இளையர் அறிவியல் களஞ்சியம்/ஃபுளோரின்
ஃபுளோரின் : இஃது வாயு வடிவான மஞ்சள் நிறத் தனிமமாகும். துர்நாற்றமுடைய இத்தனிமத்தை 1886இல் கண்டறிந்தவர் ஃபிரெஞ்சு விஞ்ஞனியான ஹென்றி மாய்மான் என்பவராவார். உலக நிலப்பரப்பின் மேற்பகுதியில் 0.030 சதவிகிதம் இத் தனிமம் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். மற்ற தனிமங்கள் பலவற்றுடன் இஃது வினை புரிவதால் தனியாகக் கிடைப்பது அரிதாக உள்ளது. ஃபுளோரினை அதிக அளவில் கொண்டுள்ள தாதுக்களில் கிரியோலைட், ஃபுளோரிநாப்டைட்டு, ஃபுளோர்ஸ்பார் ஆகியவை முக்கியமானதாகும். இவற்றிலிருந்து மின்பகுப்பு முறையில் ஃபுளோரினைப் பிரித் தெடுக்கிறார்கள்.
ஃபுளோரின் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிலும் சாயப்பொருட்கள், கரைப்பான்கள், உயவுப்பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மயக்க மருந்துகள். பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பிலும் ஃபுளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிதண்ணிரில் மிகச் சிறு அளவில் கலக்கப்படுவதுண்டு. ஃபுளோரின் பற்சிதைவைத் தடுக்கும் தன்மை கொண்டது. எனவே, பற்சிதைவைத் தடுக்கும் ஃபுளோரைடு பற்பசை தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
ஃபுளோரின் கூட்டுப் பொருட்கள் பல்வேறு வழிகளில் பயன்படுகின்றன. கண்ணாடியை அரிக்கும் தன்மை இதற்கு உண்டாதலின் இஃது பிளாஸ்டிக் அல்லது மெழுகு பூசப்பட்ட புட்டிகளிலேயே வைக்கிறார்கள், வெப்பத்தை அளக்கும் வெப்பமானிகளில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம் பயன்படுத்தப் படுகிறது.
ஃபுளோரின் கூட்டுப் பொருளாகிய பிரயான் (Freon) என்பது குளிர்சாதனங்களில் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருளாகும். டெஃப்லான் (Defion) என்பதும் ஃபுளோரின் உள்ள ஒரு பிளாஸ்டிக் ஆகும். இதன் மற்றொரு சேர்மம் DDFF என்பது மிகச்சிறந்த காளான் கொல்லி ஆகும்.பற்சிதைவிலிருந்து பற்களைக் காப்பாற்ற ஃபுளோரின் கல்ந்த பற்பசை பயன் படுத்தப்படுகிறது.