இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/கொலைக் குற்றம்

6. கொலைக்‌ குற்றம்‌

சேதவனம்‌ என்னும்‌ ஆராமத்திலே புத்தர்‌ பெருமான்,‌ துறவிகள்‌ குழுவோடு எழுந்தருளியிருந்த போது, வழக்கம் போலக்‌ காலையிலும்,‌ மாலையிலும்‌ சொற்பொழிவு செய்து வந்தார்‌. அவருடைய சொற்‌பொழிவைக்‌ கேட்பதற்காக, நகரத்திலிருந்து மக்கள்‌ திரள்‌ திரளாகச்‌ செல்வார்கள்‌. இது நாள் தோறும்‌ வழக்கமாக நடந்து வந்த நிகழ்ச்சி. மாலை நேரச்‌ சொற்‌பொழிவு முடிந்தவுடன்,‌ மக்கள்‌ நகரத்திற்குத்‌ திரும்பி வரும் போது, இரவு வந்து விடும்‌,

ஒரு நாள்‌ இரவு, மக்கள்‌ நகரத்திற்குத்‌ திரும்பி வந்து கொண்டிருந்த போது, சுந்தரி என்னும்‌ துறவிப்‌ பெண்‌ அவர்கள்‌ எதிரில்‌ வந்து கொண்டிருந்தாள்‌. சுந்தரி தன்‌ பெயருக்கேற்ப அழகுள்ளவள்‌. நடுத்தர வயதுள்ளவள்‌. புத்த மதத்திற்குப்‌ புறம்பான வேறு மதத்தைச்‌ சேர்ந்த துறவியாகிய இவள்‌, பூ, பழம்‌, சந்தனம்‌ முதலியவற்றைக்‌ கையில்‌ எடுத்துக் கொண்டு, சேதவனச் சாலை வழியாக வருவதை மக்கள்‌ கண்டார்கள்‌. ‘இந்த இரவு வேளையில்‌, இந்தப்‌ பொருள்களுடன்‌ தனித்து இவள்‌ எங்கே போகிறாள்?’ என்று மக்களுக்கு வியப்புத்‌ தோன்றிற்று. அவர்கள்‌, “எங்கே அம்மா போகிறீர்கள்‌?” என்று கேட்டார்கள்‌. “கௌதமரிடம்‌ போகிறேன்‌,” என்று அவள்‌ விடை கூறினாள்‌.

அடுத்த நாள்‌ காலையில்,‌ மக்கள்‌ சேதவன ஆராமத்‌திற்குப்‌ புத்தரின்‌ அறிவுரைகளைக்‌ கேட்கச்‌ சென்று கொண்டிருந்த போது, சுந்தரி எதிரில்‌ வந்து கொண்‌டிருந்தாள்‌. அவர்கள்‌ வியப்படைந்து “எங்குச்‌ சென்று வருகிறீர்‌?” என்று கேட்டார்கள்.‌ “கௌதமரிடம்‌ இருந்து வருகிறேன்‌. இராத்திரி அங்குத்‌ தங்கியிருந்‌தேன்‌,” என்று கூறினாள்‌. அன்று மாலையிலும்‌, சுந்தரி அவர்களுக்கு முன்‌ எதிர்ப்பட்டாள்‌. “எங்குப்‌ போகிறீர்கள்‌ அம்மா?” என்று கேட்டார்கள்‌. “கௌதம முனிவரிடம்‌ போகிறேன்‌. இரவு முழுவதும்‌ அங்கே தங்கியிருப்பேன்‌,” என்று விடை கூறிச்‌ சென்றாள்‌.

அடுத்த நாள்‌ காலையிலும்,‌ அவள்‌ அவர்களுக்கு முன்‌ எதிர்ப்பட்டாள்‌. “எங்கிருந்து வருகிறீர்கள்‌?” என்று கேட்டார்கள்‌. “ஏன்‌? கௌதம முனிவரிடம்,‌ இரவில்‌ தங்கி விட்டு வருகிறேன்‌” என விடை கூறிச்‌ சென்றாள்‌.

