இளையர் அறிவியல் களஞ்சியம்/காலீலியோ

காலீலியோ : இன்றைய வானவியல் அறிஞர்களுக்கெல்லாம் முன்னோடியாக வாழ்ந்தவர் இவ்வானவியல் மேதை. இத்தாலியில் உள்ள பீசா எனும் நகரில் எளிய குடும்ப மொன்றில்1564இல் பிறந்தார்.இவர் இளைஞராக இருந்தபோது இவர் ஒரு மருத்துவ வல்லுநராக

காலீலியோ

ஆக வேண்டுமென இவரது தந்தை பெரிதும் விரும்பினார். ஆனால் இவருக்கோ கணிதமும் வானவியல் ஆராய்ச்சியுமே மிகவும் பிடித் தவைகளாக இருந்தன.

இவரது ஆராய்ச்சிகள் எளிதாக மக்களைச் சென்றடைய இயலவில்லை. இதற்குப் பெரும் இடையூறாக மக்களின் மூட நம்பிக்கைகள் அமைந்திருந்தன. அறிவியல் உண்மைகளுக்கும் மக்களின் மூடநம்பிக்கைகளுக்குமிடையே மாபெரும் இடைவெளி இருப்பதைக் கண்டு வருந்தினார்.

வானவியலிலும் இயற்பியலிலும் வல்லுநராகத் திகழ்ந்த காலிலியோ ஒரு சமயம் மாதா கோவில் ஒன்றுக்குச் சென்றார். அங்கு தொங்கவிடப்பட்டிருந்த விளக்கொன்று காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. விளக்கின் ஆட்டம் சில சமயம் அதிகமாகவும் சில சமயம் குறைவாகவும் இருந்தது. ஆனாலும் ஒரு முனையிலிருந்து மறுமுனை சென்று வர எடுத்துக் கொள்ளும் நேரம் ஒரே அளவாக இருந்தது. இந்தப் பேருண்மை அவரை வெகுவாகச் சிந்திக்க வைத்தது. அவர் கண்டறிந்த இந்தத் தத்துவமே 'ஊசல் தத்துவம்’ என அழைக்கப்படுகிறது. இந்த ஊசல் தத்துவமே பின்னர் கடிகாரங்கள் அமைய அடிப்படையாயமைந்தது

காலிலியோவின் தொலைநோக்கி

மற்றொரு சமயம் இவர் பீசா நகரத்தின் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்துக்குச் சென்றார். சாய்ந்த கோபுரத்தின் மேல் அடுக்கில் நின்றவாறே கனமான பொருள் ஒன்றையும் கனம் குறைந்த பொருள் ஒன்றையும் கீழே போட்டார். அவை இரண்டும் தரையைச் சென்றடைய ஒரே நேரத்தை எடுத்துக்கொண்டதைக் கண்டறிந்தார். இதிலிருந்து விழும் பொருள்கள் எல்லாமே ஒரே மாதிரி நேரத்தையே எடுத்துக்கொள்ளும் எனும் புதிய உண்மையைக் கண்டறிந்து உலகுக்குக் கூறினார்.

வானவியல் பற்றிய ஆராய்ச்சியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது முனைப்பான ஆராய்ச்சி மூலம் பல புதிய வானவியல் உண்மைகள் வெளிப்பட்டன. சூரியன், சந்திரன், கிரகங்கள், நட்சத்திரங்கள் பற்றிய பல உண்மைகளைக் கண்டறிந்து ஆதார பூர்வமாக நிறுவினார். சூரியனில் கரும்புள்ளிகள் இருப்பதை முதன் முதல் கண்டறிந்து கூறியவர் இவரே. பூமியில் மலைகள் இருப்பது போன்று சந்திரனிலும் மலைகள் உண்டு என்பதையும் ஆய்ந்தறிந்து கூறினார்.

இவருக்கு முன் வாழ்ந்த வானவியல் விஞ் ஞானி கோப்பர்னிக்கஸ் என்பவர் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்துக் கூறியிருந்தார். ஆனால் மக்கள் தாங்கள் பின்பற்றிய சமயக் கருத்துப்படி சூரியன்தான் பூமியைச் சுற்றி வருவதாக அழுத்தமாக நம்பி, கோப்பர் நிக்கஸ் கண்டுபிடிப்பை ஏற்க மறுத்து வந்தனர். காலிலியோ தொடர்ந்து செய்துவந்த வானவியல் ஆராய்ச்சியின் விளைவாக சூரியன் பூமியைச் சுற்றவில்லை, பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதைப் பல்வேறு சான்றுகளுடன் நிறுவிக் காட்டினார். இவ்வுண்மைகளை நிலை நிறுத்த இவர் ஆய்வுக் கட்டுரைகளும் ஆராய்ச்சி நூல்களும் எழுதிக்குவித்தார். அதன் மூலம் இவரது ஆய்வுக் கருத்துக்கள் விரைந்து மக்களிடையே பரவின.

சமயக் கருத்துகளுக்கு மாறாக இவரது வானவியல் ஆய்வுச் சிந்தனைகள்-உண்மைகள் மக்களிடையே பரவுவதை அடியோடு விரும்பாத மதத் தலைவர்கள் இவர் மீது வெறுப்பும் கோபமும் கொண்டனர். காலிலியோவின் கருத்துக்களை வன்மையாகக் கண்டித்தனர். அவரை அவரது வீட்டிலேயே சிறை வைத்தனர். இவர் வானவியல் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து செய்யவிடாமல் தடுத்தனர். இவரது கருத்துக்கள் மக்களிடம் பரவாமல் செய்தனர். சிறை வாழ்வு காலிலியோவின் கண்ணொளியை இழக்கச் செய்தது. பார்வை இழந்த காலிலியோ 1641ஆம் ஆண்டில் இறந்தார்.

இன்றைய வானவியல் ஆராய்ச்சிக்கு ஆழமான அடிப்படை அமைத்துச் சென்ற பெருமை இவரையே சாரும். எனவேதான், இவரை "அறிவியல் தந்தை’ என உலகம் போற்றிப் புகழ்கிறது.