இளையர் அறிவியல் களஞ்சியம்/கிராபைட்

கிராபைட் : நாம் எழுதப் பயன்படுத்தும் பென்சில் கிராபைட்டைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். 'கிராபோ என்ற சொல்லுக்கு “நான் எழுதுகிறேன்’ என்பது பொருளாகும். கிராபைட் எழுது பொருளாகப் பயன்பட்டதன் காரணமாக இப்பெயரைப் பெற்றதெனலாம்.

இது ஒரு கார்பனின் புறவேற்றுமை இயைபாகும் (Allotropis modification). இதன் அமைப்பில் ஒவ்வொரு கார்பன் அணுவும் மூன்று கார்பன் அணுக்களோடு சக வலு பிணைப்பில் ஈடுபட்டு அறுகோண தட்டை அமைப்பினை உடையது. இக்காரணத்தால் இது வழுக்குத் தளப் பண்பினைப் பெற்றிருக்கிறது.

கிராபைட் இயற்கையாகப் பூமியிலிருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இது கம்பர்லாந்து, பொஹீமியா, சைபீரியா, இந்தியா, இலங்கை முதலிய நாடுகளில் கிடைக்கிறது. மற்ற நாடு களைவிட இந்தியாவில் சற்றுக் குறைவாகவே கிடைக்கிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள சிவகங்கையில் கிராபைட் இயற்கையாகக் கிடைக்கிறது. உலகிலேயே சிறந்த கிராபைட் இலங்கையிலிருந்து கிடைக்கிறது .

கிராபைட் செயற்கையாகவும் தயாரிக்கப்படுகிறது. செங்கல்லாலான மின் உலையில் மணலையும் தூளாக்கப்பட்ட கல் கரியையும் 24 மணி நேரம் மிகு வெப்ப நிலையில் சூடாக்கப்படும். அப்போது அதிலிருந்து சிலிக்கன் கார்பனும் கார்பன் மோனாக்சைடும் வெளிப்படுகின்றன. மிகு வெப்ப நிலையில் சிலிக்கன் வாயுவடிவில் வெளியேறவே அங்கு கிராபைட் தங்குகிறது. இச்செயற்கைக் கிராபைட்டின் விலை அதிகமாகும்.

கிராபைட் மிருதுத் தன்மையுடையதாகும். கருநிறமுடையது. பளபளப்பானது. வெப்பத்தையும் மின்காந்தத்தையும் எளிதாகக் கடத்தவல்லது. இதை இரும்பில் பூசினால் துருப்பிடிக்காது. கிராபைட்டைக் கொண்டு இரும்பை மெருகடையச் செய்யலாம். அதிக வெப்பத்தைத் தாங்கும் சக்தியுடையதாதலால் மூலங்கள் செய்யக் கிராபைட் பயன்படுத்தப்படுகிறது. கிராபைட்டைக் கொண்டு காகிதத்தில் எழுதும் பென்சில்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.