இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்/பிச்சைச் சோறு

இளைஞர்க்கான

புத்தமதக் கதைகள்

1. பிச்சைச் சோறு


சித்தார்த்த குமாரன் அரண்மனையை விட்டு வெளிவந்து துறவியாய் விட்டார். அரசபோகங்களும் இன்ப நலங்களும் அவருக்குப் பிறப்புரிமையாக இருந்தும், அவற்றை வேண்டாமென்று உதறித் தள்ளினார். தாய் தந்தை மனைவி மக்கள் அரசுரிமை யாவும் துறந்து வந்துவிட்டார். இன்ப நலங்களைக் குறைவு இல்லாமல் துய்த்து வந்த அவர், தமது இருபத்தொன்பதாவது அகவையிலே (வயதிலே), மனித வாழ்க்கையின் வளமைப் பருவத்திலே, இல்லற வாழ்க்கை யைப் புறக்கணித்துத் துறவு பூண்டார். ஆண்மையை விளக்கும் அழகிய மீசையையும் தாடியையும், தலைமுடியையும் சிரைத்து அரசர்க்குரிய ஆடையணிகளை நீக்கிக் - காவியுடை உடுத்துத் துறவுக்கோலம் பூண்டார். கால்நடையாகவே நெடுந்தூரம் நடந்து சென்றார். இராசகிருக நகரத்தையடைந்து நகரவாயிலைக் கடந்து நகருக்குள்ளே சென்றார்.

வீதிகளில் இருந்தமக்கள் இவருடைய உடல் தோற்றத்தையும் முகப்பொலிவையும் வியந்து இமை கொட்டாமல் இவரையே பார்த்தார்கள். இவர் மண்ணுலகத்தில் வாழும் மனிதன் தானோ என்று ஐயுற்றார்கள். கடைத்தெருவில் பொருள்களை வாங்குவோரும் விற்போரும், தொழிற்சாலைகளில் தொழில் செய்வோரும், ஏனைய மக்களும் இவரை நெடுநேரம் பார்த்தவண்ணம் வியப்படைந்து நின்றனர். துறவுக் கோலம் பூண்ட சித்தார்த்தர், நேற்று வரையில் அரண்மனையில் அரசபோகத்தில் இருந்தவர், இன்று கையில் திருவோடு ஏந்தி வீடுவீடாகச் சென்று பிச்சை ஏற்கிறார். வீட்டிலுள்ளவர் தங்களிடம் இருக்கும் மிகுதி உணவை அவருக்கு அளிக்கின்றனர்.

நகரத்தில், பிம்பிசார அரசனுடைய சேவகர்கள்— முகப்பொலிவும், அழகான தோற்றமும் உள்ள இந்தப் புதிய துறவியைக் கண்டு வியப்படைந்து அரசனிடம் சென்று இவரைப்பற்றிக் கூறினார்கள். பிம்பிசார அரசன் அரண்மனையின் மாடியில் சென்று நின்று இவரைப் பார்த்தான். பார்த்தபிறகு தனக்குள் ஏதோ நினைத்து, "இந்த ஆள் எங்குச் சென்று என்ன செய்கிறார் என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்," என்று கட்டளையிட்டு அனுப்பினான்.