இவ்வாறு பல நாள்கள்‌ சென்‌றன. ஓவ்வொரு நாளும்‌, சுந்தரி காலையிலும்,‌ மாலையிலும்‌ மக்கள்‌ வரும்‌ போதும்‌, போகும் போதும்‌ எதிர்ப்பட்டாள்‌. எதிர்ப்‌படும்‌ போதெல்லாம்,‌ அவர்கள்‌ சுந்தரியை, “எங்கே போகிறாய்‌? எங்கிருந்து வருகிறாய்‌?” என்று கேட்‌பார்கள்‌. “கௌதம புத்தரிடம்‌ போகிறேன்‌; இரவில்‌ அவருடன் தங்கியிருப்பேன்”, “கௌதமரிடமிருந்து வருகிறேன்‌, இரவில்‌ அவருடன்‌ தங்கியிருந்தேன்‌” என்று அவள்‌ விடை கூறுவாள்‌. மக்கள்‌ பலவாறு பேசத்‌ தலைப்பட்டார்கள்‌. இவளுடைய வயது, அழகு, எடுத்துச்‌ செல்லும்‌ பொருள்கள்‌, செல்லும்‌ நேரம்‌, திரும்பும்‌ காலம்‌ இவையெல்லாம்‌ மக்கள்‌ மனத்தில்‌ ஐயம்‌ உண்டாக்கி விட்டன ‘துறவியாகிய சுந்தரிக்கும்‌ துறவியாகிய கௌதம புத்தருக்கும்‌ ஏதோ கூடா ஒழுக்கம்‌ உண்டு போல்‌ தெரிகிறது’ என்று பேசிக்‌ கொண்டார்கள்‌. ‘ஊர்‌ வாயை மூட உலை மூடியுண்‌டா?’ அதிலும்‌, அவளே தன்‌ வாயால்‌ சொல்லும் போது, மக்கள்‌ அவதூறு பேசுவதற்குச்‌ சொல்ல வேண்டுமா?

இந்தச்‌ செய்தி, நகரத்தில்‌ மறைமுகமாகவும்‌, வெளிப்படையாகவும்‌ பேசப்பட்டது. இதன்‌ உண்மையை அறிய, மக்கள்‌ காலையிலும்,‌ மாலையிலும்‌ அவ்வழியாக வரத் தொடங்கினார்கள்‌. சுந்தரி தவறாமல்‌, அவர்களுக்கு எதிர்ப்பட்டுக் கொண்டேயிருந்தாள்‌. நகரம்‌ முழுவதும்‌, இதைப் பற்றிய பேச்சு பேசப்‌ பட்டது. புத்த சமயத்‌ துறவிகளைப்‌ பற்றியும்‌, கௌதம புத்தரைப் பற்றியும்‌ இழிவாகப்‌ பேசத்‌ தலைப்பட்டனர்‌.

ஒரு நாள்‌ காலையில்‌, சுந்தரி கொலை செய்யப்பட்டுக்‌ கிடந்தாள்‌. அவளுடைய உடம்பு, சேதவன ஆராமத்துக்கு அண்மையில்,‌ குப்பை மேட்டிலே கிடந்தது. மார்பில்‌ கத்தியால்‌ குத்துப்பட்டுப்‌ பிணமாகக்‌ கிடந்தாள்‌. இச்‌செய்தியறிந்து, ஏராளமான மக்கள்‌ கூட்டம்‌ கூடி விட்டனர்‌. சுந்தரி சார்ந்திருந்த சமயத் துறவிகளும்‌, பெருங்‌ கூட்டமாய்‌ அவ்விடம்‌ வந்து விட்டனர்‌. அவர்கள்‌ கூச்சலிட்டு, ஆர்ப்பாட்டம்‌ செய்தனர்‌. “எங்கள்‌ சமயத்துச்‌ சுந்தரியை, புத்த சமயத்‌ துறவிகள்‌ கொலை செய்து விட்டார்கள்‌” என்று குற்றம்‌ சாட்டினர்‌. பிறகு அந்தத்‌ துறவிகள்‌ கூட்டமாகச்‌ சேர்ந்து, அரசனிடம்‌ முறையிடச்‌ சென்றார்கள்‌. அவர்கள்‌ பின்னே, மக்கள்‌ கூட்டம்‌ பெருந்திரளாகச்‌ சென்றது.

