இளையர் அறிவியல் களஞ்சியம்/ஈ

ஈ : நோய்களை விரைந்து பரப்பும் பூச்சியினங்களுள் ஈ முக்கியமானதாகும். ஈக்களில் பலவகைகள் உள்ளன. அவற்றுள் வீட்டு ஈ, மாட்டு ஈ, இறைச்சி மீது அமரும் நீல நிற ஈ, மிகச் சிறு கொசு போன்று கண்ணில் அமரும் கண் ஈ, பழங்களை நாடிவரும் ஈ என்பன குறிப்பிடத்தக்க ஈக்களாகும். ஈ பூச்சி இனத்

வீட்டு ஈ

தைச் சேர்ந்ததாயினும் பூச்சிகளுக்கு உள்ளது போல் ஈக்களுக்கு நான்கு இறக்கைகள் இல்லை. அவற்றுக்கு இரண்டே இறக்கைகள்தான் உள்ளன. தேனீ, ஈயைப் போன்று இருப்பினும் அஃது ஈ வகையைச் சேர்ந்ததன்று.

ஈக்கள் பெரும்பாலும் பகலிலேதான் காணப்படும். அழுகி நாற்றமெடுத்த இடங்களில் ஈக்கள் கூட்டமாக இருக்கும். சாணம், மலம், அழுகிய பொருட்கள், குப்பைகள் இவையே ஈக்கள் இருக்குமிடங்கள். வீட்டில் அசுத்தப் பொருட்கள் இருப்பின் அங்கேயும் ஈக்கள் மொய்க்கும். இவை முட்டையிட்டு இனப் பெருக்கம் செய்வதும் இத்தகைய அசுத்த இடங்களிலேயேயாகும். வெண்மை நிறமான ஈக்களின் முட்டைகளிலிருந்து பத்து நாட்களுக்குள் புழுக்கள் வெளிப்பட்டு லார்வாக்களாகின்றன. பின் கூட்டுப்புழுவாகி அதன் பின் முழுவடிவில் ஈயாக உருவெடுக்கின்றன. பெண் ஈ ஒரே சமயத்தில் 150 முட்டைகளிட்டு இனப் பெருக்கம் செய்கின்றன.

பெரிதான ஈயின் தலையில் கூட்டுக் கண்கள் அமைந்துள்ளன. இவை தலையின் இரு பகுதிகளிலும் உள்ளன. ஒவ்வொரு கண்ணிலும் 4, 000 நுண்கண்கள் அமைந்துள்ளன. இவை நெருக்கமாக உள்ளன. இவை கூட்டுக் கண்களாகும். இவற்றின் உதவியால் பின் பக்கமுள்ளவற்றையும் ஈயால் பார்க்க முடியும். ஈயால் பகலில் பார்க்க முடியுமே தவிர இரவில் எதையும் பார்க்க இயலாது. இரண்டு கண்களுக்கும் இடையே ஒரு சிறு இடைவெளி இருக்கும். இவ்விடைவெளி ஆண் ஈக்குக் குறுகியும் பெண் ஈக்கு அகன்றும் இருக்கும்.

ஈக்கு தாடைகள் ஏதும் இல்லாததால் அது யாரையும் கடிப்பதில்லை. இது உணவு உண்னும் முறை மிகவும் விந்தையானதாகும். தான் உண்ணக் கருதும் சோறு, வெல்லம் போன்ற பொருள்கள் மீது முதலில் சென்று அமரும். பின் அதன் மீது தன் தட்டையான இரு உதடுகள் மூலம் உமிழ்நீரை உமிழும். உமிழ் நீரில் உண்ணும் பொருள்கள் கரையும்வரை அதைத் தேய்த்துக் கொண்டிருக்கும். உமிழ் நீரில் பொருள்கள் நன்கு கரைந்த பின்னர்

மாட்டு ஈ

அதைத் தன் உறிஞ்சியால் உறிஞ்சி தன் தீனிப் பையில் சேமித்துக் கொள்ளும். தான் ஓய்வாக இருக்கும்போது மாடு அசைபோடுவது போல் அப்பையிலுள்ளவற்றை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும். இவ்வாறு உண்ணும் போது அத் திரவ உணவு அங்குமிங்குமாகச் சிதறி விழும். இதனால் ஈ இருக்குமிடம் அசுத்தமாகி விடும்.

