இளையர் அறிவியல் களஞ்சியம்/அடினாய்டு சுரப்பி
அடினாய்டு சுரப்பி : 'அடினாய்டு' என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். இதற்குச் 'சுரப்பியின் வடிவம்' என்பது பொருளாகும். அடித்தொண்டையில் அதிகப்படியாக நிண நீர் இழைமம் ஏற்படுவதுண்டு. இதுவே, 'அடினாய்டு’ என்பது. இதை மூன்றாவது அடி நாச்சதை என்றும் அழைப்பதுண்டு. இதுவும் உள்நாக்கைப் போன்றே பல அடுக்குத் திசுக்களைக் கொண்டதாகும். சில சமயங்களில் இதுவும் அழற்சிக்காளாகி தொண்டை நோயை உண்டாக்கும். அச்சமயங்களில் அடினாய்டு சுரப்பி பருத்து விடும். சளி தொண்டையில் நிரம்புவதால் அப்போது மூக்கால் மூச்சுவிடுவது கடினமாகி, வாயால் மூச்சுவிட நேரிடும். மேலும், நிறைய சளி கொட்டும்; வறட்டு இறுமல் ஏற்படும்; மூக்கால் பேசுவதுபோல் இருக்கும். இவையெல்லாம் இந்நோயின் அறிகுறிகளாகும். உடனடியாக இந்நோயைப் போக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் காதின் கேட்கும் திறன் பாதிக்கப்படும்.
அழற்சியடைந்த அடிநாச்சதையை நீக்கும் போது அழற்சியடைந்த அடினாய்டுவையும்
நீக்கிவிடுவது நல்லது. இதனால் உடலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை.
மூன்று வயது முதல் ஐந்து வயதுவரையுள்ள குழந்தைகளே இந்நோய்க்காளாகின்றன. ஒரு வயது வரையிலுள்ள குழந்தைகளை இந்நோய் பாதிப்பதில்லை.