வீதியிலே வீடுதோறும் சென்று ஓட்டிலே பிச்சை ஏற்ற புதிய துறவி தமக்குப் போதுமான உணவு கிடைத்ததும் வந்தவழியே திரும்பி நடந்து நகர வாயிலைக் கடந்து வெளிவந்தார். நகரத்திற்கு அப்பால் உள்ள பண்டவ மலையை நோக்கி நடந்தார். மலையடி வாரத்தை யடைந்ததும் கிழக்குப்புறமாக அமர்ந்து தாம் கொண்டுவந்த பிச்சைச் சோற்றை உண்ணத் தொடங்கினார். பாலும் தேனும், பாகும் பருப்பும், மணமும் சுவையும் உள்ள அறுசுவை உணவை அரண்மனையிலே உண்டு பழகிய அரச குமாரன்— சுத்தோதன மன்னனுடைய ஒரே செல்வகுமாரன்— தாமாகவே துறவியாகி வீடு வீடாகப் பிச்சைச் சோறு வாங்கி, அதை முதன்முதலாக உண்ணத் தொடங்குகிறார்‌. ஒரு கவளம்‌ கையில்‌ எடுத்து, வாயில்‌ வைக்கிறார்‌. வாய்‌ குமட்டுகிறது; இந்த உணவை ஏற்றுக் கொள்ள மனம்‌ மறுக்கிறது; குடலைப்‌ புரட்டுகிறது. அவர்‌ இது வரையில்‌, பிச்சைச்‌ சோற்றைக்‌ கண்ணாலும்‌ பார்த்ததில்லை. இப்போது இதைக்‌ கண்டு, இதை உண்ண மனம்‌ மறுக்கிறது. வாயும்‌, வயிறும்‌ உண்ண மறுக்‌கிறதைக்‌ கண்டு இந்தத்‌ துறவி — புத்த நிலையை அடையப்‌ போகிறவர்‌—தம்‌ மனத்திற்கு இவ்வாறு அறிவுரை கூறினார்‌ :

“சித்தார்த்த! நீ செல்வம்‌ கொழித்த, சிறந்த அரச குடும்பத்திலே பிறந்து வேளை தோறும்‌ அறுசுவை உணவுகளை உண்ணவும்‌, தின்னவும்‌ பழகினாய்‌. சாலி நெல்‌ அரிசியால்‌ சமைத்த மணமும்‌, சுவையும்‌ உள்ள சோற்றை உண்டனை. அமிர்தம்‌ போன்ற. சுவையுடைய பாலும்‌, தேனும்‌, பாகும்‌, பருப்பும்‌ உட்‌கொண்டனை. இப்படியிருந்த நீ கந்தையை உடுத்தியிருந்த ஒரு துறவியைக்‌ கண்டு, ‘நானும்‌, இவரைப்‌ போலத்‌ துறவு பூண்டு, உணவை இரந்துண்டு வாழும்‌ நாள்‌ எப்போது வரும்‌; அந்த நிலையை எப்போது அடையப் பெறுவேன்‌’ என்று நினைத்து ஏங்‌கினாய்‌; இப்‌போது நீ இல்லற வாழ்க்கையை விட்டு, நீ விரும்பிய துறவற வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறாய்‌! பிச்சைச்‌ சோற்றைச்‌ சாப்பிட ஏன்‌ மறுக்கிறாய்‌? இதை ஏன்‌ வெறுக்கிறாய்‌? நீ செய்வது முறையல்லவே. துறவிகள்‌ உண்ண வேண்டியது பிச்சைச்‌ சோறுதானே!”

இவ்வாறு இவர்‌ தமக்குள்‌ சொல்லிக் கொண்ட போது, இவர்‌ மனத்தில்‌. இருந்த வெறுப்பு உணர்ச்சி. மறைந்தது. இந்த உணவை—இந்தப்‌ பிச்சைச்‌ சோற்றை— முதன்‌ முதலாக மன அமைதியோடு உட்‌கொண்டார்‌.

இவற்றை எல்லாம்‌ மறைந்து இருந்து பார்த்த அரசரின்‌ சேவகர்கள்‌ விரைந்து சென்று, பிம்பிசார அரசனுக்குக்‌ கூறினார்கள்‌. அரசரும்‌ உடனே புறப்‌பட்டுச்‌ சித்தார்த்தர்‌ இருந்த பண்டவ மலைக்கு வந்தார்‌. வந்து, இவருடைய உடற்‌ பொலிவையும்‌, முகத்தின்‌ அமைதியையும்‌, அறிவையும்‌ கண்டு, இவர்‌ அரசகுமாரன்‌ என்பதை அறிந்து கொண்டார்‌. பிறகு, இவ்வாறு கூறினார்‌ :-

“தாங்கள்‌ யார்‌? ஏன்‌ தங்களுக்கு இந்தத்‌ துறவு வாழ்க்கை? உயர்‌ குலத்திலே பிறந்த தாங்கள்‌, ஏன்‌ வீடுகள் தோறும்‌ பிச்சை ஏற்று உண்ண வேண்டும்‌? இந்தத்‌ துன்ப வாழ்க்கையை விடுங்கள்‌. என்‌ நாட்டிலே ஒரு பகுதியைத்‌ தங்களுக்கு அளிக்கிறேன்‌. தாங்கள்‌ சுகமே இருந்து, அரசாட்சி செய்‌து கொண்டிருக்கலாம்‌.”

