இளையர் அறிவியல் களஞ்சியம்/கிரேன்
கிரேன் : . இது 'பளுதூக்கி' எனத் தமிழில் அழைக்கப்படுகிறது. இவ்வியந்திரம் கனமான பொருட்களைத் தூக்கப் பயன்படுகிறது. இதன் மூலம் உயரமான இடத்திலுள்ள பொருட்களை கீழே இறக்கி வைக்கலாம். ஓரிடத்தில் உள்ள கனமான பொருட்களைக் குறிப்பிட்ட தூரத்திற்குட்பட்ட வேறொரு இடத்தில் தூக்கி வைக்கலாம். கனமான பொருட்களை கப்பல் அல்லது லாரி போன்றவற்றிலிருந்து இறக்கவும், ஏற்றவும் இவ்வியந்திரமே பயன்படுத்தப்படுகிறது.
பளுதூக்கி எந்திரத்தில் நான்கு முக்கிய பகுதிகள் உண்டு. எந்திரத்தை இயக்குபவர் அமாந்திருக்கும் கூண்டுப் பகுதி. இதில் கிரேனை இயக்கக் கூடிய பல்வேறு பொறிகள் உள்ளன. இக்கூண்டு நகர்வதற்கேற்ப பக்கத்துக்கு இரண்டாக நான்கு சக்கரங்கள் உருளை வடிவில் அமைந்திருக்கும். இவ்வுருளைச் சக்கரங்களின் மேல் உறையாக கனமான இரும்பு வடங்களால் பின்னப்பட்ட உறை உண்டு. கூண்டில் இயக்குபவரின் இயக்கத்திற்கேற்க சக்கரங்கள் நகரும். கூண்டோடு இணைந்த ஏணி போன்ற நீண்ட பகுதி உண்டு. இஃது முப்பது முதல் ஐம்பது மீட்டர் உயரமிருக்கும். இதனை. மேல் கீழாகவோ பக்கவாட்டிலோ விரும்பிய பக்கம் திருப்பலாம். கூண்டோடு இணையாகப் பிணைக்கப்பட்டுள்ள நீண்ட கம்பி வடங்கள், ஏணி முனையில் பொருத்தப்பட்ட கம்பி வழியாகக் கொக்கியோடு தொங்கும். தூக்க வேண்டிய அல்லது இறக்க வேண்டிய அல்லது நகர்த்த வேண்டிய பொருளோடு அக்கொக்கியை இணைத்து இயக்குவர்.
கிரேனில் பலவகைகள் உண்டு. சிலவகை கிரேன்கள் நிலையாகப் பொருத்தப்பட்ட நிலையில் இயக்கப்படும். மற்றும் சில அடிச் சக்கரங்களைக் கொண்டு நகரும் வகையில் இயங்கும். மற்றொரு வகை கனமான இரும்பு உத்திரங்கள் மீது அமைக்கப்பட்ட நிலையில் இயக்கப்படும்.
இரும்புப் பாதையினின்றும் விலகிய அல்லது கவிழ்ந்த இரயில் பெட்டிகளை மீண்டும் இருப்புப் பாதையில் நிறுத்த கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.
கப்பலில் ஏற்ற அல்லது இறக்கக் கூடிய ரயில் பெட்டிகள், கார், லாரிகள் போன்ற வற்றைத் தூக்கக் கூடிய கிரேன்கள் கப்பலிலேயே அமைக்கப்பட்டிருக்கும். இன்று பல மாடிக் கட்டிடங்கள் கட்டப்படும்போது கனமான பொருட்களை மேலே எடுத்துச் செல்ல கிரேன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.