இளையர் அறிவியல் களஞ்சியம்/இராமானுஜம்

இராமானுஜம் : பழங் காலத்தில் கணிதத் துறையில் புகழ்பெற்று விளங்கிய இந்திய மாமேதைகள் ஆரியபட்டர், வராகமிஹிரர் போன்று அண்மைக் காலத்தில் கணிதமேதையாக வாழ்ந்து மறைந்தவர் இராமானுஜம்.

இவர் 1887ஆம் ஆண்டில் ஈரோட்டில் பிறந்தார். தன் இளமைக் கல்வியை தஞ்சை மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் கற்றார். அங்குப் பள்ளியில் படித்து வரும்போதே கணிதத்தில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். இவரது கணித ஈடுபாடு ஆசிரியர்களையே திகைக்க வைப்பதாக இருந்தது.

இவர் கணிதத்தில் மட்டுமே கருத்தூன்றியவராக இருந்ததால் பிற பாடங்களில் மிகவும் பின் தங்கியவராக இருந்தார். காரணம் கணிதம் தவிர்த்துள்ள பிற பாடங்களை இவர் படிக்க விரும்பாமல் புறக்கணித்து வந்ததேயாகும். இதனால் இவர் கல்லூரித் தேர்வில் தேற முடியாமல் போயிற்று. இவரது கணக்குகள் இவரது ஆசிரியர்களுக்குக்கூட புரியாத புதிராக இருந்தன.

இராமானுஜம்

இவர் சென்னைத் துறைமுக அலுவலகத்தில் எழுத்தர் பணியில் அமர்ந்தார். அப்போதும் இவர் தனது கணித ஆராய்ச்சியை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தார். தன் ஆய்வுகளைப்பற்றி பல கட்டுரைகள் எழுதினார். அக்கட்டுரைகளை கண்ட கணிதவியல் அறிஞர்கள் திகைப்பும் வியப்பும் அடைந்தனர். இவரது கணிதவியல் புலமையைப் போற்றிய சென்னைப் பல்கலைக்கழகம் இவரது கணித ஆராய்ச்சிக்கு உதவ முன்வந்தது.

புகழ்பெற்ற கணிதவியல் பேராசிரியரான ஹார்டிக்கு இவரது கணித அறிவு எட்டியது. இவரது ஆராய்ச்சிக் குறிப்புகள் அவருக்குப் பெரும் வியப்பூட்டியது. மேலும் கணித ஆய்வு செய்வதற்கென இவரை லண்டன் வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது பொருளாதார நிலையும் சமயச் சூழலும் அவரை முதலில் தயங்கச் செய்தாலும் இறுதியில் லண்டன் செல்லலானார். இங்கிலாந்தில் இருந்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் இவரது கணிதவியல் புத்தாராய்ச்சிக்குப் பேருக்கம் தந்து உற்சாகப் படுத்தியது. அவரது கணித ஆராய்ச்சியைக் கண்டு வயந்த ‘ராயல் சொசைட்டி' இவரைத் தன் உறுப்பினராக ஆக்கிக் கெளரவித்தது. இச்சிறப்பைப் பெற்ற முதல் இந்தியத் தமிழர் எனும் மாபெரும் சிறப்பையும் பெற்றார்.

இவர் இங்கிலாந்தில் இருந்தபோது அவருக்கு நோய் ஏற்பட்டது. அங்கு இருக்கப் பிடிக்காமல் 1919ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். சிறிது காலத்திற்குள்ளாகவே இறப்பெய்த நேரிட்டது.

இவரது நினைவைப் போற்றும்வகையில் ‘இராமானுஜம் கணிதவியல் ஆய்வு நிலையம்' ஒன்று தோற்றுவிக்கப்பட்டது. இதன்மூலம் கணிதவியல் ஆய்வு தொடர்ந்து நடைபெற வழியேற்பட்டது. சென்னையில் அமைந்துள்ள இந்நிறுவனம் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பகுதியாக மறைந்த இராமானுஜத்தின் ஆய்வுப் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது.