இளையர் அறிவியல் களஞ்சியம்/அம்மை
அம்மை ; இது கண்ணுக்குப் புலனாகாத நுண்ணுயிரிகளால் உண்டாகும் நோயாகும். தொற்று நோய்களிலேயே மிகக் கொடிய தொற்றுநோய் அம்மை நோயாகும்.
இந்நோய்க்கான காரணங்களை அறிய இயலாத காலத்தில் மாரி என்னும் தெய்வத்தின் கோபத்தால் இந்நோய் வருவதாக மக்கள் நம்பினர். அதன் காரணமாகவே இந்நோயை 'அம்மை நோய்’ என அழைக்கலாயினர். இந் நோயை 'வைசூரி நோய்’ என்றும் கூறுவர்.
இந்நோய் ஒரு காலத்தில் உலகம் முழுமையும் பரவியிருந்தது. ஆசியாவில் மிக அதிகமாக இருந்தது. இக்கொடிய தொற்றுநோயை உலகிலிருந்து குறிப்பாக, ஆசியாவிலிருந்து ஒழிக்கவே முடியாது என்றுகூடக் கருதப்பட்டது. ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் இடைவிடாப் பெருமுயற்சியால் இந்நோய் ஆசியாவில் இருந்து மட்டுமல்ல, உலகி
லிருந்தே முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. இச்சாதனைக்குக் காரணம் முயற்சி மட்டும் அன்று. இந்நோயை ஒழிக்கத் தகுந்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதுமாகும்.
இந்நோயைப் பரப்பும் கிருமிகள் கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகளாகும். இந் நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, பேசினாலோ இக்கிருமிகள் வெளிப்பட்டு காற்றின் மூலம் மற்றவர்களைத் தொற்றிக் கொள்கிறது.
அம்மை நோய்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் மிகக் கொடியது பெரியம்மையாகும். சின்னம்மை, தட்டம்மை போன்றவைகளும் உண்டு. இவை அதிகத் தீங்கை ஏற்படுத்துவதில்லை. இவ்விரண்டும் குழந்தைகளை மட்டுமே தாக்குகின்றன. இந்நோய் ஏற்பட்டால் உடல் முழுமையும் சிவப்புநிறத் தடிப்புகள் ஏற்படும். இந்நோய்க் கிருமிகள் காற்றின் மூலமே அதிகம் பரவுகின்றன.
பெரியம்மை நோய் தொற்றியவுடன் முதலில் காய்ச்சல் ஏற்படும். ஒரு சில நாட்களிலேயே உடலெங்கும் குறிப்பாக, உடல் தோல், வாய், மூக்கு, கண் ஆகிய பகுதிகளில் செம்புள்ளிகள் தோன்றும், அவை பின்னர் நீர்க் கொப்புளங்களாகவோ சீழ்க்கொப்புளங்களாகவோ மாறும். இன்னாட்களில் அவை அப்படியே அடங்கிவிடும்.கொப்புளம் இருந்த இடங்களில் தழும்புகள் காணப்படும். இவை உடல் அழகைக் கெடுத்து விகாரத் தோற்றத்தை ஏற்படுத்தி விடுவதும் உண்டு. சில சமயங்களில் கண்களில் ஏற்படும் கொப்புளங்களால் கண் பார்வை கெட்டுவிடும்.
ஒருவருக்கு ஒருமுறை பெரியம்மை நோய் ஏற்பட்டால் அவருக்கு மீண்டும் வாழ்நாள் முழுமையும் இந்நோய் தொற்றுவதில்லை. காரணம் அந்நோயே தடுப்புச் சக்தியை உடலில் வலுவாக ஏற்படுத்தி விடுவதாகும்.
இந்நோயைப் பொருத்தவரை வருமுன் காப்பதே முக்கியமாகும், எனவே, குழந்தைப் பருவத்திலேயே அம்மைத் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் இந்நோய் என்றுமே தலை தூக்காமல் தடுத்துவிட முடியும்.