இதைக்‌ கேட்ட சித்தார்த்தர்‌ கூறுகிறார்: “மன்னரே! அரசர்‌ மரபிலே, உயர்ந்த குலத்திலே பிறந்தவன்தான்‌ நான்‌. துய்ப்பதற்காக நிறைந்த செல்வமும்‌, வேண்டிய பல இன்பங்களும்‌, ஆட்சி செய்யக்‌ கபிலவஸ்து நகரமும்‌ எனக்கு இருக்கின்றன. என்‌ தந்‌தை சுத்தோதன அரசர்‌, நான்‌ அரண்மனையில்‌ இருந்‌து அரச போகங்களைத்‌ துய்க்க வேண்டுமென்றுதான்‌ விரும்புகிறார்‌. ஆனால்‌, அரசே! இன்ப நலங்களை நுகர்‌ந்‌து கொண்டு, ஐம்புலன்களைத்‌ திருப்‌திப்படுத்திக்‌ கொண்டு காலம்‌ .கழிக்க. என்‌ மனம்‌ விரும்பவில்லை. உயர்ந்த. அறிவை, பூரண மெய்ஞ்ஞானத்ன்‌த அடைவதற்காக இல்லற இன்ப வாழ்க்கையைத்‌ துறந்து வந்தேன்‌. ஆகவே, தாங்கள்‌ அளிப்பதாகக்‌ கூறும்‌ அரச நிலையும்‌, இன்ப வாழ்க்கையும்‌ எனக்கு வேண்டா.”

பிம்பிசார அரசர்‌, அரச நிலையையும்‌, இன்ப வாழ்க்கையையும்‌ ஏற்றுக் கொள்ளும்படி மீண்டும்‌, மீண்டும்‌ வற்புறுத்தி அழைத்தார்‌. சித்தார்த்தர்‌ அதனை மீண்டும்‌, மீண்டும்‌ உறுதியோடு மறுத்தார்‌.

சித்தார்த்தருடைய துறவு உள்ளத்தைக்‌ கண்ட பிம்பிசார அரசர்‌ வியப்படைந்தார்‌; இவரது மன உறுதியைக்‌ கண்டு தமக்குள்‌ மெச்சினார்‌.

“தாங்கள்‌ புத்த நிலையை அடையப் போவது உறுதி. புத்த பதவியையடைந்த பிறகு, தாங்கள்‌ முதன்‌ முதலாக அடியேன்‌ நாட்டிற்கு எழுந்தருள வேண்டும்‌,” என்று அரசர்‌ கேட்டுக் கொண்டார்‌. அரசர்‌ பேசும்‌ போது, அவரையறியாமலே அவருடைய தலை வணங்கிற்று; கைகள்‌ கூப்பின.

சித்தார்த்தர்‌ அவ்வாறே செய்வதாக விடையளித்‌தார்‌. பிம்பிசாரர்‌ விடை பெற்றுக் கொண்டு அரண்‌மனைக்குத்‌ திரும்பினார்‌. வரும்‌ வழியில்‌, அரசருக்குச்‌ சித்தார்த்தரைப்‌ பற்றிய எண்ணமே இருந்தது.

“நிறைந்த இன்ப நலங்களையும்‌, உயர்ந்த ௮ரச நிலையையும்‌ வேண்டுமென்றே மனதறிந்து உதறித்‌ தள்ளிய தூய துறவி இவர்‌. இப்படிப்பட்ட உண்மைத்‌ துறவிகளைக்‌ காண்பது அருமை; அருமை. இவர்‌ தவறாமல்‌ புத்த நிலையை யடைவார்‌. இவர்‌ எண்ணம்‌ நிறைவேறட்டும்‌. இவர்‌ முயற்சி வெல்வதாக,” தம்முள்‌ இவ்வாறு நினைத்‌துக் கொண்டே பிம்பிசார அரசர்‌ அரண்மனையை யடைந்தார்‌.