இளையர் அறிவியல் களஞ்சியம்/உலோகக் கலவைகள்
உலோகக் கலவைகள் (Aloys) : பெரும்பாலான உலோகங்களை அப்படி அப்படியே நாம் பயன்படுத்துவதில்லை. அவற்றை ஒன்றுடன் மற்றொன்றைக் குறிப்பிட்ட அளவில் கலந்தே பயன்படுத்துகிறோம். உதாரணமாகத் தங்கத்தை அப்படியே பயன்படுத்துவதில்லை. காரணம் சுத்தத் தங்கத்தில் நகை செய்ய இயலாது. பதினொரு பங்குத் தங்கத்துடன் ஒருபங்கு செம்பு சேர்த்தால்தான் நகை செய்ய இயலும். இவ்வாறே ஒன்பது பங்கு வெள்ளியுடன் ஒரு பங்கு செம்பு சேர்த்தே நகைகளும் பாத்திரங்களும் செய்ய இயலும். இவ்வாறு ஒரு உலோகத்தைக் கலப்பதே உலோகக் கலவையாகும்.
வெண்கலம் என்பது தனி உலோகம் அன்று. எட்டுப் பங்குச் செம்புடன் இரண்டு பங்கு வெள்ளீயம் கலந்த கலவையே வெண்கலமாகும். இக்கலவை மிக உறுதிவாய்ந்ததாகும். நல்ல ஓசை உண்டாக்க வல்லதாகும். எனவேதான் கோயில் மணிகள் வெண்கலத்தால் செய்யப்படுகின்றன.
நம் வீட்டில் பித்தளைப் பாத்திரங்கள், கதவுக் கைப்பிடிகள், தாம்பாளத் தட்டுகள், தம்ளர்கள் இருப்பதைப் பார்க்கிறோம். இப்பித்தளை உலோகம் செம்புடன் துத்தநாகத்தைச் சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது.
இரும்புடன் கரி சேர்க்கப்பட்டு உருவாக்கப்படுவதே எஃகு உலோகம்.
எஃகு தற்காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்படுவதால் தற்காலத்தை எஃகுக் காலம் என்றுகூட அழைக்கலாம். அதிலும் எஃகு உலோகக் கலவைகள் எண்ணற்ற வேலைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.சான்றாக நிக்கல் எஃகு மோட்டார், விமானம் உதிரி பாகங்களைத் தயாரிக்கப்பயன்படுகிறது.குரோமியம், வனேடியம், எஃகு, கம்பிச் சுருள்கள், மிகவும் கடினமான உதிரிபாகங்கள் தயாரிக்க பயன்படுகிறது.