இளையர் அறிவியல் களஞ்சியம்/காகிதம்

காகிதம் : இன்றைய சமுதாய வாழ்வில் காகிதத்தின் பங்கு அளவிடற்கரியதாகும்.

காகிதமும் அச்செழுத்தும் கண்டறிந்த பின்னரே அறிவு வளர்ச்சியும் அத்ன் அடிப்படையில் அறிவியல் முன்னேற்றமும் துரிதமடைந்தன எனலாம்.

காகிதத்தை முதன்முதலாகக் கண்டு பிடித்துப் பயன்படுத்தியவர்கள் சீனர்களாவர்.

சுமார் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே காகிதம் செய்யும் கலையைக் கற்றிருந்தவர் என வரலாற்று நூல்கள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகட்குப் பின்னர் காகிதம் செய்யும் கலையை சீனர்களிடமிருந்து அராபியர்கள் கற்றனர். அதன் பின்னரே அவர்கள் மூலம் இக்கலை ஐரோப்பிய நாடுகளை எட்டின.

தொடக்கக் காலத்தில் காகிதம் கையாலேயே செய்யப்பட்டது. காகிதம் செய்யும் இயந்திரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர் ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவராவார். அங்குதான் முதன்முதலாகக் காகிதம் எந்திரம் மூலம் செய்யப்பட்டது. அதன் பின்னர் எந்திரம்மூலம் காகிதம் உற்பத்தி உலகெங்கும் பரவியது.

இந்தியாவில் எந்திரம்மூலம் காகித உற்பத்தி 1870ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்தில் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. இன்று இந்தியாவெங்கும் காகிதத் தொழிற்சாலைகள் பரவலாக அமைந்து காகித உற்பத்தி செய்து வருகின்றன. எனினும் இந்தியாவின் தேவையில் ஒருபகுதி காகிதம்தான் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. மற்றபடி தேவைப்படும் காகிதங்களை வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்து தேவையை நிறைவு செய்து கொள்கிறோம்.

காகிதம் செய்வதற்கு மூலப்பொருளாகத் தாவரப் பொருட்களே அமைந்துள்ளன. காகிதம் செய்ய மரம், மூங்கில், சணல், பருத்தி மற்றும் சிலவகை புற்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கந்தைத் துணியும் பழைய காகிதங்களும்கூட காகித உற்பத்திக்குப் பயன்படுகின்றன.

காகித ஆலைகளில் சிறியதாக வெட்டப்பட்ட மரத்துண்டுகளை நீரிலிட்டு அரைக்கிறார்கள். அப்போது நீரில் மிதக்கும் நார்ப் பொருட்களை அப்புறப்படுத்தி அரைத்த மரக் கூழே காகிதக் கூழாக (Pulp)ப் பயன்படுகிறது. மற்றொரு முறையிலும் காகிதக்கூழ் தயாரிக்கப்படுகிறது. மரத்துண்டுகளை இரசாயனப் பொருள்களோடு கலந்து கொதிக்க வைக்கப்படுகிறது. அப்போது கிடைக்கும் இரசாயனக் காகிதக்கூழ் காகித உற்பத்திக்கான மிகச் சிறந்த மூலப்பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது.

இவ்வாறு தயாரிக்கப்பட்ட காகிதக்கூழை பல்வேறு வகையான உருளைகளைக் கொண்ட நீண்ட இயந்திரத்தில் ஈர உருளையிலிருந்து வரும்போது நீர்வடிந்து நல்ல அழுத்தத்தில் பளப்பளப்புப் பெற்று நன்கு உலர்ந்த காகிதமாக உலர் முனை எனப்படும் மறு முனை சென்று உருளைகளில் சுற்றப்படுகிறது. பின் வேண்டிய அளவுகளில் காகிதம் வெட்டப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது.

தற்காலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட வகையினவாகக் காகிதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கரும்பாலைகளில் வீணாகும் கரும்புச் சக்கையிலிருந்தும் காகிதம் தயாரிக்கப்படுகிறது. காகித உற்பத்தியில் கனடாவும் அடுத்து அமெரிக்கா, ஜப்பான், பின்லாந்து நாடுகளும் தலைசிறந்து விளங்குகின்றன.