நல்லறிவுரையைக்‌ கேட்ட கேமன்‌, அன்று முதல்‌ தீயொழுக்கத்தை - பிறன்‌ மனைவியை நாடும்‌ இழிசெயலை விட்டு, நல்லொழுக்கத்தோடு நடந்து கொண்டான்‌. அவன்‌ திருந்தியதைக்‌ கண்டு, எல்லோரும்‌ மகிழ்ச்சியடைந்தார்கள்‌.

குறிப்பு :- பிறன்மனை விரும்பியொழுகும்‌ தீயொழுக்கத்தைப்‌ பற்றிப்‌ புத்தர் பெருமான்‌ அருளிய பொன்மொழிகளோடு, திருவள்ளுவர்‌ அருளிய நன்மொழிகளையும்‌ மனத்திற்‌ கொள்வது நலம்‌.

பகைபாவம்‌ அச்சம்‌ பழியென நான்கும்‌

இகவாவாம்‌ இல்லிறப்பான்‌ கண்‌.

எனைத்துணையர்‌ ஆயினும்‌ என்னாம்‌? தினைத்துணையும்‌
தேரான்‌ பிறன்‌இல்‌ புகல்‌.

அறன்வரையான்‌ அல்ல செயினும்‌ பிறன்வரையாள்‌
பெண்மை நயவாமை நன்று.

அறன்கடை நின்றாருள்‌ எல்லாம்‌ பிறன்கடை
நின்றாரின்‌ பேதையார்‌ இல்‌.

அறன்‌இயலான்‌ இல்வாழ்வான்‌ என்பான்‌ பிறன்‌இயலாள்‌

பெண்மை நயவா தவன்‌.

பிறன்மனை நயத்தலைப் பற்றிப்‌ புத்தர்‌ பெருமான்‌ அருளிய நல்லுரைகளும்‌, வள்ளுவர்‌ கூறிய நன்மொழிகளும்‌ ஒத்திருத்தல் காண்க.