இளையர் அறிவியல் களஞ்சியம்/உயிரியல்
உயிரியல் : உயிருள்ளவைகளைப் பற்றிக் கூறுவது உயிரியல் ஆகும். உலகிலுள்ளவை அனைத்தும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஒன்று உயிருள்ளவை. இவை உண்டு, சுவாசித்து, இனப்பெருக்கம் செய்யக் கூடியவைகளாகும். இவைகட்கு உதாரணமாக மனிதன், விலங்கு, தாவரங்களைக் கூறலாம். மற்றொன்று உயிரற்றவை. இவை சடப்பொருள்கள் என்றும் அழைக்கப்படும். இவை உண்பதும் இல்லை. இயங்குவதுமில்லை.இவற்றிற்கு உதாரணமாகக் கல் போன்றவற்றைக் கூறலாம்.
உயிருள்ளவற்றை அவற்றின் தன்மை, வளர்ச்சி, மற்றும் அவற்றின் பல்வேறு படித்தர வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி ஆராய்வதே இதன் நோக்கமாகும்.
அண்மைக்காலம்வரை இயங்குவன அனைத்தும் உயிருள்ளவை என்றும் இயங்காமல் ஒரே இடத்தில் இருப்பவைகள் உயிரற்றவை என்றும் தவறாகக் கருதி வந்தனர். இதனால் மரம் செடி கொடி போன்றவையும் கூட உயிரற்றவைகளே எனக் கருதினர். ஆனால், இந்திய விஞ்ஞானி சர் ஜகதீச சந்திர போஸ் போன்ற உயிரியல் அறிஞர்கள். தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைக் கண்டறிந்து கூறினர். அவையும் நம்மைப்போல் உணவு உட்கொள்ளுகின்றன, சுவாசிக்கின்றன; பூத்துக்காய்த்து கனிந்து விதைமூலம் இனப்பெருக் ம் செய்கின்றன என்ற உண்மைகளை ஆராய்ச்சிபூர்வமாக எண்பித்தனர். அதுமட்டுமல்ல, அவைகளுக்கும் மனிதர்களைப்போல் உணர்ச்சி உண்டு என்றும் அவைகளுக்கும் இன்ப துன்பம் உண்டு என்றும் நிறுவிக் காட்டினர்.
உயிர்களின் தோற்ற வரலாற்றை, அவற்றின் உருமலர்ச்சியை மிக நுணுக்கமாக ஆராய்ந்து 1859இல் உலகுக்கு விளக்கியவர் டார்வின் எனும் ஆங்கில நாட்டு உயிரியல் விஞ்ஞானி ஆவார். அவரது உயிரியல் கொள்கை 'உருமலர்ச்சிக் கொள்கை’ (Theroy of evolution) என அழைக்கப்படுகிறது. இதன்பிறகே உயிரியல் பற்றிய அறிவும் ஆய்வும் முழுவடிவம் பெற்றது. அவரது கோட்பாட்டின்படி உயிரியல் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டதாகும். ஒன்று மனிதர்கள், விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள், புழு பூச்சிகள் முதலியவை பற்றிய விலங்கியல். மற்றது தாவர இனங்களைப் பற்றிய தாவரவியல் ஆகும். இவ்விரு பிரிவுகளினுள் உலக உயிரினங்கள் அனைத்தும் அடக்கமாகிவிடுகின்றன.
உயிரியல் ஆராய்ச்சி நோயற்ற நலவாழ்வுக்கு வழியமைக்கின்றது. அதேசமயம் பொருளாதார மலர்ச்சிக்கும் சூழலியல் மேன்மைக்கும் பெருந்துணை செய்வதாயுள்ளது. உயிரியல் ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சியில் உலகம் இன்று பெருங்கவனம் செலுத்தி வருகின்றது.