இளையர் அறிவியல் களஞ்சியம்/எதிரொலி

எதிரொலி : ஒளிக்கதிர் கண்ணாடி மீதுபட்டு மீண்டும் ஒளிவந்த திசையை நோக்கிச் சென்றால் அதை 'ஒளி பிரதிபலிப்பு' என்கிறோம். அதே போன்று நாம் எழுப்பும் ஒலியானது பொருள்களின் மீது பட்டு மீண்டும் நம்மையே வந்தடைந்தால் அதை எதிரொலி என்று அழைக்கிறோம். இது சுவற்றின் மீது அடிக்கும் பந்து மீண்டும் நம்மையே வந்தடைவது போன்றதாகும். பெரும் கட்டிடங்கள், குகைகள், பள்ளத்தாக்குகள் போன்ற இடங்களில் உரத்த எதிரொலியைக் கேட்க முடியும்.

ஒலியை விட எதிரொலி வலு குறைந்ததாகும். ஒலி மலை மீது ஒலித்துத் திரும்பும்போது பல பொருட்களின் மீது மோதித் திரும்புகிறது. இவ்வாறு மோதும் பொருட்களிலிருந்து எதிரொலி வரும். இவ்வாறு எழும் எதிரொலிகளுக் கிடையே போதிய இடைவெளி இருக்கும். இவ்வாறு ஒரே எதிரொலி பலமுறை திரும்பத் திரும்ப கேட்பதுண்டு. இதுபோன்று தான் இடியோசை எழும்போதும் பல பொருட்களில் ஒலி மோதித் திரும்புவதால் இடியோசையைப் பல முறை கேட்க நேர்கின்றது.

சுமார் 20 மீட்டர் இடைவெளி இருந்தால்தான் எதிரொலியைக் கேட்க முடியும். இதற்குக் குறைவான இடைவெளியில் எழும் எதிரொலி வலுகுறைந்ததாக இருப்பதால் விரைவாக எழுந்து நாம் எழுப்பும் ஒலியோடு இரண்டறக் கலந்து மறைந்து விடும். இதனால் தனித்த எதிரொலியாகக் கேட்க முடிவ தில்லை.

சாதாரணமாக நாம் எழுப்பும் ஒலியானது விநாடிக்கு 30மீட்டர் தொலைவு வரை செல்லும் இயல்புடையதாயிருப்பின் எதிரொலியும் இதே வேகத்தில் தான் செல்லும், எதிரொலிக்கும் நேரத்தைக் கொண்டு தூரத்தைக் கணக்கிட முடியும். சில சமயம் கடுமையான மூடுபனிக்கிடையே கப்பற்பயணம் மேற்கொள்ள நேரும். அத்தகைய சந்தர்ப்பங்களில் கப்பல் மாலுமி இம்முறையைக் கடைப்பிடித்தே நேரத்தைக் கணக்கிட்டறிகிறார். கடலின் ஆழத்தையும் கடலுள் செல்லும் நீர் மூழ்கிக் கப்பல் எவ்வளவு ஆழத்தில் செல்கிறது என்பதையும்கூட இம்முறையிலேயே கண்டறிகிறார்கள்.