இளையர் அறிவியல் களஞ்சியம்/கதிரியக்கம்
கதிரியக்கம் : தனிமங்களுள் சில உயர் வகைத் தனிமங்கள் உண்டு. அவை யுரேனியம், ரேடியம், தோரியம் போன்றவைகளாகும். இவைகட்குச் சில தனிப்பண்புகள் உள்ளன. இவை கதிர்களைத் தாமாக வெளியிடுகின்றன. இக்கதிர்கள் பிற பொருட்களை ஊடுருவும் தன்மையுடையனவாகும். இக்கதிரி இயக்கமே 'கதிரியக்கம்' (Radioactivity) என அழைக்கப்படுகிறது.
இவ்வுண்மையைக் கண்டறிந்து உலகுக்குக் கூறியவர் ஹென்றி பெக்கரல் எனும் ஃபிரான்ஸ் நாட்டு அறிவியல் ஆய்வாளர். அவர் ஒரு சமயம் எக்ஸ்-கதிர் எனும் ஊடுகதிர் ஆராய்ச்சியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். ஆராய்ச்சி மேடைமீது யுரேனியத் துண்டு ஒன்று இருந்தது. அதன் அருகில் இருந்த ஒளிப்படத்தகட்டில் இரசாயன மாறுபாடு ஏற்பட்டிருந்தது. அதைக்கண்டு வியந்த பெக்கரல் இதற்கான காரணத்தை ஆராய்ந்தார். யுரேனியத்தி லிருந்து வெளிப்பட்ட கதிர்களே ஒளிப்படத் தகட்டில் இராசயன மாறுபாடு ஏற்படக் காரணம் என்பதை உணர்ந்தார். அதன் பின்னர் யுரேனியம் வெளிப்படுத்தும் கதிர் பிற உலோகங்களையும் ஊடுருவ வல்லன என்பதைக் கண்டறிந்தார்.
அதன்பின் தொடர்ந்து கதிரியக்கம் பற்றி ஆய்வு செய்தார். யுரேனியம் மட்டுமல்ல வேறு சில தனிமங்களும் கதிர் வீச்சை வெளிப்படுத்துகின்றன என்பதைக் கண்டறிந்தார். தோரியம், ரேடியம் போன்ற தனிமங்கள் கதிர் வீச்சுத் தன்மையை இயல்பாகக் கொண்டவை என்பதை அறிந்தார்.
இக்கதிரியக்கம் எவ்வாறு நிகழ்கின்றது? அணு ஒவ்வொன்றிலும் புரோட்டான், எலெக்ட்ரான், நியூட்ரான் என்ற மூன்று பகுதிகள் அடங்கியுள்ளன. அணுவின் மையப்பகுதியில் கரு அமைந்துள்ளது. எலெக்ட்ரான் இம்மையப்பகுதியை வேகமாக சுற்றி வருகிறது. சில வகைத் தனிமங்களில் உள்ள அணுக்கள் தாமாக சிதைவதுமுண்டு. அப்போது அவ்வணுக்களிலிருந்து
நியூட்ரான்களும் புரோட்டான்களும் வெளியேறுகின்றன. இவ்வினையே கதிரியக்கம் ஆகும்.
'கதிரியக்கம்' உயிருக்குப் பெருந்தீங்கு இழைக்கவல்லனவாகும். எனவே தக்க பாதுகாப்பு ஆடைகளை அணிவர். கதிரியக்க ஆய்வின்போது காரீயத்தாலான கண்ணாடி மூலமும் இதற்கென தயாரிக்கப்பட்டுள்ள கருவிகளின் மூலமே காண்பர்.
பழங்காலப்பொருட்களின் காலத்தைக் கணிக்க கதிரியக்கம் பெரிதும் பயன்படுகிறது.
கதிரியக்கத்தைச் செயற்கையாகப் பெற செயற்கைத் தனிமங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.