இளையர் அறிவியல் களஞ்சியம்/காமிரா
காமிரா : 'போட்டோ’ படம் எடுக்க உதவும் கருவியே ஆகும். இஃது பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டாலும் ஒரே
வித அடிப்படையிலேயே ஒளிப்படங்கள் எடுக்கப்படுகின்றன.
ஒளிப்படப் பெட்டி உள்ளே காற்றுப் புக முடியாதபடி தயாரிக்கப்பட்டுள்ள கருவியாகும். இக்கருவியின் முகப்பில் ஒரு நுண் துளைப் பகுதி உண்டு. அப்பகுதியை ஒட்டி லென்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். துளைப்பகுதி உலோகத் தகடு ஒன்றால் மூடப்பட்டிருக்கும். ஒளிப்படம் எடுக்கும்போது மேலே பொருத்தப்பட்டுள்ள பொத்தான் ஒன்றை அழுத்தினால் கண் இமைக்கும் நேரத்திற்குள் இம்மூடி திடீரெனத் திறந்து மூடிக்கொள்ளும். அவ்விமைப்பொழுதிற்குள் திறந்த மூடி வழியே ஒளி லென்ஸ் வழியே பாய்ந்து பின்புறமுள்ள பிலிமில் முன்னால் உள்ள உருவம் படமாகப்
பதிவாகி விடுகிறது. அப் பிலிமில் படப்பதி விற்கான இரசாயனப் பொருள்கள் பூசப்பட்டிருக்கும். படம் பதிந்த பிலிமை தனியே வெளியே எடுத்து அதிக வெளிச்சமில்லாச் சூழலில் இரசாயனக் கலவைகளில் கழுவினால் பதிவான ஒளிப்படம் தெளிவாகத் தெரியும். அப்பிலிமிலிருந்து எத்தனை பிரதிகள் வேண்டுமாயினும் எடுத்துக் கொள்ள முடியும்.
காமிராவின் துளையை அடுத்துள்ள உலோக மூடி சிறுசிறு தகடுகளைக் கொண்டு அடுக்கப்பட்டிருக்கும். இதனை விரிக்கவோ சுருக்கவோ முடியும். இதனால் காமிராவினுள் செல்லும் ஒளியைத் தேவையான அளவில் கட்டுப்படுத்திப் பெற இயலும். ஒளி குறைந்த சூழலில் படம் எடுக்க நேரின் இணைந்துள்ள தகடுகளை அதிகம் விரியச் செய்தோ அல்லது ஒளி மிகுந்த சூழலில் படம் எடுக்க நேர்ந்தால் இத் தகடுகளை சுருக்கவோ தகுந்த அமைப்பு அதில் உண்டு. தூரத்திற்கேற்றபடி லென்ஸை நகர்த்திக் கொள்ளவும் இதில் அமைப்பு உண்டு. ஒளி குறைந்த சமயங்களில் அல்லது இருட்டில் போதிய ஒளியுடன் படம் எடுக்க இக்கருவியில் பளிச்சிட்டு எரியும் விளக்கு அமைப்பும் உண்டு.
காமிராவில் பிடிக்கப்பட்ட படத்தை உடனடியாக முழு வடிவில் வெளிப்படுத்தும் காமிரா 'போலாராய்டு காமிரா' என அழைக்கப்படுகிறது.
இதே முறையில் இயங்குவதே திரைப்பட, தொலைக்காட்சி காமிராக்கள். இவற்றில் உள்ள பிலிம் தொடர்ச்சியாகப் படம்பிடிக்கும், நம் கண்ணின் அமைப்பும் காமிராவின் அமைப்பும் ஒன்றேயாகும்.