அரண்மனையையடைந்து, அரசன்‌ அவைக்களம்‌ சென்றார்கள்‌. “எங்கள்‌ சமயத்தைச்‌ சேர்ந்தவளாகிய, சுந்தரி என்னும்‌ பெண் துறவியைப்‌ புத்த சமயத்‌ துறவிகள்‌ கொலை செய்து, குப்பை மேட்டில்‌ போட்டு விட்டார்கள்‌. இது முறையா? தகுமா?” என்று முறையிட்டார்கள்‌.

“ஏன்‌ கொலை செய்தார்கள்‌?” என்று. கேட்டார்‌ அரசர்‌.

“சுந்தரி அழகுள்ள பெண்‌. அவளுக்கும்‌, கௌதம புத்தருக்கும்‌ சில காலமாகக்‌ கூடாவொழுக்கம்‌ ஏற்பட்டிருந்ததாக, ஊரில்‌ பேசிக் கொண்டார்கள்‌. அந்தக்‌ குற்றத்தை மறைப்பதற்காக, அவருடைய மாணவர்கள்‌ இப்படிச்‌ செய்‌திருக்கிறார்கள்‌,” என்று கூறினர்‌ சமயவாதிகள்‌.

“இன்னார்‌ கொலை செய்தார்‌ என்பதற்குச்‌ சான்று ஏதேனும்‌ உண்டோ?”

“இல்லை. இன்று காலையில்‌ சுந்தரியின்‌ பிணம்,‌ புத்த சமயத்‌ துறவிகளுடைய குப்பை மேட்டில்‌ கிடக்கிறது என்று கேள்விப்பட்டோம்‌. போய்ப்‌ பார்த்தோம். அங்கே பிணம்‌ கிடக்கிறது”, என்றார்கள்‌.

“நல்லது! குற்றவாளிகளைக்‌ கண்டு பிடித்துத்‌ தண்டிப்பது எங்கள்‌ வேலை. நீங்கள்‌ போய்‌, உங்கள்‌ சமயத்துச்‌ சுந்தரியின்‌ பிணத்தை அடக்கம்‌ செய்யுங்கள்‌” என்று கூறினார்‌ அரசர்‌.

சமயவாதிகள்‌ திரும்பி வந்‌து, சுந்தரியின்‌ பிணத்தை அடக்கம்‌ செய்வதற்காகச்‌ கடுகாட்டிற்கு. ஊர்வலமாகக்‌ கொண்டு போனார்கள்‌. போகும் போது, “புத்த சமயத் துறவிகள்‌ சுந்தரியைக்‌ கொன்று விட்டார்கள்‌,” என்று தெருவில்‌ கூச்சலிட்டுக் கொண்டு சென்றார்கள்‌. புத்த சமயத் துறவிகளைப்‌ பற்றியும்‌, கௌதம புத்தரைப்‌ பற்றியும்‌ முன்னமே ஏற்பட்டிருந்த பழி மொழியோடு, இவர்கள்‌ பரப்பிய செய்தி, மக்களிடத்தில்‌ வெறுப்பையுண்டாக்கிற்று. மக்கள்‌ புத்த சமயத் துறவிகளைப் பற்றிப்‌ பலவாறு அலர்மொழி பேசத்‌ தொடங்கினார்கள்‌.

