இளையர் அறிவியல் களஞ்சியம்/இரத்தச் சுழற்சி

இரத்தச் சுழற்சி : உடல் முழுமைக்கும் இரத்தம் பாய்வது இரத்தச் சுழற்சி அல்லது இரத்த வோட்டம் என அழைக்கப்படுகிறது. நுரையீரலிலிருந்து ஆக்சிஜனையும் செரிமான உறுப்புகளிலிருந்து சத்துப் பொருட்களையும் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் திசுக்களுக்கும் கொண்டு செல்வதுதான் இரத்தச் சுழற்சியின் தலையாய பணியாகும்.

அதேபோன்று திசுக்களிலிருந்து வெளிப்படும் கரியமிலவாயுவாகிய கார்பன்டையாக் சைடும் மற்றும் பல தீமை பயக்கும் கழிவுகளும் இரத்தச் சுழற்சி மூலமே மூச்சுவிடுவதன் மூலம் வெளியேற்றப்படுகின்றன. இரத்தச் சுழற்சியின் மூலம் சிறுநீரகத்தை அடையும் இரத்தத்திலிருந்து பல்வேறு கழிவுப் பொருட்கள் தனியே பிரிக்கப்பட்டுசிறுநீருடன் வெளிப்படுத்தப்படுகின்றன. உடல் உறுப்புகள் சீரான முறையில் இயங்கவும் அவைகளைச் செயல்படத் தூண்டவும் இரத்தச் சுழற்சியே மூலகாரணமாய் அமைகின்றது. மொத்தத்தில் நாம் உயிர் வாழவும் இயங்கவும் எப்போதும் தமனிகளிலும் சிரைகளிலும் இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்கவேண்டும்.

தாயின் கருப்பையில் சிசு உருவானது முதலே அதன் உடலில் இரத்தச் சுழற்சியும் ஏற்பட்டு விடுகிறது. சிசுவுக்கு வேண்டிய சத்துணவையும் பிராணவாயுவையும் சிசு தாயிடமிருந்து பெற சூல் மெத்தை உதவுகிறது. சிசுவிடமிருந்து வெளிப்படும் கழிவுகளும் சூல் மெத்தை மூலமே வெளியேறுகின்றன. கருவும் சூல் மெத்தையும் கொப்பூழ்க் கொடியுடன் இரண்டு தமனிகளும் ஒரு சிரையும் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நல்ல இரத்தம் உட்செல்லவும் தீய இரத்தம் வெளியேறவும் இயலுகிறது. இவ்வாறு கருவில் இருக்கும் சிசுவுக்கும் இடையறா இரத்தச் சுழற்சி இருந்து கொண்டே இருக்கிறது.

இரத்த ஓட்டத்தை முதன்முதலில் கண்டுபிடித்துச் சொன்னவர் வில்லியம் ஹார்வி என்ற ஆங்கில விஞ்ஞானி ஆவார். இரத்தம் நம் உடம்பை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் நேரம் 1 நிமிடம் 8 வினாடியாகும்.