இளையர் அறிவியல் களஞ்சியம்/சந்திரன்

சந்திரன் : விண்ணில் காணும் கோளங்களுள் வடிவாலும் அழகாலும் சிறப்புற்று விளங்கும் கோள் சந்திரன் ஆகும். சந்திரனை 'நிலா' என்றும் அழைப்பர். பூமிக்கு அருகே உள்ள கோளம் ‘சந்திரன்’ ஆகும்.

பூமியில் காணப்படுவது போன்றே சந்திரனிலும் மேடு பள்ளங்கள் காணப்படுகின்றன. மலைகளும் பாறைகளும் உள்ளன. பூமியைப் போன்றே காடு மேடான பகுதிகளைக் கொண்டதாக சந்திரன் விளங்குகிறது. எனவே, சந்திரன் பூமியின் ஒரு பகுதியாக இருந்து, பின்னர் பிரிந்து சென்று, தனிக்கோளமாகியது என அறிவியலார் கருதுகின்றனர். சந்திரனில் புல்பூண்டுகளோ உயிரினங்களோ அறவே இல்லை.

பூமிக்கும் சந்திரனுக்கும் இடையேயுள்ள இடைவெளி 8,84,000 கிலோமீட்டர் தூரமாகும். சந்திரனின் குறுக்களவு பூமியின் குறுக்களவில் நான்கில் ஒரு பகுதியாகும். அதாவது, 3,400 கிலோ மீட்டர் தூரமாகும். பூமியின் கனத்தில் நாற்பதில் ஒரு பங்குதான் சந்திரன் கனம். எடையைப் பொறுத்தமட்டில் பூமியின் எடை சந்திரனின் எடையைப்போல் 82 மடங்கு அதிகம் என்பர்.

பூமியைப் போன்றே சந்திரனும் இருவகைச் சுழற்சிகளைக் கொண்டதாக விளங்குகிறது. ஒன்று, தன்னைத்தானே சுற்றிக்கொள்வது; இரண்டு, பூமியைச் சுற்றி வருவதாகும். சந்திரன் ஒரு முறை தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 27 நாட்கள், 7 மணி, 48-1/9 நிமிட நேரமாகிறது. சந்திரன் பூமியைச் சுற்ற 29 நாட்கள் 12 மணி, 44 நிமிடம், 2.8 வினாடி ஆவதாகக் கணக்கிட்டுள்ளனர். சந்திரன் தன்னைத் தானே சுற்றிக்கொள்ளும் வேகமும் பூமியைச் சுற்றும் வேகமும் சமமாகும். இதனால்தான் நாம் சந்திரனின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடிகிறது. பூமியைப் போலவே சந்திரனுக்கும் இரவு பகல் உண்டு. ஆனால், பூமியில் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம். ஆனால், சந்திரனில் பகல் 15 நாட்கள், இரவு 15 நாட்கள் பூமியிலிருந்து பார்க்கும்போது சந்திரன் காட்சியளிப்பது போலவே, சந்திரனிலிருந்து பார்க்கும் போது பூமி காட்சி தருகிறது. காரணம், இரண்டு கோளங்களும் சூரிய ஒளியைப் பெற்றுப் பிரதிபலிப்பதேயாகும்.

பூமியும் சந்திரனும் சூரியனைச் சுற்றி வருகின்றன. சூரியனுக்கும் பூமிக்குமிடையிலான நேர்கோட்டில் சந்திரன் வந்தால், அது நம் பார்வைக்குத் தென்படுவதில்லை. அதை அமாவாசை என்கிறோம். அதே போன்று சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையே நேர்கோட்டில் பூமி வந்தால் அன்று முழு வடிவிலான சந்திரனைப் பார்க்க இயல்கிறது. இதுவே பௌர்ணமி தினமாகும். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையுள்ள தேய்பிறை 15 நாட்கள் நீடிக்கும். அதே போன்று அமாவாசை முதல் பௌர்ணமி வரையுள்ள 15 நாட்கள் வளர்பிறைக் காலமாகும். இவ்வாறு தேய்ந்து வளரும் சந்திரனின் தோற்றங்களையே 'கலைகள்’ என அழைக்கிறார்கள்.

சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமையும்போது, கிரகணங்கள் ஏற்படுகின்றன.

பூமியைப் போன்றே சந்திரனுக்கும் ஈர்ப்புத் தன்மை உண்டு. ஆனால், இந்த ஈர்ப்புச்சக்தி பூமியைவிட குறைவாக ஆறில் ஒரு பங்கே உள்ளது. இதனால் பூமியில் 6 கிலோகிராம் எடையுள்ள பொருள் சந்திரனில் 1 கிலோ கிராம் எடை மட்டுமே இருக்கும். சந்திரனின் ஈர்ப்பு விசை காரணமாகவே கடல் கொந்தளிப்பும் பேரலைகளும் எழுகின்றன. பெளர்ணமி, அமாவாசை நாட்களில் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும். இதற்குக் காரணம் அவ்விரு நாட்களிலும் சந்திரனின் ஈர்ப்புச் சக்தியோடு

நிலவிலிருந்து காணும் உலகம்

சூரியனின் ஈர்ப்பாற்றலும் இணைந்து கொள்வதேயாகும்.

சந்திரனைப் பற்றிய சிந்தனை மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வந்துள்ள போதிலும் அறிவியல்-ஆய்வுகள் முனைப்படைந்த பின்னரே அதன் உண்மைத் தோற்றமும் தன்மையும் தெரியவந்தன. இதன் முத்தாய்ப்பாக 1969ஆம் ஆண்டு மூன்று அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் அப்பெல்லோ 11 எனும் விண்கலத்தில் சந்திரனுக்குச் சென்று திரும்பினர். 1975இல் அப்பல்லோ-15 இல் சென்ற ஆய்வாளர்கள் அங்கிருந்தபோது ரோவர் எனும் ஊர்திமூலம் சந்திரனின் நிலப்பரப்பில் சிறிது தூரம் பயணம் செய்தனர். அப்போது மண்ணையும் கல்லையும் ஆய்வு செய்ய அங்கிருந்து மாதிரி எடுத்து வந்தனர். சந்திரனைப் பற்றிய ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது.