இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆப்பிள் பழம்

ஆப்பிள் பழம் : நாம் விரும்பி உண்ணும் பழங்களுள் ஆப்பிள் பழமும் ஒன்று. இது ஒரு மரக் கனியாகும். இஃது நீண்ட நெடுங்காலமாக உலகத்தில் பல பாகங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. குளிரான பகுதிகளிலேயே

ஆப்பிள்பழம்

ஆப்பிள் செழிப்பாக விளைகிறது.இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் தென்னகத்தில் பெங்களுரிலும், நீலகிரியிலும் ஆப்பிள் பழம் விளைகிறது. ஆப்பிள் மரத்திற்கு ஆண்டு முழுவதும் குளிரான நிலை அவசியமாகும். பகலில் ஓரளவு வெப்பமும் இரவில் நல்ல குளிரும் தேவை.

தொடக்கத்தில் காடுகளில் தானாக வளர்ந்து வந்தது. பின்னர், பழத்தின் சுவையறிந்த மனிதர்கள் அதனைத் தாங்கள் விரும்பிய இடங்களில் பயிரிடலாயினர். ஆப்பிளில் ஆயிரக்கணக்கான வகைகள் உண்டு. இவை பழத்தின் சுவை, நிறம், வடிவம் ஆகியவற்றைப் பொருத்தமையும். இவற்றுள் பத்து அல்லது பன்னிரண்டு வகைகளே உண்ணத்தக்க நல்ல சுவையுள்ளவை. மற்றவை சுவை குறைந்தவை; புளிப்புச்சுவை உள்ளவை.இவற்றை வேகவைத்தும் உண்பர். புளிப்பு ஆப்பிள் பழங்கள் மதுவகைகள் செய்யப் பயன்படுகின்றன. நல்ல மண்ணில் ஆழ வேரோடி வளரும் ஆப்பிள் மரங்கள் கனி கொடுக்க நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றன. ஒட்டு மாமரம் போன்று ஒட்டு ஆப்பிள் மரங்கள் மூலம் சுவையான பருத்த பழங்களைப் பெறலாம்.

ஆப்பிள் பழங்களைக் காகிதத்தில் சுற்றி நீண்டதுாரப் பகுதிகளுக்கு அனுப்புகின்றனர். ஆப்பிள் பழங்கள் உலர்த்தப்பட்டு ரொட்டி செய்யப் பயன்படுகின்றன. ஆப்பிள் மாவு குழந்தைகளுக்கு உணவாகின்றது. சிலவகை ஆப்பிளிலிருந்து பானங்கள் தயாரிக்கப்படுகின்றன. பழக்குழைவுகளும் ஜெல்லிகளும் செய்யப்படுகின்றன.

ஆப்பிள் பழங்கள் சத்து மிகுந்தவைகளாகும். இதில் மாவுச் சத்து, சர்க்கரை. வெப்ப சக்தி, சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரம், கரோட்டின் ஆகியவை நிரம்ப உள்ளன.