இளையர் அறிவியல் களஞ்சியம்/அணு உலை
அணு உலை : அணு சக்தியை மின் சக்தியாக மாற்ற அணு உலைகள் பயன்படுகின்றன. அணுக்கருவைப் பிளப்பதன் மூலம் வேண்டிய அளவு சக்தியைப் பெறமுடியும். அதேபோன்று ஒன்றிற்கு மேற்பட்ட அணுக் கருக்களைப் பிணைப்பதன் வாயிலாகவும் பெரும் சக்தியைப் பெற முடியும். இவ்வகையில் வெளிப்படும் அணு சக்தியை மின் சக்தியாக ஆக்குவதற்குரிய அமைப்புகளோடு அணு உலைகள் அமைந்துள்ளன.
அணு உலைகளில் அணுவைப் பிளப்பதால் பெருமளவில் வெப்பம் வெளிப்படும். இவ்வெப்பத்தைக் கொண்டு நீராவி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நீராவியைக் கொண்டு டர்பைன்களைச் சுழலச் செய்து மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணு உலைகளில் யுரேனியத்தை எரி பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். யுரேனியம் வெண்மை நிறத் தனிமம் ஆகும். நிலக் கரியைவிடப் பன்மடங்கு எரியாற்றல் உள்ளது யுரேனியம். ஒரு டன் யுரேனியம் பதினாயிரம் டன் நிலக்கரிக்குச் சமமாகும்.
இந்தியாவில் அணு சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் முயற்சி பெரும் பயன் அளித்து வருகிறது. இதற்கான பல அணு உலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. மேலும் அமைக்கப்பட்டும் வருகின்றன. பம்பாயில் உள்ள அப்சரா, சைரஸ், பூர்ணிமா, துருவா என்ற பெயர்களில் ஆராய்ச்சி அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ் நாட்டில் கல்பாக்கம் என்ற இடத்தில் காமிகரி என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி அணு உலை உள்ளது.
அணு மின் உற்பத்திக்கென தமிழ்நாட்டில் கல்பாக்கத்திலும் மகாராஷ்டிர மாநிலத்திலும் குஜராத் மாநில எல்லையோரமாக தாராபூர் என்ற இடத்திலும் இராஜஸ்தானிலும் உள்ளன. தமிழ் நாட்டில் கூடங்குளம் எனுமிடத்தில் புதிய அணுமின் உலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அணு உலைகளில் பணியாற்றுவோர் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாக நேரிடும். இதற்காகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அணு உலைகளில் செய்யப்பட்டுள்ளன.