இதன் கால்களின் நுனிப் பகுதியில் கொக்கி போன்ற உறுப்புகள் உள்ளன. இக்கால்களிலும் உணர்கொம்புகளிலும் மெல்லிய மயிரிழைகள் அடர்த்தியாக வளர்ந்திருக்கும், ஈ எங்கு அமர்கிறதோ அவ்விடத்தில் உள்ள அசுத்தங்களில் காணும் நோய்க்கிருமிகள் அம்மயிரிழைகளில் ஒட்டிக்கொள்ளும். அதற்கு அம்மயிரிழைகளில் உள்ள ஒருவித பிசுபிசுப்பும் பெருந் துணை செய்கிறது. சாதாரணமாக ஒரு ஈயின் மயிர்க்கால்களில் ஒரே சமயத்தில் இருபது இலட்சம் நோய்க்கிருமிகள் ஒட்டிக் கொள்ள முடியும் எனக் கண்டறிந்துள்ளார்கள். இதையும் விட அதிகமான நோய்க்கிருமிகள் ஈயின் குடலில் இருக்கும். ஈக்கள் நாம் உண்ணும் உணவில் வந்து உட்காரும்போது அந்நோய்க் கிருமிகளை அவற்றோடு கலந்து விடுகின்றன. அவ்வுணவை நாம் உண்ணும்போது அந் நோய்க்கிருமிகள் நம் உடலினுள் சென்று நோய்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு தான் சீதபேதி, டைபாய்டு, காலரா போன்ற தொற்று நோய்களை வீட்டு ஈக்கள் பரப்புகின்றன. எனவே நாம் உண்ணும் உணவுப் பொருட்களை ஈ மொய்க்காதவாறு மூடி வைக்கவேண்டும்.

மாட்டு ஈ மற்ற ஈக்களை விடச் சற்றுப் பெரிதாக இருக்கும். வீட்டு ஈ யாரையும் கடிப்பதில்லை. ஆனால் மாட்டு ஈ கடிக்கும். இதற்கு உறிஞ்சு குழாயும் அதன் முனையில் ஊசி போன்ற கூரிய உறுப்பும் உண்டு. அதன் மூலம் மாட்டின் தோலைக் குத்தி உறிஞ்சி மூலம் இரத்தத்தை உறிஞ்சி உண்ணும். ஆட்டு ஈ வீட்டு ஈயைவிட சற்றுப் பெரிதாக இருக்கும், பெண் ஆட்டு ஈ செம்மறியாட்டின் மூக்கில் முட்டையிடும். இம்முட்டையிலிருந்து லார்வா வெளிவந்து ஈயாக வளர்ச்சி பெறும் வரை ஆட்டின் மண்டைப் பகுதிகளிலேயே தங்கி வளர்ச்சியடைகிறது. முழுவளர்ச்சியடைந்த ஆட்டு ஈ ஆட்டின் மூக்குப் பகுதிக்கு வந்துவிடுகிறது. அப்போது ஆடு தும்மும்; ஈ வெளியே வந்து விழும். பழ ஈ மிகச் சிறியதாகும். கண் ஈ. சிறியதாகவும் நுண்மையாகவும் இருக்கும். இவை கண்களைச் சுற்றியே பறக்கும். கொசுபோல் காட்சியளிக்கும். இவற்றால்தான் கண் நோய்கள் பரவுகின்றன. நம் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக்கொள்வதன்மூலம் ஈக்களால் தீங்கு நேராமல் பாதுகாத்துக்கொள்ள முடியும்.