இளையர் அறிவியல் களஞ்சியம்/காற்றுப் பதனாக்கி

காற்றுப் பதனாக்கி : ஆங்கிலத்தில் ஏர் கண்டிஷனிங் என்று அழைக்கப்படும் காற்றுப் பதனாக்கிக் கருவி காற்றின் ஈரப் பசையைக் கட்டுப்படுத்தும் கருவியாகும்.

காற்றுப் பதனக்கிக் கருவி

கோடை வெயிலின்போது காற்றில் ஈரப்பசை குறைந்து விடுகிறது. இதனால் புழுக்கம் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் காற்றில் வெப்ப நிலை குறைந்து ஈரப்பசை மிகுதியாகிவிடுகிறது. இதனால் குளிர் அதிகமாகி விடுகிறது. இச்சமயங்களில் காற்றின் ஈரப்பசையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ காற்றுப் பதனாக்கிக் கருவி பயன்படுகிறது. இதன்மூலம் நமக்குத் தேவையான அளவில் ஈரப்பதனோடு கூடிய காற்றைப் பெற முடிகிறது.

இக்கருவியின் மூலம் வேறுபல நன்மைகளை நாம் பெற முடிகிறது. இக்கருவி காற்றைத் தூய்மையாக்குகிறது. இக்கருவி வெளிக் காற்றில் உள்ள தூசி, புகை முதலியனவற்றை வடிகட்டி அனுப்புகிறது. சில கருவிகள் குறிப்பிட்ட சீதோஷ்ண நிலையில் மட்டுமே சிறப்பாக இயங்கும். அத்தகைய சீதோஷ்ண நிலையை செயற்கையாக உருவாக்க காற்றுப் பதனாக்கிக் கருவிகளே பயன்படுகின்றன, காற்றுப் பதனாக்கிக் கருவிகள் பொருத்தப்பட்ட ரயில் பெட்டிகளும் மோட்டார் வாகனங்களும் உண்டு.