போலித்‌ துறவிகள்‌, பகல்‌ துறவிகள்‌ என்றும்‌, கொலைகாரக் கூட்டம்‌ என்றும்‌, மக்களை ஏமாற்றுகிறவர்கள்‌ என்றும்,‌ நகரமெங்கும்‌ புத்த சமயத் துறவிகளைப்‌ பற்றிப்‌ பேசிக் கொண்டார்கள்‌. துறவிகளைக்‌ காண்கிற இடத்தில்‌, அவர்களைப்‌ பழித்துப்‌ பேசியும்‌, இழிவு படுத்‌தியும்‌ பெருமைக் குறைவு செய்யத்‌ தொடங்கினார்கள்‌. அவர்கள் மீது வசை மாரி பொழியப்பட்டது. அத்துறவிகளுக்கு முன்பிருந்த பெருமதிப்பும்‌, சிறப்பும் பறி போயின. இகழ்ச்சியும்‌, ஏசலும்,‌ கேலிப் பேச்கம்‌ அவர்களின்‌ மேல்‌ வீசி எறியப்பட்டன.

புத்த மதத்‌ துறவிகளின்‌ நிலைமை துன்பத்துக்‌ கிடனாகி விட்டது. அவர்கள்‌ வெளியே தலை காட்ட முடியவில்லை. அவர்கள்‌ புத்தர்‌ பெருமானிடம்‌ சென்று, தங்கள் மீது மக்கள்‌ சுமத்தும்‌ பழியையும்‌, இகழ்ச்சிகளையும்‌ கூறினார்கள்‌. தங்கள் மீது மக்களுக்கு ஏற்பட்‌டுள்ள வெறுப்பை நீக்கா விட்டால்‌, தங்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும்‌ வீண் பழியைப்‌ போக்கா விட்டால், புத்த மதமே அழிந்து விடும்‌ என்று முறையிட்டார்கள்‌.

புத்தர்‌ பெருமான்‌ அமைதியோடு, அவர்கள்‌ கூறியவற்றைக்‌ கேட்டார்‌. கடைசியில்‌, “துறவிகளே! பொய்‌ கூறுகிறவர்கள்‌, நரகம்‌ அடைவார்கள்‌. வீண் பழி சுமத்துகிறவர்களும்‌, நரகம்‌ அடைவார்கள்‌. உண்மை வெளிப்படும்‌. நீங்கள் அஞ்ச வேண்டா,” என்று கூறியருளினார்‌.

நகரத்துக்கு வெளியேயிருந்த கள்ளுக் கடையிலே வழக்கம் போலக்‌ குடிகாரர்களின்‌ ஆரவாரம்‌ அதிகமாயிருந்தது. வெறியாட்டமும்‌, கூச்சலும்,‌ ஏசலும்‌, பிதற்றலும்,‌ பேச்சும்‌ உச்ச நிலையில்‌ இருந்தன. சுந்தரியின்‌ கொலையைப் பற்றிய பேச்சும்‌ அங்குப்‌ பேசப்பட்டது.

“சுந்தரியைக்‌ கொன்னுப்பூட்டாங்கடா. அவன்களை சும்மா விடரனா பார்‌,” என்று கூறி, ஒரு வெறியன்‌ மார்‌ தட்டி, மீசையை முறுக்கிக் கொண்டு, குடி மயக்கத்தில்‌ நிற்க முடியாமல்‌ தள்ளாடினான்‌.

அப்பொழுது இன்னொரு குடியன்‌, “அடே, என்னடா சொன்னே! என்ன செய்வே நீ? கிட்ட வாடா. அவளே குத்தின மாதிரி, ஒரே குத்துலே, யம லோகம்‌ அனுப்பிடுறேன்‌,” என்று சொல்லி, கத்தியால்‌ குத்துவது போலக்‌ கையை ஓங்கி, அவனைக்‌ குத்த வந்தான்‌. ஆனால்‌, குடி மயக்கத்தினால்‌ கீழே விழுந்தான்‌. எழுந்திருக்க முடியாமல்‌, உட்கார்ந்தபடியே மேலும்‌ உளறினான்‌. “டேய்! நான்‌ யார்‌ தெரியுமா? ஆம்பளேடா; சிங்கக்‌ குட்டி!” என்று வீரம் பேசி, மீசையை முறுக்‌கினான்‌.

