இளையர் அறிவியல் களஞ்சியம்/அவிசென்னா

அவிசென்னா : 'இப்னு ஸீனோ’ எனும் பெயரே ‘அவிசென்னா’ என மருவி வழங்குகிறது. இவரது இயற்பெயர் ஹசைன் என்பதாகும். இவர் சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு வாழ்ந்த மாபெரும் மருத்துவ மேதையும் அறிவியல் விற்பன்னருமாவார்.

கி.பி. 980ஆம் ஆண்டில் பாரசீக நாட்டில் பல்க் எனும் பகுதியில் பிறந்த இவர் பதினெட்டு வயதை எட்டு முன்னரே மருத்துவப் பணியை மேற்கொண்டார். நோயாளிகளின் நோய்களைக் கண்டறிவதிலும் அவர்கட்கு உரிய மருந்துகளைத் தந்து மருத்துவம் பார்ப்பதிலும் திறமை மிக்கவராக விளங்கினார். இயன்றவரை இலவசமாக மருத்துவம் செய்வதையே விரும்பினார். அதில் பெரும் மகிழ்ச்சி கொண்டார்.

நோயை இனங்காணுவதிலும் அவற்றைத் தீர்க்க மருந்தைத் தேர்ந்தெடுப்பதிலும் இவருக்கிருந்த அபாரத் திறமையைக் கண்டு முதிய மருத்துவர்கள் வியந்தனர். சில சமயம் தங்களுக்கு ஏற்படும் ஐயப்பாடுகளை அவரிடமே கேட்டுத் தெளிவு பெற்றனர். இவரிடம் மருத்துவ விளக்கம் பெறும் பெரியவர்கள் முதிய பேராசிரியரிடம் பாடங்கேட்பது போன்ற உணர்வையே பெற்றனர்.

அவிசென்னா

இளம் வயது முதலே பேரறிஞர்களின் நூல்களைத் தேடிப் பெற்றுத் திரும்பத் திரும்பப் படிக்கும் பழக்கமுடையவராக இருந்தார். கணிதத் தந்தை யூக்ளிடு, தத்துவமேதை அரிஸ்டாட்டில், தனிப்பெரும் சிந்தனையாளர் பிளேட்டோ போன்றவர்களின் படைப்புகளைப் பலமுறை படிக்கும் பழக்கமுடையவர். அவற்றின் அடிப்படையில் ஆழமாகச் சிந்திக்கும் இயல்பினர்.

ஒரு சமயம் புகாரா மன்னருக்குக் கடுமையான நோய் ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் எந்த மருத்துவராலும் குணப்படுத்த இயலவில்லை. இறுதியாக அவிசென்னாவின் மருத்துவத் திறனைக் கேள்விப்பட்ட மன்னர் அவரை அழைத்துவர உத்திரவிட்டார். அவிசென்னாவும் அழைத்துவரப்பட்டார். ஒரு சில நாட்களிலேயே மன்னரின் நோய் மறைந்தது. இதன்பின் இவரது மருத்துவத் திறமை நாடெங்கும் பரவியது. நோய் தீர்ந்த மன்னர் பெருமகிழ்வு கொண்டார். அவிசென்னாவை அரண்மனையிலேயே தங்க வைத்துக் கொண்டார். அரண்மனையிலுள்ள மாபெரும் நூலகத்தை முழுக்கப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார். அந்நூலகத்தில் இடம் பெற்றிருந்த அரிய மருத்துவ நூல்களையெல்லாம் கற்றுத் தன் மருத்துவ அறிவையும் திறமையையும் பெருமளவு பெருக்கிக் கொண்டார். விரைவில் மன்னர் அவிசென்னாவையும் தம் அமைச்சர்களில் ஒருவராக ஆக்கிக் கொண்டார்,

இவரது மருத்துவத் திறமையைக் கேள்வியுற்ற பல்வேறு நாட்டு மன்னர்களும் இவரைத் தம் அரசவையில் வைத்துக் கொள்ள விரும்பினர். குவாரிஸம் நாட்டு மன்னரின் பெருவிருப்புக்கிணங்க அவரது அரசவையில் இடம் பெற்றார். அங்கு மற்றுமொரு புகழ்பெற்ற அறிவியல் தத்துவமேதை அல்புருனியும் இடம் பெற்றிருந்தார்.

