இளையர் அறிவியல் களஞ்சியம்/அக்கரூட்டு

அக்கரூட்டு: மர வகைகளில் சிறந்த ஒன்று, இதை ஆங்கிலத்தில் 'வால்நட்' (Walnut) என்று அழைப்பார்கள். இம்மரம் 33 மீட்டர் உயரம்வரை வளரும். இதன் அதிகபட்ச சுற்றளவு 6 மீட்டர்வரை இருக்கும். இவை நூறாண்டுகளுக்கு மேல் உயிர் வாழக்கூடியவை. இம்மரங்கள் நீண்டு அழகாகத் தோற்றமளிப்பதால் இவை பெரும்பாலும் பூங்காக்களிலும் சாலை ஓரங்களிலும் வளர்க்கப்படுகின்றன. இவை ஆசிய நாடுகள் சிலவற்றிலும் ஐரோப்பா, அமெரிக்கா மேற்கிந்தியத் தீவுகளிலும் வளர்க்கப்படுகின்றன.

இம்மரத்தின் பகுதிகள் பலவும் நமக்குப் பயன்படுகின்றன. இதன் பட்டையும் கனியின் மேல்தோலும் சாயத்தொழிலுக்கும் பதனிடும் தொழிலுக்கும் பயன்படுகின்றன. கனியின் கொட்டைக்குள்ளிருக்கும் பருப்பு உண்ணச் சுவையாக இருக்கும். விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் உணவுக்குப் பயன்படுகிறது. ஓவியர்கட்குத் தேவைப்படும் எண்ணெய் வண்ணம் தயாரிக்கவும், அச்சு மை, சோப்பு போன்றவை செய்யவும் பயன்படுகிறது. இதனைக் கொண்டு மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

அக்கருட்டு மரம் உறுதியானது. செதுக்கு வேலைகளுக்கு மிகவும் ஏற்றது. இதைக்கொண்டு அழகிய மரச்சாமான்களும் கலைப் பொருட்களும் உருவாக்கப்படுகின்றன. இம்மரம் தகடுபோல் அறுக்கப்பட்டு ஒட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இது வெப்பத்தாலும் ஈரப்பசையாலும் பாதிக்கப்படுவதில்லை. எனவே, துப்பாக்கிக் கட்டை, விமானத்தின் சில பாகங்களுக்கும் அக்கருட்டு மரம் பயன்படுத்தப்படுகிறது. இம்மரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயன் படக்கூடியவைகளாகும்.