“ஆமாண்டா. பொம்பளெயே கொன்னுபூட்ட ஆம்பளேடா இவன்! ஆம்பளேயாம்‌ ஆம்பளே! மீசையெ பாரு!” என்று பேசினான்‌ மற்றவன்‌.

“என்னடா சொன்னே. இதோ பார்‌ உன்னை கொன்னுடறேன்‌,'” என்று சினத்தோடு எழுந்து பாய்ந்தான்‌; வெறி மயக்கத்தில்‌ விழுந்தான்‌.

இந்தச்‌ சமயத்திலே நாலைந்து ஆட்கள்‌ அவர்களை அணுகி, அவர்களைப்‌ பிடித்துக்‌ கொண்டார்கள்‌. அவர்கள்‌ சாதாரண ஆட்களைப் போலக்‌ காணப்பட்ட போதிலும்‌, உண்மையில்‌ அரசாங்கச்‌ சேவகர்கள். சுந்தரியின்‌ கொலையைப் பற்றிப்‌ புலன்‌ அறிந்து, உண்மைக்‌ கொலையாளியைக்‌ கண்டு பிடிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சேவகர்கள்‌. குடிகாரர்கள்‌, அடுத்த நாள்‌ நீதிமன்றத்திலே நிறுத்தப்பட்டனர்‌. நீதிமன்ற உசாவலில்‌, சுந்தரியைக்‌ குத்திக்‌ கொன்றவன்‌ அந்தக்‌ குடிகாரன்‌ என்றும்‌, மற்றக்‌ குடிகாரன்‌ அவனுக்கு உதவியாக இருந்தவன்‌ என்றும்‌ தெரிந்தது.

“சுந்தரியை ஏன்‌ கொலை செய்தீர்கள்‌?” என்ற கேள்விக்கு, யாரும்‌ எதிர்பாராத விடை வந்தது. புத்த சமயத்தாருக்கு மாறாக இருக்கிற வேறு சமயத்‌ துறவிகள்‌ சிலர்‌, தங்களுக்குக்‌ காசு கொடுத்து, சுந்தரியைக்‌ கொன்று, புத்த துறவிகள்‌ தங்கியிருக்கும்‌ சேதவனத்துக்‌ குப்பை மேட்டில்‌ போட்டு விடும்படி சொன்னார்கள்‌ என்றும்‌, பெருந்தொகை கொடுத்தபடியால்‌, அதற்குத்‌ தாங்கள்‌ உடன்பட்டு அவளைக்‌ கொன்று விட்டதாகவும்‌ சொன்னார்கள்.. இந்தச்‌ செய்தி பெரிய பரபரப்பை உண்டாக்கி விட்டது.

பணம்‌ கொடுத்துக்‌ கொலை செய்யச்‌ சொன்ன துறவிகள் இன்னின்னார்‌ என்பதையும்‌ அவர்கள்‌ கூறினார்கள்‌. அந்தத்‌ துறவிகள்‌ நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப்பட்டு, கேள்வி கேட்கப்பட்டனர்‌. அவர்கள்‌, முதலில்‌ தங்களுக்கு ஒன்றும்‌ தெரியாதென்று கூறினார்கள்‌. ஆனால்‌, தப்ப முடியவில்லை.

இவர்கள்தாம்‌ தங்களை மறைமுகமாக அழைத்துச்‌ சுந்தரியைக்‌ கொலை செய்யும்படி. தூண்டினார்கள்‌ என்று, கொலை செய்தவர்கள்‌ சான்றுகளோடு கூறினார்கள்‌. கடைசியில்,‌ துறவிகள்‌ தங்கள்‌ குற்றத்தை ஒப்புக்‌ கொண்டார்கள்‌. “தங்கள் சமயத்தைச்‌ சேர்ந்த துறவியாகிய சுந்தரியை, நீங்களே கொலை செய்யச்‌ செய்ததின்‌ காரணம்‌ என்ன?” என்ற கேள்விக்குப்‌ புதுமையான விடை கிடைத்தது.