இதேபோன்று மஹ்மூது கஸ்னவி எனும் மன்னரும் அவாவினார். மன்னர்களின் கூண்டுக்கிளியாக வாழ விரும்பாத அவிசென்னா யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு அகன்றார். தம் வாழ்விடத்தைத் தன் விருப்பப்படி மாற்றிக் கொண்டே இருந்தார். இக்கால கட்டத்தில் மருத்துவத் துறையின் பல்வேறு நுட்பங்களைப் பற்றி ஆய்வு செய்து கண்டறிந்தார். அவற்றையெல்லாம் விரிவாக விளக்கி மருத்துவ நூல்களை உருவாக்கினார். இவையே இன்றைய மருத்துவத்துக்கு அடிப்படை நூல்களாக அமைந்துள்

இவர் இஸ்பஹானில் இருந்தபோது அடிக்கடி மருத்துவம் பற்றிச் சொற்பொழிவாற்றினார். அச்சொற்பொழிவுகளின் தொகுப்பே பிற்காலத்தில் மருத்துவக் கலைக்களஞ்சியமாக மலர்ந்தது.

இஸ்பஹான் மன்னரின் அரவணைப்பில் வாழ்ந்த அவிசென்னா மன்னருடன் ஹமதான் எனுமிடம் நோக்கிச் செல்லும்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இவரது உதவியாளர்கள் இவர் கூறிய முறைப்படி இவருக்கு மருத்துவம் செய்ய தவறியதன் விளைவாக இவர் 1037ஆம் ஆண்டு காலமானார். ஹமதானிலேயே இவர் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவத்துறை போன்றே அறிவியல் துறையின் பல்வேறு பிரிவுகளின் வளர்ச்சிக்கும் தொடக்க முதலே அரும்பணியாற்றினார். அவையே இன்றைய மருத்துவ அறிவியல் துறைகளின் அடிப்படைகளாக அமைந்துள்ளன.

நவீன மருத்துவத்துறையின் தந்தையாகப் போற்றப்படும் அவிசென்னா பல புதிய கண்டுபிடிப்புகளை வழங்கிச் சென்றுள்ளார்.

திரவப் பொருட்களைக் காய்ச்சி ஆவியாக்கித் தூய்மைபடுத்தும் முறையை முதன்முதல் கண்டறிந்து கூறியவர் இவரே யாகும். கந்தகத் திராவகம், ஆல்கஹால் போன்றவற்றைத் தயாரிக்கும் வழிமுறைகளைக் கண்டறிந்தவரும் இவரே யாவார். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை மென்மைப் பொருளாக்கி மருந்துடன் கலந்து தந்து நோய் தீர்க்கும் புதிய மருத்துவமுறையை அறிந்து கூறியவரும் இவர்தான். ஊசிமூலம் உடலுக்குள் மருந்தைச் செலுத்தி நோய்போக்கும் 'இன்ஜெக்ஷன்' முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தி வெற்றி கண்டவர். குழந்தையை அறுவை மருத்துவம் மூலம் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கும் 'சிசேரியன்’ அறுவை மருத்துவத்தைக் கண்டறிந்தவரும் இவரே. இன்று முக்கியத்துவம் பெற்றுவரும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு அடித்தளம் அமைத்துச் சென்றவரும் அவிசென்னாவே ஆவார்.

மருந்தால் மட்டுமல்லாது மனோதத்துவ முறையிலும் நோய்களைப் போக்க முடியும் என்பதை செயல்பூர்வமாக எண்பித்துக் காட்டியவரும் இவரே.