இளையர் அறிவியல் களஞ்சியம்/உறைபனி
உறைபனி : மார்கழி குளிர் கால இரவில் கடுமையாகப் பணி பெய்வதைப் பார்த்திருக்கலாம். அதிகாலையில் அருகம்புல் நுனி முதலாகப் பல பொருட்களின் நுனிகளில் பணித் திவலைகள் தங்கி நிற்பதையும் அவை பளிங்கு போல் மின்னுவதையும் கண்டிருக்கலாம். பனி எவ்வாறு தோன்றுகிறதோ அதேபோலத்தான் உறைபனியும் ஏற்படுகிறது. உயரமான மலைப்பகுதிகளில் குளிரும் உறைபனியும் அதிகமிருக்கும்.
இதனை ஒரு கனிம நிலைமைக்கு ஒப்பிடலாம். நீராவி மூலக்கூறுகள் காற்றில் கலந்திருக்கும் நிலையே கனிம நிலையாகும். இதுவே குளிர்ந்து உறைபனியாகின்றது.
காற்றிலுள்ள நீராவியானது பரந்த வெளிகளில் உள்ள குளிர்ந்த பொருள்களின் மீதுபட்டு பனிக்கட்டியாக உறைவதே உறைபனியாகும். இவ்வுறைபனி வெண்மை நிறத்தில் ஆங்காங்கே உப்பை வாரித் தெளித்தாற் போன்றும், பஞ்சுத் திரள்கள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பது போலவும் தோன்றும்.
குளிர்நாடுகளில் மட்டுமல்லாது சம தட்ப வெப்ப நாடுகளிலும் உறைபனி ஏற்படுவதுண்டு. வெயில்பட்டவுடன் உறைபனி உருகத் தொடங்கி நீராகி விடும்.
சாதாரணமாகக் காற்றில் நீராவி கலந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இரவில் அந்நீராவி குளிர்ந்து நீர்த்திவலைகளாகின்றன. இத்திவலைகள் காற்றைவிடக் கனமானவைகளாகும். எனவே, அவை கீழ்நோக்கிப் பாய்ந்து தரைப்பகுதியை அடைகின்றன. அங்கு தொடர்ந்து சேரும் பனித் திவலைகள் பனிக்கட்டியாக உறைகிறது. இவ்வுறை பனிப்படிகங்கள் மரக்கிளைகளிலும் வீட்டுக் கூரைகளிலும் செடி கொடிகளிலும் தங்கி அழகாகக் காட்சித் தரும்.
ஆனால் பயிர்களின் மீதும் பழமரங்களில் காய்த்துக் குலுங்கும் பழங்களின் மீதும் இவ்வுறைபனி படிந்தால் அவற்றிலுள்ள சாறு கெட்டிப்பட அவை கெட்டுப்போகும். எனவே உறைபனிக் காலங்களின் பழ மரங்களைப் போர்த்தியோ அல்லது ஆப்பிள் போன்ற பழங்களை உறையிட்டுக் காப்பார்கள். சில சமயம் உறைபனியினின்றும் இம் மரங்களையும் பழங்களையும் காக்க புகை மூட்டம் போட்டு வெப்பமேற்படுத்துவதும் உண்டு. எண்ணெய்ப் பந்தங்களை எரியவிடுவதும் உண்டு.
சாதாரணமாக இரவு நேரங்களில் வானில் மேகமூட்டம் இல்லாமலிருந்தாலும் காற்றடித்தாலும் உறைபனி ஏற்படுவதில்லை.