இளையர் அறிவியல் களஞ்சியம்/ஆல்காக்கள்

ஆல்காக்கள் : இது ஒரு இலத்தின் மொழிச் சொல்லாகும். இதற்குக் 'கடற்பாசி' என்பது பொருளாகும். இது கடலில் மட்டுமல்லாது குட்டைகளிலும் நீர்நிலைகள் மற்றும் ஈரமான இடங்களிலும் காணப்படும் ஒருவகைப் பாசியாகும். இது ஓரணுத் தாவரமாகும். இவை பல வண்ணங்களில் காணப்படுகின்றன. சில நீலப் பச்சையாகவும் மற்றும் சில பழுப்பு வண்ணத்திலும் மற்றும் சில சிவப்பு நிறத்திலும் காணப்படுகின்றன.

சில குறிப்பிட்ட பருவகாலங்களில் இவை மிக அதிகமாக வளர்ச்சிபெறும். செங்கடல் சிவப்பாகத் தோன்றக் காரணம் இப்பாசிகள் சிவப்பாக இருப்பதே என்று கூறப்படுகிறது. இந்தியாவில் குஜராத் கடற்பகுதிகளிலும் இராமேஸ்வரம் கடற்பகுதியிலும் மிகுதியாக கடற்பாசிகள் வளர்கின்றன. கடற்பகுதிகளில் இவை வளருவதால் இவை 'கடற்பாசி’ (Sca

ஆல்காக்கள்

weed) எனும் பெயரைப் பெறுகின்றன. இவற்றில் பச்சையம் (Chlorophyl) இருப்பதால் கதிரவனின் ஒளிக்கதிர்களைக் கொண்டு ஒளிச் சேர்க்கை மூலம் வேண்டிய உணவுகளைத் தானாகவே தயாரித்துக் கொள்கின்றன. மற்ற தாவரங்களில் காணப்படுவதுபோல் இவற்றில் இலை, வேர், பூ, என எந்தப் பகுதியும் இல்லை. இக்கடற்பாசிகளை மீன் முதலான உயிர்கள் உட்கொள்கின்றன. மீன்வளம் அதிகமாக இருப்பதற்கும் குறைவாக இருப்பதற்கும் கடற்பாசிகளின் அளவும் ஒரு காரணமாகும். இவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அகர் போன்ற சில வகைப்பொருட்கள் மனிதர்களுக்கு உணவாகவும் பயன்படுகின்றன. இவற்றைக் கொண்டு அயோடின் போன்ற மருந்துப் பொருள்களும் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் கனிமச்சத்து இருப்பதால் நிலத்துக்கு உரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. பசிய நீலப்பாசிகளை நெல் வயல்களில் போட்டால் இவை காற்றில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தி நைட்ரேட் வளத்தை அதிகரித்து பயிர் செழிப்பாக வளரத் துணை புரிகின்றன.

சில வகை ஆல்காக்களில் நச்சுத்தன்மை உண்டு. இவை அதிகம் வளர்ந்துள்ள நீர் நிலைகளில் உள்ள நீரைக் குடிக்கும் மனிதர்களும் விலங்குகளும் இறக்க நேரிடுவதும் உண்டு.