இளையர் அறிவியல் களஞ்சியம்/இரத்தச் சோகை
இரத்தச் சோகை : உடலில் உள்ள இரத்தத்தில் போதிய அளவு (14.4%) ஹிமோகுளோபின் இருக்கவேண்டும். இது ஆண்கள்-பெண்கள், குழந்தைகளின் இரத்தத்தில் வெவ்வேறு அளவுகளில் அமைந்திருக்கும். அந்த அளவில் குறைவு ஏற்பட்டால் அதை ‘இரத்த சோகை' என்று அழைப்பார்கள்.
உடலில் ஏற்படும் இரத்தக் கசிவினாலும் இரத்த அணுக்களின் உற்பத்தித் தலமான எலும்பிலுள்ள மஜ்ஜையில் அணுக்களின் உற்பத்தி குறைவதாலும் அதிக அளவில் சிவப்பணுக்கள் அழிவதாலும் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைவாக இருந்தாலும் இந்நோய் உண்டாகும். உடலிலிருந்து அரை லிட்டர் இரத்தம்வரை கசிந்தால் பெரும் தீங்கு ஏதும் ஏற்படுவதில்லை. ஆனால், அதுவே அதிகமானால் தோல், தசைப் பகுதிகள் போதிய இரத்தவோட்டம் பெற இயலாமல் போகிறது. இதனால் மூளை, இதயம், சிறுநீரகம் போன்ற உடலின் இன்றியமையா உறுப்புகள் பாதிப் க்காளாகின்றன.
இரத்தச் சோகை நோயுற்றவரின் உடல் வெளிறித் தோன்றும். உடலில் அதிக வியர்வை தோன்றும். இதனால் உடல் அதிகக் குளிர்ச்சியுடையதாக இருக்கும். பொருத்தமான இரத்தத்தை சிரை வழியாக உடலுள் செலுத்துவதன் மூலம் இரத்தச்சோகைநோயை போக்கலாம்.
'இரும்புக் குறை சோகை நோய்' சோகை நோய்களிலேயே மிக அதிகமாக ஏற்படுவதாகும். இந்நோய் கண்டவர்கள் உணவில் அதிக அளவு இரும்புச் சத்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். இரும்புச்சத்துக் கொண்ட மாத்திரை, டானிக் போன்றவைகளையும் உரிய அளவில் உட்கொண்டு நிவாரணம் பெறலாம். பால், முட்டை பேரீச்சம் பழம், ஈரல், காய்கறிகள், அகத்திக் கீரை, முருங்கைக்கீரை, அரைக்கீரை போன்ற கீரை வகைகளை உண்ண வேண்டும்.
இரத்தச் சோகை உள்ளவர்கள் எப்போதும் சோர்ந்து காணப்படுவர்.அதிகமாக மூச்சிரைப்பும் படபடப்பும் இருக்கும். எதிலும் ஆர்வமின்றி இருப்பர். பசி இருக்காது. பார்வையும் மங்கித் தெரியும். இவர்கட்குத் தூக்கமும் சரிவர இருக்காது. உடல் வெளிறும். இதற்கு உரிய முறையில் மருத்துவம் செய்து கொள்வதன் மூலம் பயன் பெறலாம்.