இளையர் அறிவியல் களஞ்சியம்/சார்லஸ் டார்வின்
சார்லஸ் டார்வின் : இவர் உலகப்புகழ்பெற்ற மாந்தரியல் ஆராய்ச்சி அறிஞராவார். குரங்கு போன்ற தன்மை கொண்ட ஒருவகை விலங்கிலிருந்து உருமலர்ச்சி பெற்றவனே இன்றைய மனிதன் என்ற கருத்தை முதன் முதலில் உலகுக்குக் கூறியவர் இவரே.
இந்த ஆங்கில அறிவியல் அறிஞர் 1809 ஆம் ஆண்டில் பிறந்தவர். இளமை முதலே இயற்கையை ரசிப்பதிலும் ஆய்வதிலும் ஆர்வமுடையவராக விளங்கினார். ஆனால், இவரது தந்தையோ இவரை கிருத்துவ சமய ஞானமுடையவராக ஆக்கவேண்டுமென விரும்பிச் செயல்பட்டார். எனினும், டார்வினின் ஆர்வம் முழுமையும் இயற்கை ஆய்விலேயே ஆழ்ந்திருந்தது. மனிதனின் தோற்ற வரலாற்றைக் கண்டறிவதிலேயே நாட்டமுடையவராக இருந்தார். அது தொடர்பான நூல்களைப் படிப்பதும் ஆய்வதுமாகவே காலங் கழித்தார். இதனால் இவர் உயிரியல் வல்லுநரானார்.
உலகை வலம் வந்து ஆய்வு நடத்துவதற்காக 1881ஆம் ஆண்டில் பிகிள்எனும் ஆய்வுக் கப்பல் ஆய்வறிஞர்களைத் திரட்டிக்கொண்டு புறப்பட்டது. அதில் ஒருவராக சார்லஸ் டார்வினும் இடம் பெற்றார். கலபகாஸ் தீவு இவரது ஆய்வுக்கு நிலைக்களனாக அமைந்தது. ஐந்து ஆண்டுகள் ஆய்வுக்குப்பின் இங்கிலாந்து திரும்பினார்.
தாய்நாடு திரும்பிய பின்னர் தான் மேற்கொண்ட உயிரின ஆராய்ச்சி பற்றி நூல் ஒன்று எழுதி வெளியிட்டார். இதில் தனது உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)-ஐ விரிவாக விளக்கியிருந்தார்.
இவரது கொள்கைக்கு ஓரளவு எதிர்ப்பு ஏற்பட்ட போதிலும் உயிரினத் தோற்ற வளர்ச்சித் தொடர் ஆய்வுக்கு அவரது முனைப்பான
ஆய்வும் கருத்துக்களும் விஞ்ஞானிகளை மேலும் சிந்திக்கத் தூண்டின என்பது மறுக்க முடியாத உண்மை.