புத்த சமயத்துக்கு நாட்டில்‌ பெரிய செல்வாக்கும்‌, மதிப்பும்‌ இருக்கிறபடியினாலே, தங்கள் மதத்தை மக்கள்‌ முன் போல்‌ மதிப்பதில்லை. ஆகையினாலே, புத்த மதத்துத்‌ தலைவராகிய புத்தர்‌ மேல்‌ கூடாவொழுக்கப்‌ பழி சுமத்தி, அவர்‌ செல்வாக்கைக்‌ குறைக்க வேண்டுமென்று அவர்கள்‌ கருதினார்களாம்‌. அதற்குச்‌ சுந்தரியின்‌ உதவியை நாடினார்களாம்‌. அவளும்‌, அதற்கு உடன்பட்டு, நாட்டிலே பொய் வதந்தியை உண்டாக்கினாள்‌. தனக்கும்,‌ புத்தருக்கும்‌ கூடாவொழுக்கம்‌ உண்டு என்பதாக மக்களைக்‌ கருதும்படி செய்தாள்‌. மக்களில்‌ பெரும்பான்மையோர்‌ இந்த அலர்மொழியை நம்பினார்கள்‌.

இந்தச்‌ சமயத்தில்‌ சுந்தரியைப்‌ பௌத்தர்கள்‌ கொலை செய்து விட்டார்கள்‌ என்று மக்கள்‌ நம்பினால்‌, பௌத்தர்களுக்கு அடியோடு செல்வாக்கு இல்லாமல்‌ போகும்‌ என்று கருதிச்‌ சுந்தரியைக்‌ கொலை செய்யும்படி, ஏற்பாடு செய்தார்களாம்‌. இந்தச்‌ செய்தி புலனாய்வில்‌ வெளியாயிற்று.

கொலை செய்யத்‌ தூண்டியவர்களையும்‌, கொலை செய்தவர்களையும்‌ நகரத்‌ தெருக்களில்‌ ஊர்வலமாக அழைத்துக்‌ கொண்டு போய்‌, இவர்கள்‌ செய்த சூதுகளையும்‌, புரட்டுகளையும்‌ மக்களுக்கு வெளிப்படுத்தும்‌படி, அரசர்‌ சேவகர்களுக்குக்‌ கட்டளையிட்டார்‌. அதன்‌படியே, அவர்கள்‌ நகரமெங்கும்‌ சுற்றிக்‌ கொண்டு வரப்‌பட்டனர்‌. பிறகு, அவர்கள்‌ குற்றத்திற்குத்‌ தக்கபடி, தண்டனையடைந்தனர்‌.

நகர மக்கள்‌ உண்மை அறிந்த பிறகு, வியப்படைந்தார்கள்‌. சுந்தரி வேண்டுமென்றே, பொய்ப்‌ பழியைப்‌ பரவச்‌ செய்து, மக்களை நம்பச்‌ செய்ததை எண்ணி, அவள் மேல்‌ சினங்கொண்டார்கள்‌. புத்த துறவிகளின்‌ மேல்‌ மக்கள்‌ வீணாகப்‌ பழிமொழி கூறி, வெறுத்தல் செய்ததை எண்ணி, மனம்‌ வருந்தினார்கள்‌. புத்த மதம்‌ நாளுக்கு நாள்‌ மக்களிடம்‌ செல்வாக்கு அடைந்து, சிறப்புப்‌ பெறுவதைப்‌ பொறாமல்‌, வேறு மதத்துத்‌ துறவிகள்‌ வஞ்சனையாகச்‌ செய்த சூது, வீண் பழி என்பதை நன்றாகத்‌ தெரிந்து கொண்டார்கள்‌.

அன்று முதல்,‌ புத்த சமயத்‌ துறவிகளிடம்‌, மக்களுக்கு முன்பிருந்ததை விட நல்ல எண்ணமும்‌, நன்‌மதிப்பும்‌ ஏற்பட்டன. மக்கள்‌ அன்பாகவும்,‌ ஆதரவாகவும்‌ புத்தரைப்‌ போற்றினார்கள்‌.