இளையர் அறிவியல் களஞ்சியம்/அலங்கார மீன்கள்
அலங்கார மீன்கள் : சிலவகை மீன்கள் பார்க்க மிக அழகாக இருக்கும். சிலவற்றின் உடலமைப்பும் வண்ண வண்ண நிறங்களும் கண்ணைக் கவரும். அவற்றின் உடலில் காணும் வண்ணப்புள்ளிகள், வரிகள், அவற்றின் அசைவுகள், பழக்கங்கள் நம் கவனத்
தைப் பெரிதும் ஈர்ப்பனவாகும். இத்தகைய மீன்களே அலங்கார மீன்கள் (Ornamental-Fishes) என அழைக்கப்படுகின்றன.
அலங்கார மீன்கள் பெரும்பாலும் மீன்காட்சி சாலைகளிலும் வீடுகளிலுமே இடம் பெறுகின்றன. சில நிறுவனங்களிலும் அலுவலகங்களிலும்கூட அழகிய கண்ணாடித் தொட்டிகளில் அலங்கார மீன்கள் வளர்க்கப்படுவதுண்டு.
அலங்கார மீன்கள் காண்பதற்கு அழகாக மட்டும் இருப்பதில்லை. மனதுக்கு இதமான மகிழ்ச்சியையும் அவை அளிக்கின்றன. ஓய்வு நேரங்களில் அலங்கார மீன்களைக் கவனித்தால், அவற்றின் அற்புதமான இயக்கம் வியப்பளிக்கும். அவை உணவு உண்ணும் முறையும் தற்காப்புக்காக மேற்கொள்ளும் முயற்சிகளும் இனப்பெருக்க செயற்பாடுகளும் புதிய புதிய செய்திகளைத் தந்து நம் அறிவை வளர்க்கின்றன. அலங்கார மீன்கள் சாதாரண மீன்களை விட விலைமதிப்புடையனவாகும்.
அலங்கார மீன்கள் வளர்க்கப் பயன்படும் தொட்டி நான்கு புறமும் கண்ணாடியாலானதாக அமைந்திருக்கும். செவ்வக வடிவில் அமைந்த தொட்டிகளே மீன் வளர்ப்புக்கு ஏற்றவை. மீன்களின் பருமனுக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்ப தொட்டியின் அகலமும் ஆழமும் அமையும். நல்ல தெளிவான நீரே மீன் வளர்ப்புக்கு ஏற்றது. இந்நீருள் வாலிஸ் நேரியா (Vallisneria), அய்டிரில்லா (Hydrilla) போன்ற நீர்த் தாவரங்களை அடிப்பகுதியில் அமைத்து வளரச்செய்தல் வேண்டும். மீன் துள்ளி வெளியே விழுந்துவிடாதபடி மேல் பகுதி துளைகளிட்ட மூடியாலோ அன்றி கம்பி வளையாலோ மூடப்பட வேண்டும். தொட்டி சில நாட்களுக்கு ஒருமுறை பழைய நீரை வடித்துப் புதிய நீரை வார்க்க வேண்டும். அடியில் படியும் மீன்களின் கழிவு போன்றவற்றை நேரப்படி வடிகுழாய் (Siphan) மூலம் அகற்ற வேண்டும். மீன்களுக்குத் தேவையான பிராணவாயுக் காற்றை (Oxygen) காற்றூட்டி (Aerator)க் கருவி மூலம் நீரில் கலக்கச் செய்ய வேண்டும். போதிய வெளிச்சம் உள்ள இடத்தில் மீன்தொட்டி இருக்க வேண்டும். முடிந்தால் மீன்தொட்டிக்கருகில் விளக்கொளி ஏற்படுத்தினால் நல்லது. ஒரு நாளைக்கு ஓரிருமுறை புழு பூச்சிகளை மீன்களுக்கு இறையாகப் போடவேண்டும்.
சிலவகை மீன்கள் வேகமாக வளர்ந்து பெரியனவாகிவிடும். அவற்றை அவ்வப்போது அப்புறப்படுத்திவிடவேண்டும். இல்லையென்றால் சிறிய மீன்களைச் சேதப்படுத்திவிடும். எனவே அலங்காரத் தொட்டிகளில் பூரண வளர்ச்சி பெறாத சிறிய மீன்களே வளர்க்கத் தகுந்தவைகளாகும். கடல் நீரிலும் நன்னீரிலும் வளரக்கூடிய பலவகை அலங்கார மீன்கள் உள்ளன.
அலங்கார மீன்களில் எண்ணற்ற வகைகள் உண்டு. அவற்றுள் தங்கமீன், சிவப்புக்கத்தி வால்மீன், கருப்பு மோலி, சங்கரா அல்லது கவ்ராமி, முத்துப்புள்ளி மீன், சொர்க்க மீன், கண்ணாடிக் கெண்டை, வெண் கெண்டை போன்றவை நன்னீரில் வளரக்கூடிய வகைகளாகும். கடல்நீரில் வளரக் கூடியவைகளில் வரிக்கெண்டை, பேழைமீன். கோளமீன், மூளியன், குழல்மீன், கடற்குதிரைமீன், வண்ணத்துப் பூச்சிமீன் போன்றவை குறிப்பிடத்தக்க வகைகளாகும.