இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆர்வில் ரைட் (வில்பர் ரைட்)

ஆர்வில் ரைட் (வில்பர் ரைட்) : இன்றைய விமான வளர்ச்சிக்கு அன்றே அடித்தளம் அமைத்தவர்கள் ரைட் சகோதரர்கள் ஆவர். ஆர்வில் ரைட் இருவரும் உடன்பிறந்த சகோதிரர்கள். ஆர்வில் ரைட் மூத்த சகோதரர். விமான ஆய்வில் இருவரும் இணைந்தே ஈடுபட்டு வெற்றி கண்டதால் இருவரையும் இணைத்தே கூறுவது வழக்கம்.

ஆர்வில் ரைட் வில்பர் ரைட்

இவர்கட்கு முன் இருந்தவர்கள் காற்றை விடக் கனம் குறைந்த வாயுவை அடைத்து வானில் பறந்து செல்லும் பலூன்கள் மூலம் பயணம் செய்யக் கற்றிருந்தனர். இவர்கள் நோக்கம் வானில் நீண்டதூரம் ஊர்ந்து பயணம் செய்வதைவிட பூமியிலிருந்து வானை நோக்கி எழும்புவதே முக்கியமாக இருந்தது எனலாம். இம்முயற்சியில் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றிருந்தார்கள். ஆயினும் இயந்திரங்களின் உதவியால் விமானத்தை இயக்கவும், விரும்பிய தூரம் விரைந்து செல்லவுமான புதிய இயந்திர நுட்ப முறைகளை முதன்முதலாகக் கண்டறிந்தவர்கள் ரைட் சகோதரர்களே ஆவர்.

பள்ளிக் கல்வி பயிலும்போதே ஆர்வம் மிக்கவர்களாக இருந்தனர். உயர்

ரைட் சகோதரர்களின் முதல் விமானம்

நிலைப் பள்ளிக் கல்வியை முடித்தவுடன் இருவரும் ஒரு சைக்கிள் கடை தொடங்கி நடத்தினர். பழுது பார்ப்பதுடன் புதிய மிதிவண்டிகளையும் உருவாக்கி விற்றனர். இதனால் நல்ல வருவாயும் அவர்களுக்கு கிடைத்தது.

அக்காலத்தில் ஆகாயத்தில் பறந்து செல்லும் விமானத்தைக் கண்டுபிடிப்பதில் பல்வேறு முயற்சிகள் ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இவ்வாராய்ச்சிகளை சிலர் நூலாகவும் எழுதி வெளியிட்டிருந்தனர். இந்நூல்களை ரைட் சகோதரர்கள் ஆர்வத்தோடு வாங்கிப் படித்து வந்தனர்.

தாங்களும் அத்தகைய ஆராய்ச்சி முயற்சியில் ஈடுபட்டு வானில் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். அதுவே அவர்களின் வாழ்க்கைக் குறிக்கோளும் ஆகியது. இதற்காகப் பணம் சேர்க்கத் தொடங்கினர்.

வானில் பறப்பது தொடர்பான ஆராய்ச்சிகளை 1898இல் முனைப்போடு இருவரும் தொடங்கினர். நான்கு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தபின் வானில் பறக்கத்தக்க எந்திரத்தை வடிவமைப்பதில் வெற்றி பெற்றனர்.

முதலில் எந்திரம் ஏதும் பொருத்தாத காற்றாடிகளை மட்டும் கொண்ட விமானத்தை வடகிரோனாவில் கிட்டி எனுமிடத்தில் பறக்கவிட்டனர். இதில் ஓரளவு வெற்றி கிட்டியதே.தவிர முழுவெற்றிபெற முடியவில்லை.சிறு வெற்றியே அவர்கட்குப் பெரும் உற்சாகத்தை அளித்தது. மீண்டும் 1903ஆம் ஆண்டு டிசம்பர் 17இல் இயந்திரம் பொருத்தப்பட்ட விமானத்தை வானில் பறக்கவிட்டனர். இது தரையிலிருந்து 8 மீட்டர் உயரம் எழும்பி 26 மீட்டர் தூரத்தை 12 விநாடிகளில் கடந்தது. இவ்வெற்றி அவர்கட்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து திருத்தி அமைத்தனர். மீண்டும் பறக்கவிட்டபோது 38 மீட்டர் தூரத்தை 59 விநாடிகளில் கடந்து சென்றது. இது மேலும் அவர்கட்கு உற்சாக மூட்டினும் பொதுமக்கள் இம்முயற்சிகளைக் கண்டு ஆர்வமோ அக்கறையோ காட்டவில்லை. மனம் வருந்திய ரைட் சகோதரர்கள் தாங்கள் மேலும் சிறப்பாக உருவாக்கியிருந்த விமானத்

கிட்டி ஹாக் விமானம்

தை பாரிஸ் நகருக்குக் கொண்டு சென்று பறந்து காட்டினர். ஃபிரெஞ்சு மக்கள் அதைக் கண்டு பெருமகிழ்வடைந்தனர். வியந்து போற்றினர். பரிசுகள் பல தந்து பாராட்டினர். இதைப் பார்த்த பிறகே அமெரிக்க மக்களுக்கு ரைட் சகோதரர்களின் அருமையும் பெருமையும் புரியத் தொடங்கியது. அமெரிக்க அரசும் மக்களும் ரைட் சகோதரர்களின் முயற்சியையும் சாதனையையும் பாராட்டியதோடு தேவையான உதவிகளையும் தர முன் வந்தனர். 1906ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் தங்கள் பெயரில் விமான உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்க அமெரிக்க அரசு அனுமதியும் உதவியும் வழங்கியது.

அதன்பின் ரைட்சகோதரர்கள் வடிவமைத்த விமானம் பல்வேறு வடிவ மாற்றங்களைப் பெற்று இன்றுள்ள அதி நவீன உருவைப் பெற்றுள்ளது. இன்றைய விமானத் துறை வளர்ச்சிக்கு அன்றே அழுத்தமான, ஆழமான அடிப்படையை அமைத்துத் தந்த பெருமை ரைட் சகோதரர்களையே சாரும்.